Skip to main content

எனது பொருளகராதியில் சில தலைவர்கள்


என்னை ஈர்த்த சில தலைவர்களின் பட்டியல் இங்கே

காந்தி அடிகள்: நினைத்ததை முடித்தவர். வல்லவனுக்கும் (பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்) வல்லவர். அஹிம்சையால் ஹிம்சித்து அவர்களை வென்றவர்.

நேருஜி: இந்தியாவை கண்டுபிடித்தவர் (Discovery of India). பெரும் செல்வந்தராகப் பிறந்தும் சோசலிசம் பேசியவர்.

கர்மவீரர் காமராஜர்: படிப்பின் அருமை தெரிந்த படிக்காத மேதை. பதவி பணத்துக்காக அல்ல என்று நிருபித்து அரசியல்வாதிகள் தினமும் படிக்க வேண்டிய பாடமாக இருப்பவர்.

பெரியார்: தமிழகத்தின் விடி வெள்ளி. தமிழனை ஏன் என்று கேட்க வைத்தவர். அவரது சமூக புரடசியே இன்றைய தமிழகம் கண்டுள்ள சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆகும்.

டாக்டர் அம்பேத்கர்: பிறக்கும் சூழ்நிலை மட்டுமே ஒரு மனிதனின் வெற்றிக்கு ஆதாரம் ஆகாது என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தவர். உயர உயர பறந்தால் ஊர்குருவியால் பருந்தாக முடியும் என்று இந்த உலகுக்கு காட்டியவர்.

அறிஞர் அண்ணாதுரை: கட்சியை குடும்பமாக நினைத்தவர். சொந்த குடும்பத்தை மறந்தவர்.

இந்திரா காந்தி அம்மையார்: போக்ரானையும் பங்களாதேஷையும் உலகுக்கு காட்டியவர். அவர் இன்றைக்கு இருந்திருந்தால், இலங்கை பிரச்சினைக்கு வேறு விதமான தீர்வு கிடைத்திருக்கக் கூடும்.

கலைஞர் மு.க.: தமிழின் அதிர்ஷ்டம். தமிழ் நாட்டின் வற்றாத ஒரே ஜீவ (இலக்கிய) நதி. பெரியார் தமிழகத்தின் விடி வெள்ளி என்றால் இவரோ பகுத்தறிவு பகலவன்.

புரட்சி தலைவர். எம்.ஜி.ஆர்: ஏழைகளின் இதய நாயகன். இவரை நம்பினோர் கெட்டதில்லை. அவர் போட்ட சத்துணவு ஏழை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும்தான்.

புரட்சிதலைவி ஜெயலலிதா. தைரியத்தின் மறு வடிவம். இவர் மட்டும் இந்திய பிரதமராக இருந்திருந்தால், இந்தியாவை இன்று மிரட்டி வரும் தீவிரவாதம் என்றோ தொலைந்து போயிருக்கும்.

டாக்டர் நரசிம்மராவ்: பேசாமல் சாதித்தவர்.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

அதனை அவன் கண்விடல்" என்ற குறளுக்கு இலக்கணமாக இருந்தவர்.

திரு.வி.பி.சிங்: மத்திய சமூகம் ஒன்று உண்டு எனவும் அவர்களுக்கு மண்டல் கமிஷன் என்ற ஏணி தேவை என்றும் முதன் முதலாக உணர்ந்தவர். இன்றைக்கு பலர் மத்திய அரசுப் பதவியை (மத்திய அரசுப் பணிகள்) பிடிக்க உதவி தனது ஆட்சிப் பதவியை இழந்தவர்.

திரு. வாஜ்பேயி : "சாலைகளைப் போடு நாடு வளரும்" என்பதை தங்க நாற்கர சாலை தந்து நிருபித்த தங்கத் தலைவர்.

டாக்டர் மன்மோகன் சிங்: பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை. வோட்டுக்காக சிந்திக்காமல் நாட்டுக்காக (பொருளாதாரம்) சிந்திப்பவர்.

சோனியா காந்தி அம்மையார்: அவரது மாமியார் (இந்திரா காந்தி அம்மையார்) இன்று இருந்திருந்தால், மாமியாரே மெச்சுகிற மருமகளை நாம் பார்க்க முடிந்திருக்கும்.

டாக்டர் அப்துல் கலாம்: கனவுகளை விதைத்தவர். நாட்டின் வருங்கால உயர்வுக்கு யாருக்கு (குழந்தைகள்) நம்பிக்கை உரம் பாய்ச்ச வேண்டும் என்பதை அறிந்தவர்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. நீங்கள் இவற்றில் தாராளமாக முரண்படலாம். இருந்தும் இவற்றை இங்கே வெளியிட்டதற்கான காரணம் கீழே.

மேலே குறிப்பிட்ட தலைவர்கள் அனைவரும் சாதி, மதம், இனம், கட்சி, கொள்கைகள் ஆகியவற்றால் வேறுபட்டிருக்கலாம். ஆனால். ஒரு விஷயத்தில் அனைவருக்கும் ஒற்றுமை இருக்கிறது. அதுவானது, அனைவருக்கும் சில அல்லது பல சிறந்த தலைமைப் பண்புகள், அரிய சிறந்த குணங்கள் (Personality Attributes) இருந்திருக்கின்றன. அவற்றின் காரணமாகவே அவர்கள் மறக்க முடியாத தலைவர்கள் என்ற நிலைக்கு உயர்ந்து இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது அந்த நல்ல பண்புகளையும் சிறந்த குணங்களையுமே தவிர தலைவர்களின் பெயரில் வேற்றுமைகளையும் விரோதத்தையும் அல்ல.

Comments

Anonymous said…
உங்களுக்கு நகைச்சுவை வெகு இயல்பாக வருகிறது; தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு உரையாடல் எழுதுவீர்கள் என்றால் திண்ணமாக வெற்றி பெறுவீர்கள். உளமார்ந்த வாழ்த்துகள்.

- அ. நம்பி
Maximum India said…
அன்புள்ள நம்பி

பின்னூட்டத்திற்கு நன்றி

//உங்களுக்கு நகைச்சுவை வெகு இயல்பாக வருகிறது; தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு உரையாடல் எழுதுவீர்கள் என்றால் திண்ணமாக வெற்றி பெறுவீர்கள். உளமார்ந்த வாழ்த்துகள்.//

என்னங்க இது, காமெடியாக எழுதலாம் (ஆரு வூட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கிரது? ) என்றால் மணிரத்தினம் பாரதி ராஜா மாதிரி படம் எடுங்க சொல்றீங்க (வேறு ஒருவரின் பின்னூட்டம்). கொஞ்சம் சீரியஸ் ஆக எழுதலாம் என்றால் நகைச்சுவைக் காட்சிகளுக்கு உரையாடல் எழுதுங்க சொல்றீங்க. என்ன வச்சு காமெடி கீமடி ஏதும் பண்ணலையே?

மேலும் என்னை போன்றவர்கள் சினிமாவுக்கு செல்ல வேண்டுமானால் ஒன்று சினிமா பாவம் அல்லது நான் பாவம் என்றுதான் சொல்ல வேண்டும்.

Anyway, பாராட்டுக்கும் (வஞ்சப் புகழ்ச்சியாக இருந்தாலும் ஓகேதான்) யோசனைக்கும் நன்றி
பாசிடிவ் திங்கிங் என்று மட்டுமே என்னால் ஏற்று கொள்ள முடியும்,
இது எனது கருத்து மட்டும் தான் என்று முன்னரே குறிப்பிட்டதால் ஒன்றே ஒன்று

//வோட்டுக்காக சிந்திக்காமல் நாட்டுக்காக (பொருளாதாரம்) சிந்திப்பவர்.//

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு
:)
கபீஷ் said…
அ.நம்பியை கன்னா பின்னான்னு வழி மொழிகிறேன். (உங்க மத்த நல்ல பதிவுகளை திரும்ப படிக்க வேண்டும், இத படிச்சதால, ஒரு வேளை அங்கேயும் இதே மாதிரி ந.சுவை உணர்வுடன் ....)
நல்ல முறையில் எல்லோரிடமும் உள்ள நல்ல விஷயங்களை சொல்லியிருக்கீறீர்கள். வாழ்த்துக்கள்
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//பாசிடிவ் திங்கிங் என்று மட்டுமே என்னால் ஏற்று கொள்ள முடியும்,//

இந்த பதிவு பாசிட்டிவ் திங்கிங் பற்றியது அல்ல. தகவல்களின் (Facts) அடிப்படையில் எழுதப் பட்ட ஒன்றே. நான் குறிப்பிட்ட அத்தனை குணங்களும் ஒவ்வொரு தலைவருக்கும் இருந்திருக்கின்றன அல்லது இருக்கின்றன என்பதை யாரும் மறக்க முடியாது. நான் எனது தனிப்பட்ட கருத்து என்று கூறியது இந்த காரணங்கள் என்னை இவர்கள் பக்கம் ஈர்த்தது என்பதை குறிக்கத்தான்.

//பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை. வோட்டுக்காக சிந்திக்காமல் நாட்டுக்காக (பொருளாதாரம்) சிந்திப்பவர்.//
//இதெல்லாம் கொஞ்சம் ஓவரு :)//

இந்தியா கடந்த 17 ஆண்டுகளில் முந்தைய 44 ஆண்டுகாலத்தில் பெற்ற முன்னேற்றத்தை விட அதிகம் பெற்றதற்கு இவர் ஒரு முக்கிய காரணம். வெள்ளை அறிக்கை, அணு ஆயுத ஒப்பந்தம் என்றெல்லாம் சொல்லி இவர் செய்த நல்ல காரியங்களை நாம் மறந்து விட முடியாது. இந்திய பிரதமராக இருப்பது அமெரிக்கா ஜனாதிபதியாக இருப்பதை பல மடங்கு கடினமானது என்பதை நம் மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அங்கிருப்பது போல ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சியை மட்டுமே கவனித்தால் போதும் என்ற LUXURY இந்திய பிரதமர்களுக்கு (குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளில்) இல்லை. பலதரப் பட்ட கட்சிகளுடன் கூட்டணி அரசியல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம், முற்றிலும் எதிர்ப்பட்ட கட்சிகளின் ஆதரவில் ஆட்சி நடத்த வேண்டிய சூழல், மந்தமான அரசு இயந்திரம் இப்படி பல இக்கட்டான நிலைகளுக்கு மத்தியில் நாட்டிற்கு பயன் தரும் நீண்டகால ரீதியான பொருளாதார முடிவுகள் எடுப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பது என்னைப் போல பொருளாதாரத்தைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் இருப்பவனுக்கு புரிந்த காரணத்தினாலேயே திரு.மன்மோகன் சிங் அவர்கள் எனது பட்டியலில் இடம் பெற்றார்.
Maximum India said…
அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//அ.நம்பியை கன்னா பின்னான்னு வழி மொழிகிறேன். //

திரு.நம்பியின் கருத்துகளை நான் வேடிக்கைக்காக மட்டும் என்று எடுத்துக் கொண்டேன். அதையே நீங்களும் வழி மொழிவதால் அதுவும் கன்னா பின்னாவென்று வழி மொழிவதால் நான் இது பற்றி சில கருத்துகளை சொல்ல வேண்டியிருக்கிறது.

எல்லா சராசரி மனிதர்களுக்கும் நகைச்சுவை உணர்வு ஓரளவுக்கேனும் உண்டு. எனக்கும் கூட உண்டு. சொல்லப் போனால் இயல்பிற்கு மீறிய நகைச்சுவை உணர்வு கொண்டிருந்த நான் குடும்பப் பொறுப்பு (குறிப்பாக பெற்றோரை விட்டு சிறிது தூரம் வந்த பின்னர்) மற்றும் அலுவல் பளு அதிகமான பின்னர், பழைய நகைச்சுவை உணர்வுகளை கொஞ்சம் (மட்டுமே) இழந்திருக்கிறேன். ஆனால், என்னுடைய நகைச்சுவை உணர்வு பொதுவாக ஓரளவிற்கு நன்கு பழகியவர்களிடம் மட்டுமே அதிகம் வெளிப்படும் தன்மை கொண்டது. பதிவுலகத்திற்கு முற்றிலும் புதியவனாக இருப்பதால் இங்கே நகைச்சுவைக்காக எழுத விரும்பிய பதிவுகளை கூட சற்று சீரியஸ் ஆகவே எடுத்துக் கொண்டு எழுதி உள்ளேன். இந்த பதிவு உண்மையிலேயே நான் பெருமளவிற்கு மதிக்கும் தலைவர்களைப் பற்றியது. எனவே உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். இது ஒரு மிக சீரியஸ் ஆன பதிவுதான்.

//(உங்க மத்த நல்ல பதிவுகளை திரும்ப படிக்க வேண்டும், இத படிச்சதால, ஒரு வேளை அங்கேயும் இதே மாதிரி ந.சுவை உணர்வுடன் ....)//

என்னுடைய பதிவுகளில் நல்ல பதிவென்றும் கெட்ட பதிவென்றும் நான் தரம் பிரிக்க வில்லை. எல்லா பதிவுகளுமே, நான் அறிந்த சில விஷயங்களை என் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான். சிலவற்றை சரியாக வெளிப்படுத்தி இருக்க தவறி இருக்கலாம். அவ்வளவே.
Maximum India said…
அன்புள்ள ராஜா

பின்னூட்டத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

//நல்ல முறையில் எல்லோரிடமும் உள்ள நல்ல விஷயங்களை சொல்லியிருக்கீறீர்கள். வாழ்த்துக்கள்//

என்னுடைய வருத்தமெல்லாம், ஒரு பெரிய தலைவரைப் பற்றி தவறாக கூறப் படும் கருத்துகளை (உண்மையா பொய்யா என்று கூட தெரிந்து கொள்ளாமல்) உடனடியாக வெளிச்சம் போட்டு காட்டும் நம் ஊடகங்களும் எதிர் (ரி) கட்சிகளும், அவரிடம் உள்ள நல்ல விஷயங்களை (உண்மையாக இருந்தாலும் கூட) (பாராட்டக் கூட வேண்டாம்) அங்கீகரிக்க கூட மறுத்து விடுவதுதான்.

பொதுமக்களும், சுயமாக உழைத்து வாழ்வில் மிகப் பெரிய வெற்றிகளை அடைந்தவர்களிடமிருந்து அந்த வெற்றிக்கான ரகசியங்களை அறிந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அவர்களின் சில தவறான பகுதிகளை மட்டுமே குற்றம் சொல்லிக் கொண்டு தனது சொந்த வாழ்வில் வெற்றிக்கான முனைப்பை இழந்து விடக் கூடாது.
கபீஷ் said…
நான் மத்த நல்ல பதிவுகள்னு சொன்னது இதைத் தவிர மத்த எல்லா பதிவுகளை, தவறான புரிதல் ஏற்பட காரணமாக எழுதியதற்கு வருந்துகிறேன்
Maximum India said…
அன்புள்ள கபீஷ்

//நான் மத்த நல்ல பதிவுகள்னு சொன்னது இதைத் தவிர மத்த எல்லா பதிவுகளை, தவறான புரிதல் ஏற்பட காரணமாக எழுதியதற்கு வருந்துகிறேன்//

நான் இந்த பதிவுலகிற்கு வந்தது நம்மால் முடிந்த வரை மற்றவைகளுக்கு நல்ல தகவல்களையும் கருத்துகளையும் சொல்ல வேண்டும் என்பதற்காகவும் , இந்த பதிவுலகு, நமது மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ளும் வருத்தங்களுக்கு ஆறுதல் சொல்லும் புதிய நட்புகளையும் வழங்கும் என்ற நம்பிக்கையிலும் மட்டுமே.

எனவே நீங்கள் எந்த வகையிலும் வருத்தப் பட வேண்டியதில்லை.
கபீஷ் said…
ஓகே நண்பா! keep rocking

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...