Friday, October 10, 2008

ஆரிய மாயை - பகுதி 1


சமஸ்க்ருதம் இந்திய மொழிகளின் ஆதி மொழியா?


மொழி குறித்த கருத்தரங்குகளுக்கு (குறிப்பாக வட மாநிலங்களில்) நான் சென்ற போதெல்லாம் பொதுவாக ஒரு கருத்து தெரிவிக்கப் படுகின்றது. அதாவது, சமஸ்க்ருதம் இந்திய மொழிகளின் ஆதி மொழி ஆகும் என்பது.


நான் அது குறித்து விவாதிக்க முற்படும் போது, ஒரு பொதுவான கேள்வி (நீங்கள் தமிழரா அல்லது மதராசைச் சேர்ந்தவரா) மற்றும் ஒரு பொருள் பொதிந்த (இனிமேல் இதைப் பற்றி பேச வேண்டாம்) புன் சிரிப்புடன் அல்லது அதிக பட்சமாக தமிழ் இதில் விதிவிலக்கு என்ற ஒரு கூற்றுடன் விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் படுகிறது.


சமஸ்க்ருதத்தின் மேல் நான் பெரும் மதிப்பு வைத்துள்ளவன். அது ஒரு சிறந்த மொழி மட்டுமல்ல, ஒரு வாழ்வியல் மற்றும் பண்பாட்டுப் பெட்டகம் கூட என்பதிலும் எந்த சந்தேகமும் எனக்கு கிடையாது.


அதைக் கற்றுக் கொள்வது, நம்மை மேலும் செம்மைப் படுத்தும் என்பதிலும் துளியளவும் ஐயமில்லை. ஆனால், அதே சமயத்தில், அதற்கு இணையான தமிழ் போன்ற மொழிகளையும் கூட இந்தியர் அனைவரும் கற்றுக் கொள்வது உயர்வுக்கு வழி வகுக்கும் அல்லவா?


மேலும், சிறந்த மொழி என்ற ஒரு காரணத்தினால் மட்டுமே, அந்த மொழி மற்ற இந்திய மொழிகளின் ஆதி மொழி ஆக முடியுமா?


மற்றும், தமிழனாக இருப்பதினால் மட்டுமே எனக்கு இந்த ஐயம் வர வேண்டுமா ? சிந்திக்க மட்டும் தெரிந்தாலே போதுமே? எவருக்கும் இந்த ஐயம் வருமே?


அம் மொழி இந்திய மொழிகளின் ஆதி மொழியா என்பதில் எனக்கு வெகு காலமாகவே சந்தேகங்கள் இருந்து வருகின்றன. அவற்றை இங்கு தங்கள் முன் வைக்கிறேன்.


ஒரு மொழி மற்றொரு மொழிக்கு தாய் மொழியாக இருக்க முடியுமா?


ஒரு நதியின் கரையில் பேசப் படும் ஒரு மொழி வழக்கிற்கும், மற்றொரு கரையில் பேசப் படும் மொழி வழக்கிற்கும் (ஒரே மொழியாக இருந்தாலும் கூட) வேறுபாடுகள் இருக்கும் என மொழி வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதே சமயத்தில், இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. இந்நாடு முழுக்க ஒரே மொழியால், மற்ற மொழிகளுக்கு தாய் மொழியாக இருக்க முடியுமா?


ஒரு மொழி மற்றொரு மொழிக்கு சகோதர மொழியாகவோ அல்லது கடன் வழங்கும் (அல்லது கடன் வாங்கும்) மொழியாகவோ மட்டுமே இருக்க முடியும் என்பது என் கருத்து. மேலும், பல்வேறு காரணங்களினால் ஏற்படும் பண்பாட்டுக் கலப்பின் போது மட்டுமே, ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் இணைந்து ஒரு புதிய மொழி உருவாக வாய்ப்புகள் உண்டு. ஆனால், ஒரே மொழியால் தனித்து இன்னொரு மொழியை உருவாக்க முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி .


வரலாற்றில், பின் வந்த ஒரு மொழி, ஏற்கனவே இருந்த மொழிகளுக்கு எவ்வாறு தாயாக இருக்க முடியும்?


ஆரியர்கள் இந்தியா வருவதற்கு முன்னரே, சிந்து சமவெளி நாகரிகம் செழித்து வந்திருக்கிறது என்பதும், அங்கு தமிழை ஒத்த (தொல் திராவிட மொழி) ஒரு மொழி, பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் இருந்திருக்கிறது என்பதும், இன்றைக்கும் கூட, பாகிஸ்தானில் பேசப் படும் ப்ரஹுஇ (Brahui) எனும் பழங்குடி மொழி திராவிட குடும்ப மொழிகளில் ஒன்று என்பதும் வரலாற்று வல்லுனர்களின் கருத்து.



ஒரு குழந்தை எப்படி தனது தாய்க்கே தாயாக இருக்க முடியும்?


சமஸ்க்ருதம் ஒரு இந்தோ -ஐரோப்பிய அல்லது இந்தோ - ஆரிய மொழி என்பது பெரும்பாலான சர்வதேச மொழி வல்லுனர்களின் கருத்து. இதன் அர்த்தம் என்ன? இந்த மொழி, இங்கு ஏற்கனவே இருந்த இந்திய மொழிகள் மற்றும் ஐரோப்பிய மொழிகளின் கலவையினால் (இவ்விரண்டு இனங்களின் பண்பாட்டுக் கலப்பினால்) உருவான ஒன்று என்பது போலத்தானே தெரிகிறது.


பேசப் படாத ஒரு மொழியால், எப்படி பேச்சு வழக்கில் இருந்த மற்றும் இருக்கும் மொழிகளுக்கு ஆதியாக இருக்க முடியும்?


சமஸ்க்ருதம் இப்போது மக்களின் பேச்சு வழக்கில் இல்லை. எப்போதாவது பேசப் பட்டதா என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் (புராணங்களை ஆதாரங்களாக ஏற்றுக் கொள்வது கடினம்) எனக்கு தெரிந்த வரை இல்லை. தமிழ் போன்ற மொழிகள் குறைந்த பட்சம் மூவாயிரம் ஆண்டுகளாக மக்களின் வழக்கில் இருப்பவை (ஆதாரம் ரோம அரசர்களுக்கு தமிழக தூதர்கள் கிறிஸ்து பிறபதற்கு முன்னரே தூது கொண்டு சென்றது). கன்னடம் போன்ற மொழிகள் கூட ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பேசப் பட்டு வந்துள்ளன .



சமஸ்க்ருதம் கடவுளின் மொழியாக (தேவ பாஷை) இருக்க முடியுமா?


அப்படி இருக்கும் பட்சத்தில் ஆண்டவனால் எப்படி நம்மைப் போன்ற சாமான்யர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியும்? அல்லது, ஆரியர்கள் வருவதற்கு முன்பு வழிபாடுகளே இங்கு இல்லையா ?



எழுத்து லிபி (script) இல்லாத மொழியால், லிபி உள்ள மொழிகளுக்கு தாயாக முடியுமா?


சிந்து சமவெளி கால மக்களே, எழுத்து வடிவம் அறிந்து இருந்தனர். தமிழ் கல் வெட்டுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமை ஆனவை. வட நாட்டில் பேசப் பட்ட பல மொழிகளும் கூட பிரக்ரிதி போன்றஎழுத்து வடிவம் பெற்று இருந்தன. ஆனால், சமஸ்க்ரிதம், மொழி வல்லுனரால் ஒரு செவி வழி மொழி எனவே கருதப் பட்டு வந்துள்ளது. எழுத்து வடிவம் (இப்போதும் கூட) சுயமாக (தேவநாகரி துணையுடன்) கொண்டிருக்க வில்லை.



மீண்டும் சொல்கிறேன். வட மொழியை நான் வெறுப்பவன் அல்ல. என்னைப் பொருத்த வரை, மொழிகள் தாயைப் போன்றவை. எந்த தாயும் கெட்டவளாக இருக்க முடியாது. அதே போல எந்த தாயையும் எந்த காரணத்தினாலும் யாராலும் எப்போதும் வெறுக்க முடியாது.



அதே சமயம், என்னுடைய சந்தேகமானது, மேற்கூறியவற்றின் அடிப்படையில் நோக்கும் போது, இந்த மொழி தமிழ் மற்றும் இதர திராவிட மொழிகளுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்க பேசப் படும் மற்ற மொழிகளுக்கும் கூட தாயாக இருக்க முடியுமா என்பதே.



என்னுடைய ஆவல், மொழி வல்லுனர்களும் வரலாற்று விற்பன்னர்களும் இணைந்து செயல் பட்டு, இந்த சந்தேகத்தை தமிழர்க்கு மட்டுமல்ல, மொத்த இந்தியர்க்கும் தெளிவு படுத்த வேண்டும் என்பதே.



இந்தப் பதிவைப் பார்க்கும் நண்பர்கள் கூட, இதில் சில விளக்கங்களை தர முடியும் என்றால் மகிழ்ச்சி அடைவேன் .



மேலும், வட நாட்டில் (சில அண்டை மாநிலங்களில் கூட) வாழும் பல நண்பர்களுக்கு, தாம் ஆரியர் என்ற எண்ணம் (மாயை) மேலோங்கி உள்ளது. அதைப் பற்றி மற்றொரு பதிவில் சிந்திப்போம்.



நன்றி.

9 comments:

குடுகுடுப்பை said...

மலையாளிகள் கூட தங்கள் மொழி சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றே சொல்வர்.

Thamizhan said...

அண்மையில் இளைய தலை முறைக்காகப் பதிவு எழுதும் பெரியவர் ஒருவர் ஆங்கிலத்தில் அமெரிக்காவில் வெளி வரும் இந்தியா டிரிபியூன் பத்திரிக்கையில் எழுதியுள்ளார்.

இவ்வளவு உன்னதமான சமஸ்கிருத மொழியை மனிதன் படைத்திருக்க முடியாது,இறைவன் தான் படைத்தான் என்று!
இரண்டு காதுகளிலும் பூ இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு அப்புறம் பேசுங்கள்!

வஜ்ரா said...

//
மேலும், வட நாட்டில் (சில அண்டை மாநிலங்களில் கூட) வாழும் பல நண்பர்களுக்கு, தாம் ஆரியர் என்ற எண்ணம் (மாயை) மேலோங்கி உள்ளது. அதைப் பற்றி மற்றொரு பதிவில் சிந்திப்போம்.
//


உன் தமிழ்நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களே தாங்கள் ஆரியர்கள் என்று கூறிக்கொண்டார்கள்.

நீ எண்ணும் ஆரியம் மாயை தான். அதே போல் நீ எண்ணும் திராவிடமும் ஒரு மிகப்பெரிய மாயை என்பதை என்று நீ உணறுகிறாயோ அன்றே நீ அதன் மேல் காரித்துப்புவாய்.

Maximum India said...

அன்புள்ள வஜ்ரா அவர்களே!

நீங்கள் மிகவும் புத்திசாலி. நான் அடுத்த பதிவில் சொல்ல எண்ணியதை, இப்போதே கண்டு பிடித்து விட்டீர்கள்.

என் தமிழ் நாட்டில் ஆட்சி செய்த, சேர, சோழ, பாண்டியர் மற்றும் பல்லவர் போன்ற
பரம்பரை மன்னர்கள் மட்டுமல்ல, எனது இந்தியாவில் ஆண்ட குப்தர்கள், ஹோயசாளர்கள் , விஜயர்கள் போன்ற பிற பரம்பரை ஆட்சியர் மட்டும் (கூட) அல்ல, குறுகிய காலமே, குறுநில மன்னர்களாக திகழ்ந்த குப்பனும் சுப்பனும் கூட, தான் ஒரு ஆரியன் மற்றும் விஷ்ணுவின் அவதாரம் என்று நம்ப வைக்கப் பட்டனர்.

(//உன் தமிழ்நாட்டை ஆண்ட //

ஒரு சந்தேகம் நான் தமிழகம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவன்தான். நீங்கள் யார்? ஒருவேளை தமிழ் தெரிந்த அன்னியரோ? )

மேலும், நீங்கள் சொன்னது போல, (தென்னிந்தியர் மட்டுமே திராவிடர்கள் என்ற) திராவிடமும் கூட ஆரிய மாயைகளில் ஒன்றுதான். இந்திய மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே. கிரேக்கர், மங்கோலியர், துருக்கியர், ஐரோப்பியர் போல ஆரியரும் ஒரு சிறு கூட்டமாக, இந்தியாவை தாக்க முனைந்து, பின்னர், (இந்தியாவின் தனிப்பட்ட சிறந்த பண்பாட்டினால்) அதனுள்ளே கலந்து போயிருக்கக் கூடும் என்பதே இந்த பதிவரின் சந்தேகம். அது போலவே, ஆரிய மொழிகள் திராவிட மொழிகள் என்ற பிரிவினைகள் கூட ஆரிய மாயைகள் என்பதும் ஒரு கருத்து. அதைப் பற்றி விரிவாக வேறொரு பதிவில் பார்ப்போம்.

ஆக மொத்தத்தில், மேலும் சிந்தனைகளை தூண்ட உதவிய தங்கள் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி.

Unknown said...

பரவாயில்லங்க.... சும்மா சொல்லக் கூடாது வெள்ளக்காரன் மூளைய. வெச்சான் பாருங்க ஒரு வலுவான ஆப்பு. 500 வருஷம் ஆனாலும் அசைக்க முடியாத ஆப்பு. கேனையன் மாதிரி இன்னும் நாம ஆரிய-திரவிட பெருமை பேசி மண்டைய உடைச்சுக் கிட்டு திரியுவோம், அவன் சத்தமில்லாம சமஸ்கிருத, தமிழ் மொழிச் சொற்களையும் தன் மொழிக்குள்ளே சேர்த்து வளர்ந்து போயிக்கிட்டே இருக்கான். அப்புறம் ஒரு நாள், இந்த சொல் எல்லாம் இங்கிலீஷ்ல இருந்து இந்திய மொழிகளுக்கு கடன் கொடுத்து போனா போகுதுனு வளர்த்து விட்டோம் அப்டீம்பான், அதுக்கும் ஆமாம், இல்லை னு அடிச்சுக்கிட்டு திரியுவோம். போயி புள்ளக்குட்டிகள படிக்க வைங்கய்யா. (கான்வென்ட்டுல..!!)

Maximum India said...

திரு.நெற்குப்பை தும்பி அவர்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்த கருத்து.

உங்கள் வலைத்தளத்தில் கூறிய கருத்துகளை படித்தவுடன் எனக்கும் சில கருத்துக்களை சொல்லவேண்டும் எனத் தோன்றியது . ஆனால் vajra கருத்துகளையும் உங்கள் பதிலையும் படித்தவுடன் நாம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருக்கிறோமா அல்லது 19-இல் இருக்கிறோமா எனச் சந்தேதம் வந்து விட்டது .

வடமொழி திராவிட மொழிகளுக்கும் தாய் என யாரோ கூறியது போலவும் அதை மறுக்க வேண்டும் என்ற உத்வேகத்துடனும் தங்கள் கருத்துக்களை பதித்து இருக்கிறீர்கள்.,

ஒரு சில நூற்றாண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகு கால்ட்வெல் ஒப்பிலக்கணம் முதலிய நூல்களில் தெபோமீ போன்ற பன்மொழி வல்லுனர்கள் . ஒப்புக்கொண்ட கருத்துகளை அறிந்தவர்கள் இப்படி வினாக்களை எழுப்பமாட்டார்கள் என நம்புகிறேன். அதன் சாராம்சம்: வடமொழியும் திராவிடமும் இரு தனிதனி மொழிக்குழுக்கள். வடமொழியை தழுவி இந்தி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, சிங்களம் முதலிய மொழிகள் தோன்றின; அதே போல் தெலுங்கு, கன்னடம் மலையாளம், துளு, கொங்கணி போன்ற மொழிகள் திராவிட இனத்தை சேர்ந்தவை. வார்த்தை மற்றும் வாக்கிய அமைப்பு மொழிக்கூட்டத்தின்
தனித்தன்மையை காட்டும்; சில ஒலிகள் வட மொழியிலிருந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் முதலிய மொழிகள் எடுத்துக்கொண்டிருந்தாலும் (க ச ட த ப முதலிய ஒலிகளின் வேறுபாடுகள்) அவை திராவிட மொழிகளே. வடமொழியில் இருந்து சொற்களை நிறைய கடன் வாங்கி இயல்பாக வழக்கிலோ அல்லது தமிழில் இருந்து மாறுபட்டவை என காட்டிக்கொள்ள முயன்று இருந்தாலும் திராவிட அடிப்படை ஓங்கி நிற்கிறது.

பலப்பல எடுத்துக்காட்டுகள் இருந்தாலும் இரண்டு இதோ:
அ) திராவிட மொழிகளிலே வினாக்கள் எ யில் இருந்து தொடங்கும்:
என்ன, ஏமி, ஏனு எந்தா;

ஆ) மேலும், எண்கள் எல்லாமே 21, 31, 41 என்பவை திராவிட மொழிகளில் இருபத்தி ஒன்னு , முப்பத்தி ஒண்ணு , நாற்பத்தி ஒண்ணு என்று வரும்; ஆனால், வடமொழி சார்ந்த மொழிகளில் எல்லாம், ஒன்று இருபதுக்கு மேல், ஒன்று முப்பதுக்கு மேல், ஒன்று நாற்பதுக்கு மேல் (ikbees, ikthees, ikchaalees), என்று தான் வரும் ,

மேலும் வட இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மற்றும் தென் இந்தியர்களில் தமிழர்கள் அல்லாத சாமான்யர்கள் மொழிகளின் வேர் குறித்து எண்ணியே இருக்கமாட்டார்கள்; அவர்களுக்கு தென் இந்திய மொழிகளிலே நான்கு ஐந்து மொழிகள் இருப்பதே சரியாக தெரியாது; மேலும் , தெலுங்கர், கன்னடர்கள் இவ்விஷயம் தெரிந்ததே இருந்தாலும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் மனப்பாங்கு இல்லாதவர்களாக இருப்பார்கள். எனவே, இது குறித்து பேசி அல்லது எழுதி நேரத்தை செலவழிப்பது வீண் என்பதே என் கருத்து. ஆனால், தமிழர்களும் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளை இளப்பமாக கருதிப் பேசுவார்களே தவிர, அவையும் சகோதர மொழிகளே என்ற மனப்பாங்கு இல்லாதவர்களாக இருப்பது நம் துரதிர்ஷ்டம் (வடமொழி சொல்லுக்கு மன்னிக்க ). தமிழ் தமிழ் என்று பேசும் நம்மைப்போன்ற பழையவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்; இப்போது, மொழி என்பது ஒரு மீடியம் (ஊடகம்) மட்டும் தானே தவிர அதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது எனவே பலரும் கருதுகிறார்கள். எனவே தங்கள் தங்களின் வெப்சைட்-ல் இதை விடவும் மேன்மையான விஷயங்களை எடுத்துக்கொண்டு விவாதம் செய்யவேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.

Maximum India said...

நெற்குப்பை தும்பி அவர்களே

தங்கள் கருத்துக்கும் அக்கறைக்கும் நன்றி

//ஆ) மேலும், எண்கள் எல்லாமே 21, 31, 41 என்பவை திராவிட மொழிகளில் இருபத்தி ஒன்னு , முப்பத்தி ஒண்ணு , நாற்பத்தி ஒண்ணு என்று வரும்; ஆனால், வடமொழி சார்ந்த மொழிகளில் எல்லாம், ஒன்று இருபதுக்கு மேல், ஒன்று முப்பதுக்கு மேல், ஒன்று நாற்பதுக்கு மேல் (ikbees, ikthees, ikchaalees), என்று தான் வரும்//


மேலும் முற்றிலும் புதிய தகவல்களைத் தந்ததற்கும் நன்றி.

கபீஷ் said...

//மொழி என்பது ஒரு மீடியம் (ஊடகம்) மட்டும் தானே தவிர அதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது எனவே பலரும் கருதுகிறார்கள். எனவே தங்கள் தங்களின் blog l இதை விடவும் மேன்மையான விஷயங்களை எடுத்துக்கொண்டு விவாதம் செய்யவேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.//

I second this

Maximum India said...

Dear Kabeesh

I don't second that. I have different views on the language. I will tell them later.

Blog Widget by LinkWithin