Tuesday, October 7, 2008

அணு ஒப்பந்தத்தினால் இந்தியாவிற்கு?


அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை எதிர்த்து, எதிர் கட்சியினராலும், சில பத்திரிக்கைகளினாலும் சில வாதங்கள் முன் வைக்கப் படுகின்றன.

அவையாவன:

1. ஒப்பந்தத்தினால் இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு.
2. அமெரிக்கா ஒரு மேலாதிக்க நாடு. அதனுடன் உறவு கூடாது.
3. இனிமேல் நம் நாட்டால் அணு குண்டு சோதனை செய்ய முடியாது.
4. அமெரிக்கா நிர்பந்தத்தினாலேயே, ஈரான் எரிவாயுத் திட்டம் தள்ளி போகிறது.
5. அணுத் தாது தொடர்ந்து பெறுவதில் சிக்கல் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் NSG ஒப்புதல் பெற வேண்டியிருக்கும். மேலும் அமெரிக்கா ஜனாதிபதி, இந்திய உற்பத்தி தேவைக்கு அதிகமாக அணுத் தாது கொண்டிருக்க வில்லை என்ற உத்திரவாதம் அளிக்க வேண்டி இருக்கும்.
6. அணு சக்தி உற்பத்தி செலவுகள் மற்ற முறைகளை விட அதிகம்.
7. மாற்று அணுத் தாதுவான தோரியம் நம் வசம் அதிகம் உண்டு.

மேலோட்டமாக நோக்கும் போது, இந்த வாதங்களில், ஓரளவு நியாயம் இருப்பதாக தோன்றியதினால், இது குறித்து, சில ஆய்வுகளை, மேற்கொண்டேன்.

அந்த ஆராய்ச்சியில் விளைந்த (எனது தனிப் பட்ட) கருத்துகளை, தங்கள் சிந்தனைக்கு இங்கு முன் வைக்கிறேன்.

1. ஒப்பந்தத்தினால் இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு

இவ்வாதத்தின் மீது என் கருத்து. இந்த ஒப்பந்தம், ஒரு சிவில் ஒப்பந்தம் மட்டுமே. நமது இறையாண்மையை பாதிக்க, இது ஒன்றும், ராணுவ ஒப்பந்தமோ அல்லது ராஜ ரீதியான ஒப்பந்தமோ (Strategic Alliance) அல்ல. மற்றும், சர்வ தேச சோதனைக்கு உட்படுத்த படுவது , ராணுவ அணு ஆலைகள் அல்ல. சிவில் ரீதியான தற்போதைய மற்றும் வருங்கால அணு ஆலைகள் மட்டுமே.

மேலும், இத்துறையில் வருங்காலத்தில் ஈடுபடப் போவது, சில பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுமே.

2. அமெரிக்கா ஒரு மேலாதிக்க நாடு. அதனுடன் உறவு கூடாது.

இவ்வாதத்தின் மீது என் கருத்து.

அமெரிக்காவைப் பொறுத்த வரை, தென் அமெரிக்க மற்றும் அரேபியா நாடுகள் விஷயத்தில் சுரண்டல் நாடாக செயல் பட்டிருப்பது, ஓரளவிற்கு உண்மைதான் என்ற போதிலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின் அதனுடன் நல் உறவு கொண்ட நாடுகள் மிக்க வளர்ச்சி அடைந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. உதாரணம்: ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் (முன்னாள்) மேற்கு ஜெர்மனி.

பாகிஸ்தான் ஒரு விதி விலக்கு, அதன் வீழ்ச்சிக்குக் காரணம், அதன் தீவிர வாத உறவுதானே தவிர அமெரிக்க உறவு அல்ல.

இந்த வகையில், நாம் சீனாவை முன் உதாரணமாக கொள்வது நல்லது. அதாவது, (தனக்கு) தேவைப் படும் போது மட்டும் (அமெரிக்க) உறவு. இல்லாவிடில், தன் வழி தனி வழி.

மற்றும், இப்போதைய பொருளாதார சூழ் நிலையில், அமெரிக்காவினால், முன் போல "பெரியண்ணா" மனப் பான்மையில் நடந்து கொள்ள முடியாது. இந்த ஒப்பந்த விஷயம் கூட, நம்மை விட அமெரிக்காவிற்கே அதிக அவசியம். இது, இந்திய தலைவர்களுக்கு நன்கு புரிந்துள்ள காரணத்தினால்தான், ஒப்பந்தத்தில் கையெழுத்து இட இந்தியா வந்த அமெரிக்க செயலர் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பப் பட்டார். மேலும், இந்த ஒப்பந்த அடிப்படையில் இந்தியா முதலில் பெற போகும் அணு உலைகள் பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்துதான் என்பதும் குறிப்பிட தகுந்தது.

3. இனிமேல் அணுகுண்டு சோதனை நடத்த முடியாது.

இவ்வாதத்தின் மீது என் கருத்து.

கண்டிப்பாக, சோதனை நடத்த வேண்டும் என்ற பட்சத்தில், எந்த ஒரு சிவில் ஒப்பந்தமும் குறுக்கே வர முடியாது. அதே சமயத்தில், இன்னுமொரு சோதனை அவசியம்தானா என்ற கேள்வியும் எழுகிறது. சொல்லப் போனால், பொக்ரான் 2 சோதனையின் பலனே கேள்விக்கு உரியது ஆகும். அதனால் ஏற்பட்ட மிகப் பெரிய பலன், பாகிஸ்தானும் சோதனை செய்து (அதுவும் நம்மை விட ஒன்று அதிகம்) தானும் ஒரு அணு வல்லரசு என்று காட்டிக் கொண்டதுதான்.

தற்போதைய தொழிற் நுட்பத்தைக் கொண்டு, இனி வருங்காலங்களில் கணினி உதவியுடனே (Simulation) அணு குண்டு சோதனை நடத்த முடியும். இதற்கு, பிரான்ஸ் போன்ற நாடுகளின் உதவி கோர முடியும்.

4. அமெரிக்கா நிர்பந்தத்தினாலேயே, ஈரான் எரிவாயுத் திட்டம் தள்ளி போகிறது.

இவ்வாதத்தின் மீது என் கருத்து.

ஈரான் உறவை நாம் நெடுங்காலமாகப் பேணி வந்தாலும் கூட, O.I.C. போன்ற அமைப்புகளில், அந்நாடு, நமக்கு நேர் எதிரான (பாகிஸ்தானுக்கு ஆதரவான) நிலையைக் கொண்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.


மேலும், எரிவாயுத் திட்டம் பாதிக்கப் பட்டிருப்பதிற்கு (வெளிப்படையான) காரணம், அந்நாடு, எரிவாயுவிற்கு, அதிக விலை (பழைய ஒப்பந்தத்தில் உள்ளதை விட) கோரியதும், தீவிர வாத அச்சுறுத்தல்களுமே (பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்).

5. அணு தாது பெறுதல் ஒவ்வொரு ஆண்டிலும் புதிப்பிக்கப் பட வேண்டும். பல ஆயிரம் கோடி முதலீட்டிற்கு பின் அணு தாது பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால் என்ன செய்வது?

இவ்வாதத்தின் மீது என் கருத்து.

வெளிப் பார்வைக்கு, இது சிக்கலான ஒன்றாக கருதப் பட்டாலும், ஒது ஒரு நடை முறை சாத்தியமே. ஏனெனில், ஏற்கனவே, குறிப்பிட்டது போல, இத்துறையில் ஈடுபடப் போவது, பெரும்பாலும் தனியார் துறையினரே. அவர்களால், இவ்விஷயத்தில் திறம் பட செயல் பட முடியும். மேலும், உலகமே, பொருளாதார தேக்கத்தில் சிக்கி திணறும் போது இந்தியா மட்டுமே, மின்சக்தியின் ஒரு மிகப் பெரிய சந்தையாக இருக்க முடியும். எனவே, தொடர்ந்து, விற்பனை செய்வது, அணு தாது வழங்குபவர்களுக்கும் வியாபார ரீதியான லாபமாக இருக்கும்.


6. அணு மின்சாரத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இவ்வாதத்தின் மீது என் கருத்து.

மற்ற மின்சாரம் தயாரிக்கும் முறைகளைக் காட்டிலும், அணு மின்சார தயாரிப்பு, விலை அதிகமானதே.

அதே சமயத்தில், அணு மின்சாரம் அனல், நீர் மற்றும் காற்று மின்சாரத்திற்கு முழு மாற்றாக இங்கு கொண்டு வரப் பட வில்லை..சக்தி பையில் (Energy Portfolio) அணு மின்சாரம் ஒரு சிறு அங்கமாக மட்டுமே அறிமுகம் பெறுகிறது. அதே சமயத்தில், அணு சக்தி என்பது மரபு வழி எரிபொருட்கள் மீதான சார்பைக் குறைத்து எரி ஆதார தேவையில் தன்னிறைவு ஏற்பட வழி வகுக்கிறது. .

(Nuclear Energy is not an alternative to other conventional energy sources. However, it forms an important part of Energy Mix to moderate the energy risk and reduce the dependence on the already scarce other sources)

7. தோரியம் நம்மிடம் பெருமளவிற்கு உண்டு. எதற்காக யுரேனியம்?

இவ்வாதத்தின் மீது என் கருத்து.

உண்மை. ஆனால், தோரியத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் சுழற்சி முறையில் (thorium cycle), செலவு அதிகம். அதற்கான, தொழிற்நுட்பம் பெற, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவி மிகவும் அவசியம். வருங்காலத்தில், தோரிய சுழற்சி முறையில் மின்சாரம் பெறும் தொழிற் நுட்பத்தையும் கூட அமெரிக்காவிடம் இருந்து பெற இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும்.

இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று.

பாகிஸ்தான் இது போலவே, தனக்கும் ஒரு ஒப்பந்தம் வேண்டுமென்று அடம் பிடிப்பதிலிருந்தும், அதற்கு சீனா ஆதரவு அளிப்பதிலிருந்தும், ஒரு விஷயம் தெளிவாகிறது.

அதாவது, NPT போன்ற கடுமையான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமலேயே, அணு சக்தி பெறக் கூடிய இத்தகைய அணு ஒப்பந்தம் ஒரு நாட்டிற்க்கு ஆதாயம் அளிக்கக் கூடியதே.

இதனை, அரசியல் காரணம் கொண்டு எதிர்ப்பவர்களுக்கு ஒரு கோரிக்கை. இந்திய வளர்ச்சிக்கு, மிகப் பெரிய தடைக் கல்லாக இருப்பது, மின்சாரத் தட்டுப்பாடு.

எத்தனை நாட்களுக்கு, நாம் 5 மணி நேர மின் வெட்டுக்களைப் பொறுத்துக் கொள்வது (நம் மாநிலம் பரவாயில்லை. சில மாநிலங்களில் மின்சாரம் கிடைப்பதே சில மணி நேரங்கள் மட்டுமே).

மின்சார தட்டுப் பாட்டைக் குறைக்க அணு ஒப்பந்தம் ஓரளவிற்கு உதவி செய்யும்.

எனவே, அணு ஒப்பந்தத்தை வரவேற்போம்!

மேலும், இது போல பல வகையிலும், சக்தி ஆதாரம் தேடி தன்னிறைவு பெற முயற்சி செய்வோம்!

2 comments:

வால்பையன் said...

அருமையான அலசல்,
நல்லது நடந்தால் சந்தோசமே

Mathavan said...

நல்லா இருக்கு உங்கள் கருத்து.

உங்கள் உழைப்பு தெரிகிறது உங்கள் எழுத்தில்..

நன்றி அன்புடன் அருண் மாதவன்.

Blog Widget by LinkWithin