Thursday, October 30, 2008

மனக் கணக்கியல்


பொதுவாக நிறுவனங்களும் அரசாங்கமும் தமது வரவு செலவு கணக்குகளை வகைப் படுத்துவதற்காக சில கணக்கியல் கொள்கைகளை (Accounting Policies) பின்பற்றி வருகின்றன. இதைப் போலவே, மனித மனம் கூட ஒவ்வொரு வரவு செலவினையும் சில பிரிவுகளாக பிரித்து வகைப்படுத்தி வருகிறது. புற உலகில் உள்ள பணத்திற்கான உண்மையான மதிப்பிற்கும் (Actual Value) மனதில் அதே அளவில் உள்ள பணத்திற்கான புரிந்துணரும் மதிப்பிற்கும் (Perceived Value) பெரும் வேறுபாடு உள்ளது.

உதாரணமாக, சராசரி வருமானம் உள்ள ஒருவர் சுமார் 1000 ரூபாய் செலவு செய்து, ஒரு இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குகிறார். அந்த நிகழ்ச்சிக்கு போகும் வழியில் டிக்கெட் தவறி விடும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை 1000 ரூபாய் செலவு செய்து புதிய டிக்கெட் வாங்க தயங்குவார். அதே சமயத்தில், அவரே முதன் முறையாக டிக்கெட் வாங்க செல்லும் போது, கைப்பையில் உள்ள பணத்தில் 1000 ரூபாய் தவற விட்டிருந்தாலும் கூட டிக்கெட்டுகளை வாங்குவார் என மனவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், இரண்டு முறையிலும் இழந்த பணத்தின் உண்மையான (புற) மதிப்பு ஒன்றுதான் (ரூ.1000/-) என்றாலும் ஒவ்வொரு வகையிலும், இழந்த பணத்திற்கு மனம் கொடுக்கும் மதிப்பு வேறு.

இத்தகைய மன கணக்கியல் பற்றிய சிறு அறிமுகமும் அதனை புரிந்து கொள்வதினால் உள்ள சில பயன்கள் பற்றியும் இங்கு விவாதிப்போம்.

சம்பள வருமானமும் இதர வருமானமும்

பொதுவாக மனித மனம், சம்பளப் பணத்தினை உழைப்பின் ஊதியமாக கருதுகிறது. எனவே அந்த பணத்திற்கு எப்போதுமே சற்று அதிக மரியாதைதான் (Sacred Money). அதே சமயத்தில், உழைப்பின்றி (சில சமயங்களில் எதிர்பாராமல்) வந்த பணத்திற்கு (உதாரணமாக அன்பளிப்புகள், மூதாதையர் சொத்து முதலியவை) சற்று மரியாதை குறைவுதான். இது போன்ற சமயங்களில் பணம் வந்த வேகத்திலேயே காணாமல் போகிறது. அதிலும் சிறிய வகையிலான வரவுகள் அதி விரைவாகவே செலவு செய்யப்படுகின்றன.

மூதாதையர் சொத்து விஷயத்தில் கூட சில வேறுபாடான கொள்கைகளை மனம் வைத்திருக்கிறது. அதாவது, சொத்தினைக் கொடுப்பவர், மிகவும் சிரமப்பட்டு சொத்து சேர்த்திருந்தால் அந்த பணத்திற்கு அதிக மரியாதை. அல்லது ஒரு செலவாளியிடம் இருந்து சொத்துப் பணம் வந்திருந்தால் அதற்கு வேறு வித மரியாதை.

வரவுக் கொள்கைகளைப் பார்த்தோம். இப்போது செலவுக் கொள்கைகள்.

ஒரு மிகப் பெரிய செலவு செய்யும் போது (கார் அல்லது வீடு) அதிகப்படியான துணைச் செலவுகளைச் செய்ய மனம் தயங்குவதில்லை. உதாரணமாக, காருக்கு அதிக செலவினாலான சீட் கவர் அல்லது வீட்டில் மேலை நாகரிக குளியலறை அமைப்பது போன்றவை. அதே அளவிலான செலவு சாதாரண நேரங்களில் செய்ய மனம் தயங்கும்.

மேலும், பெரிய செலவினங்களில் (பிரிட்ஜ் வாஷிங் மிஷன் போன்றவை) சிக்கனம் செய்ய பல கடைகள் ஏறி இறங்கும் மக்கள் பல முறை செய்யும் சிறிய செலவுகளில் (மாதந்திர செலவினங்கள்) சிக்கனம் பிடிக்க முயற்சி செய்வதில்லை.

மேலும் ரொக்கமாக (cash) செலவு செய்யும் போது ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க எண்ணும் மனம் கடன் அட்டைகளை (credit card) அதே வகையான செலவுகளுக்காக உபயோகிக்கும் போது அவ்வளவு சிந்திப்பதில்லை.

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல்

இல்லாகித் தோன்றக் கெடும்


எனும் குறளுக்கு ஏற்ப எவ்வளவு வருமானம் இருந்தாலும் சிறந்த நிதி திட்டம் இல்லாவிடில் காலப் போக்கில் ஒருவர் சிரமப் பட வேண்டியிருக்கும். எனவே, மன கணக்கியலைப் புரிந்து கொள்வதும் மனதிற்கு சில பயிற்சிகள் அளிப்பதும் நல்லது.

முதலில் வரவு கணக்கியல்.

எத்தகைய வருவாயாக இருந்தாலும் அவற்றை ஈட்டிய பணமாகவே கொள்வது நல்லது. There is no free Money. அதே போல, எதிர்பாராமல் வந்த பணத்தினை என்ன செய்வது என்று உடனே முடிவெடுக்காமல், அந்த பணத்தினை குறுகிய கால வைப்பு தொகையாக வங்கியில் இடுவது நல்லது. சிறிது கால யோசனைக்கு பின்னர் அந்த பணத்தினை என்ன செய்வது என முடிவெடுக்கலாம்.

இப்போது செலவு கணக்கியல்

பெரிய செலவுகளின் உடன் வரும் அதே சமயத்தில் உடனடி அவசியமில்லாத சில ஆடம்பர செலவுகளை தள்ளிப் போடுவது நல்லது. மேலும் கடன் அட்டையினை மிக கவனமாக உபயோகப் படுத்துவதும் அதனை ஒரு கடன் பெறும் சாதனமாக பயன் படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது.

நன்றி.

6 comments:

கார்த்திக் said...

பயனுள்ள பதிவு.
பட்ஜட் போட்டு செலவு செய்வோருக்காக.
Budget Planner

Maximum India said...

nandri karthik.

குமரன் (Kumaran) said...

மிக அருமையாகச் சொன்னீர்கள். அருமை.

Maximum India said...

nandri kumaran

வடுவூர் குமார் said...

நல்ல அலசல்.
வீடு வாங்கும் போது தவிர கடன் வாங்குவதில்லை என்று வைத்துக்கொள்ளலாம்.இது அவரவர் அவசியத் தேவையை பொருத்தது.

Maximum India said...

நல்ல கருத்து. நன்றி குமார்.

Blog Widget by LinkWithin