Saturday, November 22, 2008

இங்கே வாருங்கள்! இந்தியாவைக் கண்டுபிடியுங்கள்!


நீங்கள் சரித்திர ஆர்வம் கொண்டு மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" போன்ற வரலாற்றின் அடிப்படையிலான புத்தகங்களைப் படிப்பதில் ஈடுபாடு கொண்டவரா? சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நேரில் சென்று பார்க்கும் ஆர்வம் கொண்டவரா? அந்த இடங்களில் நிற்கும் போது, காலத்தில் சற்றே பின்னோக்கி பயணம் செய்து "இங்கேதானே அக்பர் நின்றிருந்திருப்பார், அங்கேதானே ராஜ ராஜ சோழன் வாழ்ந்து இருப்பார் என்றெல்லாம் கற்பனை செய்து பார்ப்பவரா? நீங்கள் வந்து பார்க்க வேண்டிய இடம் இது.

உலகின் பெரும்பாலான நாகரிகங்களுக்கும் இந்திய நாகரிகத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அதாவது, மிக குறைந்த காலமே சரித்திரத்தை உள்ளடக்கிய, உலகின் பெரும்பாலான நாகரிகங்களின் வரலாற்றின் வேரை எளிதாக தேடி கண்டுபிடித்து விட முடியும். ஆனால் இந்தியா போன்று குறைந்த பட்சம் 50,000 ஆண்டு கால சரித்திரம் கொண்ட ஒரு நாட்டின் வரலாற்று வேரினை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில், ஆலமரத்தின் பல்கி பெருகிய விழுதுகள் போன்று இந்தியாவில் பின்னர் வந்து கலந்த நாகரிகங்கள் ஏராளம். அந்த விழுதுகளும் ஒரு வேரினைப் போலவே இந்திய ஆலமரத்தினை இன்றைக்கு தாங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வேர்கள் போன்ற விழுதுகளைப் பற்றி ஓரளவேனும் அறிந்துக் கொள்ள இங்கே வந்து செல்வது அவசியம்.

இந்திய நாட்டின் 50,000 ஆண்டு கால சரித்திரத்தை ஒரே இடத்தில் ஒளித்து வைத்திருக்கும் இந்த வரலாற்று களஞ்சியம் (Nehru Centre) நிதி மையமான மும்பை மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. தனது மகள் இந்திரா இந்தியாவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காக நேருஜி எழுதிய "Discovery Of India" என்ற புத்தகத்தின் அடிப்படையில் வானளாவிய ஒரு கட்டிடத்தில் மிகப் பெரிய பரப்பளவில் இந்த வரலாற்று காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது .

இந்திய சரித்திரம் 14 பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு வெவ்வேறு அரங்குகளில் ஒலி ஒளி காட்சிகளாக அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது . இந்திய சரித்திரத்தின் ஆதியாம் கற்காலத்தை விளக்கும் முதல் அரங்கிலிருந்து நாம் தொடங்கும் காலப் பயணம், சிந்து சமவெளி நாகரிகம் , ஆரியர்களின் ஆக்கிரமிப்பு , மௌர்யர்கள் , புத்த , ஜைன மதங்கள் தோன்றிய வரலாறு என இந்தியாவின் ஒவ்வொரு சரித்திர கால கட்டத்திற்கும் உள்சென்று இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் வந்து நிறைவு பெறுகிறது .

இந்த அரங்குகளில் , இந்திய சரித்திரம் படங்களின் வாயிலாகவும் , நேருஜி அவர்களின் விளக்க உரைகள் வாயிலாகவும் , அந்தந்த காலகட்டத்தில் அகழ்வாராய்ச்சியின் மூலம் பெறப்பட்ட அரிய வகை பொருட்கள் வாயிலாகவும் , மாதிரி வடிவமைப்புகள் (Proto type models) வாயிலாகவும் இந்திய சரித்திரத்தை அனைவரும் முழுமையாக உணரும் வகையில் செய்திருப்பது தனிச் சிறப்பு . உதாரணமாக , ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரின் வாக்குமூலம் இங்கு உண்டு, சோழர் கால கோயில்களின் மாதிரி வடிவமைப்பும் உண்டு, சுதந்திர போராட்டத்தின் போது தியாகிகள் அடைத்து வைக்கப் பட்டிருந்த சிறையின் மாதிரி வடிவமைப்பும் உண்டு. இது மட்டுமல்ல, காந்தி நேரு போன்ற பெருந்தலைவர்களின் உணர்ச்சி மிகு விடுதலை முழக்கங்களின் முழுவடிவமும் இங்கு பார்க்க முடியும். வீடியோ காட்சிகளும் உண்டு. இந்த அரிய வகை காட்சியகத்தின் முழுப் பெருமையையும் வார்த்தைகளில் விவரிப்பது மிகவும் கடினம். இந்த காட்சியகத்தின் அரங்குகளிலூடே பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் 50,000 ஆண்டு கால இந்திய சரித்திரத்தை ஒரே நாளில் உணர்ந்து கொண்ட திருப்தி வருவது மட்டும் நிச்சயம்.

இன்றைய காலகட்டத்தில், பலருக்கு மும்பை வரும் வாய்ப்புகள் உண்டு. அப்படி வரும் பட்சத்தில் நீங்கள் தவறக் கூடாத ஒரு இடம் இந்த நேரு சென்டர் .

நன்றி

6 comments:

கார்த்திக் said...

பயனுள்ள தகவல்
உங்கள மாதிரி மும்பை வாசிகளுக்கு இது சாத்தியம்.
நாலாம் இந்த மாதிரி படிச்சு தெரிஞ்சுகிட்டதான் உண்டு.

nerkuppai thumbi said...

ஒரே ஒரு சின்ன ஐயம்: தாங்கள் சொன்னது 50,000 ஆண்டுகளா அல்லது 5000 ஆண்டுகளா? அந்த பொருட்காட்சியில் இது குறித்து தாங்கள் செய்திக்குறிப்புகள் கண்டிருக்கலாம். தயவு செய்து மீண்டும் வலியுறுத்தி சொல்லவும். சில மேதாவிகள் மஹாபாரதத்தின் காலம் கிட்டத்தட்ட கி. மு. 6000 என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் . மஹாபாரதத்தை வரலாற்று நூலாக எடுக்கொண்டால் அதன்படி பார்த்தால் சுமார் 10000 ஆண்டுகளுக்கே வரலாறு
இருப்பதாக கொள்ள முடியும் . தொல்காப்பிய காலமும் அதற்கு முன்பு பக்ருளியாறு ஓடிய kaalamum வரையறுக்கப்பட்டனவா என்று எனக்கு தெரியாது . அதற்கு முந்தைய வரலாறு ஒன்றும் இல்லை அல்லவா? தயவு செய்து தெளிவு ஆக்கவும். . .

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பயணங்கள் மிகவும் எளிமையாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் மும்பை எட்டி பிடிக்கக் கூடிய தூரமே

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா

உங்களுடைய நேரத்தை ஒதுக்கி பதிவை பார்த்ததற்கும் பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி.

//ஒரே ஒரு சின்ன ஐயம்: தாங்கள் சொன்னது 50,000 ஆண்டுகளா அல்லது 5000 ஆண்டுகளா? அந்த பொருட்காட்சியில் இது குறித்து தாங்கள் செய்திக்குறிப்புகள் கண்டிருக்கலாம். தயவு செய்து மீண்டும் வலியுறுத்தி சொல்லவும். சில மேதாவிகள் மஹாபாரதத்தின் காலம் கிட்டத்தட்ட கி. மு. 6000 என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் . மஹாபாரதத்தை வரலாற்று நூலாக எடுக்கொண்டால் அதன்படி பார்த்தால் சுமார் 10000 ஆண்டுகளுக்கே வரலாறு
இருப்பதாக கொள்ள முடியும் . தொல்காப்பிய காலமும் அதற்கு முன்பு பக்ருளியாறு ஓடிய காலமும் வரையறுக்கப்பட்டனவா என்று எனக்கு தெரியாது . அதற்கு முந்தைய வரலாறு ஒன்றும் இல்லை அல்லவா? தயவு செய்து தெளிவு ஆக்கவும்.//

நான் கூறியது குறைந்த பட்சம் 50,000 ஆண்டுகளாவது மனிதர்கள் தொடர்ச்சியாக இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற பொருளில் மட்டுமே. வரலாற்று நூல்கள் அவ்வளவு ஆண்டுகளுக்கு எழுதப் பட்டுள்ளன என்ற பொருளில் அல்ல. இது புதை பொருட்கள் மூலம் அறியப் பட்ட உண்மை மட்டுமே ஆகும். முறையான வரலாற்று நூல்கள் இந்தியாவில் எப்போதுமே இருந்ததில்லை. நாம் இன்றைக்கு அறிகின்ற பல வரலாற்று தகவல்கள் வெளிநாட்டு பயணிகளின் (உ-ம மெகஸ்தனீஸ் ) குறிப்புகள், வெளிநாட்டு நாடுகளின் வரலாற்று (உ-ம ரோம நாட்டின் வரலாற்றில் பாண்டிய தூதர்) குறிப்புகள், புத்த ஜைன மத துறவிகளின் கல்வெட்டுகள், சங்க கால நூல்கள் போன்றவற்றின் மூலம்தான் நமக்கு கிடைத்துள்ளன. இவற்றின் நம்பகத்தன்மை எப்போதுமே கேள்விக்குறிதான். மகாபாரதத்தை ஒரு வரலாற்று நூலாக எடுத்துக் கொள்ள முடியுமா என்று தெரியாது. அது உண்மையான சரித்திரத்தை பிரதிபலிக்கிறதாக என்பது கேள்விக் குறியே. ஆனால், அதன் துணை கொண்டு ஆர்யர்களின் படையெடுப்புகளின் போது (சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர்) இருந்த இந்தியாவின் கலாச்சாரம் குறித்து ஓரளவுக்கு அறிந்துக் கொள்ள முடியும். அதற்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் (சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே இருந்திருக்கலாம்). அவர்கள் தமிழர்களின் தொப்புள் கொடி உறவாக கூட இருக்கலாம் .

மேலும் ஒரு சுவையான தகவல். கல் தோன்றி மண் தோன்றா காலத்து தோன்றிய மூத்த குடி தமிழர்கள் என்பார்கள் . (எந்த அளவு உண்மை என்று தெரியாது) ஆனால் தொல்காப்பியம் மற்றும் சங்க கால இலக்கியங்களில் இருப்பது போல இந்தியா எனும் துண்டு நிலபரப்பு ஆசியா கண்டத்தின் மீது மோதி உருவானதே இமய மலை என்ற குறிப்பு நேரு செண்டேரிலும் உள்ளது. நம்மவர்கள் கபாட புரத்தை நீர் கொண்டது என்று எழுதி வைத்தது ஒரு சுனாமியை பற்றியா அல்லது உண்மையிலேயே இந்திய துணை கண்டம் ஆசியா நிலப் பரப்பில் மோதும் போது தமிழர்கள் வாழ்ந்தார்களா என்பதை சொல்வது கடினம். நீங்கள் ஒரு முறை சொன்னது போல இந்தியர்கள் விவாதங்களில் வல்லவர்கள். இந்த விவாதங்கள் இன்னும் பல ஆண்டுகள் தொடரும்.

வால்பையன் said...

மும்பை வரும் போது கண்டிப்பாக வருகிறேன்.

Maximum India said...

Dear Valpaiyan

You are welcome to Mumbai

Blog Widget by LinkWithin