Sunday, March 15, 2009

பொறுத்தது போதும்! பொங்கி எழு!


பல வாரமாக பந்தாடப் பட்ட (பங்குசந்தையின்) காளைகள் சென்ற வாரம் பொங்கி எழுந்து கரடிகளை புரட்டி எடுத்து விட்டனர். பலரும் எதிர்பாரா வண்ணம் சிட்டி பாங்க் சென்ற காலாண்டில் லாபம் ஈட்டியதும், அந்த வங்கிக்கு இனிமேல் அரசு உதவி தேவைப் படாது என்று அதன் தலைவர் (விக்ரம் பண்டிட்) கூறியதும் இந்த எழுச்சிக்கு முக்கிய காரணங்கள். காளைகள் தமது முன்னேற்றத்தை தொடர்வார்களா அல்லது கரடிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவார்களா என்று இங்கு பார்ப்போம்.

சென்ற வாரம், மிலாடி நபி மற்றும் ஹோலி பண்டிகைகளை முன்னிட்டு இந்தியப் பங்குச்சந்தை இரண்டு நாட்கள் மூடப் பட்டிருந்ததால், வர்த்தக நடவடிக்கைகள் குறைந்தே காணப் படும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், உலக சந்தைகள் (உபயம்: சிட்டிபாங்க்) பெருமளவு முன்னேறியதன் தொடர்ச்சியாக நம்முடைய சந்தைகளும் நல்ல முன்னேற்றம் கண்டன. இந்தியாவின் தொழிற் உற்பத்தி (Industrial Production, -0.50%) வீழ்ச்சியடைந்தாலும், அந்த வீழ்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருந்ததால் சந்தைகள் மகிழ்ச்சி அடைந்தன. நுகர்வோர் பொருட்கள் விற்பனை வளர்ச்சி அடைந்ததும் ஒரு சாதகமான செய்தியாக இருந்தது. மேலும், பல ஆண்டுகள் கண்டிராத அளவு மொத்த விலை பணவீக்கம் குறைந்தது (Wholesale Price Index Inflation, 2.43%), வட்டி வீதங்கள் குறைக்கப் படும் என்ற புதிய நம்பிக்கையை அளித்தது. விற்று பின் வாங்கும் நிலையை (Short Position) எடுத்த கரடிகள் அவசர அவசரமாக தங்கள் (F&O) நிலையை சரி செய்ய முனைய, சந்தைகள் மேலும் முன்னேற்றம் கண்டன.

நிபிட்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ரிலையன்ஸ் இந்த வாரம் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டது. தொடர்ந்து பல வாரங்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வரும் வங்கித் துறை மற்றும் உலோகத் துறை பங்குகள் இந்த வாரம் நல்ல வளர்ச்சியைக் கண்டன. சென்ற மாதம் வாகன விற்பனை அதிகரித்துள்ளது என்று வந்த தகவல்களை அடுத்து அந்தத் துறை பங்குகளும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டன. மேலும், அரசு கனரக வாகனங்களை பெருமளவில் வாங்கப் போகிறது என்ற செய்தி அசோக் லெலான்ட், டாட்டா மோடோர்ஸ் போன்ற பங்குகள் உயர உதவியது.

வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு இந்த வாரத்தில் சாதகமாக இருந்ததும், பல சிறிய நடுத்தர பங்குகளின் விலை உயர்ந்ததும் நல்ல செய்தகள் என்றாலும், வர்த்தகத்தின் அளவு (Trading Volume) குறைந்து காணப் பட்ட வருத்தத்துக்குரிய ஒன்றாகும்.

உலக அளவில் டாலர் மதிப்பு குறைந்ததை அடுத்து, இந்திய ரூபாயும் சென்ற வாரம் உயர்வை சந்தித்தது. உலகெங்கும் உள்ள அரசாங்கங்களின் பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் எண்ணெய் தேவையை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் கச்சா எண்ணெயும் நல்ல வளர்ச்சியை சந்தித்தது.

அமெரிக்க சந்தைகளின் ஏற்றத்தாழ்வு குறியீடான (Volatility Indicator) CBOE Vix மற்றும் இந்திய ஏற்றத்தாழ்வு குறியீடான Vix சரிந்திருப்பது, அடுத்த வாரமும் சந்தைகள் நிலையான வளர்ச்சியை காணும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. கரடிகளின் பிடியில் இருந்து மீள முயற்சிக்கும் காளைகளின் இந்த "Bear Rally" எவ்வளவு தூரம் தொடரும் என்பது அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்களைப் பொறுத்தே அமையும்.

சென்ற வாரம் நாம் குறிப்பிட்டிருந்த படி முக்கிய அரணான 2700-2720 புள்ளிகளுக்கு இடையே நிபிட்டி முடிவடைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையை நிபிட்டி முறிக்கும் பட்சத்தில் 2810 புள்ளிகள் வரை உயர வாய்ப்புள்ளது. இந்த எதிர்ப்பு நிலை முறியடிக்கப் படாவிட்டால், மீண்டும் ஒரு முறை 2550 புள்ளிகளுக்கு அருகே செல்ல வாய்ப்புள்ளது. ஒரு வேளை, முழுமையாக முறியடிக்கப் பட்டால் (கரடிகள் தங்கள் "விற்ற பின் வாங்கும் திறந்த நிலையை" (Open Short Position) சமன் செய்ய நேரிட்டு) மேலும் முன்னேற்றத்தை காண முடியும். அடுத்த எதிர்ப்பு நிலைகள் 2900 க்கு அருகிலும் 3050 க்கு அருகிலும் காண முடியும்.

வர்த்தகர்கள் திங்கட்கிழமை காலை, 2730 அளவை முழுமையாக தாண்டும் பட்சத்தில் வாங்கும் நிலையை (Long Position) எடுக்கலாம். இழப்பு தடுக்கும் நிலை (ஸ்டாப் லாஸ் லிமிட்) 2670 என வைத்துக் கொள்ளலாம். பல வாரமாக வீழ்ச்சி கண்டிருக்கும் பொதுத் துறை வங்கிப் பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்கலாம். 2550-2600 புள்ளிகள் நல்ல அரணாக இருக்கும்.

ஆக மொத்தத்தில், காளைகள் நிதானமாக முன்னேற நல்ல வாய்ப்பு இருந்தாலும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. நடப்பு முன்னேற்றம் தொடர்ந்து பல நாட்கள் நீடிப்பது என்பது கடினமான ஒன்று என்பதை சிந்தனையில் கொண்டு வர்த்தகம் செய்வது நல்லது.

உலக பங்கு வர்த்தகத்தில் வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் இந்திய ரூபாய் மேலும் முன்னேற வாய்ப்புள்ளது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

4 comments:

வால்பையன் said...

பணவீக்கம் தடாலடியா குறைஞ்சிருச்சாமே!

ரூபாயின் மதிப்பு ஐம்பதுக்கு கீழே வ்ருமா?

Maximum India said...

பின்னூட்டத்திற்கு நன்றி வால்பையன்.

//பணவீக்கம் தடாலடியா குறைஞ்சிருச்சாமே!//

உண்மைதான். அதே சமயம் பணவீக்கம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கீழே விழுந்தால் தொழிற் துறைக்கு நல்ல செய்தி இல்லை.

//ரூபாயின் மதிப்பு ஐம்பதுக்கு கீழே வ்ருமா?//

ஐம்பது வரை போகலாம். ஆனால் அதற்கு கீழே போவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்றே நினைக்கிறேன். காரணம் நீங்க தனிப் பதிவாக போட்ட அதே "துண்டு பட்ஜெட்தான்"

நன்றி.

MCX Gold Silver said...

சிட்டி பேங்கின் "லாப" கணக்கை நம்பலாமா சார் ??????????

Maximum India said...

நன்றி dg

//சிட்டி பேங்கின் "லாப" கணக்கை நம்பலாமா சார் ??????????//

எனக்கும் கூட இந்த சந்தேகம் உண்டு. எனவேதான், நீண்ட கால நோக்கில் (உலக பொருளாதாரத்தில் ஒரு தெளிவான திருப்பம் வரும் வரை) தற்போதைய முன்னேற்றம் நீடிக்க இயலாது என்று பதிவில் இட்டிருக்கிறேன்.

நன்றி.

Blog Widget by LinkWithin