Friday, November 14, 2008

உங்களுக்குளே ஒரு குழந்தை ஒளிந்து கொண்டிருக்கிறது


மனநிலை பரிசோதனை (Transactional Analysis) பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்த தத்துவத்தின் படி வயது வித்தியாசம் இல்லாமல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மூன்று விதமான மனநிலைகள் (Ego States) உண்டு. அதாவது குழந்தை நிலை (Child Ego), பெற்றோரின் மனநிலை (Parent Ego) மற்றும் முதிர்ச்சியான மனநிலை (Adult Ego). உங்களுக்கு என்ன மனநிலை உள்ளது? இதை எப்படி கண்டுப் பிடிப்பது? ஒரு சிறிய பரிசோதனை முயற்சி இங்கே.

முதல் பரிசோதனை. ஒரு கடற்கரைக்கு போகிறீர்கள். அப்போது

அ. எதையும் யோசிக்காமல் ஓடிச் சென்று கடலில் பொத்தென குதிப்பீர்களா?
ஆ. காய்ச்சல் வந்து விடுமா அல்லது துணி நனைந்து விடுமா அல்லது பெரிய அலையில் முழுகிப் போய் விடுமோ என்று பயப்படுவீர்களா?

இ. இடம் பாதுகாப்பு ஆனது என்று உறுதி செய்து கொண்டு, நீச்சலுடை அணிந்து கொண்டு கடலில குதிப்பீர்களா?

இரண்டாவது பரிசோதனை

உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் உங்களூரில் ஓடுவது அன்றே கடைசி நாள். உங்கள் அலுவலகத்திலோ தணிக்கை நடக்கிறது.

அ. உடல்நிலை சரியில்லை என்று அலுவலகத்திற்கு மட்டம் போட்டு விட்டு திரைப்படத்திற்கு போவீர்களா?

ஆ.அலுவலகம் முக்கியம் என்று திரைப் படத்தை தியாகம் செய்வீர்களா?

இ. அலுவலகத்தில் வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு இரவுக் காட்சிக்கு போக முயற்சி செய்வீர்களா?

மூன்றாவது பரிசோதனை.

உங்கள் அலுவலகத்தில் ஒரு பிரச்சினை. நீங்கள் செய்யாத தவறுக்கு உங்கள் மேலாளர் உங்களை கோபமாக குறை கூறுகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ. செய்யாத தவறுக்கு எப்படி குறை கூறலாம் எப்படி பதிலுக்கு கோபப் படுவீர்களா?

ஆ. ஏதோ மேலாளாருக்கு பிரச்சினை. நம் மீது பாய்கிறார். இதை பெரிது படுத்த வேண்டாம் என்று விட்டு விடுவீர்களா?

இ. முதலில் அமைதியாக இருந்து விட்டு, சமயம் கிடைத்தும் சரியான விளக்கம் கொடுப்பீர்களா?

நான்காவது பரிசோதனை.

உங்கள் நண்பரது அலுவலகத்திற்கு போகிறீர்கள். அங்கு ஒரு அழகான பெண் வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு அந்தப் பெண்ணுடன் பேச வேண்டும் என்று ஆசை. நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ. வலிய சென்று நன்றாக பேச முயற்சி செய்வீர்களா?

ஆ. நண்பரும் அவரது அலுவலகத்தினரும் நம்மை தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்று அமைதி காப்பீர்களா?

இ. நண்பரிடம் அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைக்க சொல்லி பின்னர் பேசுவீர்களா?

மேலே கேட்கப் பட்ட கேள்விகளில் உங்களுடைய விடை அதிகமான சந்தர்ப்பங்களில் முதலாவதாக இருந்தால் உங்களிடம் அதிகமாக இருப்பது குழந்தை மனநிலை. இரண்டாவது பெற்றோரின் மனநிலை. மூன்றாவது முதிர்ச்சியடைந்த மன நிலை.

ஒரு முக்கிய விஷயம். இந்த மனநிலைகளில் எதுவும் சரியானதோ அல்லது தவறானதோ இல்லை. அதே போல ஒரே நபருக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு மனநிலைகள் ஏற்படுவதுண்டு. அது மட்டுமல்ல, ஒரே நபருக்கு மூன்று மனநிலைகளும் வெவ்வேறு விகிதத்தில் கலந்திருப்பதும் உண்டு. மேலும் இந்த மனநிலைகள் வயது வித்தியாசம் பார்த்து வருவதில்லை. குழந்தைகள் சில விஷயங்களில் பெற்றோரின் மனநிலையை கொண்டிருக்கும். உதாரணமாக சில குழந்தைகள் வீட்டு வேலைகளில் பெற்றோருக்கு உதவுவது. சில சமயங்களில் பெரியவர்கள் குழந்தை மனநிலை கொள்வதும் உண்டு. உதாரணம் பெரியவர்கள் சிலர் வழிய வழிய ஐஸ்க்ரீம் சாப்பிடுவது.

இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு என்ன அதிகமாக மனநிலை என்று?

மேலே முயற்சித்தது மிகச் சிறிய பரிசோதனையே. மனவியல் நிபுணர்களால் மேலும் பல கேள்விகள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் மேற்கொண்டு மிக துல்லியமாக ஒருவரது மனநிலையை கண்டுபிடிக்க முடியும்.

இப்போது ஒவ்வொரு மனநிலையின் தன்மைகள் பற்றி பார்போம்.

குழந்தை மனநிலையின் நன்மைகள்

மாறாத புத்துணர்ச்சி மற்றும் மாறாத புன்னகைஒவ்வொரு நாளையும் உற்சாகமாக எதிர்கொள்ளுதல் எல்லா விஷயங்களையும் புதியதாக நோக்குதல் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மற்றவர்களின் தவறுகளை நொடியில் மறப்பது மற்றும் மன்னிப்பது பொய் கலப்பில்லாத தன்மை

குழந்தை மனநிலையின் தீமைகள்.

அதிக அளவிலான பயம், பின் விளைவுகள் தெரியாமல் ஏதாவது செய்து கஷ்டப் படுவது.

பெற்றோர் மனநிலையின் தன்மைகள்.

அதிக கண்டிப்பு, மற்றவர்களை குறை கூறுவது, எச்சரிக்கை உணர்வு அதிகம்.. சமய சந்தர்ப்பத்தை பொறுத்து இவற்றை நன்மைகளாகவும் கொள்ளலாம். தீமைகளாகவும் கொள்ளலாம்.

முதிர்ச்சியடைந்த மனநிலையின் நன்மைகள்.

எதையும் பகுத்து ஆராயும் தன்மை. நிதானமான உறுதியான மனநிலை.

நாம் ஒரு குறிப்பிட்ட மனநிலையை அடைய முயற்சி செய்வதை விட எந்த சூழ்நிலையில் எந்த மனநிலையை கொண்டிருப்பது நல்லது என்ற தெளிவு பெற முயற்சிப்பது நல்லது.

உதாரணமாக அலுவலக நேரத்தில் மற்றும் கவனமாக இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் முதிர்ச்சியடைந்த மனநிலை நல்லது. விடுமுறைக் காலங்களில் மற்றும் கொண்டாட்ட தருணங்களில் குழந்தை மனநிலை மகிழ்ச்சியை பூரணமாக அனுபவிக்க உதவும்.

இப்போது சொல்லுங்கள். இன்று குழந்தைகள் நாள். வாழ்த்துக்களை நாமும் பரிமாறி கொள்ளலாம் அல்லவா?

மகிழ்ச்சியான குழந்தைகள் நாள் வாழ்த்துகள்.

12 comments:

கார்த்திக் said...

ஆஹா குழந்தை என்னா அழகா சிரிக்கிறா.

முதல் பரிசோதனை:அ

இரண்டாவது பரிசோதனை:இ

மூன்றாவது பரிசோதனை:இ

நான்காவது பரிசோதனை:அ.

இந்த மாதிரி கலந்து வரவிங்க என்ன மனநிலை உள்ளவிங்கன்னு நீங்க சொல்லலையே.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

//முதல் பரிசோதனை:அ

இரண்டாவது பரிசோதனை:இ

மூன்றாவது பரிசோதனை:இ

நான்காவது பரிசோதனை:அ.//

இது போன்ற பதில் உள்ளவர்கள் மனச் சமநிலை (Balanced) கொண்டவர்கள். உங்களால் வாழ்கையை என்ஜாய் செய்ய முடியும். அதே சமயத்தில் வாழ்வின் முக்கிய தருணங்களில் சிறப்பான முடிவுகள் எடுக்க முடியும்,

கார்த்திக், எப்படி என் ஆராய்ச்சி முடிவுகள் சரிதானே?

கார்த்திக் said...

//இது போன்ற பதில் உள்ளவர்கள் மனச் சமநிலை (Balanced) கொண்டவர்கள். உங்களால் வாழ்கையை என்ஜாய் செய்ய முடியும்.//
இது வரைக்கும் சரிதான்.

//அதே சமயத்தில் வாழ்வின் முக்கிய தருணங்களில் சிறப்பான முடிவுகள் எடுக்க முடியும்,//

அந்த மாதிரி இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கும் வாய்ப்பு கெடைக்கலைங்க கெடைக்கட்டும் பாக்கலாம்.உங்க ஆரய்ச்சி சரியா இல்லையான்னு.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

//அந்த மாதிரி இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கும் வாய்ப்பு கெடைக்கலைங்க கெடைக்கட்டும் பாக்கலாம்.உங்க ஆரய்ச்சி சரியா இல்லையான்னு.//

முக்கிய முடிவெடுக்கும் போது Adult Ego நிலைக்கு போயிடுங்க. முடிவு சரியாகத்தான் இருக்கும் அப்போது இந்த அண்ணனை மறந்துடாதீங்க.

எவனோ ஒருவன்! said...

பதிவு மிகவும் நன்றாகவும் அதே சமயம் பயனுள்ளதாகவும் உள்ளது. நன்றி!!!

Maximum India said...

அன்புள்ள எவனோஒருவன்

பின்னூட்டதிற்கு நன்றி

nerkuppai thumbi said...

உளவியலில் மிக ஆழமான விஷயங்களை ( கருத்துக்களை என்பதும் விஷயங்களை என்பதும் வேறுவேறு என்பது என் தாழ்மையான கருத்து; ஆகவே தான் வடமொழி சொல்லான விஷயங்களை என்று பயன் படுத்த வேண்டி உள்ளது; தமிழ் அறிஞர்கள் மன்னிக்க; உதவுவார்களாக) இவ்வளவு எளிதாக சொல்ல முடியும் என்று மீண்டும் காட்டியிருக்கிறீர்கள். நன்றி. பணி தொடரட்டும்

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி

உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

//கருத்துக்களை என்பதும் விஷயங்களை என்பதும் வேறுவேறு என்பது என் தாழ்மையான கருத்து; ஆகவே தான் வடமொழி சொல்லான விஷயங்களை என்று பயன் படுத்த வேண்டி உள்ளது; தமிழ் அறிஞர்கள் மன்னிக்க; உதவுவார்களாக//

வேற்று மொழி சொற்களையும் தேவைப் படும் போது தமிழ் பதிவுகளில் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பது என் கருத்து. ஒரு மொழியின் வளர்ச்சிக்கு வேற்று மொழி சொற்களும் உதவுகின்றன. இதற்கு ஆங்கிலத்தை சிறந்த உதாரணமாக கூறலாம். இருந்தாலும் "விஷயம்" என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை கண்டு பிடிக்க திரு.அ.நம்பி போன்ற தமிழ் அறிஞர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வால்பையன் said...

ஆ.
பின்னால் அதை மறந்து விடுவேன்.
மனதுக்குள்ளே வைத்து பிற்ப்பாடு பேசும் பழக்கமில்லை.

அ.
தட்டுங்கள் திறக்கப்படும்,
கேளுங்கள் கொடுக்கப்படும்
பாலிஸியை கடைபிடிப்பவன் நான்.

எதோ சைக்கோ ஜோதிடம் மாதிரி இருக்கு. எனக்கும் பலன் சொல்லிடுங்க அப்படியே

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//அ,இ, ஆ.
பின்னால் அதை மறந்து விடுவேன்.
மனதுக்குள்ளே வைத்து பிற்ப்பாடு பேசும் பழக்கமில்லை.
அ.
தட்டுங்கள் திறக்கப்படும்,
கேளுங்கள் கொடுக்கப்படும்
பாலிஸியை கடைபிடிப்பவன் நான்.
எதோ சைக்கோ ஜோதிடம் மாதிரி இருக்கு. எனக்கும் பலன் சொல்லிடுங்க அப்படியே//

உண்மையில் Transaction Analysis என்பது ஒரு மிகப் பெரிய மனநிலை பரிசோதனை. குறைந்த பட்சம் 50 கேள்விகளுக்காவது பதில் சொன்ன பின்னரே அந்த பதில்களின் அடிப்படையில் ஒருவரது மனநிலை பற்றி ஓரளுவுக்கேனும் அறிந்து கொள்ள முடியும். இருந்தாலும், ஒரு பரிசோதனை முயற்சி என்ற முறையில் உங்கள் நான்கு பதில்களின் அடிப்படையிலேயே ஒரு விடை காண முயற்சிக்கிறேன்.

உங்கள் மனநிலை Balanced ஆனது. உங்களது குழந்தை மனம் 50%. இதனால், வாழ்வை மகிழ்ச்சியாகவும் அதிக energy கொண்டும் இருக்க முடியும். முதிர்ச்சியான மனநிலை 25%. இதனால் சில முக்கிய தருணங்களில் முடிவு எடுக்க தடுமாறுவீர்கள். சில சமயங்களில் சிறப்பான முடிவு எடுப்பீர்கள். பெற்றோர் மனநிலை 25%. எனவே நீங்கள் மற்றவர்களின் மீது பாசமாகவும், விட்டுத் தரும் மனநிலை கொண்டும் இருப்பீர்கள்.

சரியா இருக்கா? சொல்லுங்க.

வால்பையன் said...

ரொம்ப அழகா சமாளிக்கிறிங்க
நீங்க சொன்ன அனைத்தும் சேர்த்து தான் மனிதனின் குணம்.
ஆனால் சதவிகத ரீதியாக என்னால் பிரிக்க முடியவில்லை.
நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்.
இல்லாமலும் இருக்கலாம்.
:)
நன்றி

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//ரொம்ப அழகா சமாளிக்கிறிங்க//

எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதான்.

நன்றி.

Blog Widget by LinkWithin