Tuesday, October 28, 2008

மும்பை யாருக்கு சொந்தம்?



இன்றைய தேதியில், மும்பை யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு சிலர் விவாதங்களிலும் சிலர் வன்முறைகளிலும் தீர்வு காண முயல்கின்றனர். இது பற்றியும், மும்பை உண்மையான மண்ணின் மைந்தர்கள் யார் என்பது பற்றியும் ஒரு சிறு ஆராய்ச்சி இங்கே.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் மும்பையின் அருகில் உள்ள யானைத் தீவில் (Elephanta Caves) உள்ள சிற்பங்கள் பல நூறு ஆண்டுகள் பழமையானவை என்றாலும் கூட, அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம் இது. அதாவது, கோலி (மீனவர்கள்) இன மக்களே மும்பை தீவின் முன்னோடிகள் (Original Inhabitants). இவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூட சிலர் கூறுகின்றனர். இவர்களது தெய்வமான மும்பா தேவியின் பெயரே இன்றைய மும்பை என்ற பெயருக்கு அடிகோலி உள்ளது. மும்பா தேவி கோயில் உள் அமைப்பும், மூலவரின் உருவமும் நமது ஊரிலுள்ள மாரி அம்மன் கோயில்களை ஓரளவிற்கு ஒத்துள்ளது. கோலி மீனவ இன மக்கள் இன்றும் கூட மும்பையின் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். கொலாபா போன்ற மும்பை நகரத்தின் வளமான பகுதிகளில் வசிக்கும் இவர்களது குடியிருப்புக்களை அகற்றி அங்கே பல மாடி கட்டிடங்களை எழுப்ப முயற்சித்த அரசியல்வாதிகள் , அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் (Builders) ஆகியோரின் கூட்டணி இதுவரை வெற்றி பெறவில்லை.
(கோலி (மீனவ) இன பெண். இவர்களுக்கு மும்பை சொந்தமா? )
பதினாறாம் நூற்றாண்டில், போர்துகீசியர்கள் குஜராத் சுல்தான்களிடம் இருந்து இந்த பகுதியை கைப்பற்றினர். பின்னர், போர்துகீசிய இளவரசிக்கும் இங்கிலாந்து அரசருக்கும் நடை பெற்ற திருமணத்தின் போது வரதட்சணையாக மும்பை இங்கிலாந்துக்கு வழங்கப் பட்டது.

இங்கிலாந்து, மொத்த மும்பையையும் அப்போது (1668) இந்தியாவில் ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனிக்கு வெறும் 10 பவுண்டிற்கு (pound) குத்தகைக்கு (Lease)அளித்தது. இன்றும் கூட, மும்பையில் யாரும் பட்டாவுடன் முழு உரிமையுடன்) நிலம் வாங்க முடியாது. குறிப்பிட்ட வருடங்களுக்கான குத்தகையாகவே நில உரிமை பெற முடியும்.

கிழக்கிந்திய கம்பெனி அப்போது பொருளாதாரத்தின் அடிப்படையில் மிகவும் பின் தங்கியதாக கருதப்பட்ட மும்பையினை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல சில வணிக சலூகைகளை அறிவித்தது. (மராத்திய பேரரசின் அப்போதைய தலைநகரம் புனே என்பது குறிப்பிடத் தக்கது). அந்த சலூகைகளைப் பெறுவதற்காக பார்சி மற்றும் குஜராத் மக்கள் பெருமளவில் மும்பை வந்து வணிகம் செய்தனர்.

சூயஸ் கால்வாய் திறப்பும், இரண்டாம் உலகப் போரும், பார்சி மற்றும் குஜராத் மக்களின் வணிகத் திறமையும் மும்பையினை இந்தியாவின் நிதி தலை நகரம் (Financial Capital) ஆக்க முக்கிய காரணங்களாக இருந்தன

சுதந்திரத்திற்கு பிறகு, பிழைப்பிற்காக மகாராஷ்டிரா மாநிலத்தின் மறற பகுதிகளிருந்தும் இதர மாநிலங்களிருந்தும் மக்கள் அதிக அளவில், இங்கே வந்து குடியேற ஆரம்பித்தனர். இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம். பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முன்னர் (அதாவது 1990 களுக்கு முன்), மும்பையில் வாழ்வு தேடி சென்றவர்கள் தென்னிந்தியர் குறிப்பாக தமிழர்கள். அப்போது மக்கள் விவசாயத்தினையும், மாநில அரசு மத்திய அரசின் உதவியினையும் அதிகம் நம்பி இருந்த காரணத்தால், மழை பொய்த்த காலங்களில் தமிழ் மக்கள் பிழைப்புக்காக இங்கு வந்தனர். சங்கி பஜாவ், லுங்கி பகாவ் (சங்கை ஊதுங்கள் வேட்டி அணிந்தவர்களை விரட்டுங்கள்) என்ற கோஷத்துடன் தமிழர்களும் பிற தென்னிந்தியர்களும் அந்நாட்களில் தாக்கப்பட்டனர்.

பொருளாதார சீர்த்திருந்தங்கள் அறிமுகப் படுத்தப் பட்ட பிறகு, வடக்கு தேய்ந்து தெற்கு வளர ஆரம்பித்தவுடன், இங்கு வரும் தென்னிந்தியர் எண்ணிக்கை குறைந்து வட இந்தியர் எண்ணிக்கை அதிகரித்தது.

இப்போது அரசியல் லாபத்திற்காக , மராத்தியர் மற்றும் மராத்தியர் அல்லாதோர் என்ற பிரிவினை வாதம் மீண்டும் ஒரு முறை எழுப்பப் பட்டுள்ளது.

மும்பையின் வணிக வளர்ச்சிக்கு பார்சி மற்றும் குஜராத்தியர் பங்கு முக்கியமாக அமைந்தது என்பதினை ஒப்புக் கொள்பவர்கள் மும்பையின் கட்டுமான வளர்ச்சிக்கு மறற ஏழை இந்தியரின் பங்கும் முக்கியமாக அமைந்துள்ளது என்பதை மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது.
(மும்பையில் வாழ வழியற்றவர்கள்? இவர்களுக்கு மும்பை சொந்தமா? )

மும்பை ஒட்டுமொத்த இந்தியருக்கும் சொந்தம் என்ற போதிலும், மும்பைக்கு ஒரு வேறு மாநிலத்திலிருந்து வருபவர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, வேறு மாநிலத்திலிருந்து ஒருவர் இங்கு வந்து குடியேறும் போது, அவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர் ஆகி விடுகிறார். உதாரணமாக, மகாராஷ்ட்ராவில் வாழும் வரை நான் ஒரு தமிழ் பேசும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இந்தியன். இங்கே வந்த பின்னர், இந்த மண்ணின் மொழியையும், கலாச்சாரத்தினையும், மக்களையும் மதிக்க தவறி, சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவராகவே தொடர்ந்து வாழ நினைப்பது உள்ளூர் மக்களுடன் ஒரு இணக்கமற்ற சூழலை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, இங்கு வாழும் தமிழர்களோ பிற தென்னிந்தியர்களோ தன் மாநில தலைவர்களை இங்கு அழைத்து அந்தந்த மாநில நாட்கள் அல்லது விழாக்கள் கொண்டாடுவதில்லை. ஆனால் வட இந்தியர் விஷயத்தில் இவ்வாறு நடக்கிறது. ஒரு சிலரின் அரசியல் லாபத்திற்காகவே இவ்வாறு செய்யப் படுகிறது என்ற போதிலும், இது வன்முறையாளர்கள் எளிய மக்களை தாக்கும் தங்கள் நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்க உதவுகிறது .

நான் சொல்லட்டுமா உண்மையில் மும்பை யாருக்கு சொந்தம் என்பதை?

மும்பையின் மிக அதிகமான மாதாந்திர செலவும் (cost of living) முக்கியமாக அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புக்கான விண்ணை முட்டும் வாடகையும், நகரத்தின் சுகாதாரமற்ற சூழ்நிலையும் நடுத்தர மக்களுக்கு மும்பை வாசத்தினை எட்டாக் கனியாக்குகிறது.

மிக அதிக பண பலம் மற்றும் செல்வாக்கு கொண்ட திரைப்பட துறையினர், அரசியல்வாதிகள், நிழல் உலக தாதாக்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோருக்கும் எப்படிப்பட்ட சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலிலையும் தாங்கி எப்படியாவது வாழ வேண்டும் என்று இங்கு வந்து விழும் ஏழை எளிய மக்களுக்குமே உண்மையில் மும்பை சொந்தம்.
(மும்பையில் வாழும் தகுதியுள்ளவர்கள்? இவர்களுக்கு மும்பை சொந்தமா? )
நன்றி. வணக்கம்

6 comments:

கூடுதுறை said...

//எப்படிப்பட்ட சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலிலையும் தாங்கி எப்படியாவது வாழ வேண்டும் என்று இங்கு வந்து விழும் ஏழை எளிய மக்களுக்குமே உண்மையில் மும்பை சொந்தம்.//

இதுதான் வைர வரிகள். நல்ல பதிவு.

மும்பையை டெல்லியை போல தனி மாநிலமாக்கி விடவேண்டும். டெல்லியில் அனைத்து மாநிலத்துவர்களும் எப்பிரச்னையில்லாமல் வாழவில்லையா?

Maximum India said...

அன்புள்ள கூடுதுறை

மும்பையினை தனி மாநிலம் ஆக்குவது மற்ற மாநிலத்தவர்க்கு உதவும் என்றாலும் கூட அது மகாராஷ்டிரா மாநிலத்தினருக்கு செய்யும் அநீதி என்பது என் தாழ்மையான கருத்து. டெல்லி கதை வேறு. அது ஆண்டாண்டு காலமாக இந்தியாவின் தலைநகரம். அதனை யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது.

இந்தியாவின் அனைத்து பகுதிகளும் அனைவர்க்கும் சொந்தம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே சமயத்தில், ஹாங்காங் நகரத்தின் நிர்வாக முறையிலிருந்து சிலவற்றை நாம் கற்றுக் கொள்வது நன்று. ஹாங்காங் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றாலும் கூட, சாதாரணமாக சீனாவிலிருந்து மக்கள் ஹாங்காங் நகரத்திற்கு செல்ல முடியாது. அதே போல, மும்பை போன்ற மூச்சு முட்டும் நகரங்களுக்கு வரும் ஒருவருக்கு வேலை அல்லது அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது போன்ற கொள்கைகளை அரசு உறுதியுடன் மேற்கொள்வது அனைவருக்கும் நல்லது.

ஏற்கனவே ஒரு பதிவில் நான் கூறியிருப்பது போல

//பளபளக்கும் கட்டிடங்களையும் தொழிற்சாலைகளையும் கட்ட ஆயிரக் கணக்கான கோடிகள் செலவு செய்யும் தொழில் அதிபர்களால், அங்கு பணி புரிய வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரப் படும் தொழிலாளர்களுக்கு சில லட்சம் செலவு செய்து நல்ல சுகாதார குடியிருப்பு அமைத்து தர முடியாதா?//

கூடுதுறை said...

//Blogger Maximum India said...
அன்புள்ள கூடுதுறை
மும்பையினை தனி மாநிலம் ஆக்குவது மற்ற மாநிலத்தவர்க்கு உதவும் என்றாலும் கூட அது மகாராஷ்டிரா மாநிலத்தினருக்கு செய்யும் அநீதி என்பது என் தாழ்மையான கருத்து. //

அதேப்படி அவர்களுக்கு அநீதியாகும் அங்கே இருப்பது மேஜாரிட்டி அவர்கள் தானே...

டெல்லி போல மும்பையும் ஒரு வர்த்தகதலைநகர் தான் மேலும் ஒரு காஸ்மோபாலிட்டி சிட்டி யென்றால் பலநாட்டவர்களும் வாழ்ந்து வரும் நகரம் எனக் கூறுவர்.. இங்கே வேறு மாநிலத்திவர்க்கே தகறாரு என்றால் என்ன செய்வது?

இதற்கு ஹாங்காங் சரியான உதாரணமே அல்ல...அது 10 ஆண்டுக்கு முன்பு வரை பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சீனாவிடம் சென்றது. அங்கிருக்கும் பன்னாட்ட்வர்களுக்கு பாதுகாப்பு அளிக்க்கும் நோக்கில் அவ்வாறு உள்ளது...


//வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரப் படும் தொழிலாளர்களுக்கு சில லட்சம் செலவு செய்து நல்ல சுகாதார குடியிருப்பு அமைத்து தர முடியாதா?//

சரி இந்தக்குடியிருப்பை கட்டுபவர்கள் எங்கே தங்குவார்கள்?

மகாராஷ்ட்ராவை இரண்டாக பிரிக்கும் யோசனை ஏற்கனவே உள்ளது. விதர்ப்பா மாநிலத்திற்கு நாக்பூரையும்,மும்பை தவிர்த்தி எஞ்சிய மகாராஷ்டிரத்திர்கு நாக்புரையும் தலைநகராக்கி மும்பை NCR போல உருவாகவேண்டும்...

Maximum India said...

Dear kooduthurai

Thank you for the comments.

//அதேப்படி அவர்களுக்கு அநீதியாகும் அங்கே இருப்பது மேஜாரிட்டி அவர்கள் தானே...//

Technically, marathi speaking people may be a majority in mumbai. But for all the practical purposes, hindi is the dominating language of mumbai. As I already told rich class (parsis and gujarati)and poor class are the dominating classes (Bhaiya log) in Mumbai. Generally, marathi speaking people of shy natured middle class people and they are found slowly moving out of mumbai. Their population in percentage terms is diminishing in Mumbai over a period of time due to the large influx of hindians.

//இதற்கு ஹாங்காங் சரியான உதாரணமே அல்ல...அது 10 ஆண்டுக்கு முன்பு வரை பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சீனாவிடம் சென்றது. அங்கிருக்கும் பன்னாட்ட்வர்களுக்கு பாதுகாப்பு அளிக்க்கும் நோக்கில் அவ்வாறு உள்ளது...//

I referred to Hongkong in a different context i.e. in the administrative part for protecting the city from huge influx of native chinese. No city can bear population beyond certain level without having a strong infrastructure support. People who travel regularly in the local trains of the city may appreciate this fact.

//சரி இந்தக்குடியிருப்பை கட்டுபவர்கள் எங்கே தங்குவார்கள்?//

I think you made this comment just for fun. Any thing is possible if you have the determination.

//மகாராஷ்ட்ராவை இரண்டாக பிரிக்கும் யோசனை ஏற்கனவே உள்ளது. விதர்ப்பா மாநிலத்திற்கு நாக்பூரையும்,மும்பை தவிர்த்தி எஞ்சிய மகாராஷ்டிரத்திர்கு நாக்புரையும் தலைநகராக்கி மும்பை NCR போல உருவாகவேண்டும்...//

Even though, our constitution provides for reorganization of state boundaries by the centre, it is practically very difficult to do so without the consent of state being affected.

nerkuppai thumbi said...

மும்பையைப் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது.
பலவேறு கோணங்களிலிருந்து ஒருமனதாகப் பணி செய்து தீர்க்க வேண்டிய பிரச்னை இது. மைய அரசு அதிகமாக மான்யங்கள் வழங்கி infrastructure வசதிகளை பெருக்கவேண்டும்.
ஒரு மாற்று யோசனை: (உங்கள் தளத்தின் வாக்கியமே கொஞ்சம் மாதி யோசி தானே!) பீஹார், உ பி , ஜார்கண்ட் மாநில அரசுகளும் ஏதாவதொரு வழியில் மான்யம் அளித்து பொது வாழ்க்கை வசதிகளை (infrastructure என்பதற்கு எது ஏற்புடைய தமிழ் பதம் தானா? ) பெருக்குவதற்கு வழி செய்ய வேண்டும்.

அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் பணியில் ( குறைந்த பட்சம் மூன்றாம் நிலை மற்றும் கடை நிலைகளில் மட்டுமாவது ) மராத்தியர்களுக்கும் மற்றும் வேறு மாநிலத்திலிருந்து வந்தவர் ஆயின் இரண்டாம் தலைமுறை ( அதாவது தந்தை/தாய் வந்து குடியேறி பல ஆண்டுகள் ஆயும், இங்கேயே ஆரம்பப் பள்ளியில் பயின்றவர்களாக இருக்கவேண்டும்) மட்டுமே அமர்த்தப்படவேண்டும். இதற்கு சட்டம் வழி செய்யும்; ஆனால் அதை மீறி இப்போது நியமங்கள் நடந்துகொண்டிருக்கலாம். அப்படியாயினும் அல்லது சட்டத்திருத்தங்கள் தேவை என்றாலும் அவற்றையும் கொண்டுவர வேண்டும். மைய அரசு நிறுவனங்களுக்கும் இது போன்ற வழிமுறை மேற்கொள்ளப்படவேண்டும். (திருவாளர்கள் லல்லு போன்றவர்கள் எதிர்ப்பையும் சமாளித்து இதை செய்ய வேண்டியுள்ளது ). பொதுவாக மைய அரசின் பணிகள் அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானதே என்று வாதிடும் நானே மும்பையின் நிலையைப் பார்த்தவுடன் இது போன்று எழுதுகிறேன்!

கடைசியாக ஒரு வார்த்தை: அரசியலைக் குறைத்து பிரச்னையை தீர்ப்பது தான் குறிக்கோள் என்று முயன்றால் இயலாதுது ஒன்றும் இல்லை

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி

பின்னூட்டதிற்கு நன்றி


//கடைசியாக ஒரு வார்த்தை: அரசியலைக் குறைத்து பிரச்னையை தீர்ப்பது தான் குறிக்கோள் என்று முயன்றால் இயலாதுது ஒன்றும் இல்லை//


நீங்கள் சொன்ன கருத்துகள் மிகவும் அருமை.

Blog Widget by LinkWithin