Monday, March 30, 2009

அன்று சூரியன் மறையாத நாடு - இன்றோ கையேந்தும் நிலையில்?


முன்னொரு காலத்தில் உலகின் தனி ஏகாதிபத்திய நாடாக விளங்கியது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே அமெரிக்கா வரை அதன் ஆதிக்கம் பரவி விரவி கிடந்தது. கிட்டத் தட்ட உலக நிலப் பரப்பின் நான்கில் ஒரு பகுதியை ஆண்டதால், இந்த பேரரசு சூரியன் மறையாத நாடு என்ற புகழைப் பெற்றது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் தனது வலுவை பெருமளவு இழந்த இந்த நாடு தனது காலனிப் பகுதிகளுக்கு சுதந்திரம் அளிக்க நேரிட்டது. மேலும், உலகின் புதிய ஏகாதிபத்திய சக்தியாக உருவெடுத்த அமெரிக்காவுடன் ஒத்து போகவும் நேரிட்டது. முக்கியமாக, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், இங்கிலாந்தின் வெளியுறவுக் கொள்கைகள் அமெரிக்காவைப் பின்பற்றியே அமைந்து அந்த நாடு தனது தனித்துவத்தை முழுவதுமாக இழந்தது.

இருந்தாலும் கூட, இங்கிலாந்து பொருளாதார ரீதியாக வளம் பெற்ற நாடாகவே தொடர்ந்து வந்தது. G-8, G-20, ஐநா பாதுகாப்புச் சபை போன்றவற்றில் ஓரளவுக்கு செல்வாக்கு பெற்றும் வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை, இங்கிலாந்தின் நாணயமான பவுண்டிற்கு டாலருக்கு நிகரான மரியாதை இருந்து வந்தது. இந்தியா உட்பட பல நாடுகள் தங்களது அந்நிய செலவாணியை பவுண்ட் கணக்கிலேயே பராமரித்து வந்தன.

ஆனால் அதற்கும் வேட்டு வைக்க வந்தது, ஐரோப்பிய யூனியனின் நாணயமாக அறிமுகம் செய்யப் பட்ட யூரோ நாணயம். இப்போது, டாலர், யூரோ ஆகிய நாணயங்களுக்கு அடுத்த படியாகவே பவுண்ட் அறியப் படுகிறது. இப்படி தட்டுத் தடுமாறி, சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசை தற்போதைய பொருளாதார பின்னடைவு பெருமளவுக்கு கலங்கச் செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் கூடிய சீக்கிரமே (காலம் தள்ள) கையேந்தும் நிலைக்கும் இங்கிலாந்து தள்ளப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மிகச் சமீபத்தில் இந்த ஆருடத்தைச் சொன்னவர், தனியாளாக நின்று இங்கிலாந்தை (பவுண்ட் நாயனத்தை) வீழ்த்தியவர் என்ற புகழ் பெற்ற ஜார்ஜ் சோரோஸ் அவர்கள். இவர் ஒரு மிகப் பெரும் சந்தை வர்த்தகர் ஆவார்.

தற்போதைய பொருளாதார பின்னடைவு, அமெரிக்காவைப் போலவே ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் கடுமையாக பாதித்துள்ளது. முக்கியமாக, அமெரிக்க நிதி சந்தைகளில் முதலீடு செய்த பல ஐரோப்பிய வங்கிகளின் நிலை இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல சிறிய, பெரிய வங்கிகள் மூடப் பட்டு வருகின்றன.

இந்த வங்கிகளை மீட்டெடுக்க ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் பெருமளவு பண உதவி செய்து வருகின்றன. இங்கிலாந்தில் உள்ள ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து வங்கியினை மீட்க சமீபத்தில் அந்த அரசு 64 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 3.20 லட்சம் கோடி) பணத்தை (உதவி மூலதனமாக) கொட்டியது. இந்த வங்கி வணிக சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு பெரும் இழப்பைச் சந்தித்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படி அரசு பணத்தை தனியார் கம்பெனிகளுக்கு வாரி இறைத்ததன் மூலம், அரசு இப்போது ஒரு மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. உள்நாட்டு மொத்த வளர்ச்சி பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து, பொருளாதார மீட்டெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட அந்த அரசுக்கு ஏராளமான நிதி தேவைப் படுகிறது. அதே சமயம் தேவைப் படும் பணத்தை சந்தைகளில் திரட்ட முடியாத நிலையில் அந்த அரசு உள்ளது. காரணம், பிரிட்டிஷ் அரசின் "திருப்பித் தரும் திறன்" குறித்து சந்தைகளில் ஒருவித அவநம்பிக்கை உருவாகி உள்ளது. விளைவு, பல வருடங்களுக்குப் பின்னர், பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட அரசு கடன் பத்திரங்கள் வாங்க ஆளில்லாமல் போன அவல நிலை இப்போது நேரிட்டுள்ளது.

இதனால் இந்தியா ஒரு காலத்தில் தங்கத்தைக் அடகு வைத்து சர்வதேச நிதியத்திடம் கடனுக்கு கையேந்தி நின்றது (1990) போல இங்கிலாந்தும் இப்போது சர்வதேச நிதியத்திடம் (IMF)கையேந்த வேண்டிய நிலைக்கு வெகு அருகே தள்ளப் பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது லண்டனில் நடைபெறவுள்ள G-20 ,மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், மூழ்கி வரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை காப்பாற்ற ஏதேனும் உறுதியான முடிவுகள் எடுக்கப் படாவிட்டால், இங்கிலாந்து மிகப் பெரிய அளவில் பாதிக்கப் படும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆக மொத்தத்தில், ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்ற நம்மூர் பழமொழிக்கு ஏற்ற வகையில், பணக்கார நாடுகளாக கருதப் பட்ட நாடுகள் இப்போது தட்டேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன.

நன்றி.

12 comments:

Advocate P.R.Jayarajan said...

//இந்த நிலையில், தற்போது லண்டனில் நடைபெறவுள்ள G-20 ,மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், மூழ்கி வரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை காப்பாற்ற ஏதேனும் உறுதியான முடிவுகள் எடுக்கப் படாவிட்டால், இங்கிலாந்து மிகப் பெரிய அளவில் பாதிக்கப் படும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.//

பொருளாதார பின்னடைவு எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
மிகப் பெரிய நாடு.... நல்ல வளம்... என்று இருந்த பிரிட்டன் இனி கையேந்த கூடிய நிலைக்கு வர வாய்ப்பு உள்ளது என்பது அதிர்ச்சியானது. பணக்கார நாடுகள் ஏழைகளாகி, ஏழை நாடுகளுடன் சம பந்தி போஜனம் சாப்பிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று சொல்லுங்கள்.... கலி முத்திடுத்து..

Maximum India said...

அன்புள்ள ஐயா!

கருத்துரைக்கு நன்றி.

//பொருளாதார பின்னடைவு எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
மிகப் பெரிய நாடு.... நல்ல வளம்... என்று இருந்த பிரிட்டன் இனி கையேந்த கூடிய நிலைக்கு வர வாய்ப்பு உள்ளது என்பது அதிர்ச்சியானது. பணக்கார நாடுகள் ஏழைகளாகி, ஏழை நாடுகளுடன் சம பந்தி ஜனம் சாப்பிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று சொல்லுங்கள்.... கலி முத்திடுத்து//

பணக்கார நாடுகள் ஏழை நாடுகள் ஆவதை விட ஏழை நாடுகள் பணக்கார நாடுகள் ஆகி சமபந்தி போஜனம் சாப்பிடும் நிலை வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

நன்றி.

Advocate P.R.Jayarajan said...

//பணக்கார நாடுகள் ஏழை நாடுகள் ஆவதை விட ஏழை நாடுகள் பணக்கார நாடுகள் ஆகி சமபந்தி போஜனம் சாப்பிடும் நிலை வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? //

உரத்த சிந்தனை...

Maximum India said...

நன்றி ஐயா!

வேடிக்கை மனிதன் said...

"ஆக மொத்தத்தில், ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்ற நம்மூர் பழமொழிக்கு ஏற்ற வகையில், பணக்கார நாடுகளாக கருதப் பட்ட நாடுகள் இப்போது தட்டேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன"

ஊரைக்கொள்ளையடித்து உலையில்
போட்டவனுக்கு இந்த நிலை வந்தது கண்டு வருத்தம் தோன்றவில்லை

வால்பையன் said...

G-20 மாநாடு எப்போ ஆரம்பிக்குது!
இதனால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்ப்படுமா?

Maximum India said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி "நான் தகுதியானவனா?"

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//G-20 மாநாடு எப்போ ஆரம்பிக்குது!//

ஏப்ரல் இரண்டில்.

//இதனால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்ப்படுமா?//

பன்னாட்டு வங்கிகளை காப்பாற்ற ஒரு உறுதியான முடிவு எடுக்கப்படா விட்டால் தங்கம் விலை ஏறும்.

நன்றி.

KARTHIK said...

// இங்கிலாந்து மிகப் பெரிய அளவில் பாதிக்கப் படும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.//

இதுபத்தி ஆனந்தவிகடன்ல கூட ஒரு கட்டுரை வந்தது.கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதா பொருளாதாவீழ்ச்சினு போட்டிருந்தாங்க.
இது எங்க போய்முடியும்னு தெரியல.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இதுபத்தி ஆனந்தவிகடன்ல கூட ஒரு கட்டுரை வந்தது.கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதா பொருளாதாவீழ்ச்சினு போட்டிருந்தாங்க.
இது எங்க போய்முடியும்னு தெரியல.//

ஒன்று, இப்போது அரசாங்கங்கள் அளித்து வரும் ஆதரவின் அடிப்படையில் உலக போருளாதாரங்கள் மீள வேண்டும். அல்லது, அதல பாதாள வீழ்ச்சியை சந்திக்க வேண்டும்.

நன்றி.

மங்களூர் சிவா said...

/
ஆக மொத்தத்தில், ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்ற நம்மூர் பழமொழிக்கு ஏற்ற வகையில், பணக்கார நாடுகளாக கருதப் பட்ட நாடுகள் இப்போது தட்டேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன.
/

உலக பொருளாதார நிலமை இப்படியே ஒரு 6, 7 வருஷம் போகட்டும் நிறைய ஆவரேஜ் பண்ண வேண்டியிருக்கு.

Maximum India said...

அன்புள்ள மங்களூர் சிவா

கருத்துரைக்கு நன்றி.

//உலக பொருளாதார நிலமை இப்படியே ஒரு 6, 7 வருஷம் போகட்டும் நிறைய ஆவரேஜ் பண்ண வேண்டியிருக்கு.//

உண்மைதான். ஒவ்வொரு கால கட்டத்திலும் பழையவை மறைந்து புதிய வல்லரசுகள் தோன்றி இருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வெகுவாக முன்னேறினால் நன்றாக இருக்கும்.

நன்றி.

Blog Widget by LinkWithin