Skip to main content

மேலை உலகம் நமக்கு குத்தி வரும் முத்திரை.

இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு இந்தியர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.


உலக அளவில், எழுத்துலகின் மிக உயரிய விருதாக இந்த பரிசு கருதப்படுகிறது. மேலும், இதன் பரிசுத் தொகை, இந்திய எழுத்தாளர்கள் சாதாரணமாக நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெரியது ஆகும்.


இந்தியர் ஒருவருக்கு, இத்தகைய பரிசு கிடைத்திருப்பது மேலோட்டமாக பார்க்கும் போது பெருமையளிக்கக் கூடியதாகவே தோன்றியது.


ஆனால், இந்தியாவின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய எழுத்தாளர்களுக்கு மட்டுமே இது போன்ற விருதுகள் வழங்கப் பட்டு உள்ளன என்பதும், இநத வருடம் பரிசு பெற்ற எழுத்தாளர் கூட மேற்கூறிய வகைக்கு விதி விலக்கானவர் அல்ல என்பதும் அறிந்த பின்னர் வருத்தமே மிஞ்சியது.


பழைய இந்தியா உலக பெரும் நாகரிகங்களில் ஒன்று, எத்தனையோ மகான்கள் அவதரித்த பூமி என்றும் புதிய இந்தியா அதி வேகமாக முன்னேறி வரும் ஒரூ இளைய நாடு, ஜொலிக்கின்ற நாடு (India Shining) என்றும் நாம் காட்டுக் கூச்சலாக கத்தினாலும் கூட, மேலை நாடுகள் நம்மை இன்னும் ஏளனமாகவே நோக்கி வருகின்றன.


அந்த ஏளன நோக்கின் மற்றுமொரு வெளிப்பாடே இது போன்ற புத்தகங்கள் மற்றும் சில திரைப் படங்களுக்கு தொடர்ந்து விருதுகள் வழங்கி வருவது.


மேலும், இது போன்ற விருதுகளினால் அதிக விளம்பரம் பெறும் இநத வகை புத்தகங்கள் (சில சினிமாக்கள் கூட), உலகெங்கும் உள்ள மக்களினால் வாசிக்கப் படும் போது இந்தியாவின் மதிப்பு மேலும் தரம் தாழ்ந்து போகிறது.


இநத நிலைக்கு மேலை நாடுகளை மட்டும் குறை கூறி பயன் இல்லை.


ஐக்கிய நாடுகள் அறிக்கையின் படி, இந்தியாவில் உள்ள பத்தில் நான்கு குழந்தைகளுக்கு தேவையான உணவில்லை.


உலகின் பசி குறித்த அறிக்கையின் படி, உலகில் இந்தியாவிற்கு அறுபத்து ஆறாவது இடம்.


உலகின் பசியால் வாடும் மக்களில் அதிகப்படியானோர் இந்தியாவிலேயே வாழ்கின்றனர்.


உலகின் மொத்த ஏழைகளில், மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலேயே வாழ்கின்றனர்.


மனித வள மேம்பாடு குறித்த அறிக்கையில் கூட, இந்தியா மிக கீழான இடமே பெற்றுள்ளது.


இவை மட்டுமா காரணம்?


இவை மட்டுமல்ல, வேறு பிரச்சினைகளான இனவாதம், மதவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம், கல்வியின்மை ஆகியவை இந்தியாவில் இருந்தாலும், மற்ற முன்னேறி வரும் நாடுகளில் கூட (சீனா கூட விதி விலக்கல்ல) இதே மாதிரி பிரச்சினைகள் உண்டு. ஆனால் சீனா போன்ற நாடுகள் இந்தியா அளவிற்கு ஏளனமாக பார்க்கப் படுவதில்லை.


இதற்கு என்ன காரணம்?


இந்தியாவின் திறந்த வெளி கழிப்பிட நாகரிகமும் சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழல் பராமரிப்புமே மேலை நாடுகளின் ஏளனப் பார்வைக்கு ஒரு முக்கிய காரணம் என்பது என் கருத்து. இநத சூழ்நிலை கிராமப் புறங்களிலும் நகரங்களின் சேரிப் பகுதிகளிலும் மட்டுமே காணப்படுவது அல்ல, இந்தியாவின் நிதி மையமாக கருதப் படும் பந்திரா - குர்லா காம்ப்ளெக்ஸ் (மும்பையின் மையப் பகுதியான இங்கு சென்ற வருடம் இந்தியாவிலேயே அதிக விலைக்கு காலி நிலம் விற்கப் பட்டது) போன்ற பகுதிகள் கூட இநத அவலநிலைக்கு விதி விலக்கல்ல என்பதே மனதை அதிகம் காயப் படுத்துகிறது .



பளபளப்பாக மின்னும் நவீன வகை கட்டிடங்கள், அவற்றை சுற்றி திறந்த வெளி கழிப்பிடங்கள், சுற்றிப் பாயும் மிதி (மும்பையின் கூவம்) போன்ற நதி என்ற புகழுடன் கூடிய ஒரு நிதி மையப் பகுதி (Central Business District) உலகிலேயே இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும்.


இத்தகைய அவல நிலையினைக் கூட காசாக்க எண்ணும் சிலர் சேரிச் சுற்றுலா (Slum Tourism) எனும் பெயரில் மேலை நாட்டு மக்களுக்கு இந்தியாவின் சேரிப் பகுதிகளை படம் போட்டு காட்டுவதும் அந்த பயணிகள் இந்தியா இதுதான் என்று அவர்கள் நாட்டு மக்களுக்கு (வீடியோ கருவிகள் வாயிலாக) அறிமுகம் செய்வதும் இந்தியாவில் மட்டுமே நடக்கக் கூடிய ஒன்றாகும்.


இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?


பணப் பற்றாக்குறை ஏதேனும் காரணமா?


வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொழில் அதிபர்களை கவர்ந்திழுக்க பல ஆயிரம் கோடிகள் முதலீடுகளை செய்யும் அரசினால் சில ஆயிரம் கோடிகள் செலவு செய்து அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்த முடியாதா?


பளபளக்கும் கட்டிடங்களையும் தொழிற்சாலைகளையும் கட்ட ஆயிரக் கணக்கான கோடிகள் செலவு செய்யும் தொழில் அதிபர்களால், அங்கு பணி புரிய வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரப் படும் தொழிலாளர்களுக்கு சில லட்சம் செலவு செய்து நல்ல சுகாதார குடியிருப்பு அமைத்து தர முடியாதா?


தன்வகையிலும் தன் வீடு வரையிலும் சுத்தம் பார்க்கும் நம் போன்ற பொது மக்களால் பொது இடங்களை அசுத்தம் செய்யாமல் இருக்க முடியாதா?


சுகாதார சுற்றுப் புற சூழல் என்பது யாரும் கண்டுக் கொள்ள தேவை அற்ற ஒன்று என்று அரசு முதல் ஆண்டி வரை அனைவரும் மனதில் ஆழமாக பதியம் போட்டுக் கொண்டு விட்டோமோ?


ஆழமாக வேரூன்றிவிட்ட இநத அலட்சியப் போக்கினை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறோம்?


நம் மீது விழுந்து விட்ட ஏளனப் பார்வையை என்றைக்கு நீக்கப் போகிறோம்?


சிந்திப்போம்


மீண்டும் சந்திப்போம்.

Comments

Karthik said…
//அந்த ஏளன நோக்கின் மற்றுமொரு வெளிப்பாடே இது போன்ற புத்தகங்கள் மற்றும் சில திரைப் படங்களுக்கு தொடர்ந்து விருதுகள் வழங்கி வருவது.

நான் அப்படி நினைக்கவில்லை. இவ்வாறு நினைப்பது அந்த எழுத்தாளர்களை குறைத்து மதிப்பிடுவது போல் ஆகாதா?

'The White Tiger' இன்னும் படிக்கவில்லை. The God of Small Thingsல் சொல்லப்பட்டது எல்லாம் உண்மைதானே?
Karthik said…
//பளபளப்பாக மின்னும் நவீன வகை கட்டிடங்கள், அவற்றை சுற்றி திறந்த வெளி கழிப்பிடங்கள், சுற்றிப் பாயும் மிதி (மும்பையின் கூவம்) போன்ற நதி என்ற புகழுடன் கூடிய ஒரு நிதி மையப் பகுதி (Central Business District) உலகிலேயே இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும்.

I agree with you!
Maximum India said…
//நான் அப்படி நினைக்கவில்லை. இவ்வாறு நினைப்பது அந்த எழுத்தாளர்களை குறைத்து மதிப்பிடுவது போல் ஆகாதா?

'The White Tiger' இன்னும் படிக்கவில்லை. The God of Small Thingsல் சொல்லப்பட்டது எல்லாம் உண்மைதானே?//

அன்புள்ள கார்த்திக்,

எழுத்தாளர்களை நான் குறைக் கூறவில்லை. The White Tiger மற்றும் God of Small Things மட்டுமல்ல இவற்றுக்கு முன் பரிசு பெற்ற இந்திய நாவல்களில் (இந்தியாவின் இருண்ட பக்கத்தில் உள்ள) உண்மைகள் சற்று மிகைப் படுத்தி (அல்லது உள்ளது உள்ளபடி) கூறப் பட்டுள்ளன. இந்த எழுத்தாளர்களை விட திறமையானவர்களால் (அல்லது குறைவில்லாதவர்களால்) இந்தியாவின் நல்ல விஷயங்கள் பற்றி எழுதப் படும் போது சிறந்த பரிசுகள் மேலை நாடுகளால் வழங்கப் படுவது மிகவும் அரிது.
அருமையான பதிவு
உங்கள் கருத்துகளுடன் ஒத்து போகிறேன்
Karthik said…
//இந்தியாவின் நல்ல விஷயங்கள் பற்றி எழுதப் படும் போது சிறந்த பரிசுகள் மேலை நாடுகளால் வழங்கப் படுவது மிகவும் அரிது.

இருக்கலாம். ஆனால் நிறைய எழுத்தாளர்கள் அவரவர் நாட்டின் குறைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஓரான் பாமுக் கூட துருக்கியை விமர்சிப்பவர்தான் இல்லையா?

எனக்கென்னவோ விற்க வேண்டும் என்பதற்க்காக 'Superstar India' எழுதும் Shobhaa De விட இந்தியாவின் இருண்ட பக்கத்தை எழுதும் எழுத்தாளர்கள் பராவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.

ஆனால் புக்கர் கமிட்டி எவ்வாறு பரிசு வழங்குகிறது என்பது எனக்கு தெரியாது.
Maximum India said…
//இருக்கலாம். ஆனால் நிறைய எழுத்தாளர்கள் அவரவர் நாட்டின் குறைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஓரான் பாமுக் கூட துருக்கியை விமர்சிப்பவர்தான் இல்லையா?//

anbulla karthik


ஒரு சிறு உதாரணம்

நேற்று பெண்ணீய விடுதலை குறித்த ஒரு நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் ஒரு பகுதியில், நான்கு குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை படும் பாடு குறித்து சிறப்பாக ஓரங்க பணியில் விளக்கப் பட்டது. இதில் எந்த தவறும் இல்லை. சரிதானே?

எனக்கு ஒரே ஒரு குழப்பம் மட்டும் இருந்தது. அதாவது, அந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் ஒரு குழந்தை கலாச்சாரத்தினை பின் பற்றும் (மேல்) நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களே. அந்த நாடகத்தில் குறிப்பிட்டது அனைத்தும் சில பல இடங்களில் நடைபெறும் உண்மையான விஷயமாக இருந்தாலும் கூட, அந்த கருத்துகள் போதிக்கப் பட வேண்டிய இடம் அறியான்மை மிகுந்த சமூகத்தில், அதுவும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய மொழியிலேயே இருக்க வேண்டும்.

கேரளாவிலோ அல்லது வடநாட்டிலோ நடை பெறும் சில பல தவறான நிகழ்வுகளை அந்தந்த மொழிகளில் கூறும் பட்சத்திலேயே, அவர்கள் அந்த தவறுகளை உணர்ந்து சரி செய்துக் கொள்ள முடியும்.

அதை விட்டு, உடல் நலம் சரியில்லாதவனின் உபாதைகளையும் அவனுக்கான மருந்துகளையும் அடுத்த வீட்டுக்காரனிடம் விவரித்து என்ன பயன்? இந்த குழப்பம், ஆங்கிலத்தில் எழுதும் அனைத்து இந்திய எழுத்தாளர்களுக்கும் உண்டு. அறிவியல் போன்ற நுட்பமான கருத்துக்களை ஒருவர் பொது மொழியில் எழுதலாம். ஆனால் தனது சொந்த சமூகத்தின் நலன் குறித்த கருத்துக்கள் அவர்கள் புரிந்து கொள்ள முடிகிற மொழிகளிலேயே இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

நன்றி.
Karthik said…
நீங்கள் சொல்வதும் உண்மைதான்.
:)
Maximum India said…
Thank you for the comments

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...