Friday, October 24, 2008

வெல்ல முடியாத கடல் கோட்டை


இதுவரை, இந்திய சரித்திரத்தில் ஒரு முறை கூட எதிரிகளால் (ஆங்கிலேயர்கள் உட்பட) வெல்ல முடியாத கோட்டை ஒன்றினை கேள்விப் பட்டு இருக்கிறீர்களா?




அரபிக் கடல் நடுவே அமைந்துள்ள அந்த மெய் சிலிர்க்க வைத்த கோட்டைக்கு செல்லும் ஒரு வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிடைத்தது. அந்த கோட்டையின் சிறப்பம்சங்கள் பற்றியும் அதன் வெல்ல முடியாத கதை பற்றியும் எனக்கு கிடைத்த சில தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முருட் ஜன்ஜிரா எனும் இந்த மிகப் பெரிய கடல் கோட்டை, மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கட் மாவட்டத்தில் அரபிக் கடலில் (கடற்கரையிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில்) அமைந்துள்ளது. மும்பையிலிருந்து சாலை வழியாக (சுமார் 100 கி.மீ. தூரம்) அந்த கடற்கரைக்கு செல்ல முடியும். இந்தப் பகுதியைச் சுற்றி மிக அழகான கன்னிக் கடற்கரைகள் (virgin beaches) உண்டு.


இந்த கோட்டை கடற் பயணம் செய்யும் இஸ்லாமியர்களுக்கு (முக்கியமாக ஹஜ் போன்ற பயணங்களுக்கு) பாதுகாப்பு அளிப்பதற்காகவும், இந்திய நிலப் பகுதியில் உள்ள முஸ்லீம் நாடுகளுக்கு கடற் தாக்குதலில் இருந்து காப்பற்றும் அரணாக இருப்பதற்காகவும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பட்டது. இந்தக் கோட்டையை ஆண்டவர்கள் வட ஆப்ரிகாவைச் சேர்ந்த சித்திக் (முஸ்லீம்) இன மக்கள். இந்தக் கோட்டையை கைப்பற்ற மராத்தியர்கள், டச்சு மக்கள், ஆங்கிலேயர்கள் (கிழக்கு இந்திய கம்பெனி) எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்க வில்லை.

சொல்லப் போனால், இந்த கோட்டையைப் பிடிப்பதற்காகவே, மராத்திய பேரரசர்கள் (சிவாஜி உட்பட) இந்தக் கோட்டைக்கு மிக அருகே இன்னொரு மிகப் பெரிய கோட்டையை (விஜய துர்க்) அமைத்தனர். ஆனாலும் அந்த முயற்சியும் பலிக்க வில்லை. இறுதி வரை யாராலும் வெல்ல முடியாத இந்த கோட்டையை பின்னர் வந்த இதன் ஆட்சியாளர்கள், துணைப் படை திட்டத்தின் கீழ் பிரிட்டிஷ் பேரரசுடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.

ஏன் இந்தக் கோட்டையினை யாராலும் வெல்ல முடிய வில்லை? சற்று விரிவாக பார்போம்.
பூகோள ரீதியான அமைப்பு மற்றும் கட்டிட அமைப்பு பாதுகாப்பு அமைப்பு இந்தக் கோட்டைக்கு பெரும் பலமாக இருந்தது. உதாரணமாக, அந்தக் கோட்டைக்கு (இப்போதும் கூட) சிறிய பாய்மர படகுகளிலேயே (கடல் ஆழம் மிகக் குறைவாக இருப்பதால்) செல்ல முடியும். கடல் நடுவே இருந்தாலும், இந்தக் கோட்டையின் உள்ளேயே ஒரு மிகப் பெரிய (வற்றாத) குடிநீர் குளம் உள்ளது. இந்தக் கோட்டையை சுற்றி சுற்றி வந்தாலும், இதன் வாயில் எங்கே (வாயில் மூடி இருக்கும் பட்சத்தில்) என்று கண்டுபிடிக்க முடியாத முடியாத மாதிரி கோட்டை கட்டிட அமைப்பு உள்ளது. முற்றுகை இட்ட எதிரிகளுக்கு தெரியாமல் வெளியே சென்று வர வழியும் உண்டு

இந்தக் கோட்டையிலிருந்து நிலப் பகுதிக்கு ஒரு சுரங்கப் பாதை உள்ளதாக ஒரு கைடு கூறினார். அதன் வழியாக , முற்றுகைக் காலங்களில் கோட்டைக்கு தேவையான பொருட்கள் கொண்டு வரப் படும் என்றும் கூறினார்.

இந்த கோட்டையினை யாரும் வெல்ல முடியாமல் போனதற்கு மற்றுமொரு முக்கிய காரணம். இந்த கோட்டையை யார் தாக்க முனைந்தாலும், இந்திய நிலப் பகுதியில் இருந்த அனைத்து முஸ்லீம் மன்னர்களும் ஒன்று சேர்ந்து , தாக்குகின்றவரின் நிலப் பகுதியினை தாக்குவார்கள். உதாரணமாக மராத்தியரோ ஆங்கிலேயரோ இந்த கடல் கோட்டையை தாக்கிய போது, எப்போதுமே சண்டையிட்டுக் கொண்டிருந்த தக்கன சுல்தான்களும் , முகலாய அரசர்களும் இணைந்து மகாராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளைத் தாக்கியதாக சரித்திரம் சொல்கிறது. உடனே, இந்த கோட்டையைத் தாக்குவதை கைவிட்டு மராத்தியர்களும் ஆங்கிலேயர்களும் பின் வாங்க நேரிட்டதாகவும் சொல்லப் படுகிறது.

இந்த கோட்டைக்கு சுற்றுலா செல்வது வாழ்வின் மறக்க முடியாத தருணமாக இருக்கும். இதன் அருகே அழகிய கடற்கரைகள் (கோவா போல) மற்றும் தங்குமிடங்கள் உண்டு.

வாய்ப்பு கிடைத்தால் இந்த கோட்டைக்கு ஒரு முறை கண்டிப்பாக சென்று வாருங்கள்.


நன்றி. வணக்கம்

4 comments:

MCX Gold Silver said...

naril sanradhu pol ulladu

Maximum India said...

Thank You DG

Wish you a Happy Deepavali

ஆட்காட்டி said...

சாண்டில்யன் இதைப் பற்றி ஜலதீபத்தில் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
கேள்விப் பட்டதுண்டு.

Maximum India said...

Dear Atkaatti

Thank you for the comments.

I am personally not aware whether sandilyan had mentioned about it in "jala deepan" though I am a fan of his "Kadal Pura"

With best regards

Blog Widget by LinkWithin