Friday, October 31, 2008

சிறந்த பின்னூட்டம் இடுவது எப்படி?


சிறந்த பின்னூட்டங்கள் பதிவினை மேலும் அழகுப்படுத்தும் அணிகலன்கள். அவை புதிய சிந்தனைகளை உருவாகவும் சில சமயங்களில் பதிவருக்கே சில சந்தேகங்களை தீர்க்கவும் உதவி செய்யும்.

எனது குறுகிய கால பதிவு உலக அனுபவத்தில், சிறந்த பின்னூட்டம் இடுவது எப்படி என்பது பற்றிய எனது சில சிந்தனைகளை தங்கள் முன் வைக்கிறேன். சிறந்த பின்னூட்டம் இடுவதற்கான அடிப்படை விஷயங்கள் கீழே.

முதலில் பதிவின் நோக்கத்தினை முழுமையாக புரிந்து கொள்வது.

அதன் மீது தனது உண்மையான உணர்வுகளை தெரிவிப்பது. எதிர் கருத்துகள் எதிரியின் கருத்துகள் அல்ல. சிறந்த நண்பர்களால், ஒத்துப் போகாமல் இருக்க ஒத்துப் போக முடியும். (Agree to Disagree)

புரியாதவற்றை பற்றி தயங்காமல் சந்தேகங்கள் கேட்பது (பின்னூட்டம் இடுவது). ஏற்கனவே மற்றவர்கள் கேட்ட கேள்விகளைத் தவிர்ப்பது. புதிய சிந்தனைகளை பதிவுக்கு துணை சேர்ப்பது.

நாகரிகமான நகைச்சுவை நல்லது.

தனி மனித தாக்குதல்களை அல்லது புகழ்ச்சிகளை தவிர்ப்பது.

மேலோட்டமான கருத்துகளை தவிர்ப்பது. (To the Point).

பின்னூட்டங்கள் பதிவரின் மேல் உள்ள அக்கறையின் பேரிலேயே என்பதை தெளிவு படுத்துங்கள்.

இந்த பதிவின் மீது கூட சிறந்த பின்னூட்டங்கள் (மேலும் சில யோசனைகள்) வரவேற்க படுகின்றன.

நன்றி.

Thursday, October 30, 2008

மனக் கணக்கியல்


பொதுவாக நிறுவனங்களும் அரசாங்கமும் தமது வரவு செலவு கணக்குகளை வகைப் படுத்துவதற்காக சில கணக்கியல் கொள்கைகளை (Accounting Policies) பின்பற்றி வருகின்றன. இதைப் போலவே, மனித மனம் கூட ஒவ்வொரு வரவு செலவினையும் சில பிரிவுகளாக பிரித்து வகைப்படுத்தி வருகிறது. புற உலகில் உள்ள பணத்திற்கான உண்மையான மதிப்பிற்கும் (Actual Value) மனதில் அதே அளவில் உள்ள பணத்திற்கான புரிந்துணரும் மதிப்பிற்கும் (Perceived Value) பெரும் வேறுபாடு உள்ளது.

உதாரணமாக, சராசரி வருமானம் உள்ள ஒருவர் சுமார் 1000 ரூபாய் செலவு செய்து, ஒரு இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குகிறார். அந்த நிகழ்ச்சிக்கு போகும் வழியில் டிக்கெட் தவறி விடும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை 1000 ரூபாய் செலவு செய்து புதிய டிக்கெட் வாங்க தயங்குவார். அதே சமயத்தில், அவரே முதன் முறையாக டிக்கெட் வாங்க செல்லும் போது, கைப்பையில் உள்ள பணத்தில் 1000 ரூபாய் தவற விட்டிருந்தாலும் கூட டிக்கெட்டுகளை வாங்குவார் என மனவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், இரண்டு முறையிலும் இழந்த பணத்தின் உண்மையான (புற) மதிப்பு ஒன்றுதான் (ரூ.1000/-) என்றாலும் ஒவ்வொரு வகையிலும், இழந்த பணத்திற்கு மனம் கொடுக்கும் மதிப்பு வேறு. இத்தகைய மன கணக்கியல் பற்றிய சிறு அறிமுகமும் அதனை புரிந்து கொள்வதினால் உள்ள சில பயன்கள் பற்றியும் இங்கு விவாதிப்போம்.

சம்பள வருமானமும் இதர வருமானமும்

பொதுவாக மனித மனம், சம்பளப் பணத்தினை உழைப்பின் ஊதியமாக கருதுகிறது. எனவே அந்த பணத்திற்கு எப்போதுமே சற்று அதிக மரியாதைதான் (Sacred Money). அதே சமயத்தில், உழைப்பின்றி (சில சமயங்களில் எதிர்பாராமல்) வந்த பணத்திற்கு (உதாரணமாக அன்பளிப்புகள், மூதாதையர் சொத்து முதலியவை) சற்று மரியாதை குறைவுதான். இது போன்ற சமயங்களில் பணம் வந்த வேகத்திலேயே காணாமல் போகிறது. அதிலும் சிறிய வகையிலான வரவுகள் அதி விரைவாகவே செலவு செய்யப்படுகின்றன.

மூதாதையர் சொத்து விஷயத்தில் கூட சில வேறுபாடான கொள்கைகளை மனம் வைத்திருக்கிறது. அதாவது, சொத்தினைக் கொடுப்பவர், மிகவும் சிரமப்பட்டு சொத்து சேர்த்திருந்தால் அந்த பணத்திற்கு அதிக மரியாதை. அல்லது ஒரு செலவாளியிடம் இருந்து சொத்துப் பணம் வந்திருந்தால் அதற்கு வேறு வித மரியாதை.

வரவுக் கொள்கைகளைப் பார்த்தோம். இப்போது செலவுக் கொள்கைகள்.

ஒரு மிகப் பெரிய செலவு செய்யும் போது (கார் அல்லது வீடு) அதிகப்படியான துணைச் செலவுகளைச் செய்ய மனம் தயங்குவதில்லை. உதாரணமாக, காருக்கு அதிக செலவினாலான சீட் கவர் அல்லது வீட்டில் மேலை நாகரிக குளியலறை அமைப்பது போன்றவை. அதே அளவிலான செலவு சாதாரண நேரங்களில் செய்ய மனம் தயங்கும்.

மேலும், பெரிய செலவினங்களில் (பிரிட்ஜ் வாஷிங் மிஷன் போன்றவை) சிக்கனம் செய்ய பல கடைகள் ஏறி இறங்கும் மக்கள் பல முறை செய்யும் சிறிய செலவுகளில் (மாதந்திர செலவினங்கள்) சிக்கனம் பிடிக்க முயற்சி செய்வதில்லை.

ரொக்கமாக (cash) செலவு செய்யும் போது ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க எண்ணும் மனம் கடன் அட்டைகளை (credit card) அதே வகையான செலவுகளுக்காக உபயோகிக்கும் போது அவ்வளவு சிந்திப்பதில்லை.

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல்
இல்லாகித் தோன்றக் கெடும்

எனும் குறளுக்கு ஏற்ப எவ்வளவு வருமானம் இருந்தாலும் சிறந்த நிதி திட்டம் இல்லாவிடில் காலப் போக்கில் ஒருவர் சிரமப் பட வேண்டியிருக்கும். எனவே, மன கணக்கியலைப் புரிந்து கொள்வதும் மனதிற்கு சில பயிற்சிகள் அளிப்பதும் நல்லது.

முதலில் வரவு கணக்கியல்.

எத்தகைய வருவாயாக இருந்தாலும் அவற்றை ஈட்டிய பணமாகவே கொள்வது நல்லது. There is no free Money. அதே போல, எதிர்பாராமல் வந்த பணத்தினை என்ன செய்வது என்று உடனே முடிவெடுக்காமல், அந்த பணத்தினை குறுகிய கால வைப்பு தொகையாக வங்கியில் இடுவது நல்லது. சிறிது கால யோசனைக்கு பின்னர் அந்த பணத்தினை என்ன செய்வது என முடிவெடுக்கலாம்.

இப்போது செலவு கணக்கியல்

பெரிய செலவுகளின் உடன் வரும் அதே சமயத்தில் உடனடி அவசியமில்லாத சில ஆடம்பர செலவுகளை தள்ளிப் போடுவது நல்லது. மேலும் கடன் அட்டையினை மிக கவனமாக உபயோகப் படுத்துவதும் அதனை ஒரு கடன் பெறும் சாதனமாக பயன் படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது.

நன்றி.

மனக் கணக்கியல்


பொதுவாக நிறுவனங்களும் அரசாங்கமும் தமது வரவு செலவு கணக்குகளை வகைப் படுத்துவதற்காக சில கணக்கியல் கொள்கைகளை (Accounting Policies) பின்பற்றி வருகின்றன. இதைப் போலவே, மனித மனம் கூட ஒவ்வொரு வரவு செலவினையும் சில பிரிவுகளாக பிரித்து வகைப்படுத்தி வருகிறது. புற உலகில் உள்ள பணத்திற்கான உண்மையான மதிப்பிற்கும் (Actual Value) மனதில் அதே அளவில் உள்ள பணத்திற்கான புரிந்துணரும் மதிப்பிற்கும் (Perceived Value) பெரும் வேறுபாடு உள்ளது.

உதாரணமாக, சராசரி வருமானம் உள்ள ஒருவர் சுமார் 1000 ரூபாய் செலவு செய்து, ஒரு இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குகிறார். அந்த நிகழ்ச்சிக்கு போகும் வழியில் டிக்கெட் தவறி விடும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை 1000 ரூபாய் செலவு செய்து புதிய டிக்கெட் வாங்க தயங்குவார். அதே சமயத்தில், அவரே முதன் முறையாக டிக்கெட் வாங்க செல்லும் போது, கைப்பையில் உள்ள பணத்தில் 1000 ரூபாய் தவற விட்டிருந்தாலும் கூட டிக்கெட்டுகளை வாங்குவார் என மனவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், இரண்டு முறையிலும் இழந்த பணத்தின் உண்மையான (புற) மதிப்பு ஒன்றுதான் (ரூ.1000/-) என்றாலும் ஒவ்வொரு வகையிலும், இழந்த பணத்திற்கு மனம் கொடுக்கும் மதிப்பு வேறு.

இத்தகைய மன கணக்கியல் பற்றிய சிறு அறிமுகமும் அதனை புரிந்து கொள்வதினால் உள்ள சில பயன்கள் பற்றியும் இங்கு விவாதிப்போம்.

சம்பள வருமானமும் இதர வருமானமும்

பொதுவாக மனித மனம், சம்பளப் பணத்தினை உழைப்பின் ஊதியமாக கருதுகிறது. எனவே அந்த பணத்திற்கு எப்போதுமே சற்று அதிக மரியாதைதான் (Sacred Money). அதே சமயத்தில், உழைப்பின்றி (சில சமயங்களில் எதிர்பாராமல்) வந்த பணத்திற்கு (உதாரணமாக அன்பளிப்புகள், மூதாதையர் சொத்து முதலியவை) சற்று மரியாதை குறைவுதான். இது போன்ற சமயங்களில் பணம் வந்த வேகத்திலேயே காணாமல் போகிறது. அதிலும் சிறிய வகையிலான வரவுகள் அதி விரைவாகவே செலவு செய்யப்படுகின்றன.

மூதாதையர் சொத்து விஷயத்தில் கூட சில வேறுபாடான கொள்கைகளை மனம் வைத்திருக்கிறது. அதாவது, சொத்தினைக் கொடுப்பவர், மிகவும் சிரமப்பட்டு சொத்து சேர்த்திருந்தால் அந்த பணத்திற்கு அதிக மரியாதை. அல்லது ஒரு செலவாளியிடம் இருந்து சொத்துப் பணம் வந்திருந்தால் அதற்கு வேறு வித மரியாதை.

வரவுக் கொள்கைகளைப் பார்த்தோம். இப்போது செலவுக் கொள்கைகள்.

ஒரு மிகப் பெரிய செலவு செய்யும் போது (கார் அல்லது வீடு) அதிகப்படியான துணைச் செலவுகளைச் செய்ய மனம் தயங்குவதில்லை. உதாரணமாக, காருக்கு அதிக செலவினாலான சீட் கவர் அல்லது வீட்டில் மேலை நாகரிக குளியலறை அமைப்பது போன்றவை. அதே அளவிலான செலவு சாதாரண நேரங்களில் செய்ய மனம் தயங்கும்.

மேலும், பெரிய செலவினங்களில் (பிரிட்ஜ் வாஷிங் மிஷன் போன்றவை) சிக்கனம் செய்ய பல கடைகள் ஏறி இறங்கும் மக்கள் பல முறை செய்யும் சிறிய செலவுகளில் (மாதந்திர செலவினங்கள்) சிக்கனம் பிடிக்க முயற்சி செய்வதில்லை.

மேலும் ரொக்கமாக (cash) செலவு செய்யும் போது ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க எண்ணும் மனம் கடன் அட்டைகளை (credit card) அதே வகையான செலவுகளுக்காக உபயோகிக்கும் போது அவ்வளவு சிந்திப்பதில்லை.

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல்

இல்லாகித் தோன்றக் கெடும்


எனும் குறளுக்கு ஏற்ப எவ்வளவு வருமானம் இருந்தாலும் சிறந்த நிதி திட்டம் இல்லாவிடில் காலப் போக்கில் ஒருவர் சிரமப் பட வேண்டியிருக்கும். எனவே, மன கணக்கியலைப் புரிந்து கொள்வதும் மனதிற்கு சில பயிற்சிகள் அளிப்பதும் நல்லது.

முதலில் வரவு கணக்கியல்.

எத்தகைய வருவாயாக இருந்தாலும் அவற்றை ஈட்டிய பணமாகவே கொள்வது நல்லது. There is no free Money. அதே போல, எதிர்பாராமல் வந்த பணத்தினை என்ன செய்வது என்று உடனே முடிவெடுக்காமல், அந்த பணத்தினை குறுகிய கால வைப்பு தொகையாக வங்கியில் இடுவது நல்லது. சிறிது கால யோசனைக்கு பின்னர் அந்த பணத்தினை என்ன செய்வது என முடிவெடுக்கலாம்.

இப்போது செலவு கணக்கியல்

பெரிய செலவுகளின் உடன் வரும் அதே சமயத்தில் உடனடி அவசியமில்லாத சில ஆடம்பர செலவுகளை தள்ளிப் போடுவது நல்லது. மேலும் கடன் அட்டையினை மிக கவனமாக உபயோகப் படுத்துவதும் அதனை ஒரு கடன் பெறும் சாதனமாக பயன் படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது.

நன்றி.

Wednesday, October 29, 2008

தமிழ் இலக்கியத்தில் சந்தை நிலவரம்


தமிழ் பதிவுலகில் (எழுத்துலகில்) நுழைந்து சுமார் 50 நாட்களே ஆகிருக்கும் பட்சத்தில், எனது எழுத்துக்களை மேம்படுத்த என் பதிவுலக நண்பர் ஒருவரிடம் கோரிய போது அவர் கூறிய யோசனை. மற்ற பதிவுகளையும் படித்து புரிந்து கொண்டு பின்னூட்டம் அளிக்க முயற்சி செய்வது. சரிதான், நம் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட நண்பர்களின் பதிவு பூக்களிலிருந்து ஆரம்பிப்போம் என்ற எனது முடிவின் முடிவு என்னைக் கொஞ்சம் மிரளச் செய்து விட்டது.


புகைப் படங்களால் மயக்கும் ஒருவர், கவிதைகளால் வேறு உலகம் காணச் செய்யும் ஒருவர், கவிதைகளையும் கவிதையான புகைப்படங்களையும் ஒருங்கே கொடுத்து மிரட்டும் ஒருவர், காந்தி தேசத்தின் மறுபக்கம் கண்ட ஒருவர், கட்டுரையினையே கவிதையாக்கிய ஒருவர், ஜெர்மானிய ரஷ்ய இலக்கியம் பேசும் ஒருவர், ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அலசும் ஒருவர், வெளி வராத புத்தகங்களுக்கு கூட விமர்சனம் எழுதும் ஒருவர் மற்றும் பதிவினையே தலை கீழாக இட்டு Irreversible Technique கண்ட ஒருவர்.


இவர்கள் எழுத்துக்களை இரு மாதங்கள் முன்னரே கண்டிருப்பேன் என்றால் நான் எழுத தைரியமாக முன்வந்திருப்பேனா என்பதே சந்தேகம்தான்.


என்னை பொறுத்த வரை (தமிழ் மற்றும் ஆங்கில) இலக்கிய அறிவு சற்று குறைவுதான். என்னுடைய தமிழ் பள்ளிப் பாட நூல்களில் உள்ளது போல இருக்கிறது என்று எனது மனைவியே கூறினார். அதில் தவறில்லை. நான் தமிழ் மற்றும் ஆங்கிலம் பயின்றது எனது பள்ளிப் பருவம் வரை மட்டுமே. அதன் பின்னர் பயின்றது தொழிற்கல்வி மற்றும் துறை சார்ந்த கல்வி மட்டுமே.


மேலும் சமூக பொருளாதார காரணங்களினால், சிறு வயதினிலேயே பணிக்கு சேர்ந்த எனது மேற்படிப்பு முழுவதும் பெரும்பாலும் தொலைதூர கல்வி மூலமே. எனவே நேரமின்மை காரணமாக கல்வி நீங்கலான மற்ற புத்தகங்கள் படிக்க அதிக வாய்ப்பு அமைய வில்லை. அதே சமயத்தில் கல்வி மற்றும் துறை சார்ந்த புத்தகங்களில் (Mechanical Engineering to Financial Engineering) எனக்கு எப்போதுமே தீராத காதல் இருந்து வந்திருக்கிறது.


நான் அறிந்த சிறிய அளவிலான தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் கூட, இந்திய ஆட்சிப் பணிகளுக்கான முதன்மை தேர்வுக்காக தயார் படுத்த மட்டுமே. நான் படித்த சில பொது (ஆங்கில) இலக்கியங்கள் கூட சில நேர்முக தேர்வுகளை மனதில் கொண்டுதான்.


இளைய வயதினிலேயே முற்றிலும் மாறுபட்ட துறைகளில் பணியாற்றும் வாய்ப்பும் பல்வேறு ஊர்களில் வசிக்கும் வாய்ப்பும், மிகவும் வேறுபட்ட நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் பெற்றிருந்ததால் கிடைத்த (சிறிதளவே ஆயினும்) அறிவினையும் அனுபவத்தினையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளவே சந்தை நிலவரம் என்ற இந்த பதிவு வலை. இதற்கு தமிழ் இலக்கியத்தில் எந்த இடம் என்பதே எனது இன்றைய சிந்தனை.


இரண்டாம் பத்தியில் குறிப்பிட்டுள்ளவை போன்ற பதிவுப் பூக்கள் தமிழ்த் தாயை அலங்கரிக்கும் மணம் வீசும் மலர்களாக இருக்கும் வேளையில் இந்த சந்தை நிலவரம் தமிழ்த் தாயின் கோயிலின் வெளிப்பகுதிகளை அலங்கரிக்கும் காகித பூக்களாகவாவது இருக்க வேண்டும் என்பது எனது இலக்கிய அவா.


அதற்கு உங்கள் ஊக்கமூட்டும் வாழ்த்துக்களை பணிவன்புடன் கோருகிறேன்.

Tuesday, October 28, 2008

மும்பை யாருக்கு சொந்தம்?



இன்றைய தேதியில், மும்பை யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு சிலர் விவாதங்களிலும் சிலர் வன்முறைகளிலும் தீர்வு காண முயல்கின்றனர். இது பற்றியும், மும்பை உண்மையான மண்ணின் மைந்தர்கள் யார் என்பது பற்றியும் ஒரு சிறு ஆராய்ச்சி இங்கே.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் மும்பையின் அருகில் உள்ள யானைத் தீவில் (Elephanta Caves) உள்ள சிற்பங்கள் பல நூறு ஆண்டுகள் பழமையானவை என்றாலும் கூட, அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம் இது. அதாவது, கோலி (மீனவர்கள்) இன மக்களே மும்பை தீவின் முன்னோடிகள் (Original Inhabitants). இவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூட சிலர் கூறுகின்றனர். இவர்களது தெய்வமான மும்பா தேவியின் பெயரே இன்றைய மும்பை என்ற பெயருக்கு அடிகோலி உள்ளது. மும்பா தேவி கோயில் உள் அமைப்பும், மூலவரின் உருவமும் நமது ஊரிலுள்ள மாரி அம்மன் கோயில்களை ஓரளவிற்கு ஒத்துள்ளது. கோலி மீனவ இன மக்கள் இன்றும் கூட மும்பையின் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். கொலாபா போன்ற மும்பை நகரத்தின் வளமான பகுதிகளில் வசிக்கும் இவர்களது குடியிருப்புக்களை அகற்றி அங்கே பல மாடி கட்டிடங்களை எழுப்ப முயற்சித்த அரசியல்வாதிகள் , அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் (Builders) ஆகியோரின் கூட்டணி இதுவரை வெற்றி பெறவில்லை.
(கோலி (மீனவ) இன பெண். இவர்களுக்கு மும்பை சொந்தமா? )
பதினாறாம் நூற்றாண்டில், போர்துகீசியர்கள் குஜராத் சுல்தான்களிடம் இருந்து இந்த பகுதியை கைப்பற்றினர். பின்னர், போர்துகீசிய இளவரசிக்கும் இங்கிலாந்து அரசருக்கும் நடை பெற்ற திருமணத்தின் போது வரதட்சணையாக மும்பை இங்கிலாந்துக்கு வழங்கப் பட்டது.

இங்கிலாந்து, மொத்த மும்பையையும் அப்போது (1668) இந்தியாவில் ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனிக்கு வெறும் 10 பவுண்டிற்கு (pound) குத்தகைக்கு (Lease)அளித்தது. இன்றும் கூட, மும்பையில் யாரும் பட்டாவுடன் முழு உரிமையுடன்) நிலம் வாங்க முடியாது. குறிப்பிட்ட வருடங்களுக்கான குத்தகையாகவே நில உரிமை பெற முடியும்.

கிழக்கிந்திய கம்பெனி அப்போது பொருளாதாரத்தின் அடிப்படையில் மிகவும் பின் தங்கியதாக கருதப்பட்ட மும்பையினை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல சில வணிக சலூகைகளை அறிவித்தது. (மராத்திய பேரரசின் அப்போதைய தலைநகரம் புனே என்பது குறிப்பிடத் தக்கது). அந்த சலூகைகளைப் பெறுவதற்காக பார்சி மற்றும் குஜராத் மக்கள் பெருமளவில் மும்பை வந்து வணிகம் செய்தனர்.

சூயஸ் கால்வாய் திறப்பும், இரண்டாம் உலகப் போரும், பார்சி மற்றும் குஜராத் மக்களின் வணிகத் திறமையும் மும்பையினை இந்தியாவின் நிதி தலை நகரம் (Financial Capital) ஆக்க முக்கிய காரணங்களாக இருந்தன

சுதந்திரத்திற்கு பிறகு, பிழைப்பிற்காக மகாராஷ்டிரா மாநிலத்தின் மறற பகுதிகளிருந்தும் இதர மாநிலங்களிருந்தும் மக்கள் அதிக அளவில், இங்கே வந்து குடியேற ஆரம்பித்தனர். இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம். பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முன்னர் (அதாவது 1990 களுக்கு முன்), மும்பையில் வாழ்வு தேடி சென்றவர்கள் தென்னிந்தியர் குறிப்பாக தமிழர்கள். அப்போது மக்கள் விவசாயத்தினையும், மாநில அரசு மத்திய அரசின் உதவியினையும் அதிகம் நம்பி இருந்த காரணத்தால், மழை பொய்த்த காலங்களில் தமிழ் மக்கள் பிழைப்புக்காக இங்கு வந்தனர். சங்கி பஜாவ், லுங்கி பகாவ் (சங்கை ஊதுங்கள் வேட்டி அணிந்தவர்களை விரட்டுங்கள்) என்ற கோஷத்துடன் தமிழர்களும் பிற தென்னிந்தியர்களும் அந்நாட்களில் தாக்கப்பட்டனர்.

பொருளாதார சீர்த்திருந்தங்கள் அறிமுகப் படுத்தப் பட்ட பிறகு, வடக்கு தேய்ந்து தெற்கு வளர ஆரம்பித்தவுடன், இங்கு வரும் தென்னிந்தியர் எண்ணிக்கை குறைந்து வட இந்தியர் எண்ணிக்கை அதிகரித்தது.

இப்போது அரசியல் லாபத்திற்காக , மராத்தியர் மற்றும் மராத்தியர் அல்லாதோர் என்ற பிரிவினை வாதம் மீண்டும் ஒரு முறை எழுப்பப் பட்டுள்ளது.

மும்பையின் வணிக வளர்ச்சிக்கு பார்சி மற்றும் குஜராத்தியர் பங்கு முக்கியமாக அமைந்தது என்பதினை ஒப்புக் கொள்பவர்கள் மும்பையின் கட்டுமான வளர்ச்சிக்கு மறற ஏழை இந்தியரின் பங்கும் முக்கியமாக அமைந்துள்ளது என்பதை மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது.
(மும்பையில் வாழ வழியற்றவர்கள்? இவர்களுக்கு மும்பை சொந்தமா? )

மும்பை ஒட்டுமொத்த இந்தியருக்கும் சொந்தம் என்ற போதிலும், மும்பைக்கு ஒரு வேறு மாநிலத்திலிருந்து வருபவர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, வேறு மாநிலத்திலிருந்து ஒருவர் இங்கு வந்து குடியேறும் போது, அவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர் ஆகி விடுகிறார். உதாரணமாக, மகாராஷ்ட்ராவில் வாழும் வரை நான் ஒரு தமிழ் பேசும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இந்தியன். இங்கே வந்த பின்னர், இந்த மண்ணின் மொழியையும், கலாச்சாரத்தினையும், மக்களையும் மதிக்க தவறி, சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவராகவே தொடர்ந்து வாழ நினைப்பது உள்ளூர் மக்களுடன் ஒரு இணக்கமற்ற சூழலை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, இங்கு வாழும் தமிழர்களோ பிற தென்னிந்தியர்களோ தன் மாநில தலைவர்களை இங்கு அழைத்து அந்தந்த மாநில நாட்கள் அல்லது விழாக்கள் கொண்டாடுவதில்லை. ஆனால் வட இந்தியர் விஷயத்தில் இவ்வாறு நடக்கிறது. ஒரு சிலரின் அரசியல் லாபத்திற்காகவே இவ்வாறு செய்யப் படுகிறது என்ற போதிலும், இது வன்முறையாளர்கள் எளிய மக்களை தாக்கும் தங்கள் நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்க உதவுகிறது .

நான் சொல்லட்டுமா உண்மையில் மும்பை யாருக்கு சொந்தம் என்பதை?

மும்பையின் மிக அதிகமான மாதாந்திர செலவும் (cost of living) முக்கியமாக அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புக்கான விண்ணை முட்டும் வாடகையும், நகரத்தின் சுகாதாரமற்ற சூழ்நிலையும் நடுத்தர மக்களுக்கு மும்பை வாசத்தினை எட்டாக் கனியாக்குகிறது.

மிக அதிக பண பலம் மற்றும் செல்வாக்கு கொண்ட திரைப்பட துறையினர், அரசியல்வாதிகள், நிழல் உலக தாதாக்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோருக்கும் எப்படிப்பட்ட சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலிலையும் தாங்கி எப்படியாவது வாழ வேண்டும் என்று இங்கு வந்து விழும் ஏழை எளிய மக்களுக்குமே உண்மையில் மும்பை சொந்தம்.
(மும்பையில் வாழும் தகுதியுள்ளவர்கள்? இவர்களுக்கு மும்பை சொந்தமா? )
நன்றி. வணக்கம்

Monday, October 27, 2008

தீபாவளி சிந்தனைகள்



தீபாவளி நமக்குத் தரும் மறைபொருள் விளக்கம்.

உலகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் உள்ள அத்தனை இருட்டும் ஒன்று சேர்ந்தாலும் கூட, ஒரு சிறிய தீபத்தின் ஒளியை அழித்து விட முடியாது. அதே போல, இன்றைய உலகில் எவ்வளவோ தீமைகள் சேர்ந்து வந்தாலும் கூட ஒரு சிறிய இதயத்தின் நல்ல சிந்தனைகளை மாற்றிவிட முடியாது.

புத்தாடை அணிந்து இனிப்புகளுடன் பட்டாசுகளுடன் இன்றைக்கு தீபாவளி கொண்டாடும் நாம், இந்த வாய்ப்பினை பல வருடங்களாக இழந்திருக்கும் ஈழ தமிழர்களும், அடுத்தவர்களின் கொண்டாட்டங்களை ஏக்கத்துடன் பார்க்க மட்டுமே முடிகின்ற எளியவர்களும், நம்முடன் சேர்ந்து அடுத்த தீபாவளியை அனைவருக்குமான தீபாவளியாக கொண்டாட இருளிலும் ஒளியாய் நமக்கு வழி காட்டும் அந்த எல்லாம் வல்ல இறைவனை இந்த தீப ஒளித் திருநாளில் வேண்டிக்கொள்வோம்.

தீபாவளி நல்வாழ்த்துகள்

Sunday, October 26, 2008

தீபாவளி தள்ளுபடி விற்பனை


வரலாறு காணாத தீபாவளி தள்ளுபடி விற்பனை இப்போது இந்திய பங்குச்சந்தையில்.


மேலும் விவரத்திற்கு பாருங்கள்



Maximum India


தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Saturday, October 25, 2008

தீபாவளி - சொந்த ஊரிலும் வந்த ஊரிலும்





இப்போது, மின்னஞ்சல் வட்டாரங்களில் அதிகம் உலா வரும் ஒரு நகைச்சுவை கலந்த (உள்ளூருக்கு வருவதற்கான) அழைப்பிதழ் கீழே.







இதிலுள்ள படி இந்த பண்டிகைக்கு, சொந்த ஊர் சென்றவர்கள் தன் உறவினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளியைச் சிறப்பாக கொண்டாட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


சில பல காரணங்களினால், இது போன்ற தருணங்களில் தனது சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்காத என் போன்ற சிலருக்காக இங்கே சில கருத்துகள்.


எவ்வளவு சாப்பிட்டாலும் கம்மி என்று சொல்லும் அம்மாவின் அன்பு கலந்த சாப்பாடு, எவ்வளவு தாமதமாக வந்தாலும் தூங்காமல் காத்திருக்கும் அப்பாவிடம் இன்னமும் வாங்கும் திட்டு , உறவினர் வீட்டுக்கு அடிக்கும் விசிட்கள் மற்றும் நண்பருடன் பார்க்கும் தீபாவளி ரிலீஸ். இது மட்டுமல்ல, இளமையின் வசந்த காலங்களை நினைவூட்டும் உள்ளூர் பகுதிகள். இவை அனைத்தும் பண்டிகை காலங்களில், ஊருக்கு செல்லாததால் ஏற்படும் ஈடு செய்ய முடியாத சில இழப்புகள்.

இப்போது, என்ன செய்ய முடியும் நம்மால்?


அடி வாங்கினாலும் அடுத்த நிமிடம் மறந்து சிரிக்கும் ஒரு குழந்தையின் மனதை தீபாவளி முடியும் வரை கொஞ்சம் கடன் வாங்கி கொள்ளுங்கள். கடன் வாங்கிய மனதில், இப்போது பணி நிமித்தமாக தங்கி இருக்கக் கூடிய பகுதியை தனியாக சுற்றிப் பார்க்கும் ஒரு பொருட்காட்சியாக ஏற்றிக் கொள்ளுங்கள். திறந்த மனதோடு வேடிக்கை பாருங்கள் மேலும் அங்கு நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் (எத்தகையதாக இருந்தாலும்) முழு மனதோடு கலந்து கொள்ளுங்கள்.


உதாரணமாக, தீபாவளி எப்போது வரும் என்று பல நாட்கள் காத்திருந்து விட்டு, தீபாவளியன்று மதியத்திற்கு மேல், தீபாவளி முடியப் போகிறதே என்று கவலையும் அடுத்த தீபாவளி எப்போது வரும் என்ற ஏக்கமும் சிறு வயதில் கொண்டிருந்தவன் நான். ஆனால் நான் இப்போது உள்ள பகுதியிலோ மூன்று நாட்கள் தீபாவளி கொண்டாடப் படுகிறது. நம்மூரின் தீபாவளியையும் சேர்த்து கொள்ளும் பட்சத்தில், என்னால் (மனம் மட்டும் இருந்தால் போதும்) நான்கு நாட்கள் தீபாவளி கொண்டாட முடியும்.

ஆகவே நண்பர்களே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனப்பான்மையுடன் இந்த தீபாவளியை எங்கிருந்தாலும் இனிதாக கொண்டாடுவோம்.



தீபாவளி நல்வாழ்த்துக்கள்




Friday, October 24, 2008

வெல்ல முடியாத கடல் கோட்டை


இதுவரை, இந்திய சரித்திரத்தில் ஒரு முறை கூட எதிரிகளால் (ஆங்கிலேயர்கள் உட்பட) வெல்ல முடியாத கோட்டை ஒன்றினை கேள்விப் பட்டு இருக்கிறீர்களா?




அரபிக் கடல் நடுவே அமைந்துள்ள அந்த மெய் சிலிர்க்க வைத்த கோட்டைக்கு செல்லும் ஒரு வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிடைத்தது. அந்த கோட்டையின் சிறப்பம்சங்கள் பற்றியும் அதன் வெல்ல முடியாத கதை பற்றியும் எனக்கு கிடைத்த சில தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முருட் ஜன்ஜிரா எனும் இந்த மிகப் பெரிய கடல் கோட்டை, மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கட் மாவட்டத்தில் அரபிக் கடலில் (கடற்கரையிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில்) அமைந்துள்ளது. மும்பையிலிருந்து சாலை வழியாக (சுமார் 100 கி.மீ. தூரம்) அந்த கடற்கரைக்கு செல்ல முடியும். இந்தப் பகுதியைச் சுற்றி மிக அழகான கன்னிக் கடற்கரைகள் (virgin beaches) உண்டு.


இந்த கோட்டை கடற் பயணம் செய்யும் இஸ்லாமியர்களுக்கு (முக்கியமாக ஹஜ் போன்ற பயணங்களுக்கு) பாதுகாப்பு அளிப்பதற்காகவும், இந்திய நிலப் பகுதியில் உள்ள முஸ்லீம் நாடுகளுக்கு கடற் தாக்குதலில் இருந்து காப்பற்றும் அரணாக இருப்பதற்காகவும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பட்டது. இந்தக் கோட்டையை ஆண்டவர்கள் வட ஆப்ரிகாவைச் சேர்ந்த சித்திக் (முஸ்லீம்) இன மக்கள். இந்தக் கோட்டையை கைப்பற்ற மராத்தியர்கள், டச்சு மக்கள், ஆங்கிலேயர்கள் (கிழக்கு இந்திய கம்பெனி) எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்க வில்லை.

சொல்லப் போனால், இந்த கோட்டையைப் பிடிப்பதற்காகவே, மராத்திய பேரரசர்கள் (சிவாஜி உட்பட) இந்தக் கோட்டைக்கு மிக அருகே இன்னொரு மிகப் பெரிய கோட்டையை (விஜய துர்க்) அமைத்தனர். ஆனாலும் அந்த முயற்சியும் பலிக்க வில்லை. இறுதி வரை யாராலும் வெல்ல முடியாத இந்த கோட்டையை பின்னர் வந்த இதன் ஆட்சியாளர்கள், துணைப் படை திட்டத்தின் கீழ் பிரிட்டிஷ் பேரரசுடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.

ஏன் இந்தக் கோட்டையினை யாராலும் வெல்ல முடிய வில்லை? சற்று விரிவாக பார்போம்.
பூகோள ரீதியான அமைப்பு மற்றும் கட்டிட அமைப்பு பாதுகாப்பு அமைப்பு இந்தக் கோட்டைக்கு பெரும் பலமாக இருந்தது. உதாரணமாக, அந்தக் கோட்டைக்கு (இப்போதும் கூட) சிறிய பாய்மர படகுகளிலேயே (கடல் ஆழம் மிகக் குறைவாக இருப்பதால்) செல்ல முடியும். கடல் நடுவே இருந்தாலும், இந்தக் கோட்டையின் உள்ளேயே ஒரு மிகப் பெரிய (வற்றாத) குடிநீர் குளம் உள்ளது. இந்தக் கோட்டையை சுற்றி சுற்றி வந்தாலும், இதன் வாயில் எங்கே (வாயில் மூடி இருக்கும் பட்சத்தில்) என்று கண்டுபிடிக்க முடியாத முடியாத மாதிரி கோட்டை கட்டிட அமைப்பு உள்ளது. முற்றுகை இட்ட எதிரிகளுக்கு தெரியாமல் வெளியே சென்று வர வழியும் உண்டு

இந்தக் கோட்டையிலிருந்து நிலப் பகுதிக்கு ஒரு சுரங்கப் பாதை உள்ளதாக ஒரு கைடு கூறினார். அதன் வழியாக , முற்றுகைக் காலங்களில் கோட்டைக்கு தேவையான பொருட்கள் கொண்டு வரப் படும் என்றும் கூறினார்.

இந்த கோட்டையினை யாரும் வெல்ல முடியாமல் போனதற்கு மற்றுமொரு முக்கிய காரணம். இந்த கோட்டையை யார் தாக்க முனைந்தாலும், இந்திய நிலப் பகுதியில் இருந்த அனைத்து முஸ்லீம் மன்னர்களும் ஒன்று சேர்ந்து , தாக்குகின்றவரின் நிலப் பகுதியினை தாக்குவார்கள். உதாரணமாக மராத்தியரோ ஆங்கிலேயரோ இந்த கடல் கோட்டையை தாக்கிய போது, எப்போதுமே சண்டையிட்டுக் கொண்டிருந்த தக்கன சுல்தான்களும் , முகலாய அரசர்களும் இணைந்து மகாராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளைத் தாக்கியதாக சரித்திரம் சொல்கிறது. உடனே, இந்த கோட்டையைத் தாக்குவதை கைவிட்டு மராத்தியர்களும் ஆங்கிலேயர்களும் பின் வாங்க நேரிட்டதாகவும் சொல்லப் படுகிறது.

இந்த கோட்டைக்கு சுற்றுலா செல்வது வாழ்வின் மறக்க முடியாத தருணமாக இருக்கும். இதன் அருகே அழகிய கடற்கரைகள் (கோவா போல) மற்றும் தங்குமிடங்கள் உண்டு.

வாய்ப்பு கிடைத்தால் இந்த கோட்டைக்கு ஒரு முறை கண்டிப்பாக சென்று வாருங்கள்.


நன்றி. வணக்கம்

Thursday, October 23, 2008

கட்டுப்பாடான வேகம் நன்று





சிறிது காலத்திற்கு முன்பு, நான் என் குடும்பத்துடன் காரில் ஒரு விரைவு நெடுஞ்சாலையில் (Express Highway) சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே மிக அதிக வேகத்தில் (சுமார் 110-120 கி.மீ.) சென்ற பொழுது, ஒரு கனரக வாகனம் தடம் (lane) மாறி திடீரென குறுக்கே வந்து விட்டது. ஒரு பெரும் விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியது தம்பிரான் புண்ணியம்.








இது நடந்து சில காலத்திற்கு பின், என் நண்பர் ஒரு தேசிய நெடுஞ்சாலையில், காரில் மிக வேகமாக சென்ற போது, சாலைப் பணிக்காக குறுக்கே வைக்கப் பட்டிருந்த ஒரு தடுப்பில் (கவனக் குறைவினால்) மோதி தனது குடும்பத்துடன் உயிரிழந்தார்.




சீரான, நேரான சாலைகள், லேசாக அழுத்தினால் பறக்கக் கூடிய நவீன வகை கார்கள் நமது மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி மிக அதிக வேகத்தில் செல்ல உந்துகின்றன. முதலில் சாலையில் கவனமாக இருந்தாலும், தொடர்ந்து சில நேரம் அதிக வேகத்தில் செல்லும் போது, அயர்ச்சினாலும் அதீத தன்னம்பிக்கையினாலும், கவனக் குறைவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது. அப்போது, சாலையில் திடீரென ஏற்படும் சில எதிர்பாராத குறுக்கீடுகளால் பெரும் விபத்து நேரிட்டு விடுகிறது.


இந்த நிலை சாலைப் பயணத்திற்கு மட்டுமல்ல, ஒரு வகையில் வாழ்க்கைப் பயணத்திற்கும் பொருந்தும்.


கல்வி மற்றும் பணிகளில் பெரும் வெற்றிகள், அதிக வருமானம், பாராட்டு புகழுரைகள் இளம் வயதிலேயே கிட்டும் போது ஒரு வித மனக் கிளர்ச்சி ஏற்படுகிறது. அதனால் உருவாகும் அதீத தன்னம்பிக்கை வாழ்கையில் சற்று அதிகப்படியான வேகத்தில் செல்ல உந்துகிறது.


விளைவு, அதிக அனுபவம் இல்லாத துறையில் அகலக் கால் பதித்தல், தனது அபாயம் தாங்கும் திறனை மீறிய அளவுக்கு தொழில் (பங்கு மற்றும் மனை வியாபாரம்) முதலீடுகள், வருமானத்திற்கு மீறிய செலவினங்கள் மற்றும் திரும்ப கட்ட முடியுமா என்று உறுதியாக சொல்ல முடியாத அளவிற்கு கடன் வாங்குதல்.


முன்னமே சொன்ன படி, அதிகப்படியான வேகத்தில் சற்று அதிக நேரம் தொடர்ந்து பயணித்தால் கவனக் குறைவு மற்றும் அயர்ச்சி ஏற்படுகிறது. ஏதேனும் சிறு குறுக்கீடு ஏற்பட்டாலும் வாழ்கை (வண்டி) நொறுங்கி போய் விடுகிறது. சமீபத்தில், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நிகழ்ந்த சில தற்கொலைகளுக்கு (அதுவும் குடும்பத்துடன்) இதுவே காரணமாக இருக்கக் கூடும்.




நீங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் செல்லுகிறீர்களா? சுய பரிசோதனை செய்து கொள்ள சில கேள்விகள் .




உடற்பயிற்சி/நடைபயிற்சி/மனப்பயிற்சி செய்ய நேரமில்லையா?

செய்தித்தாள்களைப் பார்க்க நேரமில்லையா?

ருசி தெரியாமல் உணவு உண்கிறீர்களா?

அலுவலத்தில் அல்லது வெளியில் நண்பர்களோடு பேசி சில நிமிடங்கள் சிரிக்க முடிய வில்லையா?

உங்களுக்கு பிடித்த விஷயம் செய்ய நேரமில்லையா?

உங்கள் குடும்பத்துடன் குறிப்பாக உங்கள் குழந்தையுடன் சிறிது நேரம் செலவிட முடிய வில்லையா?

அவர்களை வெளியே அழைத்து செல்ல நேரமில்லையா?

உறவினர் நண்பர்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரமில்லையா?






இந்த கேள்விகளில், பெரும்பாலானவற்றிக்கு உங்கள் பதில் ஆமாம் என்று இருந்தால் நீங்கள் கவனிக்கப் படவேண்டியவர். உங்கள் வேகத்தினை உடனடியாக சுய கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவது நல்லது.






பெற்றோரின் வழிநடத்துதலில் இருந்து வெளியே வந்து சில காலமே ஆகி இருக்கும் நம் போன்ற இளையவர்கள் ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும். வேகம் நமது கட்டுக்குள் இருக்கும் போது மட்டுமே வாழ்க்கைப் பயணம் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதுடன் நிறைவாகவும் இருக்கும்.




சிந்திப்போம்.



மீண்டும் சந்திப்போம்.

Wednesday, October 22, 2008

வெளிநாட்டில் பணிபுரியும் நண்பர்களுக்கு ஒரு தகவல்


சமீபத்தில், வெளிநாட்டில் பணிபுரிந்து தாயகம் திரும்பிய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, டாலர் நாணய சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களினால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேச்சு இருந்தது.





அதாவது, வெளிநாட்டில் அவர்தம் சம்பளம் டாலர் மதிப்பில், ஒரே அளவில் இருந்தாலும் கூட, அந்த டாலர் தொகை ரூபாயில் மாற்றம் பெறும் போது, பெருத்த மாற்றங்களை சந்திக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள அவர் குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட் இடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது.





உதாரணமாக, ரூ.49 ஆக இருந்த டாலர் காலப் போக்கில் ரூ.39 ஆக குறைந்து, பின்னர் மீண்டும் ரூ.49 அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால்,1500 டாலர் சம்பளம் பெற்று சுமார் 1000 டாலர் தனது குடும்பத்திற்கு அனுப்பினால், ஒரு மாதம் 49000 ரூபாயும் சில காலம் கழித்து இன்னொரு மாதம் 39000 ரூபாயும் என மாறி மாறி வருகிறது. அந்த நண்பர் வேடிக்கையாக கூறினார். அவர் குடும்பத்தினர் அவர் மீதே சந்தேகப் படுகின்றனர் என்று.





இந்த ஏற்ற இறக்கங்களில் இருந்து அவர் போன்றவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள இப்போது ஒரு புதிய வழிமுறை உள்ளது. அதாவது "எதிர்கால நாணய விலை ஒப்பந்தங்கள்" (Currency Futures) என்ற வணிக முறை தற்போது இந்தியாவில் (NSE &MCX) அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.





இதன் படி, ஒரு தனி நபர் (Resident Indian) டாலர் சந்தையில் "எதிர்கால நாணய விலை ஒப்பந்தங்கள்" ஒரு வருடம் வரை வாங்க விற்க முடியும். இந்த முறையினை வெளிநாட்டில் பணி புரியும் நண்பர்கள் (இந்தியாவில் உள்ள தம் குடும்பத்தினர் பெயரில்) உபயோகப் படுத்தி டாலர் ஏற்ற இறக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த முறையில், வெளிநாட்டில் தங்கள் பிள்ளைகள் படிப்பதற்காக பணம் அனுப்புபவர்கள் கூட பயன் பெறலாம். இந்த வணிகத்திற்காக, தங்கள் சொந்த ஊரில் உள்ள பங்குத் தரகரிடம் அல்லது பொருள் தரகரிடம் (Commodity Broker) இந்தியாவில் உள்ள தம் குடும்பத்தினர் பெயரில் ஒரு கணக்கு தொடங்கி கொள்ளலாம்.





நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை. இந்த வணிகம் நாணய சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமே . குறுகிய கால லாபம் பெறுவதற்காக அல்ல. இந்த விஷயங்களில் மேலும் விபரம் பெற விரும்புபவர்கள் http://www.nseindia.com/ வலைப் பதிவில் பார்க்கலாம் அல்லது maximumindia@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.





நன்றி.

Tuesday, October 21, 2008

மதச் சார்பின்மை - சொற்பொருள் மாற்றம் - ஒரு இலக்கண ஆராய்ச்சி


சொற்பொருளியலின் (Semantics) படி, ஒரு மொழியில் உள்ள சொற்கள், காலப் போக்கில், பல்வேறு காரணங்களினால், தமது வேர் பொருட்களை இழந்து, புதிய பொருட்களை பெறுகின்றன.




உதாரணமாக, ஒரு காலத்தில் உலோகங்களை பொதுவாக குறித்த பொன் என்ற சொல் தற்போது தங்கம் என்ற அர்த்தத்தில் வழங்கப் படுகிறது.




நாற்றம் என்ற சொல் மணம் என்ற தனது வேர் பொருளை இழந்து துர்மணம் என்ற புதிய பொருளைப் பெற்றுள்ளது.





இதே போல, கழகம், காமம், கோயில் போன்ற பல சொற்கள் காலப் போக்கில் வேர் பொருளை இழந்து புதிய பொருளிலேயே உணரப் படுகின்றன.





எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம். மதச் சார்பின்மை எனும் சொல் கூட இதே போல தனது வேர் பொருளை காலப் போக்கில் இழந்து, இன்றைக்கு வேறு அர்த்தத்தில் வழங்கப் படுகின்றதோ என்று.






இந்திய அரசியல் சட்டப் படி, இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு.






இதன் அடிப்படையில், அரசியல் சட்ட வல்லுனர்கள் மதச் சார்பின்மைக்கு சில விளக்கங்கள் அளிக்கிறார்கள்.






அதாவது, மதச் சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாகக் கருதுவது. மதத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் காணாமல் இருப்பது.






ஆனால், தற்போது மதச் சார்பின்மைக்கு நடைமுறை விளக்கம் என்ன?







இங்கே கொஞ்சம் அலசலாம்.




இன்றைய மதச் சார்பின்மை என்பது.



ஒரு குறிப்பிட்ட மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளையும் பழமை வாதத்தினையும் சாடுவது.






மற்ற மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகளையும் பழமை வாதத்தினையும் கண்டு கொள்ளாமல் இருப்பது. முடிந்தால் ஆதரிப்பது. இன்னும் கூட முடிந்தால், இந்த விஷயங்களில் நீதி மன்றங்கள் தலையிடக் கூடாதென்று சட்டம் இயற்றச் சொல்வது.






ஒரு குறிப்பிட்ட மதத்தின் விழாக்களையும் கடவுளர்களையும் இழிவு படுத்துவது.




மற்ற மதங்களின் விழாக்களில் கலந்துக் கொள்வது. முடிந்தால், அவர்களின் இறையாளர்களைப் பற்றி புகழ்ந்து பேசுவது.






ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளர்களை பற்றி இழிவாக எழுதுபவர்களையும் படம் வரைபவர்களையும் கண்டித்தால் மதவாதம் என்பது. .






மற்ற மதங்களின் இறையாளர்களைப் பற்றி சாதாரணமாகக் கூட பேசவோ படம் வரையவோ கூடாதென்று மிரட்டினால் கண்டுக் கொள்ளாமல் இருப்பது.






ஒரு குறிப்பிட்ட மதத்தின் பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சியினை மதவாதக் கட்சி என்பது. அந்த கட்சி ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக மற்ற மதங்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது.






இன்னும் கூட ஒரு வேடிக்கையான விஷயம்.






மதச் சார்பற்றவர் என்று தம்மை சொல்லிக் கொள்பவர்கள் கூட (சில சமயங்களில் நாத்திகர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட) ஒரு விஷயத்தில் மதத்தினை சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது.






ஒரு குறிப்பிட்ட மதத்தினைப் பற்றி தவறாக பேசுவதற்கு அதே மதத்தினை சேர்ந்தவராகப் பிறந்திருப்பது ஒரு கேடயமாக உபயோகப் படுகிறது. ஏனெனில், வேறு மதத்தினராகப் பிறந்து இருந்தாலோ அல்லது பின்னர், வேறு மதத்திற்கு மாறி இருந்தாலோ, அந்த குறிப்பிட்ட மதத்தினைப் பற்றி எந்த உரிமையில் தவறாகப் பேச முடியும்?






ஒரு வேளை, ஒருவர் தனது சொந்த மதம் என்ற உரிமையின் பேரிலோ அல்லது சொந்த மதத்தினர் மீது உள்ள அக்கறையினாலோ, அதிலுள்ள தவறுகளை களைய எண்ணி இருந்தால் , அவர் ஒரு மதச் சீர்திருத்த வாதி ஆகி விடுவாரே அன்றி மதச் சார்பற்றவாதி ஆக முடியுமா ?






இந்த நிலையில், உண்மையான மதச் சார்பின்மை என்பது என்னவாக இருக்க முடியும்?






மதம் என்பது ஒருவரின் தனிப் பட்ட விஷயம்.






தனிப் பட்ட உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.






மதம் என்பது அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம்.






இந்தியர் அனைவரும் மதிக்க வேண்டியது இந்நாட்டின் அரசியல் சட்டம்.






அனைத்து மதத்தினைச் சேர்ந்தவரும் அரசியல் சட்டத்தின் முன் சமம்.






யாரையும் மதத்தின் பேரில் பிரித்துப் பார்க்க கூடாது.






மதக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் பொது நலனுக்கும் நாட்டிற்கும் விரோதமாக இருக்கக் கூடாது.






எந்த மதத்தினைச் சேர்ந்தவர் நாட்டிற்கு (பொது நலத்திற்கு ) விரோதமாக ஈடுபட்டாலும், மதத்தின் அடிப்படையில் நோக்காமல், அரசும், அரசியல் கட்சிகளும், மக்களும் நாட்டின் நலன் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல் பட வேண்டும்.






இப்படி இருந்தால் போதும், எந்த மதத்தினைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆத்திகராகவோ நாத்திகராகவோ இருந்தாலும் கூட ஒருவரால் மதச் சார்பற்றவராக இருக்க முடியும்.






என் கருத்து இது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?








நன்றி

Monday, October 20, 2008

மேலை உலகம் நமக்கு குத்தி வரும் முத்திரை.


இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு இந்தியர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.


உலக அளவில், எழுத்துலகின் மிக உயரிய விருதாக இந்த பரிசு கருதப்படுகிறது. மேலும், இதன் பரிசுத் தொகை, இந்திய எழுத்தாளர்கள் சாதாரணமாக நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெரியது ஆகும்.


இந்தியர் ஒருவருக்கு, இத்தகைய பரிசு கிடைத்திருப்பது மேலோட்டமாக பார்க்கும் போது பெருமையளிக்கக் கூடியதாகவே தோன்றியது.


ஆனால், இந்தியாவின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய எழுத்தாளர்களுக்கு மட்டுமே இது போன்ற விருதுகள் வழங்கப் பட்டு உள்ளன என்பதும், இநத வருடம் பரிசு பெற்ற எழுத்தாளர் கூட மேற்கூறிய வகைக்கு விதி விலக்கானவர் அல்ல என்பதும் அறிந்த பின்னர் வருத்தமே மிஞ்சியது.


பழைய இந்தியா உலக பெரும் நாகரிகங்களில் ஒன்று, எத்தனையோ மகான்கள் அவதரித்த பூமி என்றும் புதிய இந்தியா அதி வேகமாக முன்னேறி வரும் ஒரூ இளைய நாடு, ஜொலிக்கின்ற நாடு (India Shining) என்றும் நாம் காட்டுக் கூச்சலாக கத்தினாலும் கூட, மேலை நாடுகள் நம்மை இன்னும் ஏளனமாகவே நோக்கி வருகின்றன.


அந்த ஏளன நோக்கின் மற்றுமொரு வெளிப்பாடே இது போன்ற புத்தகங்கள் மற்றும் சில திரைப் படங்களுக்கு தொடர்ந்து விருதுகள் வழங்கி வருவது.


மேலும், இது போன்ற விருதுகளினால் அதிக விளம்பரம் பெறும் இநத வகை புத்தகங்கள் (சில சினிமாக்கள் கூட), உலகெங்கும் உள்ள மக்களினால் வாசிக்கப் படும் போது இந்தியாவின் மதிப்பு மேலும் தரம் தாழ்ந்து போகிறது.


இநத நிலைக்கு மேலை நாடுகளை மட்டும் குறை கூறி பயன் இல்லை.


ஐக்கிய நாடுகள் அறிக்கையின் படி, இந்தியாவில் உள்ள பத்தில் நான்கு குழந்தைகளுக்கு தேவையான உணவில்லை.


உலகின் பசி குறித்த அறிக்கையின் படி, உலகில் இந்தியாவிற்கு அறுபத்து ஆறாவது இடம்.


உலகின் பசியால் வாடும் மக்களில் அதிகப்படியானோர் இந்தியாவிலேயே வாழ்கின்றனர்.


உலகின் மொத்த ஏழைகளில், மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலேயே வாழ்கின்றனர்.


மனித வள மேம்பாடு குறித்த அறிக்கையில் கூட, இந்தியா மிக கீழான இடமே பெற்றுள்ளது.


இவை மட்டுமா காரணம்?


இவை மட்டுமல்ல, வேறு பிரச்சினைகளான இனவாதம், மதவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம், கல்வியின்மை ஆகியவை இந்தியாவில் இருந்தாலும், மற்ற முன்னேறி வரும் நாடுகளில் கூட (சீனா கூட விதி விலக்கல்ல) இதே மாதிரி பிரச்சினைகள் உண்டு. ஆனால் சீனா போன்ற நாடுகள் இந்தியா அளவிற்கு ஏளனமாக பார்க்கப் படுவதில்லை.


இதற்கு என்ன காரணம்?


இந்தியாவின் திறந்த வெளி கழிப்பிட நாகரிகமும் சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழல் பராமரிப்புமே மேலை நாடுகளின் ஏளனப் பார்வைக்கு ஒரு முக்கிய காரணம் என்பது என் கருத்து. இநத சூழ்நிலை கிராமப் புறங்களிலும் நகரங்களின் சேரிப் பகுதிகளிலும் மட்டுமே காணப்படுவது அல்ல, இந்தியாவின் நிதி மையமாக கருதப் படும் பந்திரா - குர்லா காம்ப்ளெக்ஸ் (மும்பையின் மையப் பகுதியான இங்கு சென்ற வருடம் இந்தியாவிலேயே அதிக விலைக்கு காலி நிலம் விற்கப் பட்டது) போன்ற பகுதிகள் கூட இநத அவலநிலைக்கு விதி விலக்கல்ல என்பதே மனதை அதிகம் காயப் படுத்துகிறது .



பளபளப்பாக மின்னும் நவீன வகை கட்டிடங்கள், அவற்றை சுற்றி திறந்த வெளி கழிப்பிடங்கள், சுற்றிப் பாயும் மிதி (மும்பையின் கூவம்) போன்ற நதி என்ற புகழுடன் கூடிய ஒரு நிதி மையப் பகுதி (Central Business District) உலகிலேயே இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும்.


இத்தகைய அவல நிலையினைக் கூட காசாக்க எண்ணும் சிலர் சேரிச் சுற்றுலா (Slum Tourism) எனும் பெயரில் மேலை நாட்டு மக்களுக்கு இந்தியாவின் சேரிப் பகுதிகளை படம் போட்டு காட்டுவதும் அந்த பயணிகள் இந்தியா இதுதான் என்று அவர்கள் நாட்டு மக்களுக்கு (வீடியோ கருவிகள் வாயிலாக) அறிமுகம் செய்வதும் இந்தியாவில் மட்டுமே நடக்கக் கூடிய ஒன்றாகும்.


இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?


பணப் பற்றாக்குறை ஏதேனும் காரணமா?


வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொழில் அதிபர்களை கவர்ந்திழுக்க பல ஆயிரம் கோடிகள் முதலீடுகளை செய்யும் அரசினால் சில ஆயிரம் கோடிகள் செலவு செய்து அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்த முடியாதா?


பளபளக்கும் கட்டிடங்களையும் தொழிற்சாலைகளையும் கட்ட ஆயிரக் கணக்கான கோடிகள் செலவு செய்யும் தொழில் அதிபர்களால், அங்கு பணி புரிய வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரப் படும் தொழிலாளர்களுக்கு சில லட்சம் செலவு செய்து நல்ல சுகாதார குடியிருப்பு அமைத்து தர முடியாதா?


தன்வகையிலும் தன் வீடு வரையிலும் சுத்தம் பார்க்கும் நம் போன்ற பொது மக்களால் பொது இடங்களை அசுத்தம் செய்யாமல் இருக்க முடியாதா?


சுகாதார சுற்றுப் புற சூழல் என்பது யாரும் கண்டுக் கொள்ள தேவை அற்ற ஒன்று என்று அரசு முதல் ஆண்டி வரை அனைவரும் மனதில் ஆழமாக பதியம் போட்டுக் கொண்டு விட்டோமோ?


ஆழமாக வேரூன்றிவிட்ட இநத அலட்சியப் போக்கினை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறோம்?


நம் மீது விழுந்து விட்ட ஏளனப் பார்வையை என்றைக்கு நீக்கப் போகிறோம்?


சிந்திப்போம்


மீண்டும் சந்திப்போம்.

Sunday, October 19, 2008

வாராந்திர சந்தை நிலவரம்


சென்ற வார சந்தை நிலவரம் மற்றும் வருகின்ற வாரத்திற்கான எதிர்பார்ப்புகள் குறித்து, இந்த பதிவரின், ஆங்கில பதிவு வலையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதனைப் பார்க்க கீழ் கண்ட இணைப்பை அணுகவும்.

Maximum India Weekly Review

Saturday, October 18, 2008

கருத்துக் கணிப்பு நடத்துபவர்களுக்கு ஒரு கோரிக்கை.



இந்த வாரம், என்னால் பெரிது மதிக்கப் பட்டு வந்த, சென்னையைச் சேர்ந்த ஒரு கல்லுரியின் கருத்துக் கணிப்பு தலைப்பை (தமிழர்களுக்கு பிடித்த சினிமா நடிகர் யார்?) செய்தி தாள்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.


ஊடகங்கள் மட்டுமே அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோருக்கு பெருமளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்று எண்ணியிருந்த போது, சிறந்த கருத்துகளை மக்களுக்கு சொல்ல வேண்டிய சில நல்ல கல்லூரிகள் கூட ஊடகங்களின் பாணியை பின் பற்றுவது கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது.

மக்கள் விரும்புகிறார்கள் என்பதினால்தான் இத்தகைய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பவர்களுக்கு ஒரு கேள்வி. உங்கள் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக, சுகாதாரமற்ற, உடலுக்கு ஒவ்வாத உணவுகளைக் கொடுப்பீர்களா?

மேலும், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் மிக அதிக அரசியல் பலம், மக்கள் செல்வாக்கு, பதவி மற்றும் பண பலம் கொண்டவர்கள். அவர்கள், நம்மைப் போன்ற சாமான்யர்கள், கவலை மற்றும் அக்கறை காட்ட தேவை இல்லாத உயரத்தில் இருப்பவர்கள். நாம் நம்மைப் பற்றியும், நம்மையும் விட கீழே, அதிகம் சுரண்டப் பட்ட (படுகின்ற) மக்களைப் பற்றி மட்டும் கவலைப் பட்டால் போதுமானது.

அது மட்டுமல்ல, இன்றைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், பாரபட்சமானவையாகவும், ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும் மட்டுமே நடத்தப் படுகின்றன. மற்றவை கூட, மக்களின் வெளிமனதைப் படிக்க உதவும் ஒரு தொழிற் நுட்ப வழி முறையாகவே இருக்கின்றன. சமூக அக்கறைக் கொண்ட கருத்துக் கணிப்புகளை சிலர் நடத்தினாலும் அவற்றை ஊடகங்கள் வெளிக்கொணர முன் வருவதில்லை

சமூக அக்கறை கொண்ட ஒரு கருத்துக் கணிப்பு என்பது, அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளினால் ஒட்டடை அண்டிப் போன சாதாரண மக்களின் இதயங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் பல நல்ல விஷயங்களை வெளிக் கொண்டு வருவதே ஆகும். அது மட்டுமல்ல, ஒரு சிறந்த கருத்துக் கணிப்பினால், மக்களின் ஆழ்மனதில் சிறந்த கருத்துகளை விதைக்கவும் முடியும்.

சமூக அக்கறைக் கொண்ட கருத்துக் கணிப்புகளுக்கான, சில உதாரணங்கள் கீழே.

இந்திய மக்களின் அடிப்படை தேவை?

௧. தொடக்கக் கல்வி.

௨. பொது சுகாதாரம்.

௩.சுகாதாரமான குடிநீர் வசதி.

௪.வறுமை நீக்கம்.

இந்திய அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினை?

௧. இன/மதக் கலவரங்கள்

௨. தீவிர வாதம்.

௩. பிரிவினை வாதம்

௪. சமூக விரோத நடவடிக்கைகள்

விவசாயிகள் வாட்டத்திற்கு முக்கிய காரணம்?

௧. போதுமான கடன் வசதி இல்லை.

௨. விளை பொருட்களுக்கு சரியான விலை இல்லை.

௩. சேமிக்க போதுமான வசதி இல்லை.

௪. சந்தைக்கு கொண்டு போக வசதிகள் இல்லை.

தொழிற் வளர்ச்சிக்கு பெரும் தடையானவை?

௧. மின் பற்றாக்குறை

௨. கட்டுமான வசதிகள் குறைபாடு.

௩. அரசாங்க ஊழல்.

௪. போக்குவரத்து வசதி குறைவு.


மின் வெட்டை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

௧. புதிய மின் உற்பத்தி ஆலைகள்

௨. மின் திருட்டு மற்றும் இழப்புகளை தவிர்த்தல்

௩. மான்ய உதவியுடன் மரபு சாரா எரிசக்தி

௪. சிறந்த விநியோக முறை.


மேலும் பல சொல்லிக் கொண்டே போகலாம். இந்த விஷயங்களுக்காக கருத்துக் கணிப்பு நடத்த முன் வருவோரை வாழ்த்தி வரவேற்போம்.


இப்படி உடனடியாக அக்கறை காட்ட வேண்டிய விஷயங்கள் பல இருக்கும் போது, பளபளக்கும் உணவு வகைகளை, நிலைக் கண்ணாடியில் காட்டி, நம்மை பசி மறக்கச் செய்யும் மோடி மஸ்தான் வேலையினை, சமூக பொறுப்பு உள்ள ஊடகங்கள் மற்றும் கல்லூரிகள் செய்ய வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


மேலும், மேற்குறிப்படப் பட்டவை தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்றும் அரசாங்கம் மட்டுமே கவனிக்க வேண்டிய (கவலை கொள்ள வேண்டிய ) பிரச்சினை என்பவர்க்கும் ஒரு செய்தி. சூரியன் மறையாத நாடு எனக் கருதப் பட்ட ஒரு நாட்டை நம்மை போன்ற அடிமை நாடு வெல்ல முடியாது என்று ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் இங்கே வாழ்ந்தவர்கள் (ஊடகங்கள் கூட) நினைத்திருந்தால் நமக்கு இன்று சுதந்திரம் இருக்காது.

சிந்திப்போம்


மீண்டும் சந்திப்போம்

Friday, October 17, 2008

கடன் வாங்கலாமா?




கடன் பொருளாதாரம், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான ஒன்றாகும். ஆனால், அதே சமயத்தில், சில தவறான கடன் கொள்கைகளால், இன்றைய தேதியில்உலகமே தத்தளித்து கொண்டு இருக்கிறது.





இந்த சூழ்நிலையில் நம்மைப் போன்ற சாமான்யர்கள் கடன் வாங்கலாமா என்பதை பற்றியும் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் யாவை என்பதைப் பற்றியும் இங்கு ஆராயலாம்.




பொதுவாக, கடன் வாங்குவதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் இருக்கக் முடியும் .




தொழில் மற்றும் வியாபார தேவைகள் . சுய தேவைகள் , மேற்படிப்பு தேவைகள் மற்றும் இதர முதலீடுகள் (Speculative nature)





1. தொழில் மற்றும் வியாபார தேவைகள்




பொதுவாக ஒரு நாட்டின் அனைத்து துறைகளின் சராசரி வளர்ச்சி, அந்நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) மற்றும் பண வீக்கத்தின் (Inflation) கூட்டு தொகையாக இருக்கும். உதாரணமாக, இந்திய வளர்ச்சி 8% மற்றும் பண வீக்கம் 12% எனும் பட்சத்தில் சராசரி துறை வளர்ச்சி (12+8) 20% ஆக இருக்கும்.




இதன் அடிப்படையில், ஒவ்வொரு துறைக்குமான, வருங்கால தனிப் பட்ட வளர்ச்சியினை, அந்தந்த துறையின் ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் நூல்கள்(Reseach Reports and Journals) மூலம் அறிய முடியும்.






மேற்கண்ட விஷயங்களின், அடிப்படையில், தொழில் மற்றும் வியாபாரத்தில் கடன் மூலம் செய்யக் கூடிய முதலீட்டினால் பெறக் கூடிய லாப அளவினை தோராயமாக (Estimates) முதலில் மதிப்பிட வேண்டும். அந்த தொகை, கடனுக்கான வட்டி மற்றும் திருப்ப வேண்டிய முதல் (Principal + Interest) ஆகியவற்றை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே கடன் வாங்க வேண்டும்.




2. சுய தேவைகள்




சுய தேவைகளை இரண்டாக பிரித்து கொள்ள முடியும்.




அத்தியாவசிய தேவைகள் மற்றும் அத்தியாவசியமற்ற தேவைகள்.




அத்தியாவசிய தேவைகளுக்காக (உதாரணமாக வீடு மற்றும் வாகனம்) கடன் வாங்கும் பட்சத்தில், அத்தேவைகளை பூர்த்தி செய்வதினால் ஏற்படும் பலன்கள் (Tangible and Intangible) , திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் வட்டியினை விட அதிகமாக இருக்க வேண்டும்.




அத்தியாவசியமற்ற பொருட்களுக்காக (உதாரணமாக ஆடம்பர பொருட்கள்) (கூடுமான வரை) கடன் வாங்குவதைத் தவிர்த்து, சுய சேமிப்பில் வாங்குவது நல்லது. அப்படி வாங்கும் பட்சத்தில், மொத்த செலவில் , சொந்த பங்கு (Margin) அதிகமாக இருப்பது நல்லது.




3. மேற்படிப்பு




மேற்படிப்பு, ஒரு சிறந்த முதலீடு. மேற்படிப்பின் மூலமாக, புதிய பணி வாய்ப்பு, பணி மேன்மை மற்றும் இதர நன்மைகள் இருக்கும் பட்சத்தில், கடன் வாங்கலாம். அதே சமயத்தில், திரும்ப கட்ட வேண்டிய தொகை அளவு குறித்து கவனமாக இருக்க வேண்டும்.




4. இதர முதலீடுகள் (Speculative Nature)




இரண்டாவது வீடு (வாடகை அல்லது குறைந்த கால லாபத்திற்காக), மனை நிலம், பங்கு சந்தை முதலீடுகள் இவற்றுள் அடக்கம். பொதுவாக, பொருளாதார வல்லுனர்கள் இவற்றிற்காக கடன் வாங்குவதை ஏற்பதில்லை. அப்படி வாங்கும் பட்சத்தில், சிறந்த நிபுணர்கள் உதவி பெற்றிருப்பதும், தனது சொந்த நஷ்டம் தாங்கக் கூடிய சக்தி (Risk Appetite) குறித்து தெளிவாக அறிந்திருப்பதும் அவசியம்.




கடன் வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டிய இதர விஷயங்கள்.




1 வங்கியின் நம்பகத் தன்மை (Integrity of the Bank)


2. திருப்ப செலுத்தக் கூடிய திறன் (Solvency and Liquidity)


3. வட்டி மாறாக் கடன் அல்லது மாறக் கூடிய கடன் (Fixed Rate or Floating Rate)


4. மறைமுக கட்டணங்கள் (Hidden Charges)


5. தேசிய அளவினாலான பொருளாதார மாற்றங்கள் (Macro Economic changes)


6.திருப்பி செலுத்த வேண்டிய கால அவகாசம் மற்றும் மாதந்திர தவணை முறை.


7. வங்கியின் இதர நிபந்தனைகள் (Terms and conditions of the Loan and EMI)


8. கடன் அளவிற்கு ஆயுள் காப்பீடு செய்வது குடும்ப பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம்.


9.கையெழுத்து இடும் முன் ஒவ்வொரு பத்திர நகலையும் முழுமையாக படிப்பது அவசியம்.


10. கிரெடிட் கார்டுகள் மாதந்திர செலவினங்களை எளிதாக செய்வதற்கு மட்டுமே. அதனை கடன் பெறும் வழியாகக் கொள்ளும் பட்சத்தில் அபாயம் நிச்சயம். (இந்த வாரம் மும்பையில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டதற்கு அதிகப் படியான கடன்களை கிரெடிட் கார்டு மூலம் பெற்றதே காரணம்).


11. மாதாந்திர கடன் தவணை, தனது வீட்டிற்கு கொண்டு செல்லும் சம்பளத் தொகையில் (Take Home Salary) 30% சதவீதத்திற்குள் இருப்பது நல்லது.




கடன் பெறுவதில் கவனமாக இருப்போம்.




கவலைகளை தவிர்ப்போம்.

Thursday, October 16, 2008

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு - ஒரு இந்தியப் பார்வை - பகுதி ௨


நேற்றைய பதிவின் மீது, ஒரு நண்பர் தனது பின்னூட்டத்தில், சில கேள்விகள் கேட்டிருந்தார்.


அவரது கேள்விகள், மேலும் பலரது எண்ணங்களிலும் பிரதிபலித்து இருக்கக் கூடும் என்பதனாலும், அவற்றின் பதில்கள் கூட அனைவரையும் சென்றடைய வேண்டி இருப்பதாலும் அவற்றை தங்கள் பார்வைக்காக பதிந்துள்ளேன் .



கேள்விகள்


Hi... I have few questions in my mind..


(1) LTTE and Sri Lankan government is not interested to settle this issue and want to live with the issue for ever. Why Indians to spend their time to resolve this issue?

(2) Is all Indians are having 3 times food, shelter and enough basic needs? How the Indian government is qualify to resolve this dispute when they are not capable to improve their own people livelihood?

(3) When both LTTE & Sri Lankan government is not believed in peace talks and they stick to violence, why the other parties inject the peace talks?

My sincere request to Indian Government & Tamil Nadu government, please concentrate on literacy, health care and other basic needs of Indians. And not to poke any other country issues…



பதில்கள்



எந்த ஒரு நாட்டிற்கும், தனது அண்டை நாடுகளில் அமைதி நிலவுவது பாதுகாப்பு ரீதியாக முக்கியமாகும். பக்கத்து வீட்டில் சத்தம் அதிகமாக இருந்தால் நம்மால் தூங்க முடியுமா? சொல்லப் போனால் பாகிஸ்தானின் அமைதி கூட நமக்கு முக்கியமான ஒன்றானதாகும். சற்று யோசித்து பாருங்கள். பாகிஸ்தான் தலிபான் கை வசம் போனால் நாம் நிம்மதியாக இருக்க முடியுமா?



மேலும், இந்தியா, பொதுவாக தென் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் (பண்பாட்டு ரீதியான ) தாய் நாடாக கருதப்பட்டு வந்துள்ளது. எனவே, இந்த நாடுகளின் நலன் குறித்து நாம் அக்கறை கொள்ள வேண்டியது நம் பொறுப்பு ஆகிறது. அது மட்டுமல்ல, தற்போது இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு எனவும் கருதப்படுகிறது. நாம் ஒரு ஒரு தலைமை நாடாக கருதப்படும் போது, தென் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் நடைபெறும் விஷயங்களை நாம் கண்டு கொள்ளாமல் விட முடியாது.



சற்றே யோசித்து பாருங்கள், சுனாமி நம்மையும் கூட பாதித்து இருந்த போதும் கூட, இந்தோனேசியாவிற்கு முதலில் உதவி செய்த நாடு நம் நாடுதான். மேலும் பங்களாதேஷ் உருவாக உதவியதும், மாலத் தீவிற்கு ஆபத்து வந்த போதும் கூட உதவியதும் நாம்தான். ஆசியாவை விட்டு தள்ளுங்கள், உலக அளவில் (ஆப்ரிக்கா மற்றும் அரேபியா) பல நாடுகளில் கூட அமைதி ஏற்பட நம் நாடு உதவி உள்ளது.



நம் நண்பர் கூறியதைப் போல, இரண்டு தரப்பினரும் சமாதானத்திற்கு முன் வராமல் இருக்கலாம். ஆனால் பாதிக்கப் படுவது யார்? அப்பாவி மக்கள்தானே? வாடும் அப்பாவி மக்களுக்கு, மனிதாபிமான முறையில் உதவி செய்ய வேண்டியது நம் போன்ற பெரிய நாட்டின் கடமைதானே. மேலும், அவ்விரு தரப்பினையும் பேச்சு வார்த்தை நடத்த செய்யவும், போரை நிறுத்த செய்யவும், போரால் சீரழிந்துள்ள அந்நாட்டை புனரமைக்க (ஆப்கானிஸ்தானில் நாம் உதவி வருவது போல) நாம் உதவலாமே?



இந்தியாவில் பல பிரச்சினைகள், உதாரணமாக, வறுமை, கல்வியின்மை, மின் தட்டுப் பாடு, கட்டுமான குறைபாடு போன்றவை, இருப்பது உண்மைதான். ஆனால், உலக வரைபடத்தில், நாம் ஒரு பொறுப்புள்ள நாடாக இருப்பதும் கூட நம் கடமை அல்லவா?



ஆகவே, இலங்கையில் அமைதி திரும்பச் செய்யவும், அங்கு வாடும் தமிழர் நலன் காக்கவும் நாம் முன் வருவோம்.



சிந்திப்போம்.



மீண்டும் சந்திப்போம்.

Wednesday, October 15, 2008

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு - ஒரு இந்தியப் பார்வை


இந்தியா, உலக பழம் பெருமை வாய்ந்த நாகரிகங்களின் தொட்டிலாக கருதப் படும் ஒரு நாடு. தன்னை அழிக்க வந்த , கிரேக்கர், மங்கோலியர், துருக்கியர் போன்ற அந்நியர்களைக் கூட அரவணைத்துக் கொண்டு, தன்னுடைய உயரிய பண்பாட்டினால், தன்னுள்ளே ஐக்கியப் படுத்திக் கொண்ட நாடு இது.


பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்குப் பெயர் பெற்ற இந்த நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில், இதன் சீரிய பெருந்தன்மைக்கு நவீன காலத்திய உதாரணங்கள் சில இங்கே.


இந்திய-பாகிஸ்தான் தேசப் பிரிவினையின் போது, பாகிஸ்தானுடன் சேர கிழக்கு வங்க மக்கள் (அரசியல்வாதிகள்) முடிவு எடுத்திருந்தப் போதும், அந்நாட்டு மக்கள் அபயக் குரல் எழுப்பியவுடன், நேசக் கரம் நீட்டி, அவர்களுக்கு பங்களாதேஷ் தந்த நாடு இது.


ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலரால் இந்நாட்டு பிரதமர் கொல்லப் பட்ட போது, உடனடியாக சற்று கோபப் பட்டாலும், பின்னர் அமைதியாகி, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையே (அதுவும் அதே கட்சியின் மூலமாகவே) அதே உயர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்து இந்த நாடு.


ஒரு மாநில மக்கள், தனி நாடு கோரிய போதும், அவர்கள் அண்டை நாட்டில் உள்ள தமது உறவினரைக் காண, சாலை அமைத்து தந்தது இந்த நாடு. மேலும் நமது அண்டை நாட்டினர் நமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தொந்தரவுகள் தந்தாலும், பல உலக அரங்குகளில் (நியாயமான விஷயங்களில்) அவர்களுக்கும் தோள் கொடுத்தது இந்த நாடு. உறவுக்கு பாலம் மட்டுமல்ல, சாலை மற்றும் இருப்புப் பாதை போட்டதும் இந்த நாடு.


இப்படிப் பட்ட பெருமைகள் கொண்ட ஒரு நாடு, போரில் கூட தர்மம், நியாயம் பார்த்த நாடு, சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு வருந்தத் தக்க நிகழ்வின் காரணமாகவே, தன் நாட்டின் மிக அருகே நடைபெறும் ஒரு இனப் படுகொலையை (Genocide) கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்பதை மனம் நம்ப மறுக்கிறது.


இந்நிலைக்கு, வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.


வாருங்கள். சிந்திப்போம்.


நம்மில் சிலரே, தமிழ் பற்றி பேசுபவன் தமிழ் தேசியவாதி (Tamil Nationalist) என்றும், தமிழர் நலம் பற்றி பேசுபவன் தமிழ் அடிப்படைவாதி (Tamil Fundamentalist) என்றும், இலங்கை தமிழர் படும் பாடு பற்றி பேசுபவன் தமிழ் பயங்கரவாதி (Tamil Terrorist) என்றும் முத்திரை குத்தி வந்துள்ளனர். நமது மாநிலத்திலேயே, முக்கிய தலைவர்களும், பொது மக்களில் பலரும் இந்த பிரச்சினை பற்றி வெளிப்படையாக பேச தயங்கி வந்ததற்கு இதுவே காரணமாக இருக்க முடியும்.


இந்த பதிவர் கூட, இந்திய இறையாண்மையின் மேல் பிடிப்பும், ஒருமைப்பாட்டின் மேல் பற்றும், தேச நலன் மீது அக்கறையும், அரசியல் சட்டத்தின் மேல் நம்பிக்கையும் கொண்ட ஒரு இந்தியக் குடிமகன்தான்.

ஆனால், அதே சமயத்தில், தனது சகோதர இனம் படும் பாடு கண்டு கண்ணீர் பெருகுவதையும் , அவர்தம் மீது இழைக்கப் படும் கொடுமை கண்டு நெஞ்சம் பதறி துடிப்பதையும் எப்படி தடுக்க முடியும்?


முதலில் நம் மக்களுக்கு ஒன்று புரிய வைக்க வேண்டும். அதாவது , இலங்கை வாழ் தமிழர் நலன் குறித்து அக்கறை கொண்டவர்கள், இந்திய நலனுக்கு எதிரானவர்கள் அல்ல என்று.


அடுத்து, நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.


கிழக்கு வங்க மக்கள் அவதியுற்ற போது, அதனை யாரும் வங்க மொழி பேசும் மக்களின் பிரச்சினையாக மட்டும் பார்க்க வில்லை. முழு இந்தியர்களின் பிரச்சினையாகவே அது கருதப் பட்டது. ஆனால், தற்போதோ, இலங்கை பிரச்சினை தமிழர்களின் பிரச்சினையாக மட்டுமே நோக்கப் படுகிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. இலங்கையில் வாழும் நம் சகோதரர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, அவர்கள் ஒரு வகையில் (ஆதி) இந்தியர் கூட எனும் முக்கிய கருத்தினை நாம், மத்திய அரசுக்கும், மற்ற மாநில மக்களுக்கும் சரி வர உணர்த்தாமல் போய் விட்டோமோ என்றும் தோன்றுகிறது.


சரி. நாம் இப்போது என்ன செய்வது?


இந்த பிரச்சினை, இந்தியர் அனைவரும் கவனிக்க வேண்டிய பிரச்சினை என்று நாம் அனைவரையும உணர செய்ய வேண்டும். அதற்கு , முதலில் நம் மாநில மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் இந்த பிரச்சினையில் யாருக்கு எவ்வளவு அரசியல் லாபம் என்பதை மட்டும் கவனித்து கொண்டு இருக்காமல், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ அதிக புகழோ பெயரோ கிடைத்தாலும் கூட நம் சகோதரர் இன நன்மைக்காக மற்றவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் மிகவும் நல்லது. முக்கியமாக ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் இந்த விஷயத்தில் இலங்கை தமிழர் நலன் என்ற ஒரே குறிகோளுடன் செயல் பட்டால் உத்தமம்.


மேலும் ஒவ்வொரு அரசியல் தலைவரும், டெல்லி மற்றும் இதர மாநிலங்களுக்கு பயணம் செய்து அங்குள்ள தலைவர்களுடன் இலங்கை தமிழர் படும் பாடு குறித்து தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்து ஒருமித்த கருத்து உருவாக்க முயல வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் இது குறித்த கருத்தரங்குகள் நடத்தலாம். இந்த பிரச்சினைத் தீர்வுக்காக, அகில இந்திய அளவில், அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால் சாலச் சிறந்தது.


இந்தியர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். இந்த பிரச்சினையின் தீவிரம் குறித்து அவர்கள் உணர்ந்து கொண்டு ஓரணியில் திரண்டால் போதும். மறு நிமிடமே , இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறந்து விடும் என உறுதியாக நம்புகிறேன் .

நம்புவோம் நல்லது நடக்குமென்று. அதுவும் விரைவில் நடக்குமென்று.


Limitations live only in our minds. But if we use our imaginations, our possibilities become limitless.

~ Jamie Paolinetti

Monday, October 13, 2008

சேமிக்க கற்றுக் கொள்வோம்!


நம்மில் (இளைஞர்கள்) பலரும் பொருளாதாரத்தின் ஒரு பக்கத்தினை (அதாவது, வளர்ச்சி அல்லது அதி வேக வளர்ச்சி) மட்டுமே இது வரை பார்த்து வந்திருக்கிறோம். இப்போது மறுபக்கமும் (அதாவது தேக்கம் அல்லது வீழ்ச்சி) பார்க்க நேரிடும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.




இது வரை, நாம் வருங்காலம் பற்றிய கவலை மற்றும் தேவை இல்லாத, செலவுகள் (இது வரை வருமானத்திற்கு மிகக் கீழே இருந்தது ) குறைக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு சூழலில் வாழ்ந்து வந்திருககிறோம் .



இப்போதோ, பொருளாதார வீழ்ச்சி (குறைந்த பட்சம் தேக்கம்) நம் கண் முன்னே பயமுறுத்தி கொண்டு இருக்கிறது.



வருமானம் பெருமளவு அதிகரிக்காத அதே சமயத்தில், செலவுகள் நாளுக்கு நாள் மேல் செல்லும் வாய்ப்பு (உபயம் - பண வீக்கம் ) உருவாகி உள்ளது.



இவ்வாறான சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும்?



என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார். நாம் இப்போது நமது பெற்றோரின் வாழ்க்கை முறையிலிருந்து சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.



முதலாவது Contented Life Style. அதாவது, அதிகம் ஆசைப் படாத வாழ்வு நெறி.
இரண்டாவது. A Rupee saved is a Rupee earned. அதாவது, எவ்வளவு குறைந்த வருமானமாக இருந்த போதிலும், அதில் ஒரு குறிப்பட்ட பகுதியை வருங்காலத்திற்காக சேமிப்பது.



இவ்விரண்டு கருத்துக்களை நாம் செவ்வனே பின் பற்றுவோமானால், வருங்காலத்தில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் நம்மால் எதிர் கொள்ள முடியும்.



அதற்கு, நாம் அத்தியாவசிய செலவினங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற செலவினங்கள் என்று இரண்டாக பிரித்து கொள்ள வேண்டும்.



அத்தியாவசியமற்ற செலவினங்களைக் குறைத்து அந்த தொகையை வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.



சேமிப்பதற்கு மேலும் சில எளிய வழி முறைகள் கீழே



கிரெடிட் கார்டு உபயோகத்தினை குறைத்து அதற்கு பதிலாக கூடுமான வரை நோட்டுகள் மூலமாகவே செலவு செய்வது.



மிச்சம் பிடிப்பதாக எண்ணிக் கொண்டு தள்ளுபடி விலையில் தேவை இல்லாத பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது.



கவர்ச்சியான சூப்பர்/ஹைபெர் சந்தைகளுக்கு செல்வதையும் அங்கு உறையிட்ட ரெடிமேட் உணவுப் பொருட்களை வாங்குவதையும் தவிருங்கள்.



தந்தையிடம் எப்படி பொருட்களை வாங்குவது என்பதையும் , தாயிடம் அவற்றை எப்படி சேமிப்பது என்பதையும் கற்றுக் கொள்ளுங்கள்.



போக்குவரத்தினை முன்னரே திட்டமிட்டால் அதிகப்படியான செலவினைக் குறைக்க முடியும்.உதாரணமாக, கூடுமான வரை பொது வாகன போக்குவரத்தை பயன்படுத்துவது, கார் உபயோகத்தை குறைப்பது போன்றவை .



மேலும், பல சுய தேவைகளுக்காக, உடல் உழைப்பைக் கூட்டும் பட்சத்தில் நமது உடலுக்கும் நல்லது, நமது பணப்பைக்கும் கூட நல்லது.



(இப்பதிவினைப் பார்ப்பவர்களும் கூட சில வழி முறைகளைத் தெரிவித்தால் மகிழ்ச்சி. )



வருங்காலத்திற்காக பணத்தை சேமிப்போம் , கவலைகளை அல்ல .



If you know how to spend less than you get, then you have the philosopher’s stone

- Benjamin Franklin

Blog Widget by LinkWithin