சொற்பொருளியலின் (Semantics) படி, ஒரு மொழியில் உள்ள சொற்கள், காலப் போக்கில், பல்வேறு காரணங்களினால், தமது வேர் பொருட்களை இழந்து, புதிய பொருட்களை பெறுகின்றன.
உதாரணமாக, ஒரு காலத்தில் உலோகங்களை பொதுவாக குறித்த பொன் என்ற சொல் தற்போது தங்கம் என்ற அர்த்தத்தில் வழங்கப் படுகிறது.
நாற்றம் என்ற சொல் மணம் என்ற தனது வேர் பொருளை இழந்து துர்மணம் என்ற புதிய பொருளைப் பெற்றுள்ளது.
இதே போல, கழகம், காமம், கோயில் போன்ற பல சொற்கள் காலப் போக்கில் வேர் பொருளை இழந்து புதிய பொருளிலேயே உணரப் படுகின்றன.
எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம். மதச் சார்பின்மை எனும் சொல் கூட இதே போல தனது வேர் பொருளை காலப் போக்கில் இழந்து, இன்றைக்கு வேறு அர்த்தத்தில் வழங்கப் படுகின்றதோ என்று.
இந்திய அரசியல் சட்டப் படி, இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு.
இதன் அடிப்படையில், அரசியல் சட்ட வல்லுனர்கள் மதச் சார்பின்மைக்கு சில விளக்கங்கள் அளிக்கிறார்கள்.
அதாவது, மதச் சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாகக் கருதுவது. மதத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் காணாமல் இருப்பது.
ஆனால், தற்போது மதச் சார்பின்மைக்கு நடைமுறை விளக்கம் என்ன?
இங்கே கொஞ்சம் அலசலாம்.
இன்றைய மதச் சார்பின்மை என்பது.
ஒரு குறிப்பிட்ட மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளையும் பழமை வாதத்தினையும் சாடுவது.
மற்ற மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகளையும் பழமை வாதத்தினையும் கண்டு கொள்ளாமல் இருப்பது. முடிந்தால் ஆதரிப்பது. இன்னும் கூட முடிந்தால், இந்த விஷயங்களில் நீதி மன்றங்கள் தலையிடக் கூடாதென்று சட்டம் இயற்றச் சொல்வது.
ஒரு குறிப்பிட்ட மதத்தின் விழாக்களையும் கடவுளர்களையும் இழிவு படுத்துவது.
மற்ற மதங்களின் விழாக்களில் கலந்துக் கொள்வது. முடிந்தால், அவர்களின் இறையாளர்களைப் பற்றி புகழ்ந்து பேசுவது.
ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளர்களை பற்றி இழிவாக எழுதுபவர்களையும் படம் வரைபவர்களையும் கண்டித்தால் மதவாதம் என்பது. .
மற்ற மதங்களின் இறையாளர்களைப் பற்றி சாதாரணமாகக் கூட பேசவோ படம் வரையவோ கூடாதென்று மிரட்டினால் கண்டுக் கொள்ளாமல் இருப்பது.
ஒரு குறிப்பிட்ட மதத்தின் பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சியினை மதவாதக் கட்சி என்பது. அந்த கட்சி ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக மற்ற மதங்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது.
இன்னும் கூட ஒரு வேடிக்கையான விஷயம்.
மதச் சார்பற்றவர் என்று தம்மை சொல்லிக் கொள்பவர்கள் கூட (சில சமயங்களில் நாத்திகர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட) ஒரு விஷயத்தில் மதத்தினை சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட மதத்தினைப் பற்றி தவறாக பேசுவதற்கு அதே மதத்தினை சேர்ந்தவராகப் பிறந்திருப்பது ஒரு கேடயமாக உபயோகப் படுகிறது. ஏனெனில், வேறு மதத்தினராகப் பிறந்து இருந்தாலோ அல்லது பின்னர், வேறு மதத்திற்கு மாறி இருந்தாலோ, அந்த குறிப்பிட்ட மதத்தினைப் பற்றி எந்த உரிமையில் தவறாகப் பேச முடியும்?
ஒரு வேளை, ஒருவர் தனது சொந்த மதம் என்ற உரிமையின் பேரிலோ அல்லது சொந்த மதத்தினர் மீது உள்ள அக்கறையினாலோ, அதிலுள்ள தவறுகளை களைய எண்ணி இருந்தால் , அவர் ஒரு மதச் சீர்திருத்த வாதி ஆகி விடுவாரே அன்றி மதச் சார்பற்றவாதி ஆக முடியுமா ?
இந்த நிலையில், உண்மையான மதச் சார்பின்மை என்பது என்னவாக இருக்க முடியும்?
மதம் என்பது ஒருவரின் தனிப் பட்ட விஷயம்.
தனிப் பட்ட உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
மதம் என்பது அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம்.
இந்தியர் அனைவரும் மதிக்க வேண்டியது இந்நாட்டின் அரசியல் சட்டம்.
அனைத்து மதத்தினைச் சேர்ந்தவரும் அரசியல் சட்டத்தின் முன் சமம்.
யாரையும் மதத்தின் பேரில் பிரித்துப் பார்க்க கூடாது.
மதக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் பொது நலனுக்கும் நாட்டிற்கும் விரோதமாக இருக்கக் கூடாது.
எந்த மதத்தினைச் சேர்ந்தவர் நாட்டிற்கு (பொது நலத்திற்கு ) விரோதமாக ஈடுபட்டாலும், மதத்தின் அடிப்படையில் நோக்காமல், அரசும், அரசியல் கட்சிகளும், மக்களும் நாட்டின் நலன் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல் பட வேண்டும்.
இப்படி இருந்தால் போதும், எந்த மதத்தினைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆத்திகராகவோ நாத்திகராகவோ இருந்தாலும் கூட ஒருவரால் மதச் சார்பற்றவராக இருக்க முடியும்.
என் கருத்து இது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
நன்றி
4 comments:
உங்கள் பதிப்பு வந்து ஒரு வாரம் ஆகி விட்டாலும் கமெண்ட் ஒன்றும் வரவில்லை: ஒருவேளை, தங்கள் வாசகர்களும் அரசியல்வதிகளைப்போல் மத சார்பின்மை போன்ற விஷயங்களைப் பற்றி தங்கள் கருத்துகளை தர விரும்பவில்லை போலும்.
ஒன்று , தமிழ் இலக்கண ஆராய்ச்சியின் நடுவே மத சார்பின்மை போன்ற கனமான சமூக விஷயங்களை விவாதிக்க இயலாது .
இரண்டு, மத சார்பின்மை மிக உயர்ந்த நோக்கம் தான் என்றாலும் பெரும்பான்மை மதத்தின் சாயல் நிச்சயம் இருக்கும்; அதை சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் யதார்த்தமாக எடுத்துக்கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை; ஆனால், ஆட்சியில் இருப்பவர்களும், ஊடகங்களும் தூக்கி வைத்து கொள்ளும் 'நடுநிலைவாதி' களும் பெரும்பான்மை மதத்தின் சிறு தவறுகளையும் பொறுத்து கொள்ளாமலும்
சிறுபான்மைவாதிகளின் வெளிப்படையான மதச் சார்பு மேலூன்றி இருக்கும் செயல்களை சகித்துக்கொண்டும் இருந்தாலும் அவ்வப்போது இந்த பிரச்னை தலை தூக்கத்தான் செய்யும். நம் நாட்டில் நடப்பது இது தான்.
'திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என எம்ஜீஆர் பாட்டு ஒன்று உண்டு; அதே போல் சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரும் தாமாக உணர்ந்து சேர்ந்து வாழாவிட்டால் இதை ஒன்றும் செய்ய முடியாது எனத் தோன்றுகிறது.
Thank You Sir
Excellent Post! Kudos to u
Thank you kabeesh
Post a Comment