Tuesday, March 17, 2009

சுவிஸ் பாங்க் ரகசியங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் படுமா?


"கறுப்புப் பணத்தின் சொர்க்கம்" என்றழைக்கப் படும் சுவிஸ் நாட்டின் வங்கிகளுக்கு இப்போது ஒரு சிக்கல் புதிதாக முளைத்திருக்கிறது. பொருளாதார தேக்கத்தில் தற்போது சிக்கிக் கொண்டிருக்கும் "முன்னேறிய நாடுகளின்" பார்வை இப்போது இந்த வங்கிகளின் மீது படிந்துள்ளது. சுவிஸ் வங்கிகளின் ரகசியத் தன்மை தொடருமா என்றும் இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு பற்றி இங்கு விவாதிப்போம்.

முதலில், சுவிஸ் வங்கியில் ரகசியம் மற்றும் பணத்தின் "கறுப்புத் தன்மை" எப்படி காக்கப் படுகிறது என்று பார்ப்போம்.

தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த கறுப்புப் பண சேவையை கிட்டத்தட்ட முன்னூறு வருடங்களாக செய்து கொண்டிருக்கும் சுவிஸ் வங்கிகள், தங்கள் வங்கியின் கணக்குகளை வாடிக்கையாளரின் பெயரில் பராமரிப்பதில்லை. ஒவ்வொரு கணக்குக்கும் ஒரு தனி ரகசிய எண் வழங்கப் படுகிறது. அந்த வங்கிக் கணக்கு பற்றிய அனைத்து தகவல் பரிமாற்றங்களும் அந்த ரகசிய "எண்"ணைக் கொண்டே நடைபெறுகிறது. அதே சமயம், வங்கிக் கணக்குகள் முற்றிலும் "ஆளில்லா" கணக்குகள் அல்ல என்பதும் வங்கியின் முக்கிய அலுவலர்களுக்கு வாடிக்கையாளர்களின் முழு விவரமும் தெரியும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

சுவிஸ் நாட்டில் வரி ஏய்ப்பு (Tax Fraud) என்பது குற்றம் என்றாலும் வரி விவரங்களில் (Tax Returns) குறைவான வருமானத்தை காட்டினாலோ அல்லது வரி விவரம் தாக்கல் செய்யாமல் இருந்தாலோ அது குற்றமல்ல. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றாலும், இந்த வேடிக்கையான (அல்லது விவரமான) சட்ட பாதுகாப்பு சுவிஸ் மக்களுக்கு மட்டுமல்ல, அங்கு முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கும் மாறுபாடில்லாமல் வழங்கப் பட்டு உள்ளது. சுமார் ஒரு கோடி கோடி ரூபாய் ($ 2 trillion) வெளிநாட்டுப் பணம் சுவிஸ் வங்கிகள் வசம் இருப்பதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருப்பு பணத்தை ஒளித்து வைக்க விரும்பும் ஊழல் அரசியல் வாதிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இந்த சேவையை, முன்னூறு வருடங்களாக தொடர்ந்து வழங்கி வந்த சுவிஸ் வங்கிகளுக்கு இப்போது ஒரு புதிய சிக்கல் முளைத்திருக்கிறது. சுவிஸ் நாட்டின் பெரிய வங்கியான யூனியன் பேங்க் ஒப் சுவிச்சர்லாந்து (UBS) மீது அமெரிக்க வருமான வரி அதிகாரிகள் ஒரு வழக்கை அமெரிக்காவில் பதிவு செய்துள்ளனர்.

இது வரை இந்த விஷயத்தில் அதிகம் அலட்டிக் கொள்ளாத அமெரிக்க அரசு இப்போது இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்கு முக்கிய காரணம் அந்த அரசு இப்போது நிதிப் பற்றாக்குறையில் தவித்துக் கொண்டிருப்பதே ஆகும். இந்த வருடம் அமெரிக்க அரசின் நிதிப் பற்றாக்குறை கிட்டத்தட்ட 90 லட்சம் கோடி ரூபாயாக ($1.75 trillion) இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிதிப் பற்றாக்குறையை ஓரளவுக்கேனும் குறைக்க வரி வருமானத்தை (வரி ஏய்ப்புகளை குறைப்பதின் மூலம்) அதிகரிக்க வேண்டுமென்று அந்த அரசு விரும்புகிறது. வரி கட்டாத சுவிஸ் வங்கி (அமெரிக்க குடிமகன்கள்) கணக்குகளிடம் இருந்து வரி வசூல் செய்ய அமெரிக்க அதிகாரிகள் தாக்கல் செய்த முதல் வழக்கில், 300 கணக்குகள் சார்பாக யூனியன் பேங்க் ஒப் சுவிச்சர்லாந்து சுமார் 3900 ($780 million) கோடி செலுத்தியிருப்பதாக தெரிகிறது.

தற்போது பொருளாதார சிக்கல் மற்றும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கி இருக்கும் மற்ற முன்னேறிய நாடுகளும் அமெரிக்க வழியில் செல்ல விரும்புகின்றன. அடுத்த மாதம் நடை பெற உள்ள G-20 மாநாட்டில் "ரகசியம் காக்கும் சட்டங்களை" நீக்க வேண்டும் என்று சுவிஸ் மற்றும் இது போன்ற பிற நாடுகளின் மீது நிர்ப்பந்தங்கள் செய்யப் படும் என்று தெரிகிறது. அவ்வாறு செய்யாவிடில். இந்த நாடுகள் மீது சில கடுமையான கட்டுப்பாடுகள்/தடைகள் விதிக்கவும் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.

சுவிஸ் நாட்டின் முக்கிய வங்கி, அமெரிக்க அரசு தாக்கல் வழக்கின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் சார்பில் வரி செலுத்தியதும், முன்னேறிய நாடுகள் போட விரும்பும் கிடுக்கிப் பிடியும், சுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் இன்னும் பல காலம் தொடர முடியாது என்று நம்ப வைக்கிறது. (நன்றி: http://www.merinews.com/catFull.jsp?articleID=15752124)

இந்தியர்களின் பணம் கூட ஏராளமாக சுவிஸ் வங்கிகளில் உள்ளது. அமெரிக்காவைப் போலவே, இந்தியாவிலும் கூட ஏராளமான நிதிப் பற்றாக்குறை உள்ளது. சொல்லப் போனால், இன்னமும் கூட இந்தியாவின் சமூக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஏராளமான நிதி தேவைப் படுகிறது.

எனவே, இந்திய அரசு இந்த பணத்தை இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் முழு ஈடுபாட்டோடு செயல் படுவார்கள் என்பது கேள்விக் குறிதான். ஏனென்றால், சுவிஸ் வங்கிகளில் இருக்கும் பணத்தின் பெரும்பகுதி அவர்கள் பணமாகத்தான் இருக்கும் என்று நம்பப் படுகிறது.

இந்தியாவின் எந்த ஒரு பெரிய கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இது பற்றிய தேர்தல் வாக்குறுதிகள் இருக்கின்றனவா என்று தெரிய வில்லை. இந்தியாவில் உலுக்கிய போபர்ஸ் விவகாரத்தில் கூட இன்று வரை யார் பெயரில் பணம் பெறப் பட்டது என்று விளக்கப் பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்க அரசால் மேற்சொன்ன வழக்கில் விவரங்கள் பெற முடிகின்ற பட்சத்தில் இந்திய அரசால் ஏன் முடியாமல் போனது என்பது கூட மக்கள் விடை காண முயலும் ஒரு பெரிய கேள்விதான். வருகிற பொதுத் தேர்தலில் சமூக அக்கறை உள்ள ஊடகங்களும், மக்கள் விழிப்புணர்வு இயக்கங்களும் இந்திய அரசியல்வாதிகளிடம் சுவிஸ் வங்கி விவகாரத்தை எழுப்பி அவர்கள் மீது ஒரு தார்மீக நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

நன்றி.

18 comments:

hariharan said...

நல்ல பதிவு,

நமது நாட்டில் ஊழலில் சம்பாதித்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், வரிஏய்ப்பு செய்த தொழிலதிபர்களின் சேமிப்பு தான் அங்கு சுமர் 1500 பில்லியன் அமெரிக்க டாலர் அள்விற்கு உள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் சிபிஎம் கட்சி இதுபற்றி மத்திய அரசிடம் கோரியது ஆனால் எந்த விளைவும் இல்லை. நீங்கள் கூறியது போல பொதுமக்களிடம் இந்த செய்தி பரவி தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் பிரச்சாரம் செய்து அம்பலப்ப்டுத்தவேண்டும். இதுபற்றி எனது வலைத்தள்த்தில் ஒரு பதிவிட்டுருக்கிறேன் பார்க்கவும்.
http://arivoliiyakkam.blogspot.com/2009/02/blog-post_20.html

வால்பையன் said...

நம்ம பணம் சுவீஸ் வங்கி வரைக்கும் கிடக்குது! கேள்வி கேட்கத்தான் நாதியில்லை.
ஒரு வேளை பணம் போட்டவன் செத்து போயிட்டா அவுங்க வாரிசுக்கு கூட பணம் திரும்ப கிடைக்காதாமே!

Maximum India said...

அன்புள்ள ஹரிஹரன்

கருத்துரைக்கு மிக்க நன்றி.

//நமது நாட்டில் ஊழலில் சம்பாதித்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், வரிஏய்ப்பு செய்த தொழிலதிபர்களின் சேமிப்பு தான் அங்கு சுமர் 1500 பில்லியன் அமெரிக்க டாலர் அள்விற்கு உள்ளது.//

ஏழை நாடான இந்தியாவிலிருந்து இவ்வளவு பணம் அங்கு சென்றிருப்பது வருத்தத்தை விட கோபத்தையே அதிகம் வரவழைக்கும் விஷயம்.

//சமீபத்தில் இந்தியாவில் சிபிஎம் கட்சி இதுபற்றி மத்திய அரசிடம் கோரியது ஆனால் எந்த விளைவும் இல்லை. //

பணம் போட்டவர்களில் பலர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளாயிற்றே! எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?

//நீங்கள் கூறியது போல பொதுமக்களிடம் இந்த செய்தி பரவி தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் பிரச்சாரம் செய்து அம்பலப்ப்டுத்தவேண்டும். //

நிச்சயமாக.

//இதுபற்றி எனது வலைத்தள்த்தில் ஒரு பதிவிட்டுருக்கிறேன் பார்க்கவும்.//

உங்கள் பதிவு வலையைப் பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.

உங்களுடைய நோக்கம் உயர்வானது. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி.

Itsdifferent said...

நல்ல பதிவு. இதை எப்படி, மக்களுக்கு புரிய வைப்பது? அவர்கள் அதை எப்படி அரசியல்வியாதிகளிடம் கேள்வி கேட்பது ?
MSM - Main Stream Media- ஏன் இப்படி வாய் மூடி மௌனியாக இருக்கிறது என்பது தெரியவில்லை , ஒருவேளை அவர்களும் , இந்த வங்கிகளில் பணம் போட்டு இருப்பார்களோ ?

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//நம்ம பணம் சுவீஸ் வங்கி வரைக்கும் கிடக்குது! கேள்வி கேட்கத்தான் நாதியில்லை.//

கேள்வி கேட்க வேண்டியவர்களின் பணம்தானே அங்கே இருக்கிறது. அதனால் இருக்குமோ?

//ஒரு வேளை பணம் போட்டவன் செத்து போயிட்டா அவுங்க வாரிசுக்கு கூட பணம் திரும்ப கிடைக்காதாமே!//

சரியாக தெரிய வில்லை. இருந்தாலும் "திருடனுக்கு தேள் கொட்டிய கதைதான்" சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டவர்களுக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள itsdifferent

//MSM - Main Stream Media- ஏன் இப்படி வாய் மூடி மௌனியாக இருக்கிறது என்பது தெரியவில்லை , ஒருவேளை அவர்களும் , இந்த வங்கிகளில் பணம் போட்டு இருப்பார்களோ //

இது சரியான கேள்வி. இந்தியாவின் பெரிய ஊடகங்கள் பல முக்கிய விஷயங்களில் மேம்போக்காக இருப்பது அவர்களது "இண்டெக்ரிட்டி" மேலும் சந்தேகம் எழுப்புகிறது.

நன்றி.

Unknown said...

இதை வேகமாக மக்கள் மத்தியில் கொணடு சேர்க்க முனைப்புடன் செயலாற்ற வேண்டும். தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம்.
இது குறித்த என்னுடைய பதிவுகள்:
http://sultangulam.blogspot.com/2009/02/blog-post_24.html

http://sultangulam.blogspot.com/2009/02/2.html

KARTHIK said...

அவங்களுக்குத்தெரியும் நம்ம நாட்டப்பத்தி
அமெரிக்கா கேள்வி கேட்டா இவங்க சொல்லுவாங்க உங்க பணம் எவ்வளவு இருக்கோ அவ்வளவையும் எடுத்துக்கோ இந்தியாவப்பத்தி கண்டுக்காதா அதான் நாங்க டீல் பண்ணிக்கிரோம்னு சொல்லுவாங்க இல்ல நம்மாளுக சொல்லவெப்பாங்க.

ஆனா இந்தமாதிரி ஒரு வங்கி இருக்கக்கூடாது இங்க இருந்துதான் தீவிரவாத்துக்கு அதிக பணம் போகுதாமா இதை தடுத்தாலே பாதி குற்றம் குறையும்னு சொல்லுராங்க.

Saravanakumar Karunanithi said...

CPI vowed for this in this election

பட்டாம்பூச்சி said...

நல்ல பதிவு.

Pradeep said...

good post... today I learn one new news..

Maximum India said...

அன்புள்ள சுல்தான்

பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் பதிவுகளைப் படித்தேன். மிகவும் சிறப்பாக தகவல்களை முன்வைத்திருக்கிறீர்கள்.

தகவல் அறியும் சட்டத்தின் உதவி கொண்டு இந்த பிரச்சினையை அணுகுவது கூட நல்ல முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//ஆனா இந்தமாதிரி ஒரு வங்கி இருக்கக்கூடாது இங்க இருந்துதான் தீவிரவாத்துக்கு அதிக பணம் போகுதாமா இதை தடுத்தாலே பாதி குற்றம் குறையும்னு சொல்லுராங்க.//

இவ்வாறு கறுப்புப் பணத்தை வேறு நாட்டு வங்கியில் போட்டு வைப்பது கூட ஒரு (பொருளாதார) தீவிரவாதம் மற்றும் தேசத் துரோகம்தான்.

நன்றி.

Maximum India said...

//CPI vowed for this in this election//


பயனுள்ள தகவலைத் தந்ததற்கு நன்றி சரவணக் குமார்.

Maximum India said...

அன்புள்ள பட்டாம்பூச்சி

பின்னூட்டத்திற்கு நன்றி.

Maximum India said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பிரதீப்

சதுக்க பூதம் said...

நல்ல பதிவு.
//இந்தியாவில் உலுக்கிய போபர்ஸ் விவகாரத்தில் கூட இன்று வரை யார் பெயரில் பணம் பெறப் பட்டது என்று விளக்கப் பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது//
போபார்ஸ் விவகாரத்தில் பணம் கைமாறிய அக்கவுண்ட்ட்கள்( Lotus, Mont Blank and Tulip) பற்றிய செய்தியை சுவிஸ் அரசு வெளியிட்டு விட்டது.அவை அனைத்தும் இந்துஜா சகோதரர்களின் அக்கவுண்ட். ஆனால் அவர்களோ அதில் போட பட்ட பணம் போபார்ஸ் ஊழல் பணம் அல்ல என்கிறார்கள்

http://www.indianexpress.com/ie/daily/20001010/ifr10001.html

Maximum India said...

தகவலுக்கு நன்றி சதுக்க பூதம்

Blog Widget by LinkWithin