Friday, March 6, 2009

எதிர்மறையான விமர்சனங்களை கையாளுவது எப்படி?


அன்றாட வாழ்வில் நாம் பல தர பட்ட விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். சில விமர்சனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. சில விமர்சனங்கள் மனதில் காயத்தை உண்டாக்குகின்றன. சில விமர்சனங்கள் கோபத்தையும் விரோதத்தையும் வளர்க்கின்றன. விமர்சனங்களை சரியாக கையாளும் போது, அவற்றின் எதிர்மறையான பாதிப்பிலிருந்து நாம் தப்பிப்பதோடு, அவற்றை நம் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். (சொந்த வாழ்வில்) வெற்றி பெற்றவர்களான அரசியல் வாதிகள், சினிமா ஹீரோக்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்கள் தம்மைப் பற்றி எழும் விமர்சனங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதை கண்கூடாக பார்க்க முடியும். எதிர்மறை விமர்சனங்களை எப்படி சிறப்பாக எதிர்கொள்வது என்பது பற்றி இங்கு விவாதிப்போம்.

விமர்சனங்களுக்கான களங்களையும் காரணங்களையும் அடிப்படையாக கொண்டு அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.

முதல் வகை காற்று வாக்கிலான விமர்சனங்கள். இவை பெரும்பாலும் விமர்சிப்பவரின் அறியாமையினாலேயே (இயந்திரகதியில்) எழுப்பப் படுகின்றன. இந்த குறிப்பிட்ட வகை விமர்சனங்களால் (இரு தரப்பிற்கும்) பயன்கள் எதுவுமில்லை என்றாலும் ஏதோ விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவை எழுப்பப் படுகின்றன. இந்த வகை விமர்சகர்கள், தன்னை/ சொந்த குடும்பத்தை/ வேலையை சரியாக கவனிக்காமல், உலகையே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐந்து நிமிட மின்வெட்டிற்கு உள்ளூர் மின் பணியாளர் முதல் முதலமைச்சர் வரை எல்லாரோரையும் திட்டித் தீர்த்து விடுவார்கள். பிரச்சினை இவர்கள் வீட்டு மின் இணைப்பில்தான் என்றால், உடனடியாக சரி செய்ய சோம்பேறித்தனப் படுவார்கள். இவர்களின் விமர்சனங்களில் அபூர்வமாக ஏதாவது நல்ல விஷயங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் என்றாலும், இவர்களது விமர்சனங்களை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளி விடுவது நம் நேரத்தை மிச்சப் படுத்தும். இவர்களுக்கு நம் பதில் மெல்லிய புன்னகை மட்டுமே.

இரண்டாம் வகை விமர்சனங்கள் கவனிக்க வேண்டியவை. எளிதில் புறந்தள்ள முடியாதவை. இந்த விமர்சனங்களின் நோக்கங்கள் உள்ளே ஒளிந்திருக்கும். இவை பெரும்பாலும் நமக்கு அருகிலிருப்பவர்களாலேயே எழுப்பப் படும். விமர்சிக்கப் படுபவரின் கவனைத்தை தன் பக்கம் ஈர்ப்பது அல்லது அவரை காயப் படுத்துவதுதான் இந்த வகை விமர்சனங்களின் நோக்கங்கள். ஒருவரது உடல்ரீதியான பிரச்சினைகள், சாதி, மதம், ஏழ்மை, கல்வி இன்மை (அல்லது குறைவு), வேறு ஏதாவது குறைபாடு ஆகியவற்றை மறைமுகமாக விமர்சித்து அவரை காயப் படுத்த விரும்பும் ஒரு சிலர் உங்கள் அருகே எப்போதும் இருக்கிறார்கள். உதாரணங்கள்: "உங்கள் குடும்பத்திலேயே இந்த வழக்கம் இருக்காது." " எனக்கு அப்போதே சந்தேகம். உங்களால் முடியுமா என்று?" நம்மை காயப் படுத்த வரும் இந்த விமர்சனங்களை நாம் இதயத்திற்கு கொண்டு சென்றால் அது விமர்சித்தவருக்கு வெற்றியாகி விடும். எனவே, இந்த வகை எதிர்மறை விமர்சனங்களை, புரிந்து கொள்ளும் அதே சமயத்தில் பொருட்படுத்தவே கூடாது. இவர்களுக்கு நம் பதில், "நான் உங்களால் துளியும் காயப் பட வில்லை" என்பதை செய்கைகளால் உணர்த்துவது.

அதே போல உறவுகளில் (நட்புகளில்) விரிசல் வரும் போது, அதை மறைமுகமாக வெளிபடுத்துபவர்கள் இருக்கிறார்கள். உதாரணம்: "நீங்கள் ரொம்ப பிசி போல தெரிகிறது?" இங்கும் கூட விமர்சனங்களின் வெளிப் பொருளைப் பற்றி கவலைப் படாமல், உறவுகளின் (நட்புகளில்) விரிசலை சரி செய்யவே முயல வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "கவலைப் படாதீர்கள் உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று செய்கைகளால் உணர்த்துவது.

மூன்றாம் வகை விமர்சனங்கள் நம்மீது உள்ள அக்கறையால் நமது நலம் விரும்பிகளால் வெளிப்படுத்தப் படுபவை. இந்த வகை விமர்சனங்கள் சமயத்தில் காராசாரமாக கூட இருக்கலாம். ஆனால் இந்த விமர்சனங்களின் மீது எந்த வகையிலும் நம்முடைய அதிருப்தியை வெளியிடக் கூடாது. அது நமது நலம் விரும்பிகளை காயப் படுத்தி விட வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த முறை அவர்கள் விமர்சனங்களை வெளியிடாமல் கூட இருந்து விடலாம். அது நமக்குத்தான் நஷ்டம். இங்கு, விமர்சனம் வெளிப்படுத்தப் பட்ட விதம் பற்றி கவலைப் படாமல், அதில் உள்ள அக்கறையை புரிந்து கொண்டு நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "உள்ளார்ந்த நன்றி"

கடைசியாக எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி எனது தனிப் பட்ட அனுபவத்தில் இருந்து ஒரு சிறிய உதாரணம்.

தனக்குக் கீழே உள்ள அலுவலர்களின் பணியினை பற்றி கன்னாபின்னாவென்று விமர்சிக்கும் பழக்கம் கொண்ட ஒரு மேலதிகாரி விடுப்பிலிருந்து திரும்பி வருவதற்கு சற்று முன்பு, அவர் பெயர் சொல்லி பயமுறுத்திய ஒரு இடைநிலை அதிகாரிக்கு ஒரு இளநிலை அலுவலர் அளித்த பதில்.

"ஐயா! குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் கடுமையாக விமர்சிப்பது அவருக்கு (மேல் நிலை அதிகாரி) அதிகாரம் கொடுத்த உரிமை. இளநிலை அதிகாரி என்ற முறையில் அந்த விமர்சனத்தை சகித்துக் கொள்வதும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டியதும் என்னுடைய கடமை. அதே சமயம், கொடுத்த பணியினை சிறப்பாக செய்ய வேண்டியது மட்டுமே எனது பொறுப்பு. அவரது தனிப்பட்ட (அலுவலக) குணாதிசியங்களைப் பற்றி கவலைப் (அச்சப்) படத்தான் வேண்டுமா என்று முடிவு செய்வது எனது தனிப் பட்ட உரிமை."

நன்றி.

12 comments:

பழமைபேசி said...

ஆக்கப்பூர்வமான கட்டுரை! நன்றி!!

Maximum India said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பழமைபேசி!

பொதுஜனம் said...

அடுத்தவரின் விமர்சனம் நம்மை பாதிப்பது என்பது அவர் மேல் நாம் வைத்துள்ள கணிப்புதான். அடுத்தவர் நம்மை மதிக்கிறார் அல்லது வெறுக்கிறார் என்ற அளவில் அவரது விமர்சனம் ... இல்லை இல்லை .. அவரது சிறு பார்வை கூட நம்மை பாதிக்கும்.நீங்கள் புழுவாய் மதிக்கும் ஒருவர் உங்களை சகட்டு மேனிக்கு ஏசினால் நீங்கள் ஒன்றும் பெரிதாக கவலை பட போவதில்லை.ஆனால் பெரிதும் மதிக்கும் ஒருவர் உங்களை கேவலமாக ஒரு பார்வை பார்த்தல் கூட மனம் குழம்பும். நாம் வெறுக்கும் மனிதரை அவரது மேலான திறமை காரணமாக கூட உங்களை அறியாமல் நீங்கள் மதிக்கலாம். ஆனால் அவருடன் சிறு மனத்தாங்கல் வந்தால் கூட நீங்கள் மிகவும் காயப்படுவீர்கள்.ஆனால் எது வந்தாலும் வடிகட்டி தேவையானது மட்டும் உள்வாங்கும் மனது இருந்தால் .. சூனா பானா போ போ என்று போய்டே இருக்கலாம்.

butterfly Surya said...

அருமை.

வாழ்த்துகள்.

வால்பையன் said...

பாராட்டுகளைவிட விமர்சனங்களே நம்மை மேலும் செம்மை படுத்தும் என நம்புபவன் நான்.

அதே நேரம் நீங்கள் சொல்வது போல் சிலர் குற்றம் கண்டுபிடிப்பதையே தொழிலாக வைத்திருப்பார்கள்.

அம்மாதிரியான ஆட்களிடம் விமர்சனங்களை எதிர்பார்த்தால் நாம் நின்ற இடத்தில் இருந்து நகர முடியாது.

nerkuppai thumbi said...

நம் வலை பக்கம் தமிழில் இருப்பதால் டாக்டர் கலைஞரையோ செல்வியையோ குறிப்பிட்டு சொன்னால் தான் முழுமை பெரும் அல்லவா?

கலைஞரும் செல்வியும் ஒருவர் மற்றொருவரின் விமர்சனத்திற்கு எப்படி எதிர்வினை காட்டுகிறார்களோ அது போன்று இருக்கவே கூடாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் விமர்சனத்திற்கு காட்டும் எதிர்வினை முதிர்ச்சி இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய வழக்கமான கேள்வி: விமர்சனம் என்பதற்கு தமிழில் வார்த்தை உண்டா? டாக்டர் நன்னன் சீடர்கள் சொல்லட்டும். நன்றி

பட்டாம்பூச்சி said...

நல்ல பதிவு :))
நல்ல விமர்சனத்தை எதிர்கொள்ளவும் தெளிவான மனம் வேண்டும்.இல்லையேல் அது தலைக்கு ஏறிவிடும் ஆபத்து உள்ளது.

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

கருத்துரைக்கு நன்றி.

//ஆனால் எது வந்தாலும் வடிகட்டி தேவையானது மட்டும் உள்வாங்கும் மனது இருந்தால் .. சூனா பானா போ போ என்று போய்டே இருக்கலாம்.//

உண்மைதான் பொதுஜனம். அடுத்தவர் விமர்சனம் நம்மை பாதிப்பது நமது மனதின் வலிமையைப் பொறுத்துத்தான் இருக்கிறதே தவிர அந்த விமர்சனத்தின் தீவிரமோ அல்லது விமர்சகரின் நோக்கமோ அல்ல.

மத்தபடிக்கு நம்ம பாலிசி, சூனா பானா! போ! போ! போயிட்டே இரு! அவ்வளவுதானே?

Maximum India said...

அன்புள்ள வண்ணத்துபூச்சியாரே!

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. உங்கள் வருகை மனது சிறகடிக்க உதவுகிறது. :)

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

நட்சத்திர பதிவுகள் இட வேண்டிய இந்த பிசியான நேரத்திலும் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.

//பாராட்டுகளைவிட விமர்சனங்களே நம்மை மேலும் செம்மை படுத்தும் என நம்புபவன் நான்.//

உண்மைதான். .

//அம்மாதிரியான ஆட்களிடம் விமர்சனங்களை எதிர்பார்த்தால் நாம் நின்ற இடத்தில் இருந்து நகர முடியாது.//

அவர்களிடம் நம் பதில் மெலிதான புன்னகை மட்டுமே. அப்புறம் நம்ம பாலிசி படி, போ போ போயிட்டே இரு :)

நன்றி

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!

//நம் வலை பக்கம் தமிழில் இருப்பதால் டாக்டர் கலைஞரையோ செல்வியையோ குறிப்பிட்டு சொன்னால் தான் முழுமை பெரும் அல்லவா?

கலைஞரும் செல்வியும் ஒருவர் மற்றொருவரின் விமர்சனத்திற்கு எப்படி எதிர்வினை காட்டுகிறார்களோ அது போன்று இருக்கவே கூடாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் விமர்சனத்திற்கு காட்டும் எதிர்வினை முதிர்ச்சி இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. //

உண்மைதான் ஐயா. விமர்சனங்களும் பதில் விமர்சனங்களும் நாகரிகமற்ற முறையிலேயே வெளிபடுத்த படுகின்றன. அந்த நாகரிகமற்ற தன்மைக்கும் அடுத்தவர் மீதே குற்றம் சாட்டி சப்பைக்கட்டுக்கள் கட்டப் படுகின்றன.

//என்னுடைய வழக்கமான கேள்வி: விமர்சனம் என்பதற்கு தமிழில் வார்த்தை உண்டா? டாக்டர் நன்னன் சீடர்கள் சொல்லட்டும். //

என்னைப் பொருத்த வரை, தமிழரின் வழக்கில் உள்ள எல்லா வார்த்தைகளும் (மூலச் சொற்கள் வேறு மொழியில் இருந்தாலும்) தமிழ் வார்த்தைகளே. ஒவ்வொரு பொருளுக்கும் சரியான தமிழ் மூலச் சொல்தான் உபயோகப் படுத்த வேண்டும் என்ற கருத்து சரி இல்லை என்று நினைக்கிறேன். பல மொழி பேசும் கலாச்சாரங்களில் உருவாகும் கருத்துக்களின் அடிப்படையிலேயே அந்தந்த பகுதிகளில் புதிய சொற்களும் உருவாகுகின்றன. பிற கலாச்சாரங்களில் இருந்து கருத்துக்களையும் தொழிற்நுட்பத்தையும் கடன் வாங்கும் நாம் வார்த்தைகளையும் கடன் வாங்கலாம் என்றே நினைக்கிறேன். ஆங்கில மொழி இந்த பாணியைப் பின்பற்றியதால்தான் இன்று உலக மொழியாக உயர்ந்து நிற்கிறது. இதனால், ஒரு பொருளுக்கு பல சொற்கள், ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் எனும் நிலை (ஆங்கிலம் போல) தமிழிலும் ஏற்பட்டு நம் மொழியை வளப் படுத்தும் என்பதே என் கருத்து.

நன்றி

Maximum India said...

அன்புள்ள பட்டாம் பூச்சியாரே!

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

//நல்ல விமர்சனத்தை எதிர்கொள்ளவும் தெளிவான மனம் வேண்டும்.இல்லையேல் அது தலைக்கு ஏறிவிடும் ஆபத்து உள்ளது //

உண்மைதான். நன்றி

Blog Widget by LinkWithin