Sunday, November 30, 2008

நாளை நமதே


சென்ற வார நிலவரம்

கடந்த வாரம் சிட்டி பேங்க் மீட்டெடுப்பு மற்றும் சீனா வட்டி வீதக் குறைப்பு உலக சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட உதவின. இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் வர்த்தகர்களின் மனப் போக்கை சற்று பாதித்தாலும் சந்தையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட வில்லை. காரணம், இந்திய பொருளாதார வளர்ச்சி 7.60% சதவீதமாக இருந்ததும், பணவீக்கம் (8.84%) தொடர்ந்து குறைந்து வருவதுமே. இதனால், வட்டி வீதங்கள் மேலும் நமது தலைமை வங்கியினால் குறைக்கப் படும் என வர்த்தகர்கள் நம்புகிறார்கள். வாரக் கணக்குப் படி சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகள் சிறிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. ரியல் எஸ்டேட் பங்குகள் அதிகம் வீழ்ச்சி கண்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்ற வண்ணம் இருக்கின்றன. இதன் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு (50.12) சிறிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

வரும் வார நிலவரம்

டெக்னிகல் அனலிசிஸ் படி சென்செக்ஸ் குறியீடு 8900 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்து இருப்பது சந்தைக்கு தெம்பை அளிக்கிறது. சந்தை மேலே செல்ல வாய்ப்புகள் அதிகம். முக்கிய சப்போர்ட் நிலைகள் 8650. முக்கிய எதிர்ப்பு நிலைகள் 9350, 9650 மற்றும் 10200. மேலும் உலக சந்தைகளில் ஏற்படும் மற்றம் மற்றும் இந்திய வங்கியின் வட்டிவீத நிலைப் பாடு நம் சந்தைகளின் ஏற்றதாழ்வுகளை பாதிக்கும். டாலர் மதிப்பு 50 இன் அருகிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. பங்குசந்தைகளின் நிலை மற்றும் NDF சந்தையின் நிலை பொருத்து இது மாறும்

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்


நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம்.

முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை

புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் பட்டு சுமார் ஒன்பதரை மணி நேரம் பின்னர். பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுவது "தாக்குதல் நடைபெற்ற 30 நிம்டங்களுக்குள் பதில் தாக்குதல் நடத்தா விட்டால், எதிரிகளை அளிப்பது கடினமான காரியம் ஆகிவிடும்". (நன்றி:டைம்ஸ் ஒப் இந்தியா)

இப்படி வியாழன் காலை 7.00 மணிக்கு உள்ளே சென்ற இந்திய கமாண்டோக்கள் தீவிரவாதிகளை அழிக்க மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி இங்கே பார்போம். (நன்றி: மும்பை மிர்றோர்)

தாஜ் ஹோட்டல் ஒரு மிகப் பெரிய கட்டிடம். இதில் பல நூறு சொகுசு அறைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. மேலும் பல "கூட்டம் நடத்துவற்கான" அரங்குகளும், உணவகங்களும் உண்டு. ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. இந்த ஹோட்டல் இரு பிரிவுகளாக உள்ளது. அதாவது பழைய தாஜ் அரண்மனை கட்டிடம் மற்றும் புதிய தாஜ் டவர். மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உள்ளே மாட்டிக் கொண்டு இருக்க, தீவிரவாதிகளை அழிக்கும் பணி மிக கடினமாகவே இருந்தது. தூரதிர்ஷ்டவசமாக, தாஜ் ஹோட்டலின் வரைபடம் கமாண்டோக்களுக்கு வழங்கப் படவில்லை. கண்காணிப்பு கேமரா அறையினையும் தீவிரவாதிகள் சேதப் படுத்தி விட்டனர். ஹோட்டலுக்குள்ளே பல இடங்களில் இவர்கள் தீ வைத்ததால், உள்ளே புகை மண்டலமாகவும் கடும் இருட்டாகவும் வேறு இருந்தது. இந்த கடினமான சூழலிலும் கூட வெற்றிகரமாக எதிரிகளை வென்ற நமது படைவீரர்களின் சாகசம் பாராட்டுக்குரியது.

இந்திய வீரர்களின் திட்டத்தின் அடிப்படை, முதலில் தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் நெருக்குவது, அங்கே அவர்களுடன் சண்டை நடத்துவது, அதற்குள் உள்ளே இருப்பவர்களை காப்பாற்றி வெளியேற்றுவது. இதன் அடிப்படையில் ஒரு குழு தீவிரவாதிகளை தேடி முதல் தளத்திற்கு சென்றது. மற்றொரு குழு மேல் தளத்தில் இருந்து உள்ளே நுழைந்தது. இன்னொரு குழு உள்ளே மாட்டி கொண்டவர்களை மீட்க சென்றது. இது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், உண்மையில் ஒரு மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. அந்த தீவிரவாதிகள் மிகுந்த போர் தேர்ச்சி பெற்றிருந்ததுடன் கட்டிடத்தின் உள்ளமைப்பு பற்றி நன்கு தெரிந்து கொண்டிருந்தனர். இதனால், அவர்களால் எளிதாக தளம் மற்றும் கட்டிடம் மாற முடிந்தது.

பலமணி நேரம், கட்டிடத்தின் அடித்தளத்தில் கழித்த இந்திய வீரர்கள் மிக நிதானமாக முதல் மாடியை நோக்கி முன்னேறினர். தீவிரவாதிகள் வீசும் குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் சுடும் சத்தம் இவற்றின் அடிப்படையிலேயே நம் வீரர்களால் அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை கணிக்க முடிந்தது. இவர்கள் முன்னேறும் போது, பின்னே வந்த மற்றொரு குழுவினர் பாதுகாப்பு தந்தனர். முதல் மாடியில் ஒவ்வொரு அறையாக இவர்கள் சோதனை இட்டனர். அப்போது, அந்த தளத்தின் முழு விவரத்தையும் அறிந்திருந்த தீவிரவாதிகள் இவர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டினர். கையெறி குண்டுகளை நம் வீரர்கள் மீது எறிந்தனர். மேலும் பல இடங்களில் தீ வைத்தனர். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க நடை பெற்ற சண்டைக்கு பின்னர், நம் வீரர்களால், அந்த தளத்தின் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள முடிந்ததுடன், தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் நெருக்க முடிந்தது.

தீவிரவாதிகளை நேரில் பார்த்த ஒரு கமாண்டோவின் கூற்றுப் படி, அந்த தீவிரவாதிகள் மிகவும் இளைய வயதினராய் இருந்தனர். ஒரு குறிப்பிட்ட நேர சண்டைக்கு பிறகு களைத்துப் போய் விட்டனர். மிகவும் பயந்து போய் கூட இருந்தனர். கைகளை தூக்கி சரணடைவது போல நடித்த ஒருவன் தப்பி ஓட முயல நம் வீரர்கள் அவனை சுட்டுக் கொன்றனர். அவன் முகத்தை கூட பார்க்க விரும்பாமல் தப்பி சென்ற மற்றொருவனை தேடும் பணியை தொடர்ந்தனர்.

இதே சமயம், உள்ளே மாட்டி கொண்டிருந்தவர்களில் (அறைகளில் தங்கி இருந்த )பலருடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்ட போலீஸார், அவர்களை அங்கேயே இருக்கும் படி அறிவுறுத்தினர். பின்னர் உள்ளே சென்ற மற்றொரு குழுவினரால் அவர்கள் பத்திரமாக காப்பாற்றப் பட்டனர்.

மேல்தளத்தின் வழியாக , உள்ளே நுழைந்த கமாண்டோக்களின் பணி இன்னும் சிரமாக இருந்தது. தீயை அணைக்க பாய்ச்சப் பட்ட நீர் ஆறாவது மாடியில் கழுத்து வரை நிரம்பி இருந்தது. கொல்லப் பட்டவர்களின் உடல்கள் நீரில் மிதந்து கொண்டிருந்தன. அவர்கள் கொல்லப் பட்டு 24 மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டதால், அந்த உடல்கள் அழுகி கடும் நாற்றம் கிளம்பி இருந்தது. ஒரு கமாண்டோ கூறுகிறார். " என்னால் அந்த சூழல் எப்படி இருந்தது என்று சொல்லவே முடிய வில்லை"

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் தீவிரவாதிகளை நெருக்குவது அதே சமயத்தில் உள்ளே மாட்டிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்பது என்ற "ஆபரேஷன் சைக்ளோன்" என்ற திட்டத்தை முதல் பாதியை சிறப்பாக செயல் படுத்திய நம் வீரர்கள், ஹோட்டலுக்குள் உயிரோடு இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டனர் என்று தெரிய வந்தவுடன், தமது தாக்குதலை தீவிரப் படுத்தினர்.

அதே சமயம் பல மணி தூங்காமல் தீவிரவாதிகள் மிகுந்த களைப்படைந்திருந்தனர். அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் சண்டையிடச் செய்ததும் நமது வீரர்களின் போர்த்தந்திரம். ஒரு தீவிரவாதி "ரப்பா! ரெஹம் கர்!", அதாவது கடவுளே என்னைக் காப்பாற்று என்று ஒலமிட்டதாகவும் நம் கமாண்டோ தெரிவித்தார். மற்றொருவன், தாக்குதலை நிறுத்துங்கள், வெளியே வந்து விடுகிறேன் என்று கதறியதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, அனைத்து அப்பாவிகளும் தப்பித்தனர் என்று உறுதி செய்து கொண்ட நம் வீரர்கள், அவர்களை நெருக்கி அறைகளுக்குள் ஒளிந்து கொள்ள செய்தனர். பின்னர், தீவிரவாதிகள் ஒளிந்து இருந்ததாக சந்தேகிக்கப் படும் அறைகளின் கதவினை குண்டுகள் கொண்டு தகர்த்தனர். உள்ளே சென்று சில குண்டுகளை மீண்டும் எறிந்தனர்.

சுமார் 50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அனைத்து தீவிரவாதிகளும் ஒழித்துக் கட்டப் பட்டனர். பின்னர் அவர்கள் உடல்களை முற்றிலும் சிதைந்த நிலையில் இவர்கள் கண்டுபிடித்தனர். அதைப் பற்றி ஒரு கமாண்டோ கூறியது. "அவர்கள் ஒரு கொடூரமான சாவை அதற்கான வலியை மெல்ல மெல்ல உணர்ந்தவாறே அடைந்தனர். அவர்கள் உடல்கள் சின்னா பின்னமாகின நிலையில் கண்டெடுக்கப் பட்டன.. ஒருவனது கண்களுக்குள்ளே கூட குண்டுகள் பாய்திருந்தன".

50 மணி நேரம் சாப்பிடாமல், தூங்காமல் போராடி தீவிரவாதிகளை ஒழித்து கட்டியது மட்டுமல்லாமல் பலரின் உயிரை காப்பாற்றிய நம் வீரர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் சொல்லும் அதே நேரத்தில் இந்தியாவை தாக்க நினைக்கும் தீவிரவாதிகளுக்கு ஒரு செய்தி.

"ஆயுதம் இல்லாத அப்பாவிகளை கொல்லும் பேடிகளே! ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள், உங்களால் எங்கள் படை வீரர்களை ஒருநாளும் நேருக்கு நேர் சந்திக்கவே முடியாது. அதற்கு வேண்டிய ஆண்மையும் வீரமும் உங்களிடம் இல்லை. மேலும், இந்தியா எனும் வல்லரசுடன் மோதினால் உங்கள் சாவு மிகக் கொடூரமாக இருக்கும். அந்த சாவு கூட, பல ஆண்டுகள் பெருவியாதியால் வேதனைப் பட்டு இறக்கும் ஒருவனது வேதனை முழுவதும் முழுமையாக உணர்ந்த பின்னரே நிகழும். அது மட்டுமல்ல, தாய் நாட்டிற்காக உயிர்நீத்த எங்கள் அருமை வீரர் உடல்கள் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப் படும் அதே வேளையில் உங்களது உடலுக்கு தெருவில் அடிப்பட்ட சொறி நாய்க்கு கிடைக்கும் மரியாதை கூட கிடைக்காது. இறப்பிலும் நாறும் கேவலமான நிலை உங்களுக்கு தேவையா என்பதை இந்தியா வருவதற்கு முன்னரே (உங்களுக்கு மூளை என்று ஒன்று இருந்தால்) முடிவு செய்து கொள்ளுங்கள்"

"மேலும், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்று ஒன்று இருந்தால் மற்றும் சொர்க்கம் நரகம் என்றவற்றின் மீதும் நம்பிக்கை இருந்தால் ஒரு செய்தி. அப்பாவிகளை கொல்லுபவனுக்கு கடவுள் இறந்த பிறகும் நரகத்தில் கடும் தண்டனை அளிப்பார் என்று எல்லா மதங்களின் புனித வேத நூல்களும் கூறுகின்றன. எனவே, இறக்கும் முன்னரும், இறந்த பின்னரும் இவ்வவளவு கடும் தண்டனை தேவையா என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்"

Saturday, November 29, 2008

மும்பையை உலுக்கிய தீவிரவாதியின் வாக்குமூலம்


மும்பையை தாக்கிய தீவிரவாதிகளில் ஒருவனைத் தவிர அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர். ஒருவன் மட்டும் போலீஸ் கையில் அகப்பட்டுக் கொண்டான். அவனது பெயர் ஆஜாம் அமீர் கசாவ். வயது 21. பிறப்பிடம் பரிட்கொத், பாகிஸ்தான். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் இவனுடைய புகைப்படம்தான் முதலில் எடுக்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. அவனை மும்பை போலீசார் பிடித்த விவரம் மற்றும் அவனுடைய அவன் தந்த தகவல்கள் இங்கே.

புதன் கிழமை இரவு , மும்பை சி.எஸ்.டி ரயில் நிலையத்தை தாக்கிய இவனும் இவன் கூட்டாளியும் காமா மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே வந்த மும்பை தீவிரவாதி தடுப்பு தலைவர் மற்றும் இதர போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இவர்கள், அந்த காரை கடத்தி கொண்டு மெட்ரோ பகுதிக்கு சென்றனர். அங்கேயும் துப்பாக்கி சூடு இவர்கள் நடத்த பதிலுக்கு போலீசும் திருப்பிச் சுட்டனர். காரின் டயர் பஞ்சர் ஆகி விட, அந்த வழியே வந்த ஒரு காரை வழி மறித்து அதில் ஏறிக் கொண்ட இவர்கள் மும்பையின் மிகப் பெரிய பணக்காரர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மகாராஷ்டிரா கவர்னர் வாழும் பகுதியை நோக்கி காரை செலுத்தினர். கிரகாம் பீச் அருகே வழி மறித்த போலீஸார் இவர்களை நோக்கி சுட்டனர். அதில் கூட்டாளி மரணமடைந்து விட, ஆஜாமோ இறந்தவன் போல நடித்தான். இவனை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் கூட சென்ற போலீசார் இவனுக்கு மூச்சு இருப்பதை கண்டு பிடித்து விட அந்த மருத்துவமனை விசாரணைக் களமாக மாறிவிட்டது.

முதலில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த இவன், தனது கூட்டாளியின் சிதைந்த உடலைப் பார்த்தவுடன் பயந்து விட்டான். "நான் வாழ விரும்புகிறேன்" என்று கதற ஆரம்பித்தான் (இது கவனிக்க வேண்டிய விஷயம்). என்னை குணப் படுத்துங்கள் என்று அங்குள்ள மருத்துவமனை அதிகாரிகளிடம் கெஞ்ச ஆரம்பித்தான். இது போதாதா? விடுவார்களா நம் போலீஸ்? அவனிடமிருந்து முழு விவரத்தையும் கறக்க ஆரம்பித்தனர்.

ஏற்கனவே சொன்னது போல இவன் பெயர் ஆஜாம். வயது 21 மற்றும் பாகிஸ்தானின் பாரிகொட் பகுதியைச் சேர்ந்தவன் இவன். இவனிடமிருந்து ஏ.கே.57 ரக துப்பாக்கி, ஏராளமான வெடி மருந்து, மும்பை சி எஸ் டி ரயில் நிலையத்தின் வரை படம் மற்றும் சாட்டலைட் போன் ஆகியவை கைப்பற்றப் பட்டன. இவனுக்கு கொடுக்கப் பட்ட உத்தரவு "கடைசி மூச்சு வரை கொல்லுங்கள்".

இவனது பத்து பேர் கொண்ட குழு கராச்சியிலிருந்து ஒரு படகில் கிளம்பினர். இவர்கள் குஜராத் அருகே வழி மறித்த கடலோரக் காவல் படை அதிகாரிகளிடம் வெள்ளைக் கொடி காட்டினர். இவர்கள் படகிற்கு உள்ளே வந்து விசாரணை நடத்திய ஒரு அதிகாரியை அங்கேயே கொன்று கடலில் வீசி விட்டனர். மற்றவரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மும்பை செல்ல உதவும் படி வலியுறுத்தினர். மும்பை அருகில் வந்ததும் அவரையும் கொன்று கடலில் வீசி விட்டனர். மும்பை அருகே மூன்று அதிவேக படகுகள் இவர்களுக்காக நிறுத்தப் பட்டிருந்தன. அவற்றில் வந்த இவர்கள் சிறிய குழுக்களாக பிரிந்து கொண்டனர். நான்கு பேர் கொண்ட ஒரு குழு தாஜ் ஹோட்டல் சென்றது. இருவர் குழு ஒபேராய் ஹோட்டல் சென்றது. மற்றும் இருவர் யூதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதியான நரிமன் ஹௌஸ் பகுதிக்கு சென்றது. மேலும் இருவர் சி.எஸ்.டி ரயில் நிலையத்திற்கு சென்றது. இந்த திட்டத்தை தீட்டிய இவனது தலைமை தீவிரவாதி ஒரு மாதத்திற்கு முன்னரே இந்தியா வந்து அனைத்து முக்கிய தகவல்கள் மற்றும் வரைபடங்கள் திரட்டி கொண்டு பாகிஸ்தான் திரும்பிச் சென்று இவர்களை தயார் படுத்தியுள்ளான்.

இந்த விசாரணை முடிந்து வெளியே சொல்லப் படாத ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல போலீஸ் புறப் பட்ட போது (போலீஸ் விசாரணை தாங்க முடியாமல்) இவன் கதறியது "இப்போது நான் வாழ விரும்ப வில்லை" ஆனால் இவனுக்கு அளிக்கப் படும் மரண தண்டனை இவனைப் போன்ற தீவிரவாதிகள் இனியொருமுறை இந்தியா வர பல முறை யோசிக்க வேண்டுமாய் இருக்க வேண்டும். செய்வார்களா நமது சட்டக் காவலர்கள்?

மேலும், ஆயுதமில்லாத அப்பாவி பொதுமக்களை (குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல்) ஈவு இரக்கமில்லாமல் கொன்று வெளிப் பார்வைக்கு பயங்கரவாதிகளைப் போன்று காட்சியளிக்கும் இவர்கள் உண்மையில் மிகப் பெரிய கோழைகளே என்பதை நாம் அனைவரும் உணரச் செய்தது இந்த கதை. (சிறப்பாக செய்திகளை முந்தித் தரும் (இந்த செய்தி உட்பட) மும்பை மிர்ரோர் பத்திரிகைக்கு நன்றி)

ஜெய பேரிகை கொட்டடா!


மும்பையை உலுக்கிய தீவிரவாதிகளின் தாக்குதல் சுமார் 59 மணி நேரங்களுக்கு பின்னர் ஒரு முடிவுக்கு கொண்டு வரப் பட்டுள்ளது. ஒபேராய் ஹோட்டல் மற்றும் நரிமன் ஹௌஸ் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நேற்றே கொல்லப் பட்டனர். தாஜ் ஹோட்டலில் மற்றும் நீடித்து வந்த சண்டை இன்று காலை முடிவுக்கு வந்துள்ளது. ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப் பட்டதாக சில தகவல்கள் சொல்லுகின்றன.

இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இந்திய ராணுவத்தினருக்கும் கமாண்டோ படையினருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவித்து கொள்வோம். இதற்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலியும் அவர்கள் குடும்பத்துக்கு நன்றியும் ஆறுதலும் சொல்வோம். அரசு அவர்களுக்கு சிறந்த வாழ்வு அமைத்து தர வேண்டிக் கேட்டுக் கொள்வோம்.

இந்திய மக்கள் தற்போதைக்கு நிம்மதி பெருமூச்சு விட்டாலும், ஏராளமான கேள்விகள் மனதில் எழுகின்றன.

எத்தனை நாளைக்கு இந்த நிம்மதி? எவ்வளவு நாட்கள் ராணுவத்தினரும் கமாண்டோ படையினரும் மும்பையில் நிலை கொண்டிருப்பார்கள்? அரசியல் வாதிகளை பாதுகாக்க அவர்கள் மீண்டும் டெல்லிக்கே திரும்ப வேண்டுமல்லவா?

இது போன்ற தாக்குதல்களின் போது ஒவ்வொரு முறையும் கமாண்டோக்கள் டெல்லியிலிருந்து வர வேண்டுமானால் அவர்கள் வரும் வரை இழக்கின்ற இந்திய உயிர்கள் எத்தனை இருக்கும்?

இந்திய அரசியல் வாதிகள் அதிசயத் தக்க வகையில் இந்த முறை ஒற்றுமை காத்து உள்ளனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வீசி தாக்கி கொள்வது எப்போது தொடங்கும்?

நம் மக்களின் மத்தியில் மிக அதிகமான கோபம் மற்றும் நாட்டுப் பற்று தற்போதைக்கு வெளிப்பட்டு வருகிறது. இவற்றை எவ்வளவு நாட்கள் தக்க வைத்துக் கொள்ள போகிறோம்? அடுத்த புது சினிமா படம் அல்லது இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி என்று வந்தவுடன் இவற்றை மறந்து விடப் போகிறோமோ?

இந்த தீவிரவாதிகளுடன் மோதும் போது தாம் உணர்ந்ததை ஒரு இந்தியா கமாண்டோ கூறினார். "அவர்கள் சாதாரண பியதீன்களை போல இல்லை. தேர்ச்சி பெற்ற அந்நியநாட்டு படை வீரர்கள் போலவும் சிறந்த பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் போலவும் திறமையாக செயல் பட்டனர்." மறைவில் செயல்படும் தடை செய்யப் பட்ட இயக்கங்களால் இவ்வளவு அதிக தீவிரவாதிகளுக்கு கமாண்டோ பயிற்சி அளிக்க முடியும் போது இந்தியா எவ்வளவு பெரிய நாடு. இதனுடைய பொருளாதாரம் PPP அடிப்படையில் உலகின் முதல் மூன்று நான்கு அளவில் அல்லவா இருக்கிறது? ஏன் நம்மால் அதிக கமாண்டோ க்களை உருவாக்கி அரசியல்வாதிகளுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க முயற்சி செய்ய கூடாது.

மேலும் சாதாரண இந்தியன் ஒவ்வொருவனும் ஏன் குறைந்த பட்ச தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள வாய்ப்பு தரக் கூடாது? இந்த தற்காப்பு கலையைக் கொண்டு கமாண்டோ பயிற்சி கொண்ட தீவிர வாதிகளை சாதாரண மக்களால் வெல்வது கடினம் என்றாலும் இந்த பயிற்சிகள் மூலம் மன உறுதியை பெறும் மக்கள் குறைந்த பட்ச எதிர்ப்பை காட்ட முடியும் அல்லவா?

கடைசியாக உள்ளே எரிமலையின் கோபம் கொண்ட ஒரு இந்தியனின் கேள்வி இது.

இந்த தீவிரவாதிகளின் உடல்களை ஏன் கேட் வே இந்தியாவில் தலைகீழாக கட்டி தொங்க விடக் கூடாது? அங்கு செல்லும் ஒவ்வொரு இந்தியனும் அவர்கள் மீது ஏன் காறி உமிழ கூடாது? அவர்களுடைய சாவு எவ்வளவு அசிங்கமாக உள்ளது என்று இந்தியா வரும் ஒவ்வொரு அந்நிய தீவிரவாதியும் உணரும் படி செய்யக் கூடாது? இதற்கு நம்முடைய மனித உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் கொன்ற இந்த தீவிர வாதிகள் மனிதர்களே அல்ல. வெறி பிடித்த மிருகங்களே.

நண்பர்களே! இந்த கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிந்த பதில்களைச் சொல்லுங்கள்

"பயமெனும் பேய்தனை யடித்தோம் - பொய்ம்மை
பாம்பை பிளந்துயிர் குடித்தோம். "

நன்றி

Friday, November 28, 2008

சீனா வகுப்பறையில் "சிங்கூர்" பாடம்


இதென்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சு என்கிறீர்களா? இது ஒரு கதை அல்ல நிஜம். சென்ற வாரம், சீனாவில் பீஜிங் நகரில் வணிக செய்தி துறை மாணவர்களுக்காக எடுக்கப் பட்ட பாடம் இது. பாடத்தின் பெயர் வெற்றியாளர்களும் தோற்று போனவர்களும் - டாட்டா மோடோர்ஸ் மற்றும் மேற்கு வங்காளம். இந்த பாடத்தை எடுத்துக் கொண்டதற்கு, வகுப்பை நடத்தியவர் (Martin Mulligan of the Financial Times, லண்டன்) கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?


"உலகின் கவனம் இன்றைக்கு இருப்பது நானோ காரின் மேல். நானோ கார் ஒரு சரித்திரம். ஒரு ஆடம்பர மெர்சிடிஸ் காரின் ச்டீரியோவின் (Stereo System) செலவில் ஒரு நானோ கார் வாங்க முடியும். இது ஒரு மிகப் பெரிய சாதனை. அதே சமயத்தில் இந்த பிரச்சினை குறித்து வெவ்வேறு கருத்துகள் உலா வருகின்றன. மேலும் ஒரு காரணம். 8 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு விவசாயத்தை அதிகம் நம்பியுள்ள மாநிலத்தில் இந்த பிரச்சினை நடந்து இருப்பது. இதன் மூலம் அதிக மக்கள் தொகை மற்றும் ஏழ்மை பகுதிகளில் தொழிற்சாலைமயமாக்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆராய முடியும்" மேலும் வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் வாகனத்துறை (Automobile Industry) உலக அளவில் இந்தியாவின் சாதனையான நானோ கார் குறித்த செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றது.


அவர் சொல்ல விரும்பிய ஆனால் வெளிப்படையாக சொல்ல முடியாத ஒரு காரணம் கூட உண்டு. சீனாவில் கூட இப்போது தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் தேவைகளுக்காக நில கையகப் படுத்துவதற்கு விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் கூட, சீனாவின் கிழக்கு நகரம் ஒன்றில், வன்முறை கும்பல் (விவசாயிகள்) ஒன்று அரசாங்க அலுவலகத்தை தாக்கியதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த பாடத்தின் இறுதியில் இது குறித்து 500 வார்த்தைகளுக்கு குறையாமல் ஒரு கட்டுரை வரையும் படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டனர் . அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை பார்த்தால் கம்யூனிஸ்ட் நண்பர்கள் நிச்சயம் ஆச்சர்யப் படுவார்கள் . பெரும்பாலான மாணவர்கள், மம்தா செய்தது சரி என்றும் வங்க அரசு செய்தது தவறு என்றும் கருத்து தெரிவித்தனர். மேற்கு வங்க அரசு சரியான இழப்பீட்டு தொகையை நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னமே கொடுத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்பது அவர்கள் வாதம் . மேலும், இறுதியாக வெல்லப் போவது யார் என்ற கேள்விக்கு நானோ கார்தான் என்றும் தோற்க போவது மேற்கு வங்கமே என்றும் கருத்து தெரிவித்தனர். (நன்றி: http://www.telegraphindia.com/1081124/jsp/frontpage/story_10155227.jsp)


இப்போது நம் கம்யூனிஸ்ட் நண்பர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? அவர்களுடைய வைத்திய முறையைக் கொண்டே அவர்களுடைய பித்தத்திற்கு வைத்தியம் பார்த்த மம்தாவிற்கு வாழ்த்துகள் சொல்வதா? அல்லது இப்படி கட்சி அரசியல் நடத்தி கொண்டு நாட்டின் தேவைகளை காற்றில் பறக்க விடும் நமது அரசியல்வாதிகளை கண்டு பெருமூச்சு விடுவதா? ஒரு இந்திய சாதனை வேதனையாகிப் போனது மட்டுமல்லாமல் இப்படி இந்திய மானம் கப்பலேறுவதை கண்டு வெட்கப் படுவதா?

Thursday, November 27, 2008

இந்தியர்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ள யுத்தம் - மும்பையிலிருந்து ஒரு ரிப்போர்ட்


இதுவரை இந்தியா மீது தீவிரவாதிகள் நடத்தி வந்தது அறிவிக்கப் படாத மறைமுக யுத்தம் (குண்டுகளை பதுக்கி வைத்திருந்து வெடிக்கச் செய்வது). இந்த யுத்தத்தில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் அப்பாவி பொது மக்கள் மட்டுமே. ஆனால் இந்த முறை நடந்திருப்பது அறிவிக்கப்பட்ட நேரடி யுத்தம். இதில் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் பொது மக்கள் மட்டும் அல்ல. போலீஸ் அதிகாரிகள், வெளி நாட்டினர் (சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட உண்டு) , பெரும் செல்வந்தர்கள், உள்நாட்டு அதிகாரிகள் மற்றும் முக்கிய புள்ளிகள். இது பற்றி மும்பையிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட் இங்கே.

"வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தை உங்களில் பலர் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் சில ஆயிரம் வீரர்களை கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்த பாபர் போன்றவர்கள் லட்சக் கணக்கான வீரர்களை கொண்ட அப்போதைய இந்திய மன்னர்களை தோற்கடித்தார்கள் என்று படித்த போது நம்புவது கடினமாக இருந்தது. ஆனால் நேற்று மும்பையில் நடந்தேறியிருக்கும் இந்த தீவிரவாதிகளின் தாக்குதலைப் பார்க்கும் போது சிலரால் பலரை வெல்ல முடியும் என்று இன்னமும் நம்பும் பாகிஸ்தான் மக்கள் நம்பிக்கை சரிதானோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நேற்று இந்தியாவிற்குள் கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் கூற்றுப் படி வெறும் பன்னிரண்டு மட்டுமே. இவர்கள் கொன்றது நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை. இதில் 14 பேர் போலீஸ்காரர்கள். அதுவும் மும்பையின் தீவிரவாத தடுப்புக் குழுவின் தலைவரும் மிக மூத்த போலீஸ் அதிகாரியுமான ஹேமந்த் அவர்கள் கூட நேரடி மோதலில் சுட்டுக் கொல்லப் பட்டார். ஆறு வெளிநாட்டினரும் கொல்லப் பட்டனர். குறைந்த பட்சம் 300 பேர் (சில தகவல்கள் 900 என்றும் கூட சொல்கின்றன) படுகாயம் அடைந்துள்ளனர். பன்னிரண்டு தீவிரவாதிகளில் ஐந்து பேரைக் கொன்று விட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப் படுகிறது. ஒருவர் கைது செய்யப் பட்டு விட்டார் எனவும் கூறப் படுகிறது. மீதம் உள்ள ஆறு பேர் (மேலும் பல உள்ளாட்கள் இருக்கிறார்களா என்று தெரியாது) இரண்டு குழுக்களாக பிரிந்து மும்பையின் முக்கிய இரண்டு விடுதிகளில் உள்ள முன்னூறுக்கும் மேற்பட்ட பேரை பிடித்து வைத்திருப்பதாக சொல்லப் படுகிறது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த முக்கிய நபர்கள் மற்றும் இந்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் அடக்கம். (சாதாரண மக்கள் இங்கு தங்குவது சிரமம்) பல ஆயிரம் போலீஸ் மற்றும் ராணுவத்தினராலும் இந்த தீவிரவாதிகளை இந்த பதிவு எழுதும் வரை முற்றிலும் ஒழிக்க முடிய வில்லை.

இப்போது சொல்லுங்கள். சில ஆயிரம் பேர் வந்து சில லட்சம் படை கொண்ட இந்திய மன்னர்களை வென்று நம் நாட்டின் பல கோடி மக்களை பல காலம் ஆட்சி செய்தனர் என்ற செய்தி நம்பக் கூடியதாகவே உள்ளது அல்லவா? அந்த கால இந்தியா போலவே இன்றைக்கும் ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவு பட்டுள்ள இந்தியா மீது நேற்றைக்கு நடை பெற்றுள்ள இந்த தாக்குதல் பற்றி சற்று விரிவாக பார்போம்.
இந்தியா மற்றும் மும்பையின் நுழைவு வாயிலாக கருதப் படும் கேட் வே ஆப் இந்தியா பகுதிக்கு அதிவிரைவு படகில் 12 பேர் கொண்ட ஒரு குழு நேற்று இரவு 9.30 மணி அளவில் வந்தது. இவர்கள் கராச்சி நகரில் இருந்து வந்ததாக கூறப் படுகிறது. இயற்கையிலேயே பாதுகாப்பான துறைமுகமாக கருதப் படும் மும்பை நகரத்தைச் சுற்றி பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப் பட்டுள்ள நமது கடலோர காவல் படைக்கும் கடற்படைக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு இவர்கள் நவீன ரக ஆயுதங்களுடன் நுழைந்தது ஆச்சரியமான விஷயம். பின்னர் இரண்டு குழுக்களாக இவர்கள் பிரிந்து கொண்டனர்.

ஒரு குழு இந்தியாவின் பெருமையாக கருதப் பட்ட (படும்) தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கண்மூடித் தனமாக சுட்டனர். குண்டுகளும் எறியப் பட்டது. மேலும் அருகிலுள்ள (மேல் மட்டத்தினரின்) உணவகத்திலும் நுழைந்து அங்குள்ளவர்களையும் ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர். கடைசியாக வந்த சில தகவல்களின் படி தாஜ் ஹோட்டல் பிணைக்கைதிகள் விடுவிக்கப் பட்டனர் என்று தெரிகிறது.

மற்றொரு குழு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப் படும் மும்பை CST ரயில் நிலையம் சென்றது. அங்கு ரயில்களுக்காக காத்திருந்த பொது மக்கள் மீது கண்மூடித் தனமாக சுட்டனர். அங்கிருந்து காமா மருத்துவமனைக்கு சென்ற இவர்கள் அங்கும் மக்கள் மீது சுட்டனர். அப்போது இவர்களைத் தடுக்க வந்த ஹேமந்த் கார்கரே தலைமையில் வந்த மும்பை போலீஸ் மீதும் நேரடி தாக்குதல் நடத்தினர். நம் தரப்பில் போலீஸ் பலர் இருந்தும், அதி நவீன ரக துப்பாக்கிகள் வைத்திருந்த தீவிரவாதிகளை சமாளிக்க முடிய வில்லை. போலீஸ் தரப்பில் ஏராளமான இழப்புகள் (ஹேமந்த் கார்கரே உட்பட). அதே சமயம் தீவிரவாதிகள் தரப்பில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக தெரிய வில்லை. அங்கிருந்து பல இடங்களில் தாக்குதல் நடத்தி விட்டு இறுதியாக மும்பையின் மற்றொரு மிகப் பெரிய ஹோட்டலுக்குள் சென்ற இவர்கள் அங்குள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டுள்ளனர். ஹாலிவுட் சினிமாக்களையும் மிஞ்சும் இந்த நிகழ்வுகள் நமக்குள்ளே மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன.

இப்போது, இந்த தீவிரவாதிகள் மிகப் பெரிய பிணைத்தொகை மற்றும் இந்திய சிறையில் உள்ள தீவிரவாதிகளை விடுதலை செய்யும் கோரிக்கைளை அரசின் முன் வைப்பதாகவும் பேச்சு வார்த்தைகளும் நடைபெறுவதாகவும் கூறப் படுகிறது. தேசிய பாதுகாப்பு படை மற்றும் இராணுவம் இங்கே வரவழைக்கப் பட்டுளள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் முழுக்க மிகத் துணிச்சலாக படம் பிடித்த மற்றும் கவரேஜ் செய்த பத்திரிக்கையாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஒரு படப் பிடிப்பாளர் இதில் சுடப்பட்டார். மேலும் RDX குண்டுகளை தாங்கி சென்ற ஒரு கார், மும்பையின் விலேபார்லே பகுதியில் வெடித்து சிதறியதும் குறிப்பிடத் தக்கது. இங்கே மும்பையில் ஒரு பதட்டமான சூழ் நிலையே நிலவி வருகிறது. 2005 இல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போதும் 2006 இல் ஏற்பட்ட மிகப் பெரிய குண்டு வெடிப்பின் போதும் மிகுந்த மன துணிச்சலை காட்டிய மும்பை மக்களின் மனதில் தற்போது அச்சம் நுழைந்து உள்ளது.

யோசித்து பாருங்கள். வெறும் 12 பேரால் இவ்வளவு பாதிப்பு ஏற்படுத்த முடியும் போது, இந்தியாவின் முக்கிய நகரங்கள் சிலவற்றில் இதே போல ஒரே சமயத்தில் சில ஆயிரம் பேர் (தீவிரவாதிகள்) ஒரு நேரடி யுத்தம் நடத்தினால் நம் நாட்டிற்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டு விடாதா? இந்த அறிவிக்கப் பட்ட நேரடி யுத்தத்தின் (Declared War) முதல் சண்டை களத்தில் (Battle) யார் கை ஓங்கப் போகிறது என்று சில நாட்களில் தெரிந்து விடப் போகிறது.

இந்த நேரடி யுத்தத்தில் இறுதியாக இந்தியா வெல்ல நாம் என்ன செய்ய வேண்டும்?

இன்றைய தேதியில் இந்தியாவின் முதல் மற்றும் முக்கிய பிரச்சினை இந்த பாதுகாப்பு பிரச்சினை. இதில் நாம் தவறினால் நமது சுதந்திரத்தையே இழந்து விடும் அபாயம் உள்ளதுடன் நமது வருங்கால சந்ததிகள் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இத்தனை நாள் மறைமுக யுத்தத்தை நாம் அலட்சியப் படுத்தியது போல இந்த நேரடி யுத்தத்தை எடுத்துக் கொள்ள கூடாது.

தேசிய தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையாக இந்த பாதுகாப்பு விஷயத்தில் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். அனைத்து கட்சிகள் உள்ளடக்கிய ஒரு தேசிய அரசு கூட அமைக்கலாம். இந்த நாட்டிற்கே பொதுவான விரோதிகளை வேரோடு அழிக்க போர்க்கால நெருக்கடி நிலை கூட பிரகடனம் செய்யலாம். மக்களும் சில நாட்களுக்கு ஜாதி மதம். மொழி கட்சி இன வேறுபாடுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு இந்தியாவின் பாதுகாப்பிற்கு தம்மால் ஆன உதவி செய்தால் நம்மனைவருக்கும் நல்லது.

இந்த நெருக்கடியான நிலையை நம் நாட்டினர் ஒன்று கூடி ஒற்றுமையாக வாழ உதவி செய்யும் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்வோம். கூடிய சீக்கிரம் வெல்வோம் விரோதிகளை.

"இனி பொறுப்பதில்லை - தம்பி
எரி தழல் கொண்டு வா
நேரடி யுத்தம் அறைகூவியவரனைவரும்
சாயும் வரை ஓய மாட்டோம் "
நன்றி.

Wednesday, November 26, 2008

ஒரே இரவில் குண்டாகிப் போன ஏழு கோடி இந்தியர்கள்?


நீங்கள் குண்டா ஒல்லியா? (நாயகன் ஸ்டைலில் எனக்கே தெரியலேயப்பா என்று சொல்லி விடாதீர்கள்). குண்டு என்று நினைத்திருந்தால் ஓகே. ஆனால் நேற்று வரை ஒல்லி அல்லது சரியான எடை என்று நினைத்திருப்பவர்கள், இன்று தங்கள் எண்ணத்தை உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். ஏனென்றால், நேற்று வரை இப்படித்தான் தம்மை ஒல்லிபிச்சான்களாக நினைத்து கொண்டிருந்த சுமார் ஏழு கோடி இந்தியர்கள் ஒரே நாளில் இன்றைக்கு குண்டர்கள் (obese) ஆகி விட்டார்கள் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. விவரங்கள் கீழே.

உலக நல அமைப்பு (WHO), ஒருவரின் உயரம், உடல் எடை மற்றும் இடுப்பளவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர் குண்டா ஒல்லியா அல்லது சரியான எடை கொண்டவரா என்பதை நிர்ணயிக்க சில தரக் கட்டுப்பாடுகள் வகுத்திருந்தது. அதன் படி உடல் எடைக் குறியீடு (Body Mass Index - BMI) மற்றும் இடுப்பு சுற்றளவு முறையே 30 மற்றும் 102 செண்டி மீட்டர் அளவுக்கு மேல் இருந்தால் குண்டர்கள் எனவும் BMI 25 க்கு மேல் இருந்தால் அதிகப் படியான எடை கொண்டவர் எனவும் நிர்ணயம் செய்திருந்தது. நேற்று வரை இந்த தர நிர்ணயங்கள் நடைமுறையில் இருந்தன.

ஆனால், வெவ்வேறு நாடுகளை சார்ந்த மருத்துவ அமைப்புகள், அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தின் அடிப்படையில் புதிய விதிகளை அமைத்துக் கொள்ளலாம் என்ற உலக நல அமைப்பின் அறிவுரையின் படி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, இந்திய குண்டர்களை கண்டறிவதற்காக புதிய விதிமுறைகளை இன்று முதல் நடைமுறை படுத்தியுள்ளது. இதன் படி உடல் எடை குறியீடு 23 க்கு மேல் இருந்தால் அதிக எடை கொண்டவர், குறியீடு 25 க்கு மேல் இருந்தால் குண்டர். மேலும் இடுப்பளவு 90 செண்டி மீட்டர் மேல் இருந்தால் (பெண்களுக்கு 80 செண்டி மீட்) குண்டர் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி நேற்று வரை சாதாரண எடை கொண்டவர்களாக கருதப் பட்ட சுமார் ஏழு கோடி இந்தியர்கள் இன்று முதல் குண்டர்களாக கருதப் படுவார்கள் என ஒரு பத்திரிக்கை செய்தி கூறுகிறது.

(இப்போது உடல் எடைக் குறியீட்டை எப்படி கணக்கிடுவது என்று பார்க்கலாம். உங்கள் எடையை (கிலோ கணக்கில்) உங்கள் உயரத்தின் வர்க்கத்தால் (மீட்டர் கணக்கில்) வகுத்தால் வருவதுதான் BMI என அறியப் படும் உடல் எடை குறியீடு. உதாரணமாக 180 செ.மீ.(1.80 மீ.) உயரம் உள்ள ஒருவர் 80 கிலோ எடை இருந்தால் அவருடைய உடல் எடைக் குறியீடு 80/(1.80*1.80) =24.69 இவர் நேற்று வரை சராசரி எடை. இன்றோ அதிகப் படியான எடை கொண்டவர்)

மேற்கண்ட விதிமுறைகளின் படி அதிகப்படியான எடை கொண்டவர்கள் தினந்தோறும் 60 நிமிடங்கள் உடற்பயிற்சியில் (மூன்று தவணையாக) செய்ய வேண்டும் என இந்த நிபுணர்கள் குழு அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் இந்த விதிமுறைகளை நம்மூரில் கண்மூடித்தனமாக அனைவரும் பின்பற்ற முடியுமா என்பது ஒரு கேள்வி குறியே. ஏனென்றால், மாநகரங்களில் வாழும் பல (மேற்சொன்ன விதிப்படி) ஒல்லிபிச்சான்கள் இரண்டு மாடி படியேறவே மூச்சிரைக்கும் போது நாட்டு புறங்களில் உள்ள பல தொப்பையர்கள் தனது தொப்பையிலே நூறு கிலோவை அனாயசமாக தாங்கும் மற்றும் பலமணி நேரம் கடுமையாக உழைக்கும் கதைகளும் உண்டு.

இன்றைக்கு உலக குண்டர்கள் மன்னிக்கவும் குண்டு மறுபடியும் மன்னிக்கவும் குண்டான உடலமைப்பு (obesity) எதிர்ப்பு நாள் அனுசரிக்கப் படுகிறது. இதே போல, நம்மூர் (சமூக விரோத) குண்டர்கள் மற்றும் (தீவிரவாதிகள் வைக்கும்) குண்டு எதிர்ப்பு நாள் என்றும் ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நன்றி

இப்படிக்கு நேற்று வரை சராசரி எடை கொண்டவனாக இருந்து ஒரே நாளில் அதிக எடை கொண்டவனாக மாறிப் போன ஒரு இந்தியன். (ஒரே ஒரு ஆறுதல் இடுப்பளவில் இன்னும் ஒல்லிப்பிச்சான்தான்)

எனது பொருளகராதியில் சில தலைவர்கள்



என்னை ஈர்த்த சில தலைவர்களின் பட்டியல் இங்கே

காந்தி அடிகள்: நினைத்ததை முடித்தவர். வல்லவனுக்கும் (பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்) வல்லவர். அஹிம்சையால் ஹிம்சித்து அவர்களை வென்றவர்.

நேருஜி: இந்தியாவை கண்டுபிடித்தவர் (Discovery of India). பெரும் செல்வந்தராகப் பிறந்தும் சோசலிசம் பேசியவர்.

கர்மவீரர் காமராஜர்: படிப்பின் அருமை தெரிந்த படிக்காத மேதை. பதவி பணத்துக்காக அல்ல என்று நிருபித்து அரசியல்வாதிகள் தினமும் படிக்க வேண்டிய பாடமாக இருப்பவர்.

பெரியார்: தமிழகத்தின் விடி வெள்ளி. தமிழனை ஏன் என்று கேட்க வைத்தவர். அவரது சமூக புரடசியே இன்றைய தமிழகம் கண்டுள்ள சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆகும்.

டாக்டர் அம்பேத்கர்: பிறக்கும் சூழ்நிலை மட்டுமே ஒரு மனிதனின் வெற்றிக்கு ஆதாரம் ஆகாது என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தவர். உயர உயர பறந்தால் ஊர்குருவியால் பருந்தாக முடியும் என்று இந்த உலகுக்கு காட்டியவர்.

அறிஞர் அண்ணாதுரை: கட்சியை குடும்பமாக நினைத்தவர். சொந்த குடும்பத்தை மறந்தவர்.

இந்திரா காந்தி அம்மையார்: போக்ரானையும் பங்களாதேஷையும் உலகுக்கு காட்டியவர். அவர் இன்றைக்கு இருந்திருந்தால், இலங்கை பிரச்சினைக்கு வேறு விதமான தீர்வு கிடைத்திருக்கக் கூடும்.

கலைஞர் மு.க.: தமிழின் அதிர்ஷ்டம். தமிழ் நாட்டின் வற்றாத ஒரே ஜீவ (இலக்கிய) நதி. பெரியார் தமிழகத்தின் விடி வெள்ளி என்றால் இவரோ பகுத்தறிவு பகலவன்.

புரட்சி தலைவர். எம்.ஜி.ஆர்: ஏழைகளின் இதய நாயகன். இவரை நம்பினோர் கெட்டதில்லை. அவர் போட்ட சத்துணவு ஏழை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும்தான்.

புரட்சிதலைவி ஜெயலலிதா. தைரியத்தின் மறு வடிவம். இவர் மட்டும் இந்திய பிரதமராக இருந்திருந்தால், இந்தியாவை இன்று மிரட்டி வரும் தீவிரவாதம் என்றோ தொலைந்து போயிருக்கும்.

டாக்டர் நரசிம்மராவ்: பேசாமல் சாதித்தவர்.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

அதனை அவன் கண்விடல்" என்ற குறளுக்கு இலக்கணமாக இருந்தவர்.

திரு.வி.பி.சிங்: மத்திய சமூகம் ஒன்று உண்டு எனவும் அவர்களுக்கு மண்டல் கமிஷன் என்ற ஏணி தேவை என்றும் முதன் முதலாக உணர்ந்தவர். இன்றைக்கு பலர் மத்திய அரசுப் பதவியை (மத்திய அரசுப் பணிகள்) பிடிக்க உதவி தனது ஆட்சிப் பதவியை இழந்தவர்.

திரு. வாஜ்பேயி : "சாலைகளைப் போடு நாடு வளரும்" என்பதை தங்க நாற்கர சாலை தந்து நிருபித்த தங்கத் தலைவர்.

டாக்டர் மன்மோகன் சிங்: பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை. வோட்டுக்காக சிந்திக்காமல் நாட்டுக்காக (பொருளாதாரம்) சிந்திப்பவர்.

சோனியா காந்தி அம்மையார்: அவரது மாமியார் (இந்திரா காந்தி அம்மையார்) இன்று இருந்திருந்தால், மாமியாரே மெச்சுகிற மருமகளை நாம் பார்க்க முடிந்திருக்கும்.

டாக்டர் அப்துல் கலாம்: கனவுகளை விதைத்தவர். நாட்டின் வருங்கால உயர்வுக்கு யாருக்கு (குழந்தைகள்) நம்பிக்கை உரம் பாய்ச்ச வேண்டும் என்பதை அறிந்தவர்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. நீங்கள் இவற்றில் தாராளமாக முரண்படலாம். இருந்தும் இவற்றை இங்கே வெளியிட்டதற்கான காரணம் கீழே.

மேலே குறிப்பிட்ட தலைவர்கள் அனைவரும் சாதி, மதம், இனம், கட்சி, கொள்கைகள் ஆகியவற்றால் வேறுபட்டிருக்கலாம். ஆனால். ஒரு விஷயத்தில் அனைவருக்கும் ஒற்றுமை இருக்கிறது. அதுவானது, அனைவருக்கும் சில அல்லது பல சிறந்த தலைமைப் பண்புகள், அரிய சிறந்த குணங்கள் (Personality Attributes) இருந்திருக்கின்றன. அவற்றின் காரணமாகவே அவர்கள் மறக்க முடியாத தலைவர்கள் என்ற நிலைக்கு உயர்ந்து இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது அந்த நல்ல பண்புகளையும் சிறந்த குணங்களையுமே தவிர தலைவர்களின் பெயரில் வேற்றுமைகளையும் விரோதத்தையும் அல்ல.

Tuesday, November 25, 2008

இந்திய வணிக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு?



ஒரு வணிக நிறுவனத்தை இந்திய கம்பெனி சட்டம் (உருவாக்கப் பட்ட) ஒரு செயற்கையான மனிதனாகவே கருதுகிறது. ஒரு சாதாரண இந்திய குடிமகனுக்கு உரித்தான அனைத்து சமூக கடமைகளும் பொறுப்புகளும் இந்திய வணிக நிறுவனங்களுக்கும் உண்டு. ஆனால் இந்திய (தனியார்) வணிக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்ச்சி எப்போதுமே ஒரு மிகப் பெரிய கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. மேலும், இந்த நிறுவனங்களை பின்னின்று இயக்கும் இவற்றின் நிறுவனர்களை (எப்போதுமே) லாப நோக்கில் மட்டுமே இயங்கும் சுய நல சுரண்டல் கும்பலாகவே பலர் கருதி வருகின்றனர். இதற்கு காரணமில்லாமல் இல்லை. இந்திய வணிக நிறுவனங்களின் மீது பொதுவாக சுமத்தப் படும் குற்றச் சாட்டுகள் கீழே.

1.சரியான விலை அளவான லாபம் என்ற காந்திய கொள்கை எப்போதுமே இந்திய வணிக நிறுவனங்களுக்கு இருந்ததில்லை. பல சமயங்களில், சந்தைகளில் ஒரு கூட்டாதிக்கத்தை (Oligopoly) ஏற்படுத்திக் கொண்டு நுகர்வோரை ஏய்ப்பது வழக்கமாகிப் போன ஒன்று. விற்பனை விலையில் உற்பத்தி செலவு 10-20 சதவீதம் மட்டும் இருக்க லாபம் (margin) 80-90 சதவீதம் வரை கூட இருப்பதும் கூட உண்டு.
2. அதிக லாபம் பெற்றாலும் ஊழியர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் மட்டும் வழங்கி விட்டு (தகவல் தொடர்பு, மென் பொருள் போன்ற சில துறைகள் மட்டுமே விதி விலக்கு.) நிறுவனர்கள் தமக்கென வெளிப்படையான மிக ஆடம்பர வாழ்கையை நடத்துவதும் உண்டு. சிலர் தமக்கென்று மட்டுமில்லாமல் தனது மனைவியருக்கும் கூட தனி விமானங்கள் வாங்கி கொடுத்த கதைகளும் உண்டு.
3. அதே போல, அதிக லாபம் பெற்ற பின்னரும் சரிவர அரசுக்கு வரி செலுத்துவதில்லை என்ற குற்றச் சாட்டுகளும் உண்டு. இந்திய நிறுவனங்களின் மீது தாக்கல் செய்யப் பட்ட ஏராளமான வரி ஏய்ப்பு வழக்குகள் பல தீர்ப்பாயங்களில் (Tribunals) தேங்கி கிடக்கின்றன.

4. இவர்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் வெளிப்படையாக இருந்தது இல்லை. அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு பல ஊழல்களில் இவர்கள் ஈடுபட்டதும் உண்டு. சில சமயங்களில் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இவர்களே இருந்திருக்கிறார்கள். இந்திய சட்டத்தை எவ்வாறு தமக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்வது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தும் இவர்கள் ஒரு சாதாரண குடிமகன் போல சட்டத்தினை மதித்து அதன் படி நடக்கிறார்களா என்பது ஒரு கேள்விக் குறி.

5. பங்கு சந்தைகளிலும் கூட பல மோசடிகள் செய்து முதலீட்டாளர்களை சூதாட்டத்தில் ஈடுபடுவோர்கள் போல மாற்றிய பெருமையும் கூட இவர்களுக்கு உண்டு. இங்கும் கூட தாக்கல் செய்யப் பட்ட பல வழக்குகள் தீர்ப்பாயங்களில் இன்னும் தேங்கி கிடக்கின்றன.

6. தேசிய வளங்களை தனிப் பட்ட ஆதாயத்திற்காக சுரண்டும் பேர்வழிகளாகவே இவர்கள் கருதப் படுகிறார்கள். உதாரணமாக, இந்திய நாட்டின் கனிம வளங்கள், நீர் ஆதாரங்கள், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள், (இப்போது அதிகம் பேசப் படும் தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கான spectrum எனப்படும்) ரேடியோ அலைவரிசை ஆகியவை சிலரின் தனிப்பட்ட வளத்திற்கே பயன் படுகிறது.

7. நாட்டின் சுற்றுப்புற சூழ்நிலையை மாசு படுத்தும் தவறான போக்கிலும் இவர்கள் ஈடுபடுவதாகவும் வலுவான குற்றச் சாட்டுகள் உண்டு. சுத்திகரிக்கப்படாமல் ஆறு, ஏரி போன்ற குடி நீர் ஆதாரங்களில் கலக்கும் கழிவு நீர், வாயு மண்டலத்தில் நேரடியாக கலக்கும் புகை என்று பல வகைகளிலும் சுற்றுப்புறச் சூழல் இவர்களால் பாதிப்பு அடைகிறது.

இப்படி பலவகைகளும் இந்தியாவின் நலம் குறித்து அக்கறை காட்டாமலும், இந்திய நலனுக்கு எதிராகவும் செயல் படுபவர்களாகவுமே பொதுவாக கருதப்படும் இவர்களுக்கு தமது சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தக் கூடிய ஒரு அருமையான சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மாநாட்டில் உரையாற்றிய நிதி அமைச்சர் இவர்களுக்கு சில யோசனைகள் தெரிவித்து உள்ளார். அதாவது, இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விற்பனை விலையினை குறைப்பது. இவ்வாறு செய்வதின் மூலம், மக்களிடையே மீண்டும் பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும், தேவைகள் அதிகரிக்கும், இப்போதைக்கு தளர்ந்துள்ள இந்திய பொருளாதாரம் மீண்டும் தலை நிமிர ஒரு வாய்ப்பு கிடைக்கும். மேலும், தொழிற் சாலைகளையும் அலுவலங்களையும் மூட வேண்டிய அவசியம் இருக்காது.. ஊழியர்களுக்கும் வேலை போகும் அபாயம் நேரிடாது. உலக பொருட் சந்தைகளின் வீழ்ச்சியினால், பல மூல பொருட்களின் விலைகள் குறைந்திருக்கும் இந்த தருணத்தில் உற்பத்தி செலவுகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் அரசாங்கமும் தனது தரப்பில் வரிகளை குறைக்கவும் முன் வரும். இதனால் விலை குறைப்பு என்பது சாத்தியமான ஒன்றே. இவ்வாறு விலை குறைப்பு செய்வதின் இந்திய வணிக நிறுவனங்கள் நாட்டின் மீது தமக்கிருக்கும் பற்றினையும் நன்றியினையும் வெளிப் படுத்த முடியும். நாட்டையும் ஒரு பெரிய பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க முடியும். நிதி அமைச்சரின் இந்த யோசனை மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சியின் பெரும்பங்கு லாபம் இந்த தொழில் அதிபர்கள் சமூகத்தையே சேர்ந்திருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. ஆகவே நாட்டிற்காக ஒன்றிரண்டு வருடம் இவர்கள் சிறிய நஷ்டங்களை சந்தித்தால் தவறொன்றும் இல்லையே. மேலும் இவர்களின் நிதிப் பற்றாக்குறையை நீக்குவதற்காகவும், விற்பனையை அதிகரிப்பதற்காகவும், இந்திய அரசும் இந்திய தலைமை வங்கியும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. உதாரணம், வட்டி வீத குறைப்பு, பணப் புழக்கத்தை அதிகரிப்பது, இறக்குமதி வரியினை அதிகப் படுத்துவது, வெளிநாடுகளில் இருந்து கடன் பெறும் வழிமுறைகளை எளிமைப் படுத்துவது போன்றவை.

இவர்களுக்கு இவ்வளவு நன்மைகள் செய்துள்ள அரசின் கோரிக்கையை ஏற்பார்களா இந்த பெரும் தொழில் அதிபர்கள்? குறைப்பார்களா தமது உற்பத்தி பொருட்களின் விற்பனை விலைகளை? காப்பாற்றுவார்களா இந்தியாவை பொருளாதார சரிவிலிருந்து?

பொறுத்திருந்து பார்ப்போம்

Monday, November 24, 2008

முத்திரை பதித்த மூவர் கூட்டணி


சமீபத்தில் நடை பெற்ற G-20 மாநாட்டில் அனைவரின் கவனமும் சீனாவின் மீதுதான் இருந்தது. இந்த மாநாடு துவங்குவதிற்கு சற்று முன்னர்தான் சீனா 25 லட்ச கோடிகள் மதிப்புள்ள ஒரு மிக பெரிய பொருளாதார திட்டத்தை அறிவித்திருந்தது. அந்த திட்டம் மொத்த உலகினையே பொருளாதார தேக்கதிலிருந்து மீட்டெடுக்கும் வல்லமை படைத்ததாக இருக்கும் என்றும் பலர் நம்பினர்.

அதே சமயத்தில் அவ்வளவு பெரிய பண வலிமை இல்லாத நாடாக கருதப் படும் இந்தியாவிலிருந்து சென்ற மூவர் கூட்டணி, இந்தியாவின் நிலையை சிறப்பாக வெளிப்படுத்தியதுடன், உலகை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்க இந்தியா தெரிவித்த யோசனைகளை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும்படியும் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. விவரங்கள் கீழே.

G-20 என்பது உலகின் முன்னேறிய நாடுகள் மற்றும் (முக்கிய) முன்னேறி வரும் நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய கூட்டமைப்பு ஆகும். இன்றைய உலக பொருளாதார சிக்கலை எப்படி சமாளிப்பது என்று ஆலோசிப்பதற்காக, இந்த G-20 நாடுகளின் உச்சி மாநாடு அமெரிக்காவில் சமீபத்தில் நடை பெற்றது. இந்த பொருளாதார சிக்கலை முதலில் உருவாக்கிய நாடாகிய அமெரிக்காவின் தலைமை பொறுப்பிலிருக்கும் திரு. புஷ் இன்னும் மிகக் குறைந்த காலமே பதவியில் இருப்பார் என்பதாலும், அடுத்து தலைமை பொறுப்புக்கு வரவிருக்கும் ஒபாமா அவர்கள் இந்த மாநாட்டில் பெயரளவுக்கு கூட கலந்து கொள்ளாததாலும், அமெரிக்கா இந்த மாநாட்டில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

முதல் பத்தியில் சொன்னது போல, சீனாவின் நிலை பெரும்பாலானவர்களால் ஆவலுடன் எதிர்பார்க்க பட்டது. அதே சமயம், இந்தியா பொதுவாக உலக அரங்கில் (சீனாவுடன் ஒப்பிடுகையில்) பொருளாதார வலிமை குறைந்த நாடாக கருதப் பட்டாலும், இந்திய பிரதமரை G-20 மாநாடு புறக்கணிக்க முடியாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் அந்த மாநாட்டின் தலைவர்களிலேயே (அடிப்படையில்) ஒரே பொருளாதார வல்லுநர் (Econmist) நம் பிரதமர் மட்டும்தான். மேலும், ஒரு நாட்டின் மத்திய வங்கியின் தலைமை பொறுப்பில் ஏற்கனவே இருந்தவர் என்பதால் நிதி சிக்கல்கள் பற்றி தெளிவாக அறிந்தவர் என்ற முறையிலும் நம் பிரதமரின் பேச்சுக்கு (திட்டங்களுக்கு) தனி மரியாதை இருந்தது. மேலும், இந்தியா ஒரு இறக்குமதி சார்ந்த நாடு என்பதாலும், முந்தைய பொருளாதார சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாத ஒரே பெரிய ஆசிய நாடு என்பதாலும் இந்திய நிலைப்பாட்டிற்கு ஓரளவிற்கு வரவேற்பு இருந்தது.

உலகத்தின் தற்போதைய பொருளாதார சிக்கலை தீர்த்து வைப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய நிலைப் பாடுகள் குறித்து பெரும் கருத்து வேறுபாடுகள் மாநாட்டில் நிலவின. உதாரணமாக, அமெரிக்கா-ஐரோப்பா இடையே சந்தைகள் மீது கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து வேறுபாடு. வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளிடையே இறக்குமதி சார்ந்த கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த வேறுபாடு. உலக நிதி நிறுவனங்கள் இந்த சிக்கலை தீர்த்து வைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அந்த நிறுவனங்களின் நிதி நிலைமையை வலு படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நாடுகளுக்கிடையே வேறுபாடுகள் என மாறுபாடுகளுக்கு பஞ்சமே இல்லாத மாநாடாக இந்த G-20 மாநாடு இருந்தது.

இந்த கருத்து வேறுபாடுகளை தீர்த்து வைப்பதில் இந்தியா பெரும் பங்கு வைத்தது. சீனாவும் இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு துணை நின்றது குறிப்பிடத் தக்கது. மேலும் இது குறித்த இந்தியாவின் அனைத்து நிலைப்பாடுகளும், மாநாட்டின் இறுதி திட்ட வரைவில் இடம் பெற்றிருந்தது இந்தியாவின் மற்றொரு வெற்றியாகும். இவ்வாறான சிறப்பான செயல் பாட்டிற்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.

இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டிற்கான இந்தியாவின் நிலைப் பாட்டினை சிறப்பாக வெளிப்படுத்துவதற்காக முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார். இதன்படி அவரது இடது மூளையான திரு. சிதம்பரம் அவர்களை இதர வளரும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் மாநாட்டிற்கு முன்னதாகவே பேச்சுவார்த்தை நடத்த செய்து பொருளாதார சிக்கலை எப்படி ஒருங்கிணைத்து எதிர்கொள்வது என்று ஒத்த கருத்து ஏற்பட வழி வகுத்தார். அவரது வலது மூளையான அலுவாலியாவும் மாநாட்டிற்கு இரு நாட்கள் முன்னதாகவே அமெரிக்கா சென்று அங்குள்ள பிரதிநிதிகளுடன் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்கான திட்டங்களை தீட்டினார். இந்திய பிரதமரும் இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி உலகப் பொருளாதார சிக்கலை தீர்பதற்காக இந்திய தீர்வை முன் வைத்தார். நம்மை பெருமிதம் கொள்ள செய்யும் இந்த செயல்பாட்டிற்கு மூவரின் (பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் திட்டக் குழு துணைத் தலைவர்) கூட்டணிக்கு வாழ்த்து கூறும் அதே வேளையில், என் மனதிற்குள்ளே ஒரு மிகப் பெரிய கேள்வி எழுகிறது.

உலகின் மிகச் சிறந்த பொருளாதார வல்லுனர்களின் கூட்டணியாக கருதப் படும் இவர்கள் இந்தியாவின் ஆட்சி பொறுப்பில் நான்கரை ஆண்டு காலம் இருந்த போதும் இவர்களால் ஏன் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. காரணங்கள் என்னவாக இருக்க முடியும்?

பெரும்பாலும் மேலை நாகரிக சிந்தனைகள் கொண்ட இவர்களால், பொருளாதார சீர்திருத்தங்களை (நல்ல நோக்கில் இருந்தாலும் கூட) இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப சரியாக வடிவமைக்க முடியாமல் போனது காரணமா?

நாட்டுக்காக யோசிக்காமல் வோட்டுக்காக அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் காரணமா? அல்லது அரசியல் வாதிகளை சரிவர வழி நடத்தாத (எப்போதுமே ஆட்சி பொறுப்பில் இருக்கும்) ஊழல் அரசு அதிகாரிகள் காரணமா?

முழுக்க முழுக்க பணத்தாசை பிடித்து இத்தகைய சீர்திருத்தங்களை எப்படி தமது சொந்த லாபத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று மட்டும் சிந்திக்கும் தொழில் அதிபர்கள் காரணமா?

அல்லது எது நடந்தால் என்ன, தாம் நன்றாக இருந்தால் போதும் என்று குறுகிய வட்டத்தில் சிந்திக்கும் பொது மக்கள் காரணமா?

சிந்திப்போம்

Sunday, November 23, 2008

சிட்டி பேங்க் இப்போது சிக்கலில் - ஓர் இந்திய பார்வை


சிட்டி பேங்க் உலகின் மிகப் பெரிய பன்னாட்டு வணிக வங்கிகளுள் ஒன்று. இந்தியா உட்பட உலகின் 100 நடுகளுக்கும் மேல் இந்த வங்கிக்கு கிளைகள் உண்டு. சுமார் 3,00,000 பேருக்கு மேல் இந்த வங்கியில் பணி புரிகின்றனர். இப்போதைக்கு இதனுடைய தலைவர் ஒரு இந்தியர் (விக்ரம் பண்டிட் ). இந்த வங்கி தொடங்கி (1812) கிட்டத்தட்ட 200 வருடங்கள் ஆகின்றன . இந்த வங்கியின் பாலன்ஸ் சீட் அளவு சுமார் 2 டிரில்லியன் டாலர். அதாவது இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1 கோடியே கோடி ரூபாய். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை போல இரண்டு மடங்குக்கும் மேலே.

அமெரிக்காவின் சப்ப்ரைம் பிரச்சினை (Subprime Crisis) இந்த வங்கியினையும் விட்டு வைக்க வில்லை. கடந்த வருடம் இந்த வங்கி சுமார் 20 பில்லியன் டாலர் (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்) இழப்பை சந்தித்துள்ளது. இந்த வங்கி திவால் ஆகும் சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. மேலும் 52,000 பணியாளர்கள் (இந்தியாவில் மட்டும் 1,000 பேர்) வீட்டிற்கு அனுப்பப் படுவார்கள் என இந்த வங்கியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது . ஏற்கனவே 23,000 பேர் வீட்டுக்கு அனுப்ப பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதன் தலைவர் (விக்ரம் பண்டிட்) கூட வெளியேற்றப் படலாம் என பத்திரிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன . இதன் பங்கு மதிப்பு இரண்டு மாதங்களிலேயே சுமார் 80 சதவீதம் (25 டாலரிலிருந்து 4 டாலர்) இழந்துள்ளது . பங்கு மதிப்பை காப்பாற்ற அமெரிக்க அரசு மற்றும் அரேபிய முதலீட்டாளர்கள் எடுத்த முயற்சி இது வரை பலிக்க வில்லை. மேலும், புஷ் அறிவித்த 700 பில்லியன் டாலர் மீட்பு திட்டத்தின் கீழ் இந்த வங்கியும் நிதி உதவி பெறக் கூடும் என்பது இன்னோர் தகவல். இப்போது அமெரிக்கா அரசு இதனை தேசியமயமாக்கும் யோசனையில் இருக்கிறது என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.


இதுவரை சுமார் 22 வங்கிகள் அமெரிக்காவில் திவால் ஆகி உள்ளன. பத்தோடு இது பதினொன்று என்று நாம் சிட்டி பேங்க் பிரச்சினையை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் இதுவரை திவால் ஆன வங்கிகள் முதலீட்டு அல்லது வீட்டுக் கடன் வங்கிகள் (Investment Banks and Housing FInance Institutions). ஆனால் சிட்டி பேங்க் ஒரு வணிக வங்கி (Commercial Bank). இந்திய பாணியில் சொல்லப் போனால் , இது வரை திவால் ஆன வங்கிகள் ரிலையன்ஸ் காபிடல், திவான் ஹௌசிங் போன்றவை. ஆனால் சிட்டி பேங்கோ ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்றது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா திவால் ஆகும் சூழ்நிலை என்றால் இந்தியா எவ்வளவு மோசமான சிக்கலில் மாட்டி கொண்டிருக்க வேண்டும்?


இந்த வங்கி வீழும் பட்சத்தில் இதன் தாக்கம் உலக அளவில் மிகப் பெரியதாக இருக்கும் . வீழ்ச்சியின் பாதிப்பு இந்திய வங்கிகளை கூட பெருமளவு தாக்கும். காரணம் , இது வரை பன்னாட்டு முதலீட்டு வங்கிகளின் விழ்ச்சியின் பாதிப்பு நமது பங்கு சந்தையில் மட்டுமே உணரப் பட்டது. இந்திய தேசிய வங்கிகள் பெருமளவு பாதிக்கப் படவில்லை . ஆனால் சிட்டி பேங்கின் மீது நமது தேசிய வங்கிகள் பல வகையிலான வணிக (கடன்) தொடர்புகள் வைத்துள்ளன . உதாரணமாக லெட்டர் ஆப் கிரெடிட் என அழைக்கப் படும் ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உறுதி பத்திரம் வாராக் கடனாக மாறும் அபாயம் உண்டு. இந்திய ஏற்றுமதியாளர்கள் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அந்நிய செலவாணி (கடன்) வர்த்தகம் பெருமளவு பாதிக்கப் படும். எனவே சிட்டி பேங்க் பிரச்சினை இந்திய தேசிய வங்கிகளையும் நமது ஏற்றுமதியினையும் (ஓரளவுக்கேனும்) பாதிக்கும் .


CITI NEVER SLEEPS என்பார்கள் . அதாவது 100 நாடுகளில் கிளைகள் இருப்பதால் 24 மணி நேரமும் இந்த வங்கி பணி புரிகிறது என்று பொருள். ஆனால் நமது கவலை இப்போது இந்த வங்கி நிரந்தரமாக தூங்கி விடக் கூடாதே என்பதுதான். நன்றி

Saturday, November 22, 2008

இங்கே வாருங்கள்! இந்தியாவைக் கண்டுபிடியுங்கள்!


நீங்கள் சரித்திர ஆர்வம் கொண்டு மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" போன்ற வரலாற்றின் அடிப்படையிலான புத்தகங்களைப் படிப்பதில் ஈடுபாடு கொண்டவரா? சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நேரில் சென்று பார்க்கும் ஆர்வம் கொண்டவரா? அந்த இடங்களில் நிற்கும் போது, காலத்தில் சற்றே பின்னோக்கி பயணம் செய்து "இங்கேதானே அக்பர் நின்றிருந்திருப்பார், அங்கேதானே ராஜ ராஜ சோழன் வாழ்ந்து இருப்பார் என்றெல்லாம் கற்பனை செய்து பார்ப்பவரா? நீங்கள் வந்து பார்க்க வேண்டிய இடம் இது.

உலகின் பெரும்பாலான நாகரிகங்களுக்கும் இந்திய நாகரிகத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அதாவது, மிக குறைந்த காலமே சரித்திரத்தை உள்ளடக்கிய, உலகின் பெரும்பாலான நாகரிகங்களின் வரலாற்றின் வேரை எளிதாக தேடி கண்டுபிடித்து விட முடியும். ஆனால் இந்தியா போன்று குறைந்த பட்சம் 50,000 ஆண்டு கால சரித்திரம் கொண்ட ஒரு நாட்டின் வரலாற்று வேரினை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில், ஆலமரத்தின் பல்கி பெருகிய விழுதுகள் போன்று இந்தியாவில் பின்னர் வந்து கலந்த நாகரிகங்கள் ஏராளம். அந்த விழுதுகளும் ஒரு வேரினைப் போலவே இந்திய ஆலமரத்தினை இன்றைக்கு தாங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வேர்கள் போன்ற விழுதுகளைப் பற்றி ஓரளவேனும் அறிந்துக் கொள்ள இங்கே வந்து செல்வது அவசியம்.

இந்திய நாட்டின் 50,000 ஆண்டு கால சரித்திரத்தை ஒரே இடத்தில் ஒளித்து வைத்திருக்கும் இந்த வரலாற்று களஞ்சியம் (Nehru Centre) நிதி மையமான மும்பை மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. தனது மகள் இந்திரா இந்தியாவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காக நேருஜி எழுதிய "Discovery Of India" என்ற புத்தகத்தின் அடிப்படையில் வானளாவிய ஒரு கட்டிடத்தில் மிகப் பெரிய பரப்பளவில் இந்த வரலாற்று காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது .

இந்திய சரித்திரம் 14 பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு வெவ்வேறு அரங்குகளில் ஒலி ஒளி காட்சிகளாக அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது . இந்திய சரித்திரத்தின் ஆதியாம் கற்காலத்தை விளக்கும் முதல் அரங்கிலிருந்து நாம் தொடங்கும் காலப் பயணம், சிந்து சமவெளி நாகரிகம் , ஆரியர்களின் ஆக்கிரமிப்பு , மௌர்யர்கள் , புத்த , ஜைன மதங்கள் தோன்றிய வரலாறு என இந்தியாவின் ஒவ்வொரு சரித்திர கால கட்டத்திற்கும் உள்சென்று இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் வந்து நிறைவு பெறுகிறது .

இந்த அரங்குகளில் , இந்திய சரித்திரம் படங்களின் வாயிலாகவும் , நேருஜி அவர்களின் விளக்க உரைகள் வாயிலாகவும் , அந்தந்த காலகட்டத்தில் அகழ்வாராய்ச்சியின் மூலம் பெறப்பட்ட அரிய வகை பொருட்கள் வாயிலாகவும் , மாதிரி வடிவமைப்புகள் (Proto type models) வாயிலாகவும் இந்திய சரித்திரத்தை அனைவரும் முழுமையாக உணரும் வகையில் செய்திருப்பது தனிச் சிறப்பு . உதாரணமாக , ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரின் வாக்குமூலம் இங்கு உண்டு, சோழர் கால கோயில்களின் மாதிரி வடிவமைப்பும் உண்டு, சுதந்திர போராட்டத்தின் போது தியாகிகள் அடைத்து வைக்கப் பட்டிருந்த சிறையின் மாதிரி வடிவமைப்பும் உண்டு. இது மட்டுமல்ல, காந்தி நேரு போன்ற பெருந்தலைவர்களின் உணர்ச்சி மிகு விடுதலை முழக்கங்களின் முழுவடிவமும் இங்கு பார்க்க முடியும். வீடியோ காட்சிகளும் உண்டு. இந்த அரிய வகை காட்சியகத்தின் முழுப் பெருமையையும் வார்த்தைகளில் விவரிப்பது மிகவும் கடினம். இந்த காட்சியகத்தின் அரங்குகளிலூடே பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் 50,000 ஆண்டு கால இந்திய சரித்திரத்தை ஒரே நாளில் உணர்ந்து கொண்ட திருப்தி வருவது மட்டும் நிச்சயம்.

இன்றைய காலகட்டத்தில், பலருக்கு மும்பை வரும் வாய்ப்புகள் உண்டு. அப்படி வரும் பட்சத்தில் நீங்கள் தவறக் கூடாத ஒரு இடம் இந்த நேரு சென்டர் .

நன்றி

Friday, November 21, 2008

நிஜ வாழ்வின் உண்மையான ஒரு ஹீரோ


என்னுடைய விவரம் புரியாத வயதில் பழைய படங்கள் பார்க்க செல்லும் போதேல்லாம் தூங்கி விடும் வழக்கம் கொண்ட நான், நம்பியார் வரும் காடசிகளில் மட்டும் (அப்போதுதானே சண்டை காட்சிகளை பார்க்க முடியும்) எழுப்பி விடுமாறு கேட்பேன் என்று என் அம்மா கூறுவார். மேலும் பிடித்த நடிகர் யார் என்று கேட்கும் போதெல்லாம் என் வயதொத்தவர்கள் கமல் ரஜினி என்று சொல்லும் போது நான் மட்டும் நம்பியார் என்று சொல்வேன் என்றும் கேலி செய்வார்.

எனக்கு ஓரளவு விவரம் தெரிந்த போது நம்பியார் அவர்கள் வயது முதிர்ந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். அவருடைய நகைச்சுவை நடிப்பை மிகவும் விரும்பிய நான், அவர் (சினிமாவில்) கலங்கும் போது பாதிப்பும் அடைந்திருக்கிறேன்.

சினிமா என்ற நிழல் உலகம் வேறு நிஜ உலகம் வேறு என்று அறிந்த வயதிலும் கூட, மன சலனம் எளிதில் ஏற்படக் கூடிய ஒரு துறையில் அவர் பணியாற்றி வந்தாலும் தனி மனித வாழ்வில் ஒழுக்கம் பாராட்டியவர் என்று அறிந்த பின்னர் அவர் நான் விரும்பக் கூடிய ஒரு மனிதராகவே தொடர்ந்து இருந்திருக்கிறார் . மேலும் மனம் மற்றும் உடல் நலத்திற்கு தீங்கான பழக்க வழக்கங்களில் ஈடுபடாதவர் என்ற முறையிலும் இறை நம்பிக்கையில் சிறந்து விளங்கி தொடர்ந்து பல வருடங்கள் சபரி மலைக்கு சென்றவர் என்ற முறையிலும் பெரும் மதிப்புக்கும் உரியவராகவும் இருந்திருக்கிறார். தன்னுடைய சக திரை நட்சத்திரங்களையும் கூட சபரி மலைக்கு அழைத்து சென்று அவர்களையும் ஒழுக்கமான வாழ்வின் சிறப்புகளை உணர செய்த ஒரு சிறந்த குருவுமாக இருந்திருக்கிறார்.

தனது 89 ஆவது வயதில் கூட தனது இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உள்ளுறுப்புகளில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மிக இயல்பான முறையில் இயற்கை எய்தினார் என்றும் இந்த வயதிலும் அவர் முகம் வயது மூப்பை காட்ட வில்லை என்றும் பத்திரிகைகளில் படித்த போது அவர் உடல் மற்றும் மனம் ஆகியவற்றை வாழ்நாள் முழுதும் எவ்வளவு சிறப்பாக பேணி இருக்கிறார் என்று ஆச்சர்யப் பட்டேன்.

இப்படி ஒரு போட்டி மிக்க துறையில் சுமார் 60-70 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றியுடன் நிலைத்து நின்றது, தொழில் தனது தனிப்பட்ட வாழ்வை பாதிக்காமல் பார்த்து கொண்டது, நண்பர்களையும் வாழ்வில் உயர்விற்கு அழைத்து செல்ல முயன்றது, மனம் உடல் இரண்டையும் வாழ்நாள் இறுதி வரை சிறப்பாக பேணியது என எல்லா வகையிலும் என் பார்வையில் நிஜ வாழ்வின் ஒரு உண்மையான ஹீரோவாகவே இருந்த மற்றும் இருக்கும் நம்பியார் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் அவருடைய ஆத்மா சாந்தி அடைய அவருடைய இஷ்ட தெய்வமான சபரி மலை ஐயப்பனை வேண்டிக் கொள்கிறேன்.

நன்றி

Thursday, November 20, 2008

யார் இந்த கடற் கொள்ளைக்காரர்கள்?


உலகின் மேற்கு பகுதியையும் கிழக்கு பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய கடல் வழிப் பாதையான ஏடன் கடல் பகுதியில் சோமாலிய நாட்டைச் சேர்ந்த கடற் கொள்ளையர்கள் பல கப்பல்களை கொள்ளையடித்தும் கடத்தியும் பன்னாட்டு கப்பல் போக்குவரத்து கம்பெனிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.

மிகப் பழங்காலத்திலேயே அரேபியா கடல் பகுதியில் மிகப் பெரும் கொள்ளைகள் நடை பெற்றதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. பண்டைய சரித்திரத்தின் அடிப்படையில் எழுதப் பட்ட புகழ் பெற்ற நவீனமான கல்கியின் "பொன்னியின் செல்வன்" படித்திருக்கிறீர்களா? அதில் கூட இவர்களைப் பற்றி சில குறிப்புகள் (மூர்க்கமான புதிய வகை அரேபியா கடல் கொள்ளைக்காரர்கள்) உள்ளன. அருள்மொழி செல்வன் உத்தம சோழரை பதவியில் அமர்த்தி விட்டு இந்த கொள்ளை கும்பலை அடக்க செல்ல விரும்புவதாக ஒரு குறிப்பு கூட இருக்கும். இந்தியாவின் மேற்கு கடலோரம் இருக்கும் "வெல்ல முடியாத கடற் கோட்டையை" கட்டியவர்கள் கூட இந்த சொமாலியரே. கொள்ளை அடிக்கும் தொழில் இவர்கள் ஜீன்களிலேயே இருக்கும் போலிருக்கிறது.

சோமாலியா வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு ஏழை நாடு. இங்கு சரியான ஆட்சிமுறை அமையாததும் தொடரும் உள்நாட்டு குழப்பங்களும், எதிஒபியா- சோமாலியா சண்டையும், சோமாலியாவின் பூகோள ரீதியான நிலவமைப்பும் (பார்க்க வரைபடம்) கடற் கொள்ளைகாரர்கள் உருவாகவும் வளரவும் முக்கிய காரணங்கள். ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் (சூயஸ் கால்வாய்) முக்கிய வழியாக ஏடன் கடல் இருப்பதால், இந்த கடல் வழியாக தினசரி ஏராளமான கப்பல்கள் பிரயானிக்கின்றன. சோமாலியா அரசின் கட்டுப்பாடு இந்த நாட்டைச் சார்ந்த கடல் பகுதியில் குறைவாக இருப்பதால், கடற் கொள்ளையர்களுக்கு நல்ல வசதியாக போய் விட்டது.

இந்த கொள்ளைகாரர்கள் பெரும்பாலும் 20 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள். இவர்கள் மூன்று வகையாக உள்ளனர். கடல் பற்றி நன்கு தெரிந்து கொண்டு கடற் கொள்ளையர்களின் கண்களாக இயங்கும் உள்ளூர் மீனவர்கள், உடல் பலத்தை காட்டும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் இவர்களை இயக்கும் மூளைகளான அதி நவீன தொழிற் நுட்ப வல்லுனர்கள். ஒரு முக்கிய விஷயம். இவர்கள் பல குழுக்களாக பிரிந்து கொள்ளையடித்தாலும் தமக்குள்ளே சண்டைகள் இட்டு கொள்ளுவதில்லை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். Pirates of Caribbean படம் பார்த்துள்ளீர்களா? (பார்க்க வில்லையென்றால் நிச்சயம் பாருங்கள். ஜாலியான படம் ) அதில் உள்ளது போல் தமக்குள்ளே சில சட்டதிட்டங்கள் எல்லாம் கூட வைத்திருப்பார்கள் போல.

மேலும் ஒரு வேடிக்கையான தகவல். இவர்கள் வறுமை நாடான சோமாலியாவில் மிக ஆடம்பர வாழ்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்து கூட உண்டு. சமூகத்தின் பெரிய மனிதர்களாக இவர்கள் கருதப் படுகின்றனர். (நம் நாட்டில் கூட சில சமூக கொள்ளையர்களுக்கு மிக பெரிய அந்தஸ்து உண்டுதானே?) இந்த கொள்ளையில் கிடைக்கும் பணத்தை கொண்டு அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு இவர்கள் கடன் கூட கொடுக்கிறார்கள். (இது மட்டுமே திவால் ஆகாத வெளி நாட்டு வங்கி).

இவர்களை அடக்க உலக நாடுகள் (குறிப்பாக நேடோ நாடுகள்) எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்கவில்லை. உலக நாடுகளின் கடற்படைகள் இவர்களை துரத்தும் போதெல்லாம், தப்பி சென்று சோமாலியா கடல் எல்லைக்குள் இவர்கள் நுழைந்து விடுவதால் இவர்களை முழுமையாக அடக்க முடிய வில்லை. இதற்காக, ஜுன் 2008 இல் ஐ.நாவில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சோமாலிய கடல் எல்லைக்குள்ளும் உலக நாடுகளின் கடற்படைகள் இவர்களை துரத்தி செல்ல முடியும். ஆனால் இதற்கு பிறகும் கூட, இவர்களை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சிரமமான காரியமாகவே இருக்கிறது. 2008 இல் மட்டுமே 92 முறை கடல் தாக்குதல்கள் நடத்தி உள்ள இவர்கள் 36 முறை கப்பல்களை கடத்தி சென்றுள்ளனர். இவற்றில் இன்னும் 17 கப்பல்கள் மீட்கப் படாமல் உள்ளன. சமீபத்தில் கூட, உலகின் மிகப் பெரிய எண்ணெய் கப்பலொன்றை (Sirius Star) இவர்கள் கடத்தி சென்று உள்ளனர்.

இந்தியா கூட ஒன்பதாவது நாடாக ஒரு போர்க்கப்பலை இங்கே நிலை நிறுத்தி உள்ளது. காரணம், இந்த கடல் பாதை வழியே தினமும் ஏராளமான இந்திய சரக்குக் கப்பல்கள் பயணம் செய்கின்றன. மேலும் வெளி நாட்டுக் கப்பல்களில் கூட ஏரளாமான இந்திய மாலுமிகள் பணியாற்றுகின்றனர். நமது கடற் படை இந்த கடல் பகுதியில் மிகச் சிறப்பாக செயல் புரிந்து வருகிறது. இந்தியக் கப்பல்களுக்கு மட்டுமன்றி வேறு நாட்டு கப்பல்களுக்கும் சிறந்த பாதுகாப்பு அளிக்கப் படுகிறது. இந்தியக் கடற்படைக்கும் இந்த கொள்ளையருக்கும் சமீபத்தில் கூட ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு சிறு படகை கப்பலின் மீது வேகமாக மோதி விட்டு பின்னர் கப்பலிலிருந்து தாக்குதல் நடத்துவது இவர்களது பாணி. இதை திறம்பட முறியடித்த நமது கடற்படை கொள்ளையர்களின் கப்பலை மூழ்கடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இவர்களை முழுமையாக அடக்க ஒரு "பொன்னியின் செல்வன்" வருவானா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

நன்றி

Wednesday, November 19, 2008

இந்திய ரியல் எஸ்டேட் துறை சந்திக்கும் சவால்கள்



அமெரிக்கா பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு அவர்களின் ரியல் எஸ்டேட் துறையின் சரிவே முக்கிய காரணமாகும். அதன் தாக்கம் இந்தியாவிலும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. தற்போது, இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தேவைகள் குறைந்து போனதற்கு முக்கிய காரணங்கள் கீழே.

1. பொருளாதார தேக்கத்தின் காரணமாக புதிய தொழில்களும் வியாபாரங்களும் தொடங்கப் படுவது இந்தியாவிலும் இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய அலுவலங்களுக்கான கட்டிடங்களின் தேவை மிகவும் குறைந்து காணப் படுகிறது.

2. மேலும், சொந்த வீடு வாங்க விரும்புவோரில் சிலர் , வருங்காலத்தில் விலை குறையும் என்ற நம்பிக்கையால் தமது வீடு வாங்கும் முடிவை தள்ளிப் போடுகின்றனர். வேறு சிலர், தனது பணி, தொழில் மற்றும் வியாபாரங்களின் வருங்காலம் தெளிவாக கணிக்க முடியாத காரணத்தினால், இது போன்ற முதலீட்டு முடிவுகளை எடுக்க தயங்குகின்றனர். ரியல் எஸ்டேட் வாங்கி விற்கும் வியாபாரிகள் இத்துறை சந்திக்க இருக்கும் கடும் நெருக்கடிகளை முன்கூட்டியே அறிந்திருப்பதால், இதில் பணம் போட முன் வருவதில்லை.

வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களது நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி சமயத்தில் வளரும் நாடுகளில் உள்ள அதிக அபாயம் கொண்ட இத்துறையில் முதலீடு செய்ய தயங்குகின்றன. இந்திய மற்றும் மேல் நாட்டு பங்குத் துறைகள் மிகப் பெரும் வீழ்ச்சி அடைத்திருப்பதால், ரியல் எஸ்டேட் துறையினர் புதிய (பங்கு) முதல் திரட்ட வழி இல்லாமல் போய் விட்டது.

இந்தியாவில் மனைவிலைகள் இதுவரை பெரிய அளவில் வீழ்ச்சி அடைய வில்லையென்றாலும் கூட, அந்த விலைகளை அதிக உயரத்திலேயே நிலை நிறுத்துவதற்காக ரியல் எஸ்டேட் துறையினர் கொடுத்திருக்கும் விலை (கடன்களுக்கான வட்டி) மிகப் பெரியது. அதுவும் ரியல் எஸ்டேட் துறைக்கு கடன் கொடுக்க வங்கிகள் பெருமளவு முன் வராத காரணத்தினால், தற்போது இந்த துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. இவர்கள் இது வரை பெற்றுள்ள கடனுக்கான வட்டியினை திருப்பி செலுத்தவே தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலிருந்து இத்துறை மீள ஒரே வழி, மனைநிலம் மற்றும் கட்டிடங்களுக்கான விலைகளை மத்தியதர வர்க்கத்தினரும் வாங்கும் அளவிற்கு குறைப்பதுதான் ஆகும். ஒரு தடவை விலையை இறக்கி விட்டால் மேலும் மேலும் விலை குறைக்கப் படலாம் என்ற மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்ற தயக்கத்தின் காரணமாகவும் விலையை குறைத்தால் நஷ்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற அச்சத்தின் ரியல் எஸ்டேட் துறையினர் விலைகளை குறைக்க மறுக்கின்றனர். இந்த அச்சம் தேவை அற்றது. மாறி வரும் வாழ்வியலின் (Demography) காரணமாக, மேற்சொன்ன வகை மக்களிடையே வீட்டுக்கான தேவைகள் அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் இருந்து வருகிறது மேலும் கட்டிடங்கள் கட்ட தேவையான மூலப் பொருட்களான இரும்பு மற்றும் சிமெண்ட் ஆகியவற்றின் விலைகளும் குறைய இப்போது வாய்ப்பு இருப்பதால், கட்டிடங்களின் விலையை குறைப்பது ஓரளவு சாத்தியமே.

சரியான விலை மற்றும் அளவான லாபம் என்பது நோக்கமாக இருக்கும் பட்சத்தில் எந்த நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையிலும் இந்திய ரியல் எஸ்டேட் துறையினரால் நிலைத்து நிற்க முடியும்.

Tuesday, November 18, 2008

காஷ்மீர் தேர்தல் தரும் புதிய நம்பிக்கைகள்.



காஷ்மீர் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்த வாக்கு பதிவின் போது பொது மக்கள் திவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் மீறி கடும் பனி மற்றும் குளிரையும் (-11 c) பொருட்படுத்தாது பெருமளவில் திரண்டு வந்து வாக்களித்து உள்ளனர். சராசரி வாக்கு பதிவு சுமார் 55 சதவீதம் என்று முதல் கட்ட தகவல் அறிக்கை தெரிவிக்கின்றது . பிரிவினை வாதம் பேசப் படும் காஷ்மீரில் இவ்வளவு மக்கள் (இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து) வாக்கு அளித்து இருப்பது மன நிறைவை தருகிறது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பண்டிபோரா (Bandipora) மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் 74 சதவீதம் வாக்கு பதிவு ஆகி இருப்பது. ஏனெனில், இந்த மாவட்டத்தை தீவிரவாதிகள் தமது பிரிவினை வாத முயற்சிகளுக்கு சோதனை களமாக (Test Case/ Pilot Project) பயன்படுத்தியது குறிப்பிடத் தக்கது. தீவிரவாதிகளின் கனவு மாவட்டமே அவர்களின் மிரட்டலுக்கு அடி பணியாது மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது.

இந்த தேர்தலில் வாக்கு பதிவின் துவக்கத்திலேயே மூன்றாவது நபராக வந்து ஒரு (சரணடைந்த) முன்னாள் தீவிரவாதி வாக்கு அளித்திருப்பதும், பல வாக்காளர்கள், விடுதலைக்காக சில காலம் காத்திருக்கலாம், ஆனால் மாநில வளர்ச்சிக்காக காத்திருக்க முடியாது என்று பேட்டி அளித்திருப்பதும் கவனிக்க வேண்டியவை.

முதல் கட்ட தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த மத்திய மாநில அரசுகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் , மாநில காவல் துறை மற்றும் ராணுவ துறைக்கும் வாழ்த்துகளை தெரிவிப்போம் . அதே சமயத்தில், இந்த தேர்தல் மூலம் ஏற்படுள்ள மக்கள் மன மாற்றத்தை (சிறிதளவே ஆயினும்) சிறப்பாக உபயோகப் படுத்தி, பிரிவினை வாதத்தை காஷ்மீர் மாநிலத்திலிருந்து முற்றிலுமாக வேரறுப்பது, மத்திய மற்றும் (இந்த தேர்தலின் மூலம் அமைய போகிற புதிய) மாநில அரசுகளின் முக்கிய பொறுப்பு ஆகும்.

நன்றி.


சமயங்களில் பின்னூட்டங்கள் பதிவை விட சிறப்பாக இருக்கும் எனவே, பின்னூட்டங்களை பார்க்க தவறி விடாதீர். நன்றி.

வாழ்க்கை பிரச்சினைகளால் மனம் தளர்ந்து போகிறீர்களா?


கவலைப் படாதீர்கள். நம்பிக்கைகளால் மன தளர்ச்சிகளை வெல்ல முடியும். சொல்பவர் யார் தெரியுமா? பிறவியிலேயே கை கால்களை முழுமையாக இழந்தும் வாழ்வில் வெற்றிபெற்ற திரு.நிக். இந்த நம்பிக்கை நட்சத்திரத்தைப் பற்றி சில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்த நிக் தனது இயலா நிலையை எண்ணி மனம் நொந்து எட்டு வயதில் தற்கொலைக்கு முயன்றார். பெற்றோரின் அன்பையும் அவர்களுக்கு தனது தற்கொலை முடிவால் நேரிடக் கூடிய மன வருத்ததையும் எண்ணி அந்த முடிவை அப்போது கை விட்டார் நிக்.
(நிக் பற்றிய வீடியோ படம் )

பின்னர், தன்னை போலவே பிறவியிலேயே ஊனமுற்றவர்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார் இவர். அதில் ஒருவரை இறக்கும் தருவாயில் நிக் சந்திக்க, அந்த கடினமான சூழ்நிலையிலும் புன்னகைத்த அந்த புதிய நண்பரின் தன்மை இவருடைய மன நிலையை பெரிதும் பாதித்தது. இறக்கின்ற தருவாயில் கூட ஒருவரால் புன்னகைக்க முடிகிற போது தன்னால் ஏன் உற்சாகமாக வாழ முடியாது என்ற கேள்வி அவரது மனதுக்குள் எழுந்தது.

அன்றிலிருந்து இன்று வரை அவர் பெற்ற வெற்றிகள் ஏராளம். கணக்கியலில் பட்டம் பெற்ற இவர் சொந்தமாக ஆரம்பித்தது இரு நிறுவனங்கள். (Attitude is Attitude and Life without limbs). உலகெங்கும் பயணம் செய்துள்ள இவர் தனது 25 வயதிற்குள்ளே இது வரை 23 நாடுகளில் 20 லட்சம் பேருக்கு உற்சாக உரை (Motivational Speech) நிகழ்த்தி உள்ளார். (இதுவே ஒரு மிகப் பெரிய சாதனை அல்லவா?) இப்போது இந்தியா வந்திருக்கும் இவர் மேலும் பல நாடுகள் செல்லும் உத்தேசத்தில் உள்ளார்.

பொருளாதார சிக்கல் நிறைந்த இன்றைய சூழ் நிலையில் நம் இளைஞர்களுக்கு அவர் கூறும் சில யோசனைகள் கீழே.

"பயம் என்பது உண்மை போல தோன்றும் பொய் (FEAR = False Evidence Appearing to be Real)

அதை நம்பிக்கை கொண்டு வென்றிடுங்கள். நம்பிக்கை என்பது உள்ளத்தின் மீது வைக்கும் முழு உறுதிப்பாடு (FAITH = Full Assurance In The Heart).

இது வரை வாழ்வில் எடுத்த தவறான முடிவுகளுக்காக கவலைப்படாதீர்கள். ஏனென்றால் எப்படி எடிசன் தனது தவறான ஆராய்ச்சிகளின் உதவியை கொண்டு பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தாரோ அது போல உங்கள் தவறான முடிவுகள் சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவி செய்யும்.

எது வெற்றி என்பதில் தெளிவாக இருங்கள். சிலருக்கு பணம் வெற்றி, சிலருக்கு பதவி வெற்றி. சிலருக்கோ அமைதியான வாழ்வு வெற்றி. நான் பெற்ற வெற்றி என் வாழ்வின் நோக்கத்தை அடைந்தது (மற்றவருக்கு நம்பிக்கை அளிப்பதன் மூலம்). நான் சந்தித்த பல பணக்காரர்கள் என்னை விட குறைந்த அளவு மனநிறைவுடன் வாழ்வதாகவே அறிகிறேன். நரகத்தில் வாழ்ந்து சொர்கத்தை அடைவதை விட சொர்க்கத்தில் வாழ்ந்து நரகத்தை அடைய விரும்புகிறவன் நான். எனவே நண்பர்களே, எதை இழந்து எதை பெறுவது என்ற உங்களுடைய முடிவில் தெளிவாக இருங்கள்.

எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்."

குண்டு வெடிப்புகளையும், கொலை கொள்ளை போன்ற விஷயங்களையுமே முதல் பக்கத்தில் போடும் நம் பத்திரிக்கைகள் இதை போன்ற நல்ல விஷயங்களையும் முதல் பக்கத்தில் போட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நன்றி.

Monday, November 17, 2008

இந்தியா - சீனா முந்தப் போவது யார்?


இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டு நாடுகளும் உலகின் பழம் பெரும் நாகரிகங்களின் தொட்டில்களாகக் கருதப்படுபவன. மக்கள் தொகையிலும் நாட்டின் வளர்ச்சி விகிதத்திலும் உலகின் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவை. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு இவ்விரண்டு நாடுகளும் தேர்ந்தெடுத்த வழிமுறைகள் வேறுவேறு. அந்த வழிமுறைகளைப் பற்றியும் இரண்டு நாடுகளில் முந்தப் போவது யார் என்பது பற்றியும் இங்கு அலசுவோம்.

தற்கால சுதந்திர இந்தியா தனது ஜனநாயக பயணத்தை துவக்கியது 1947 இல். தற்கால சீனா, மக்கள் சீனக் குடியரசாக (People's Republic of China) கம்யூனிச பயணத்தை துவக்கியது 1949 இல். சுதந்திரம் பெற்றவுடன் இந்தியா தேர்ந்தெடுத்த பாதை தனியாரும் அரசும் இணைந்து இயங்கும் (சோஷலிச உணர்வு கொண்ட) கலவை பொருளாதாரம் (Mixed Economy). சீனா தேர்ந்தெடுத்த பாதையோ அனைத்தும் அரசே என்ற கம்யூனிச பொருளாதாரம்.

இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் துவங்கியது 1991 இல். இந்த விஷயத்தில் முந்திக் கொண்ட சீனா தனது பொருளாதார சீர்திருத்தங்களை 1981 லேயே துவங்கி விட்டது. இந்திய சீர்திருத்தங்கள் ஜனநாயக ரீதியானவை. ஒரு பெட்டிக் கடையை நகர்த்தக் கூட சில சமயங்களில் உச்ச நீதி மன்றத்தின் அனுமதி பெற வேண்டியிருக்கும். ஆனால் சீனாவின் சீர்திருத்தங்களோ எதேச்சிகாரமானவை. நகரங்களைக் கூட சில நாட்களில் நகர்த்தி வைக்க முடியும். இந்திய சீர்திருத்தங்கள் பொதுவாக வெளிப்படையானவை. இந்தியாவில் ஊடகங்களும் எதிர்கட்சிகளும் அரசை புரட்டி எடுக்க முடியும். சீனாவிலோ ஊடகங்கள் அரசின் முழுக் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இரும்புத்திரை பூட்டியிருப்பதால் அங்கிருந்து வரும் பல தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகும்.

பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவில் கையாளப்படும் முறை பொருளாதாரத்தில் அரசின் பங்கைக் குறைப்பது, மக்களை அதிகம் முதலீடு செய்ய மற்றும் செலவிட வைப்பது, சீனாவிலோ அரசே அதிகம் பொருளாதார முடிவுகளை எடுப்பது மற்றும் உற்பத்திஇனை அதிகப் படுத்துவது. இதன் காரணமாக இந்தியா ஒரு இறக்குமதி சார்ந்த நாடாகவும் சீனா ஒரு ஏற்றுமதி சார்ந்த நாடாகவும் இருக்கின்றன. இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு சீனாவை விட மிகக் குறைவு. மேலும் இந்தியாவில் முதல் தலைமுறை பெரும் கோடீஸ்வரர்கள் (First Generation Billionaires) தனியார் துறையில் பலர் உருவாக , அரசோ பெரும் கடனாளியாகவே உள்ளது. அதே சமயம் சீனாவிலோ அரசின் கைவசம் மிகப் பெரும் தொகை உள்ளது. இதன் காரணமாகவே இந்த பொருளாதார தேக்க சூழ்நிலையில் கூட சீனா அரசால் 586 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்ய முடிகிறது. இந்திய அரசோ அவ்வளவு கடன் மட்டுமே வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தியாவின் சீர்திருத்தங்கள் பெரும்பாலும் நிதித் துறையில். இந்தியாவில் அந்நிய முதலீடுகள் நிதி சந்தைகள் மூலமாகவே பெறப் பட்டன. சீனாவின் சீர்திருத்தங்களோ பெரும்பாலும் உற்பத்தி துறையில். நேரடி அந்நிய முதலீடுகள் உற்பத்தி துறையில் பெறப் பட்டன. இந்திய நிறுவனங்களின் பங்குகள் அந்நியர் வசம் இருந்தாலும் தலைமை பொறுப்பு பெரும்பாலும் இந்தியர் வசமே உள்ளது. சீனாவிலோ அந்நியர்கள் கிட்டத் தட்ட முழுமையாக பல நிறுவனங்களை சொந்தம் கொண்டாட முடியும். சீனாவை விட இந்தியாவின் நிதித் துறை அதிகம் திறக்கப் பட்டு இருப்பதுடன் மிகவும் வலிமையான தாகவும் உள்ளது. இந்தியாவின் நாணயமான ரூபாய்க்கு மற்ற அந்நிய செலவானியாக மாற்றப் படும் தன்மை (Partial Rupee Convertibility) ஓரளவுக்கு உண்டு. இந்திய சந்தைகள் நாணய மாற்று விகிதத்தை (Market decided Rates) நிர்ணயிக்கின்றன ஆனால் சீனா யுஅனுக்கோ (Yuan) மாற்றப் படும் தன்மை கிடையாது. அரசே நாணய மாற்று விகிதத்தை (Exchange Rate) நிர்ணயிக்கின்றது

இப்போது உள்ள உலகப் பொருளாதார தேக்க நிலை இரு நாடுகளையுமே பாதிக்கும். சீனாவிற்கு ஏற்றுமதி இருக்காது. இந்தியாவிற்கோ அந்நிய முதலீடு கிடைக்காது, மேற்சொன்னது போல சீனாவால் பெரும் முதலீடுகள் (நம்பகத் தன்மை கேள்விக் குறி) செய்ய முடியும் போது இந்திய அரசினால் அவ்வாறு செய்ய முடிவது கடினம். எனவே இந்தியா இந்தியர்களின் தனிப் பட்ட திறமைகளின் (Enterpreneurship and Innovative Skills) அடிப்படையிலேயே இந்த சிக்கலில் இருந்து வெளிவர முடியும்

இப்போதுள்ள சூழ்நிலையில் சீனாவே ரேசில் முந்தியுள்ளது போல தோன்றினாலும் கூட எதேச்சிகார அரசுகள் பெரும் வெற்றியை பெற்றதில்லை என்று சரித்திரம் சொல்வதாலும் ஜனநாயக ரீதியான சீர்திருத்தங்கள் நிதானமானவை என்றாலும் கூட அவற்றின் அடித்தளங்கள் வலுவாக இருக்கும் என்பதாலும் இந்தியா நீண்ட கால அடிப்படையில் இந்த பந்தயத்தில் வெல்லும் என்று நம்புகிறேன்.

நன்றி

Sunday, November 16, 2008

சரியும் நம்பிக்கைகள்.


ஒவ்வொரு வாரமும் சந்தைகளின் சரிவின் முடிவு பற்றிய புதுப்புது நம்பிக்கைகள் தகர்க்கப் படுகின்றன. இது தொடர்கதையா? வரும் வாரத்தின் நம்பிக்கைகள் G-20 மாநாட்டின் தீர்மானங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன.

சென்ற வார சந்தை நிலவரம் மற்றும் வருகின்ற வாரத்திற்கான எதிர்பார்ப்புகள் குறித்து, இந்த பதிவரின், ஆங்கில பதிவு வலையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும் விவரத்திற்கு பாருங்கள்

Maximum India

நன்றி

Saturday, November 15, 2008

"பெயர்" அளவில் ஏற்பட்டுள்ள சமூக புரட்சி



சமீபத்தில் எனக்கும் ஒரு மராத்தியருக்கும் இடையே ஒரு சிறிய விவாதம் எனது பெயரிலிருந்து தொடங்கியது. என்னுடைய பெயரின் இரண்டாவது பகுதி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்தில் வாழும் ஒரு சமூகத்தினரின் பட்டப் பெயரை குறிப்பதாக இருப்பதால், அவர் (மிகவும் வயது முதிர்ந்த ஒரு மருத்துவர்) என்னை அந்த குறிப்பிட்ட சமூகத்தினை சேர்ந்தவரா என்று வினவினார். நானோ அதை மறுத்து, தமிழகத்தில் பெயருடன் சமூகப் பெயரை இணைத்து வழங்கும் பழக்கமில்லை என்றும் அது எனது முதல் பெயரின் விகுதியே என்றும் கூறினேன். பிறகு விவாதம் தமிழ் நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் தற்போதைய சமூக மற்றும் பொருளாதார சூழல் பற்றி திரும்பியது.

அவர் கூறியது. மராத்திய மக்கள் பரந்த மனது கொண்டவர்கள். மொழியின் அடிப்படையில் வித்தியாசம் பார்க்காதவர்கள் அதனால்தான் மகாராஷ்டிரா மாநிலம் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆனால், இங்கு வாழும் பிற மொழி மக்கள் மராத்தியரின் பெருந்தன்மையை தவறாக உபயோகப் படுத்தி மராத்தி மொழியை மற்றும் மராத்திய கலாச்சாரத்தினை மதிக்க தவறுகிறார்கள். தமிழ் நாடு போன்று பிற்போக்கான மொழி மற்றும் சமூக கொள்கையை நாங்களும் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்திருந்தால் நாங்களும் பின்தங்கிய மாநிலமாக இருந்திருப்போம்.

நான் அதற்கு பதிலளிக்கையில், மராத்திய மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே எனது கருத்தும் ஆகும். அதே சமயத்தில் இந்தியாவின் நிதித் தலைநகரமான மும்பையை உள்ளடக்கியப் பின்னரும் கூட மகாராஷ்டிரா பல சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற விஷயங்களில் (Urbanization, Industrialization, Literacy Rate etc), தமிழ் நாட்டை விட பின்தங்கிய மாநிலமாக இருப்பதையும் இந்தியாவிற்கே தமிழ் நாடு ஒரு முன்னோடி மாநிலம் என்பதையும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினேன். மும்பை இல்லாவிடில் இரு மாநிலங்களுக்கிடையே இடைவெளி இன்னும் கூட அதிகம் இருக்கும் என்றும் சொன்னேன்.

ஆனால் அவரோ, பொருளாதார அடிப்படையில் தமிழ் நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கலாம். ஆனால் சமூக கொள்கைகள் அடிப்படையில் தமிழ் நாடு பின்தங்கிய மாநிலமே என்று மீண்டும் விதண்டாவாதம் செய்ய, யார் சமூக கொள்கைகளின் அடிப்படையில் உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள் என்பதை அவரவர் அழைக்கப் படும் பெயரை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என்று விவாதத்தை முடித்து கொண்டேன். அதன் உட்பொருள், தமிழ் நாட்டில் சாதியின் அடிப்படையில் அமைந்த பட்டப் பெயரால் ஒருவரை அழைக்கும் வழக்கம் சென்ற தலைமுறைகளிலேயே முடிந்து விட, தமிழ் நாடு தவிர்த்து இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த பழக்கம் (அந்த வயதான மருத்துவரையும் சேர்த்து) தொடர்கிறது.

நம்மூரில் அருண் கோவிந்த் கார்த்திக் என்றெல்லாம் அழைப்பதற்கு பதிலாக முதலியாரே, நாயக்கரே, கவுண்டரே என்று அழைத்தால் மிக வேடிக்கையாக உணருவோம் அல்லவா? இவர்களோ, தமது முதல் பெயரால் அழைக்கப் பட்டால்தான் (மிக நெருங்கிய உறவினருக்கு மட்டுமே முதல் பெயரால் அழைக்கும் உரிமை உண்டு) வித்தியாசமாக உணருகிறார்கள்.

இந்தியாவிலேயே இந்த "பெயர்" அளவிலான சமூகப் புரட்சியை ஆரம்பித்து வைத்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. ஆனால்,இந்த பெயர் புரட்சி இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் நின்று போய் விட்டது. சமூக நீதி கண்ட தமிழகத்தில் கூட இந்த சாதி ஒழிப்பு முயற்சி பெயரளவிலேயே நின்று போய் விட்டது. இன்றைய அரசியல்வாதிகள் , அரசியல் பண்ண, கூட்டணி பேரம் பேச, ஆட்சியை பிடிக்க மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல ஒவ்வொரு நாளும் சமூகப் பெயர்களை உபயோகப்படுத்தி சாதித் தீயை முழுவதுமாக அணையாமல் நீறு பூத்த நெருப்பாக வைத்திருக்கிறார்கள்.

அதே சமயம் சாதாரண தமிழ் மக்களிடையே மற்ற மாநிலங்களைப் போல சாதி உணர்வு அதிகம் இல்லை என்று நான் நேற்று வரை நம்பி இருந்தேன். ஆனால் சாதி மதம் வித்தியாசம் இல்லாமல் கூடி திரிய வேண்டிய வயதில் உள்ள கல்லூரி மாணவர்கள் சாதியின் அடிப்படையின் கொலை வெறி மோதல்களில் ஈடுப்பட்டனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், அதுவும் சமூக இணக்கம் அதிகம் காணப்படும் மாநிலமாக கருதப் படும் தமிழ் நாட்டில் இப்படிப் பட்ட சம்பவம் நடந்தேறி இருப்பது அகில உலகில் வாழும் அனைத்து தமிழருக்கும் அவமானம் தேடித் தரும் விஷயம் ஆகும். "சமூக அடையாளம் இல்லாத பெயரால் அழைக்கப் படுதல் " என்று தமிழகத்தில் தொடங்கிய இந்த சாதிக்கு எதிரான சமூகப் "பெயர்" புரட்சி பெயரளவில் நின்று போகாமல் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் முழுமையாக பரவி, எங்கும் நிறைந்து உள்ள சாதி எனும் கொடிய அரக்கனை முழுவதுமாக அழித்து இந்தியர் அனைவரும் ஒரே சாதி என்ற நிலை வந்தால் மட்டுமே நாம் பெற்றது முழுச் சுதந்திரமாக கொள்ள முடியும்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

Friday, November 14, 2008

உங்களுக்குளே ஒரு குழந்தை ஒளிந்து கொண்டிருக்கிறது


மனநிலை பரிசோதனை (Transactional Analysis) பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்த தத்துவத்தின் படி வயது வித்தியாசம் இல்லாமல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மூன்று விதமான மனநிலைகள் (Ego States) உண்டு. அதாவது குழந்தை நிலை (Child Ego), பெற்றோரின் மனநிலை (Parent Ego) மற்றும் முதிர்ச்சியான மனநிலை (Adult Ego). உங்களுக்கு என்ன மனநிலை உள்ளது? இதை எப்படி கண்டுப் பிடிப்பது? ஒரு சிறிய பரிசோதனை முயற்சி இங்கே.

முதல் பரிசோதனை. ஒரு கடற்கரைக்கு போகிறீர்கள். அப்போது

அ. எதையும் யோசிக்காமல் ஓடிச் சென்று கடலில் பொத்தென குதிப்பீர்களா?
ஆ. காய்ச்சல் வந்து விடுமா அல்லது துணி நனைந்து விடுமா அல்லது பெரிய அலையில் முழுகிப் போய் விடுமோ என்று பயப்படுவீர்களா?

இ. இடம் பாதுகாப்பு ஆனது என்று உறுதி செய்து கொண்டு, நீச்சலுடை அணிந்து கொண்டு கடலில குதிப்பீர்களா?

இரண்டாவது பரிசோதனை

உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் உங்களூரில் ஓடுவது அன்றே கடைசி நாள். உங்கள் அலுவலகத்திலோ தணிக்கை நடக்கிறது.

அ. உடல்நிலை சரியில்லை என்று அலுவலகத்திற்கு மட்டம் போட்டு விட்டு திரைப்படத்திற்கு போவீர்களா?

ஆ.அலுவலகம் முக்கியம் என்று திரைப் படத்தை தியாகம் செய்வீர்களா?

இ. அலுவலகத்தில் வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு இரவுக் காட்சிக்கு போக முயற்சி செய்வீர்களா?

மூன்றாவது பரிசோதனை.

உங்கள் அலுவலகத்தில் ஒரு பிரச்சினை. நீங்கள் செய்யாத தவறுக்கு உங்கள் மேலாளர் உங்களை கோபமாக குறை கூறுகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ. செய்யாத தவறுக்கு எப்படி குறை கூறலாம் எப்படி பதிலுக்கு கோபப் படுவீர்களா?

ஆ. ஏதோ மேலாளாருக்கு பிரச்சினை. நம் மீது பாய்கிறார். இதை பெரிது படுத்த வேண்டாம் என்று விட்டு விடுவீர்களா?

இ. முதலில் அமைதியாக இருந்து விட்டு, சமயம் கிடைத்தும் சரியான விளக்கம் கொடுப்பீர்களா?

நான்காவது பரிசோதனை.

உங்கள் நண்பரது அலுவலகத்திற்கு போகிறீர்கள். அங்கு ஒரு அழகான பெண் வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு அந்தப் பெண்ணுடன் பேச வேண்டும் என்று ஆசை. நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ. வலிய சென்று நன்றாக பேச முயற்சி செய்வீர்களா?

ஆ. நண்பரும் அவரது அலுவலகத்தினரும் நம்மை தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்று அமைதி காப்பீர்களா?

இ. நண்பரிடம் அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைக்க சொல்லி பின்னர் பேசுவீர்களா?

மேலே கேட்கப் பட்ட கேள்விகளில் உங்களுடைய விடை அதிகமான சந்தர்ப்பங்களில் முதலாவதாக இருந்தால் உங்களிடம் அதிகமாக இருப்பது குழந்தை மனநிலை. இரண்டாவது பெற்றோரின் மனநிலை. மூன்றாவது முதிர்ச்சியடைந்த மன நிலை.

ஒரு முக்கிய விஷயம். இந்த மனநிலைகளில் எதுவும் சரியானதோ அல்லது தவறானதோ இல்லை. அதே போல ஒரே நபருக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு மனநிலைகள் ஏற்படுவதுண்டு. அது மட்டுமல்ல, ஒரே நபருக்கு மூன்று மனநிலைகளும் வெவ்வேறு விகிதத்தில் கலந்திருப்பதும் உண்டு. மேலும் இந்த மனநிலைகள் வயது வித்தியாசம் பார்த்து வருவதில்லை. குழந்தைகள் சில விஷயங்களில் பெற்றோரின் மனநிலையை கொண்டிருக்கும். உதாரணமாக சில குழந்தைகள் வீட்டு வேலைகளில் பெற்றோருக்கு உதவுவது. சில சமயங்களில் பெரியவர்கள் குழந்தை மனநிலை கொள்வதும் உண்டு. உதாரணம் பெரியவர்கள் சிலர் வழிய வழிய ஐஸ்க்ரீம் சாப்பிடுவது.

இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு என்ன அதிகமாக மனநிலை என்று?

மேலே முயற்சித்தது மிகச் சிறிய பரிசோதனையே. மனவியல் நிபுணர்களால் மேலும் பல கேள்விகள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் மேற்கொண்டு மிக துல்லியமாக ஒருவரது மனநிலையை கண்டுபிடிக்க முடியும்.

இப்போது ஒவ்வொரு மனநிலையின் தன்மைகள் பற்றி பார்போம்.

குழந்தை மனநிலையின் நன்மைகள்

மாறாத புத்துணர்ச்சி மற்றும் மாறாத புன்னகைஒவ்வொரு நாளையும் உற்சாகமாக எதிர்கொள்ளுதல் எல்லா விஷயங்களையும் புதியதாக நோக்குதல் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மற்றவர்களின் தவறுகளை நொடியில் மறப்பது மற்றும் மன்னிப்பது பொய் கலப்பில்லாத தன்மை

குழந்தை மனநிலையின் தீமைகள்.

அதிக அளவிலான பயம், பின் விளைவுகள் தெரியாமல் ஏதாவது செய்து கஷ்டப் படுவது.

பெற்றோர் மனநிலையின் தன்மைகள்.

அதிக கண்டிப்பு, மற்றவர்களை குறை கூறுவது, எச்சரிக்கை உணர்வு அதிகம்.. சமய சந்தர்ப்பத்தை பொறுத்து இவற்றை நன்மைகளாகவும் கொள்ளலாம். தீமைகளாகவும் கொள்ளலாம்.

முதிர்ச்சியடைந்த மனநிலையின் நன்மைகள்.

எதையும் பகுத்து ஆராயும் தன்மை. நிதானமான உறுதியான மனநிலை.

நாம் ஒரு குறிப்பிட்ட மனநிலையை அடைய முயற்சி செய்வதை விட எந்த சூழ்நிலையில் எந்த மனநிலையை கொண்டிருப்பது நல்லது என்ற தெளிவு பெற முயற்சிப்பது நல்லது.

உதாரணமாக அலுவலக நேரத்தில் மற்றும் கவனமாக இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் முதிர்ச்சியடைந்த மனநிலை நல்லது. விடுமுறைக் காலங்களில் மற்றும் கொண்டாட்ட தருணங்களில் குழந்தை மனநிலை மகிழ்ச்சியை பூரணமாக அனுபவிக்க உதவும்.

இப்போது சொல்லுங்கள். இன்று குழந்தைகள் நாள். வாழ்த்துக்களை நாமும் பரிமாறி கொள்ளலாம் அல்லவா?

மகிழ்ச்சியான குழந்தைகள் நாள் வாழ்த்துகள்.

Thursday, November 13, 2008

இந்தியாவின் தேன்நிலவு


இந்திய படைப்பான சந்திராயன் 1 வெற்றிகரமாக சந்திரனின் 100 கி.மீ உள்வட்ட பாதையில் (Polar Range) இன்று நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இனி இந்த துணைக்கோள் சந்திரனை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சுற்றி வந்து தொலைப்படங்கள் (Mapping) எடுத்து அனுப்பும். இதன் மூலம் சந்திராயன் 1 ப்ராஜெக்ட் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
(வீடியோ படம் பார்க்க)

சந்திராயன் 1 பயணத்தின் குறிப்படத் தக்க சிறப்பம்சங்கள் கீழே.

1. இதன் மூலம் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பிய ஐந்தாவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு.

2.இது வரை அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளிலேயே குறைந்த செலவில் அனுப்பப் பட்ட ராக்கெட் சந்திராயன்தான்.

3. இது வரை உலகிலேயே இல்லாத அளவுக்கு மிக அதிக சாதனங்கள் இந்த ஒரே ராக்கெட்டின் வழியே அனுப்பப் பட்டுள்ளன.

4. முதல் முயற்சிலேயே சந்திரனுக்கான பயணத்தினை வெற்றிகரமாக முடித்த நாடு என்ற நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது.

5. நேரடியாக நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பாமல் பூமி மற்றும் சந்திரனின் நீள்வட்ட பாதைகளில் சந்திராயனை சுற்ற வைத்து இறுதியாக நிலவின் உள்வட்ட பாதையில் நிலை நிறுத்த மிக நுணுக்கமான தொழில் நுட்பம் தேவை. தன்னுடைய உலக தரம் வாய்ந்த தொழிற் நுட்ப திறனை இந்த பயணம் மூலம் இந்தியா மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

இந்த பயணத்தின் மூலம் இந்தியாவிற்கு கிடைத்துள்ள பயன்கள்

1. மேலே சொன்னது போல தனது தொழிற் நுட்ப திறனை உலகிற்கு வெளிக்காட்டுவது.

2. சந்திரனில் உள்ள சில தாதுப் பொருட்கள் அணு சக்தி உற்பத்திக்கு உதவும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவற்றை பூமிக்கு கொண்டு வர வருங்கால தொழிற்நுட்பம் உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே தற்போது பல நாடுகள் சந்திர பயணத்தில் (காலனி ஆதிக்க முயற்சிகள் கூட உண்டு ) ஆர்வம் காட்டி வருகின்றன. அணுசக்திக்கு வருங்காலத்தில் மிக அதிக தேவை கொண்ட நாடான இந்தியா இதில் முந்தி கொள்வது அவசியமாகிறது.

மேலும் இந்தியர்களுக்கு மிகப் பெரியப் பெருமையை இந்தப் பயணம் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தியர் எல்லாரும் கொண்டாட வேண்டிய தேன்நிலவு தருணம் இது. இதன் திட்ட இயக்குனர் திரு.மயில்சாமி அண்ணாதுரை ஒரு தமிழர். எனவே தமிழர்க்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

இவை எல்லாம் இருந்தாலும் கூட, சந்திரனுக்கு இவ்வளவு செலவு செய்து பயணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் நினைக்கலாம். அவர்களுக்கு ஒரே ஒரு விஷயம்.

இந்த செலவு ஒரு தேன்நிலவுக்கான செலவு. ஒரு மனிதனின் திருமண வாழ்வின் போக்கையே தீர்மானிக்க வல்ல தேன்நிலவுக்கான செலவை அவன் ஒரு சிறந்த முதலீடாகவே கணக்கிட வேண்டும். அதுபோல் சந்திராயனுக்கான செலவை வருங்கால விண்வெளி ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கான ஒரு முதலீடாகவே கருத வேண்டும்.

சிறுவயதில் தீபாவளி ராக்கெட்டில் சீக்கிரம் அங்கு வருவேன் என்று துண்டு சீட்டில் எழுதி வைத்து அனுப்பியதற்காக அம்மாவிடம் அறை வாங்கியவன் (அம்மா அந்த செயலை அமங்கலமாக கருதியதால்) நான். இன்றைக்கு அதே போல ஐந்து வயதிலேயே Astronaut ஆக ஆசைப் படும் என் குழந்தைக்கு தோளில் தட்டி நான் சொன்ன பதில். கண்டிப்பாக ஒரு நாள் நிலவுக்கு போக முடியும் அதுவும் ஒரு இந்திய ராக்கெட்டிலேயே உன்னால் நிலவுக்கு போக முடியும்.

இந்த நம்பிக்கையை ஒரு இந்தியனுக்கு கொடுக்க உதவி செய்த சந்திராயன் விஞ்ஞானிகள் அனைவருக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், ஒரு சிறந்த தேன்னிலவின் இயல்பான வெளியீடுகளாக செவ்வாய் குழந்தை, பால்வெளி பேரன்கள் என மேலும் பல முத்திரைகள் பதிக்க வாழ்த்துவோம்.

நன்றி
Blog Widget by LinkWithin