Friday, October 17, 2008

கடன் வாங்கலாமா?




கடன் பொருளாதாரம், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான ஒன்றாகும். ஆனால், அதே சமயத்தில், சில தவறான கடன் கொள்கைகளால், இன்றைய தேதியில்உலகமே தத்தளித்து கொண்டு இருக்கிறது.





இந்த சூழ்நிலையில் நம்மைப் போன்ற சாமான்யர்கள் கடன் வாங்கலாமா என்பதை பற்றியும் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் யாவை என்பதைப் பற்றியும் இங்கு ஆராயலாம்.




பொதுவாக, கடன் வாங்குவதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் இருக்கக் முடியும் .




தொழில் மற்றும் வியாபார தேவைகள் . சுய தேவைகள் , மேற்படிப்பு தேவைகள் மற்றும் இதர முதலீடுகள் (Speculative nature)





1. தொழில் மற்றும் வியாபார தேவைகள்




பொதுவாக ஒரு நாட்டின் அனைத்து துறைகளின் சராசரி வளர்ச்சி, அந்நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) மற்றும் பண வீக்கத்தின் (Inflation) கூட்டு தொகையாக இருக்கும். உதாரணமாக, இந்திய வளர்ச்சி 8% மற்றும் பண வீக்கம் 12% எனும் பட்சத்தில் சராசரி துறை வளர்ச்சி (12+8) 20% ஆக இருக்கும்.




இதன் அடிப்படையில், ஒவ்வொரு துறைக்குமான, வருங்கால தனிப் பட்ட வளர்ச்சியினை, அந்தந்த துறையின் ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் நூல்கள்(Reseach Reports and Journals) மூலம் அறிய முடியும்.






மேற்கண்ட விஷயங்களின், அடிப்படையில், தொழில் மற்றும் வியாபாரத்தில் கடன் மூலம் செய்யக் கூடிய முதலீட்டினால் பெறக் கூடிய லாப அளவினை தோராயமாக (Estimates) முதலில் மதிப்பிட வேண்டும். அந்த தொகை, கடனுக்கான வட்டி மற்றும் திருப்ப வேண்டிய முதல் (Principal + Interest) ஆகியவற்றை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே கடன் வாங்க வேண்டும்.




2. சுய தேவைகள்




சுய தேவைகளை இரண்டாக பிரித்து கொள்ள முடியும்.




அத்தியாவசிய தேவைகள் மற்றும் அத்தியாவசியமற்ற தேவைகள்.




அத்தியாவசிய தேவைகளுக்காக (உதாரணமாக வீடு மற்றும் வாகனம்) கடன் வாங்கும் பட்சத்தில், அத்தேவைகளை பூர்த்தி செய்வதினால் ஏற்படும் பலன்கள் (Tangible and Intangible) , திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் வட்டியினை விட அதிகமாக இருக்க வேண்டும்.




அத்தியாவசியமற்ற பொருட்களுக்காக (உதாரணமாக ஆடம்பர பொருட்கள்) (கூடுமான வரை) கடன் வாங்குவதைத் தவிர்த்து, சுய சேமிப்பில் வாங்குவது நல்லது. அப்படி வாங்கும் பட்சத்தில், மொத்த செலவில் , சொந்த பங்கு (Margin) அதிகமாக இருப்பது நல்லது.




3. மேற்படிப்பு




மேற்படிப்பு, ஒரு சிறந்த முதலீடு. மேற்படிப்பின் மூலமாக, புதிய பணி வாய்ப்பு, பணி மேன்மை மற்றும் இதர நன்மைகள் இருக்கும் பட்சத்தில், கடன் வாங்கலாம். அதே சமயத்தில், திரும்ப கட்ட வேண்டிய தொகை அளவு குறித்து கவனமாக இருக்க வேண்டும்.




4. இதர முதலீடுகள் (Speculative Nature)




இரண்டாவது வீடு (வாடகை அல்லது குறைந்த கால லாபத்திற்காக), மனை நிலம், பங்கு சந்தை முதலீடுகள் இவற்றுள் அடக்கம். பொதுவாக, பொருளாதார வல்லுனர்கள் இவற்றிற்காக கடன் வாங்குவதை ஏற்பதில்லை. அப்படி வாங்கும் பட்சத்தில், சிறந்த நிபுணர்கள் உதவி பெற்றிருப்பதும், தனது சொந்த நஷ்டம் தாங்கக் கூடிய சக்தி (Risk Appetite) குறித்து தெளிவாக அறிந்திருப்பதும் அவசியம்.




கடன் வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டிய இதர விஷயங்கள்.




1 வங்கியின் நம்பகத் தன்மை (Integrity of the Bank)


2. திருப்ப செலுத்தக் கூடிய திறன் (Solvency and Liquidity)


3. வட்டி மாறாக் கடன் அல்லது மாறக் கூடிய கடன் (Fixed Rate or Floating Rate)


4. மறைமுக கட்டணங்கள் (Hidden Charges)


5. தேசிய அளவினாலான பொருளாதார மாற்றங்கள் (Macro Economic changes)


6.திருப்பி செலுத்த வேண்டிய கால அவகாசம் மற்றும் மாதந்திர தவணை முறை.


7. வங்கியின் இதர நிபந்தனைகள் (Terms and conditions of the Loan and EMI)


8. கடன் அளவிற்கு ஆயுள் காப்பீடு செய்வது குடும்ப பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம்.


9.கையெழுத்து இடும் முன் ஒவ்வொரு பத்திர நகலையும் முழுமையாக படிப்பது அவசியம்.


10. கிரெடிட் கார்டுகள் மாதந்திர செலவினங்களை எளிதாக செய்வதற்கு மட்டுமே. அதனை கடன் பெறும் வழியாகக் கொள்ளும் பட்சத்தில் அபாயம் நிச்சயம். (இந்த வாரம் மும்பையில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டதற்கு அதிகப் படியான கடன்களை கிரெடிட் கார்டு மூலம் பெற்றதே காரணம்).


11. மாதாந்திர கடன் தவணை, தனது வீட்டிற்கு கொண்டு செல்லும் சம்பளத் தொகையில் (Take Home Salary) 30% சதவீதத்திற்குள் இருப்பது நல்லது.




கடன் பெறுவதில் கவனமாக இருப்போம்.




கவலைகளை தவிர்ப்போம்.

No comments:

Blog Widget by LinkWithin