Sunday, March 29, 2009

வெற்றி தொடருமா?


சென்ற வாரம் பலரும் எதிர்பாரா வண்ணம் சந்தைகள் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டன. உலக சந்தைகளின் தொடர்ந்த உயர்ச்சி நமது சந்தைகளுக்கும் நல்ல ஊக்கத்தைக் கொடுக்க சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கும் மேலே உயர்ந்து மிக முக்கிய இலக்கான 10,௦௦௦000 புள்ளிகளையும் எளிதில் கடந்தது. அதே போல, நிபிட்டி குறியீடு சுமார் 300 புள்ளிகள் உயர்ந்து 3100 புள்ளிகளுக்கும் மேலே முடிவடைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவு பங்குகளை வாங்கியதும், விற்று பின் வாங்கும் நிலையை எடுத்தவர்கள் அவசர அவசரமாக அந்த நிலையை சமன் செய்ய முனைந்ததும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள்.

நாம் ஏற்கனவே சென்ற பதிவில் விவாதித்த படி, அமெரிக்க பணம் உலகெங்கும் பாயும் என்ற நம்பிக்கையும் சந்தைகளின் புதிய நம்பிக்கைக்கு முக்கிய காரணம். இதன் விளைவாக இந்திய ரூபாய் உட்பட முக்கிய உலக நாணயங்களுக்கு எதிரான டாலர் மதிப்பு சென்ற வாரம் குறைந்தது. உலகெங்கும் உள்ள பொருட்கள் மற்றும் பங்கு சந்தைகள் பெருமளவுக்கு உயர்ந்தன.

பெரிய அமெரிக்க வங்கிகள் வீழ்ச்சியில் இருந்து தப்பிக்கும் என்ற புதிய நம்பிக்கையிலும், இந்திய வங்கிகளின் செயல்பாடு இந்த வருடம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையாலும், இந்திய வங்கித் துறை பங்குகள் பெருமளவு உயர்ந்தன. உலோகங்களின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் உலோகத் துறை பங்குகள் நன்கு முன்னேறின.

நானோ கார் வரவு வாகனத் துறை பங்குகள் உயர உதவின. நிபிட்டி குறியீடு கணக்கிடும் முறை மாற்றப் பட்டது ரிலையன்ஸ் பங்குகளுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் ரிலையன்ஸ் பங்குகள் வெகுவாக உயர்ந்தன. இதர எரிபொருள் பங்குகளும் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் உயர்ந்தன.

பணவீக்கம் மேலும் சரிந்தது வட்டி வீதங்கள் குறைக்கப் படும் என்ற புதிய நம்பிக்கையை உருவாக்கியது.

பல பன்னாட்டு பங்கு சந்தை மேதைகள், தற்போதைய சந்தை முன்னேற்றம் இன்னும் பல காலம் நீடிக்கும் என கருத்துத் தெரிவித்துள்ளனர். நிபிட்டி குறியீடு 3600 வரையிலும் சென்செக்ஸ் குறியீடு 12000 வரையிலும் உயரக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

திரும்ப வரும் வெளிநாட்டு முதலீடுகள், உள்நாட்டு நிறுவனங்களின் தொடர்ந்த ஆர்வம், பெரிய அளவில் விலை சரிந்துள்ள பங்குகள் போன்ற விஷயங்கள், மேற்கூறிய கருத்துக்கு சாதகமாக இருந்தாலும், கடந்த மூன்று வாரங்களில் பெருமளவு முன்னேறியுள்ள சந்தையில் சிறிதளவாவது 'லாப விற்பனை' நடைபெறும் என்றே தோன்றுகிறது. ரூபாய் 50 அளவை இன்னும் முறியடிக்காதது வெளிநாட்டு பணவரவு குறித்த சில சந்தேகங்களை உருவாக்குகிறது.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள G-20 மாநாடு, ஐரோப்பிய வங்கியின் வட்டி வீத முடிவு மற்றும் அமெரிக்க வாகனத் துறைக்கான அரசு உதவி போன்றவை சந்தையின் போக்கை தீர்மானிக்கும். மேலும் அடுத்த வாரம் வெளியிடப் படவுள்ள அமெரிக்காவின் பொருளாதார செய்திகள் சந்தையின் கவனத்தை ஈர்க்கும்.

இந்திய சந்தைகளின் பெரிய வர்த்தகர்கள் பெருமளவு சிறிய மற்றும் நடுத்தர பங்குகளில் வர்த்தகம் செய்து வருகிறார்கள். இது சந்தையின் மீது காணப் படும் நம்பிக்கையைப் பிரதி பலிக்கின்றது என்றாலும், "அக்ருதி" போன்ற பங்குகளின் ஏற்றத் தாழ்வு நிலைகளில் இருந்து தம்மை தாமே பாதுகாத்துக் கொள்வது சிறிய முதலீட்டாளர்களின் பொறுப்பு ஆகும்.

நல்ல டிவிடென்ட் தரும் மற்றும் சிறந்த நிலையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் மெல்ல மெல்ல வாங்கலாம். வர்த்தகர்களின் அடுத்த இலக்காக, நாம் ஏற்கனவே கூறியிருந்த படி, 3200 (நிபிட்டி) புள்ளிகள் இருக்கும். அதுவரை "வாங்கும் நிலையை" வர்த்தகர்கள் எடுக்கலாம். அந்த நிலையை அடைந்த பிறகு, அன்றைய சூழலில் அடிப்படையில் ஒரு புதிய கோணத்தில் சந்தை அணுகப் பட வேண்டும்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

4 comments:

MCX Gold Silver said...

நிப்டி குறியிடு கணகிடும் முறை எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?நன்றி

Maximum India said...

முன்பு ஒரு நிறுவனத்தின் மொத்த சந்தை முதலீட்டின் (Total Market Capitalization) அடிப்படையில் அந்த நிறுவனத்தின் நிபிட்டி பங்கீடு (Weight) இருந்தது. ஆனால், இப்போதோ ஒரு நிறுவனத்தின் பங்குகளில் துவக்க முதலீட்டாளரின் (Promoter) பங்குகளை நீக்கி விட்டு, சந்தையில் உள்ள பங்குகளின் சந்தை முதலீட்டின் அடிப்படையில் மட்டுமே நிபிட்டி மதிப்பிடப் படுகிறது.

உதாரணத்திற்கு ரிலையன்ஸ் பங்குகளில் சுமார் 45 சதவீதம் சந்தையில் வர்த்தகம் (Floating Shares) செய்யப் படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயத்தில் என்டிபிசி பங்குகளில் சுமார் 20 சதவீதம் மட்டுமே சந்தையில் வர்த்தகம் செய்யப் படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நிபிட்டி கணக்கிடும் முறை


நிபிடியில் ரிலையன்ஸ் பங்கீடு = மொத்த ரிலையன்ஸ் சந்தை முதலீடு * 45% / நிபிட்டி மொத்த சந்தை முதலீடு (Total Nifty Market Cap)

நிபிடியில் என்டிபிசி பங்கீடு = மொத்த என்டிபிசி சந்தை முதலீடு * 20% / நிபிட்டி மொத்த சந்தை முதலீடு

சென்செக்ஸ் ஏற்கனவே இதே முறையில்தான் கணக்கிடப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

சரியான முறையில் விளக்கி இருக்கிறேனா என்று நீங்கள்தான் இப்போது சொல்ல வேண்டும்.

MCX Gold Silver said...

தங்களின் விளக்கத்திற்கு நன்றி நன்றி நன்றி

Maximum India said...

நன்றி dg

Blog Widget by LinkWithin