Skip to main content

இந்தியாவின் தேன்நிலவு

இந்திய படைப்பான சந்திராயன் 1 வெற்றிகரமாக சந்திரனின் 100 கி.மீ உள்வட்ட பாதையில் (Polar Range) இன்று நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இனி இந்த துணைக்கோள் சந்திரனை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சுற்றி வந்து தொலைப்படங்கள் (Mapping) எடுத்து அனுப்பும். இதன் மூலம் சந்திராயன் 1 ப்ராஜெக்ட் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
(வீடியோ படம் பார்க்க)

சந்திராயன் 1 பயணத்தின் குறிப்படத் தக்க சிறப்பம்சங்கள் கீழே.

1. இதன் மூலம் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பிய ஐந்தாவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு.

2.இது வரை அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளிலேயே குறைந்த செலவில் அனுப்பப் பட்ட ராக்கெட் சந்திராயன்தான்.

3. இது வரை உலகிலேயே இல்லாத அளவுக்கு மிக அதிக சாதனங்கள் இந்த ஒரே ராக்கெட்டின் வழியே அனுப்பப் பட்டுள்ளன.

4. முதல் முயற்சிலேயே சந்திரனுக்கான பயணத்தினை வெற்றிகரமாக முடித்த நாடு என்ற நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது.

5. நேரடியாக நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பாமல் பூமி மற்றும் சந்திரனின் நீள்வட்ட பாதைகளில் சந்திராயனை சுற்ற வைத்து இறுதியாக நிலவின் உள்வட்ட பாதையில் நிலை நிறுத்த மிக நுணுக்கமான தொழில் நுட்பம் தேவை. தன்னுடைய உலக தரம் வாய்ந்த தொழிற் நுட்ப திறனை இந்த பயணம் மூலம் இந்தியா மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

இந்த பயணத்தின் மூலம் இந்தியாவிற்கு கிடைத்துள்ள பயன்கள்

1. மேலே சொன்னது போல தனது தொழிற் நுட்ப திறனை உலகிற்கு வெளிக்காட்டுவது.

2. சந்திரனில் உள்ள சில தாதுப் பொருட்கள் அணு சக்தி உற்பத்திக்கு உதவும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவற்றை பூமிக்கு கொண்டு வர வருங்கால தொழிற்நுட்பம் உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே தற்போது பல நாடுகள் சந்திர பயணத்தில் (காலனி ஆதிக்க முயற்சிகள் கூட உண்டு ) ஆர்வம் காட்டி வருகின்றன. அணுசக்திக்கு வருங்காலத்தில் மிக அதிக தேவை கொண்ட நாடான இந்தியா இதில் முந்தி கொள்வது அவசியமாகிறது.

மேலும் இந்தியர்களுக்கு மிகப் பெரியப் பெருமையை இந்தப் பயணம் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தியர் எல்லாரும் கொண்டாட வேண்டிய தேன்நிலவு தருணம் இது. இதன் திட்ட இயக்குனர் திரு.மயில்சாமி அண்ணாதுரை ஒரு தமிழர். எனவே தமிழர்க்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

இவை எல்லாம் இருந்தாலும் கூட, சந்திரனுக்கு இவ்வளவு செலவு செய்து பயணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் நினைக்கலாம். அவர்களுக்கு ஒரே ஒரு விஷயம்.

இந்த செலவு ஒரு தேன்நிலவுக்கான செலவு. ஒரு மனிதனின் திருமண வாழ்வின் போக்கையே தீர்மானிக்க வல்ல தேன்நிலவுக்கான செலவை அவன் ஒரு சிறந்த முதலீடாகவே கணக்கிட வேண்டும். அதுபோல் சந்திராயனுக்கான செலவை வருங்கால விண்வெளி ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கான ஒரு முதலீடாகவே கருத வேண்டும்.

சிறுவயதில் தீபாவளி ராக்கெட்டில் சீக்கிரம் அங்கு வருவேன் என்று துண்டு சீட்டில் எழுதி வைத்து அனுப்பியதற்காக அம்மாவிடம் அறை வாங்கியவன் (அம்மா அந்த செயலை அமங்கலமாக கருதியதால்) நான். இன்றைக்கு அதே போல ஐந்து வயதிலேயே Astronaut ஆக ஆசைப் படும் என் குழந்தைக்கு தோளில் தட்டி நான் சொன்ன பதில். கண்டிப்பாக ஒரு நாள் நிலவுக்கு போக முடியும் அதுவும் ஒரு இந்திய ராக்கெட்டிலேயே உன்னால் நிலவுக்கு போக முடியும்.

இந்த நம்பிக்கையை ஒரு இந்தியனுக்கு கொடுக்க உதவி செய்த சந்திராயன் விஞ்ஞானிகள் அனைவருக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், ஒரு சிறந்த தேன்னிலவின் இயல்பான வெளியீடுகளாக செவ்வாய் குழந்தை, பால்வெளி பேரன்கள் என மேலும் பல முத்திரைகள் பதிக்க வாழ்த்துவோம்.

நன்றி

Comments

Kumaran said…
நல்ல பதிவு... நன்றி..
Maximum India said…
அன்புள்ள குமரன்

பின்னூட்டதிற்கு நன்றி
Anonymous said…
சந்திராயன் சரியான சொல்லன்று.

நிலவூர்தி, சந்திரயானம், சந்திரயான் என்று எழுதவேண்டும்.

யானம் – ஊர்தி.

நிலவூர்தி – நிலவுக்குச் செல்லும் ஊர்தி; நிலவுக்குச் செலுத்தப்படும் ஊர்தி.

- அ. நம்பி
KARTHIK said…
இது ஒன்னும் வீண் செலவு இல்லை

இதன் மூலம் நமக்கு பல சிறிய நாடுகளிடமிருந்த மேலும் பல ஆடர்கள் வரலாம்.நமது திறமையை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.இப்போது இதற்க்கு நாம் செலவு செய்ததை விட மற்ற நாடுகளின் செயற்க்கைகோளை நமது ராகெட்டின் மூலம் கொண்டு செலுத்துவதன் வாயிலாக பெரும் பொருள் ஈட்டமுடியும்.

நம்மை பெருமைப்பட வைக்கும் பதிவு தொடருங்கள்
Maximum India said…
அன்புள்ள நம்பி

பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் நன்றி.

சமூக கருத்துகள் சொந்த மொழியிலேயே இருக்க வேண்டும். அதே சமயம் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கருத்துகளில் ஓரளவு மற்ற (அந்த கருத்துகள் உருவான) மொழிப் பெயர்களை உபயோகப் படுத்தலாம் என்பது என்னுடைய கருத்து. காரணம் அப்போதுதான் கருத்துப் பரிமாற்றம் முழுமை பெறும் என நம்புகிறேன்.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//இது ஒன்னும் வீண் செலவு இல்லை

இதன் மூலம் நமக்கு பல சிறிய நாடுகளிடமிருந்த மேலும் பல ஆடர்கள் வரலாம்.நமது திறமையை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.இப்போது இதற்க்கு நாம் செலவு செய்ததை விட மற்ற நாடுகளின் செயற்க்கைகோளை நமது ராகெட்டின் மூலம் கொண்டு செலுத்துவதன் வாயிலாக பெரும் பொருள் ஈட்டமுடியும்//

உங்கள் கருத்துகள் மிகவும் சரி. கிட்டத்தட்ட இதே கருத்தில் இன்றைக்கு ஒரு தலையங்கம் நான் படித்தேன்.

http://www.dnaindia.com/report.asp?newsid=1206210

நேரமிருந்தால் அவசியம் படிக்கவும்.
Anonymous said…
//அதே சமயம் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கருத்துகளில் ஓரளவு மற்ற (அந்த கருத்துகள் உருவான) மொழிப் பெயர்களை உபயோகப் படுத்தலாம் என்பது என்னுடைய கருத்து.//

நான் சொல்ல எண்ணியதைத் தெளிவாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

Chandrayaan என்பது சந்திரயான் என்றுதான் வரும்; சந்திராயன் என்று வராது.

`யான்' என்பது சமற்கிருதச் சொல்லின் (யான - yana) இந்தி வடிவம். `யான்' என்பதனை `யன்' என்று எழுதுதல் கூடாது.

(தமிழில் நிலவூர்தி; சந்திரயானம் என்பது சமற்கிருதச் சொல்லின் தமிழ்வடிவம்.)

`நிலவூர்தி, சந்திரயானம், சந்திரயான் என்று எழுதவேண்டும்' என்று நான் சொன்னதன் பொருள்: `இம்மூன்றனுள் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்; சந்திரராயன் கூடாது' என்பதே ஆகும்.

தெளிவாகச் சொல்லாமைக்கு வருந்துகிறேன்.

- அ. நம்பி
Maximum India said…
அன்புள்ள நம்பி

உங்கள் மொழி அறிவு என்னை வியக்க வைக்கிறது.

எனது தமிழை செம்மைப் படுத்தும் உங்களின் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றிகள் பல.
KARTHIK said…
// தெளிவாகச் சொல்லாமைக்கு வருந்துகிறேன்.

- அ. நம்பி.//

நம்பி அருமையான விளக்கம்.இதில் வருந்த ஒன்றும் இல்லை.

இது பற்றி பத்ரியும் சொல்லிருக்காரு.
Maximum India said…
Dear Nambi

I repeat Karthik's comments

//அருமையான விளக்கம்.இதில் வருந்த ஒன்றும் இல்லை.//
உங்க குழந்தைகிட்ட சொல்லி எனக்கும் சந்திரன்ல ஒரு ப்ளாட் புக் பண்ன சொல்லுங்க

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...