சிறிது காலத்திற்கு முன்பு, நான் என் குடும்பத்துடன் காரில் ஒரு விரைவு நெடுஞ்சாலையில் (Express Highway) சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே மிக அதிக வேகத்தில் (சுமார் 110-120 கி.மீ.) சென்ற பொழுது, ஒரு கனரக வாகனம் தடம் (lane) மாறி திடீரென குறுக்கே வந்து விட்டது. ஒரு பெரும் விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியது தம்பிரான் புண்ணியம்.
இது நடந்து சில காலத்திற்கு பின், என் நண்பர் ஒரு தேசிய நெடுஞ்சாலையில், காரில் மிக வேகமாக சென்ற போது, சாலைப் பணிக்காக குறுக்கே வைக்கப் பட்டிருந்த ஒரு தடுப்பில் (கவனக் குறைவினால்) மோதி தனது குடும்பத்துடன் உயிரிழந்தார்.
சீரான, நேரான சாலைகள், லேசாக அழுத்தினால் பறக்கக் கூடிய நவீன வகை கார்கள் நமது மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி மிக அதிக வேகத்தில் செல்ல உந்துகின்றன. முதலில் சாலையில் கவனமாக இருந்தாலும், தொடர்ந்து சில நேரம் அதிக வேகத்தில் செல்லும் போது, அயர்ச்சினாலும் அதீத தன்னம்பிக்கையினாலும், கவனக் குறைவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது. அப்போது, சாலையில் திடீரென ஏற்படும் சில எதிர்பாராத குறுக்கீடுகளால் பெரும் விபத்து நேரிட்டு விடுகிறது.
இந்த நிலை சாலைப் பயணத்திற்கு மட்டுமல்ல, ஒரு வகையில் வாழ்க்கைப் பயணத்திற்கும் பொருந்தும்.
கல்வி மற்றும் பணிகளில் பெரும் வெற்றிகள், அதிக வருமானம், பாராட்டு புகழுரைகள் இளம் வயதிலேயே கிட்டும் போது ஒரு வித மனக் கிளர்ச்சி ஏற்படுகிறது. அதனால் உருவாகும் அதீத தன்னம்பிக்கை வாழ்கையில் சற்று அதிகப்படியான வேகத்தில் செல்ல உந்துகிறது.
விளைவு, அதிக அனுபவம் இல்லாத துறையில் அகலக் கால் பதித்தல், தனது அபாயம் தாங்கும் திறனை மீறிய அளவுக்கு தொழில் (பங்கு மற்றும் மனை வியாபாரம்) முதலீடுகள், வருமானத்திற்கு மீறிய செலவினங்கள் மற்றும் திரும்ப கட்ட முடியுமா என்று உறுதியாக சொல்ல முடியாத அளவிற்கு கடன் வாங்குதல்.
முன்னமே சொன்ன படி, அதிகப்படியான வேகத்தில் சற்று அதிக நேரம் தொடர்ந்து பயணித்தால் கவனக் குறைவு மற்றும் அயர்ச்சி ஏற்படுகிறது. ஏதேனும் சிறு குறுக்கீடு ஏற்பட்டாலும் வாழ்கை (வண்டி) நொறுங்கி போய் விடுகிறது. சமீபத்தில், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நிகழ்ந்த சில தற்கொலைகளுக்கு (அதுவும் குடும்பத்துடன்) இதுவே காரணமாக இருக்கக் கூடும்.
நீங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் செல்லுகிறீர்களா? சுய பரிசோதனை செய்து கொள்ள சில கேள்விகள் .
உடற்பயிற்சி/நடைபயிற்சி/மனப்பயிற்சி செய்ய நேரமில்லையா?
செய்தித்தாள்களைப் பார்க்க நேரமில்லையா?
ருசி தெரியாமல் உணவு உண்கிறீர்களா?
அலுவலத்தில் அல்லது வெளியில் நண்பர்களோடு பேசி சில நிமிடங்கள் சிரிக்க முடிய வில்லையா?
உங்களுக்கு பிடித்த விஷயம் செய்ய நேரமில்லையா?
உங்கள் குடும்பத்துடன் குறிப்பாக உங்கள் குழந்தையுடன் சிறிது நேரம் செலவிட முடிய வில்லையா?
அவர்களை வெளியே அழைத்து செல்ல நேரமில்லையா?
உறவினர் நண்பர்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரமில்லையா?
இந்த கேள்விகளில், பெரும்பாலானவற்றிக்கு உங்கள் பதில் ஆமாம் என்று இருந்தால் நீங்கள் கவனிக்கப் படவேண்டியவர். உங்கள் வேகத்தினை உடனடியாக சுய கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவது நல்லது.
பெற்றோரின் வழிநடத்துதலில் இருந்து வெளியே வந்து சில காலமே ஆகி இருக்கும் நம் போன்ற இளையவர்கள் ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும். வேகம் நமது கட்டுக்குள் இருக்கும் போது மட்டுமே வாழ்க்கைப் பயணம் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதுடன் நிறைவாகவும் இருக்கும்.
சிந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment