Thursday, November 27, 2008

இந்தியர்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ள யுத்தம் - மும்பையிலிருந்து ஒரு ரிப்போர்ட்


இதுவரை இந்தியா மீது தீவிரவாதிகள் நடத்தி வந்தது அறிவிக்கப் படாத மறைமுக யுத்தம் (குண்டுகளை பதுக்கி வைத்திருந்து வெடிக்கச் செய்வது). இந்த யுத்தத்தில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் அப்பாவி பொது மக்கள் மட்டுமே. ஆனால் இந்த முறை நடந்திருப்பது அறிவிக்கப்பட்ட நேரடி யுத்தம். இதில் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் பொது மக்கள் மட்டும் அல்ல. போலீஸ் அதிகாரிகள், வெளி நாட்டினர் (சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட உண்டு) , பெரும் செல்வந்தர்கள், உள்நாட்டு அதிகாரிகள் மற்றும் முக்கிய புள்ளிகள். இது பற்றி மும்பையிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட் இங்கே.

"வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தை உங்களில் பலர் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் சில ஆயிரம் வீரர்களை கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்த பாபர் போன்றவர்கள் லட்சக் கணக்கான வீரர்களை கொண்ட அப்போதைய இந்திய மன்னர்களை தோற்கடித்தார்கள் என்று படித்த போது நம்புவது கடினமாக இருந்தது. ஆனால் நேற்று மும்பையில் நடந்தேறியிருக்கும் இந்த தீவிரவாதிகளின் தாக்குதலைப் பார்க்கும் போது சிலரால் பலரை வெல்ல முடியும் என்று இன்னமும் நம்பும் பாகிஸ்தான் மக்கள் நம்பிக்கை சரிதானோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நேற்று இந்தியாவிற்குள் கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் கூற்றுப் படி வெறும் பன்னிரண்டு மட்டுமே. இவர்கள் கொன்றது நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை. இதில் 14 பேர் போலீஸ்காரர்கள். அதுவும் மும்பையின் தீவிரவாத தடுப்புக் குழுவின் தலைவரும் மிக மூத்த போலீஸ் அதிகாரியுமான ஹேமந்த் அவர்கள் கூட நேரடி மோதலில் சுட்டுக் கொல்லப் பட்டார். ஆறு வெளிநாட்டினரும் கொல்லப் பட்டனர். குறைந்த பட்சம் 300 பேர் (சில தகவல்கள் 900 என்றும் கூட சொல்கின்றன) படுகாயம் அடைந்துள்ளனர். பன்னிரண்டு தீவிரவாதிகளில் ஐந்து பேரைக் கொன்று விட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப் படுகிறது. ஒருவர் கைது செய்யப் பட்டு விட்டார் எனவும் கூறப் படுகிறது. மீதம் உள்ள ஆறு பேர் (மேலும் பல உள்ளாட்கள் இருக்கிறார்களா என்று தெரியாது) இரண்டு குழுக்களாக பிரிந்து மும்பையின் முக்கிய இரண்டு விடுதிகளில் உள்ள முன்னூறுக்கும் மேற்பட்ட பேரை பிடித்து வைத்திருப்பதாக சொல்லப் படுகிறது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த முக்கிய நபர்கள் மற்றும் இந்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் அடக்கம். (சாதாரண மக்கள் இங்கு தங்குவது சிரமம்) பல ஆயிரம் போலீஸ் மற்றும் ராணுவத்தினராலும் இந்த தீவிரவாதிகளை இந்த பதிவு எழுதும் வரை முற்றிலும் ஒழிக்க முடிய வில்லை.

இப்போது சொல்லுங்கள். சில ஆயிரம் பேர் வந்து சில லட்சம் படை கொண்ட இந்திய மன்னர்களை வென்று நம் நாட்டின் பல கோடி மக்களை பல காலம் ஆட்சி செய்தனர் என்ற செய்தி நம்பக் கூடியதாகவே உள்ளது அல்லவா? அந்த கால இந்தியா போலவே இன்றைக்கும் ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவு பட்டுள்ள இந்தியா மீது நேற்றைக்கு நடை பெற்றுள்ள இந்த தாக்குதல் பற்றி சற்று விரிவாக பார்போம்.
இந்தியா மற்றும் மும்பையின் நுழைவு வாயிலாக கருதப் படும் கேட் வே ஆப் இந்தியா பகுதிக்கு அதிவிரைவு படகில் 12 பேர் கொண்ட ஒரு குழு நேற்று இரவு 9.30 மணி அளவில் வந்தது. இவர்கள் கராச்சி நகரில் இருந்து வந்ததாக கூறப் படுகிறது. இயற்கையிலேயே பாதுகாப்பான துறைமுகமாக கருதப் படும் மும்பை நகரத்தைச் சுற்றி பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப் பட்டுள்ள நமது கடலோர காவல் படைக்கும் கடற்படைக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு இவர்கள் நவீன ரக ஆயுதங்களுடன் நுழைந்தது ஆச்சரியமான விஷயம். பின்னர் இரண்டு குழுக்களாக இவர்கள் பிரிந்து கொண்டனர்.

ஒரு குழு இந்தியாவின் பெருமையாக கருதப் பட்ட (படும்) தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கண்மூடித் தனமாக சுட்டனர். குண்டுகளும் எறியப் பட்டது. மேலும் அருகிலுள்ள (மேல் மட்டத்தினரின்) உணவகத்திலும் நுழைந்து அங்குள்ளவர்களையும் ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர். கடைசியாக வந்த சில தகவல்களின் படி தாஜ் ஹோட்டல் பிணைக்கைதிகள் விடுவிக்கப் பட்டனர் என்று தெரிகிறது.

மற்றொரு குழு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப் படும் மும்பை CST ரயில் நிலையம் சென்றது. அங்கு ரயில்களுக்காக காத்திருந்த பொது மக்கள் மீது கண்மூடித் தனமாக சுட்டனர். அங்கிருந்து காமா மருத்துவமனைக்கு சென்ற இவர்கள் அங்கும் மக்கள் மீது சுட்டனர். அப்போது இவர்களைத் தடுக்க வந்த ஹேமந்த் கார்கரே தலைமையில் வந்த மும்பை போலீஸ் மீதும் நேரடி தாக்குதல் நடத்தினர். நம் தரப்பில் போலீஸ் பலர் இருந்தும், அதி நவீன ரக துப்பாக்கிகள் வைத்திருந்த தீவிரவாதிகளை சமாளிக்க முடிய வில்லை. போலீஸ் தரப்பில் ஏராளமான இழப்புகள் (ஹேமந்த் கார்கரே உட்பட). அதே சமயம் தீவிரவாதிகள் தரப்பில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக தெரிய வில்லை. அங்கிருந்து பல இடங்களில் தாக்குதல் நடத்தி விட்டு இறுதியாக மும்பையின் மற்றொரு மிகப் பெரிய ஹோட்டலுக்குள் சென்ற இவர்கள் அங்குள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டுள்ளனர். ஹாலிவுட் சினிமாக்களையும் மிஞ்சும் இந்த நிகழ்வுகள் நமக்குள்ளே மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன.

இப்போது, இந்த தீவிரவாதிகள் மிகப் பெரிய பிணைத்தொகை மற்றும் இந்திய சிறையில் உள்ள தீவிரவாதிகளை விடுதலை செய்யும் கோரிக்கைளை அரசின் முன் வைப்பதாகவும் பேச்சு வார்த்தைகளும் நடைபெறுவதாகவும் கூறப் படுகிறது. தேசிய பாதுகாப்பு படை மற்றும் இராணுவம் இங்கே வரவழைக்கப் பட்டுளள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் முழுக்க மிகத் துணிச்சலாக படம் பிடித்த மற்றும் கவரேஜ் செய்த பத்திரிக்கையாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஒரு படப் பிடிப்பாளர் இதில் சுடப்பட்டார். மேலும் RDX குண்டுகளை தாங்கி சென்ற ஒரு கார், மும்பையின் விலேபார்லே பகுதியில் வெடித்து சிதறியதும் குறிப்பிடத் தக்கது. இங்கே மும்பையில் ஒரு பதட்டமான சூழ் நிலையே நிலவி வருகிறது. 2005 இல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போதும் 2006 இல் ஏற்பட்ட மிகப் பெரிய குண்டு வெடிப்பின் போதும் மிகுந்த மன துணிச்சலை காட்டிய மும்பை மக்களின் மனதில் தற்போது அச்சம் நுழைந்து உள்ளது.

யோசித்து பாருங்கள். வெறும் 12 பேரால் இவ்வளவு பாதிப்பு ஏற்படுத்த முடியும் போது, இந்தியாவின் முக்கிய நகரங்கள் சிலவற்றில் இதே போல ஒரே சமயத்தில் சில ஆயிரம் பேர் (தீவிரவாதிகள்) ஒரு நேரடி யுத்தம் நடத்தினால் நம் நாட்டிற்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டு விடாதா? இந்த அறிவிக்கப் பட்ட நேரடி யுத்தத்தின் (Declared War) முதல் சண்டை களத்தில் (Battle) யார் கை ஓங்கப் போகிறது என்று சில நாட்களில் தெரிந்து விடப் போகிறது.

இந்த நேரடி யுத்தத்தில் இறுதியாக இந்தியா வெல்ல நாம் என்ன செய்ய வேண்டும்?

இன்றைய தேதியில் இந்தியாவின் முதல் மற்றும் முக்கிய பிரச்சினை இந்த பாதுகாப்பு பிரச்சினை. இதில் நாம் தவறினால் நமது சுதந்திரத்தையே இழந்து விடும் அபாயம் உள்ளதுடன் நமது வருங்கால சந்ததிகள் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இத்தனை நாள் மறைமுக யுத்தத்தை நாம் அலட்சியப் படுத்தியது போல இந்த நேரடி யுத்தத்தை எடுத்துக் கொள்ள கூடாது.

தேசிய தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையாக இந்த பாதுகாப்பு விஷயத்தில் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். அனைத்து கட்சிகள் உள்ளடக்கிய ஒரு தேசிய அரசு கூட அமைக்கலாம். இந்த நாட்டிற்கே பொதுவான விரோதிகளை வேரோடு அழிக்க போர்க்கால நெருக்கடி நிலை கூட பிரகடனம் செய்யலாம். மக்களும் சில நாட்களுக்கு ஜாதி மதம். மொழி கட்சி இன வேறுபாடுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு இந்தியாவின் பாதுகாப்பிற்கு தம்மால் ஆன உதவி செய்தால் நம்மனைவருக்கும் நல்லது.

இந்த நெருக்கடியான நிலையை நம் நாட்டினர் ஒன்று கூடி ஒற்றுமையாக வாழ உதவி செய்யும் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்வோம். கூடிய சீக்கிரம் வெல்வோம் விரோதிகளை.

"இனி பொறுப்பதில்லை - தம்பி
எரி தழல் கொண்டு வா
நேரடி யுத்தம் அறைகூவியவரனைவரும்
சாயும் வரை ஓய மாட்டோம் "
நன்றி.

20 comments:

Nam-Tamil said...

இதை எல்லாம் சேர்த்துதான் நண்பா... சென்றமுறை நான் அவ்வாறு கூறினேன்...!!
உங்களை / உங்கள் கருத்தை குறை கூறும் நோக்கம் அல்ல....!!!

நமது பழைய உரையாடலை இங்கு தொடர நினைக்கிறேன்...!!!

அகிம்சை, ஜனநாயகம் எல்லாம் நம்மை ஏமாற்றும் வார்த்தைகளே.....!!! நம்மை நாமே ஏமாற்றி கொண்டு உள்ளோம்.....!!!

உங்களின் கனவு நனவாக நானும் பிராதிக்கிறேன்....!!! நன்றி...!!!

Maximum India said...

அன்புள்ள நம்-தமிழ்

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

//நமது பழைய உரையாடலை இங்கு தொடர நினைக்கிறேன்...!!!//

நான் இன்னொரு பதிவில் கூறியது போல இந்தியர்கள் விவாதங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் மேலும் அவற்றில் வல்லவர்கள் கூட. நாம் இருவருமே இந்தியர்கள். எனவே விவாதங்களை நாம் தொடர்ந்து கொண்டே இருக்கலாம். இதில் தவறொன்றுமில்லை. மேலும் விவாதங்களின் மூலமே நம் நாட்டில் அளவிடற்கரிய சிறந்த தத்துவ நூல்கள் தோன்றியிருக்கின்றன. எனவே நம் விவாதங்கள் புதிய சிறந்த கருத்துகளை உருவாக்க உதவும் என்றும் நம்புவோம்.

//அகிம்சை, ஜனநாயகம் எல்லாம் நம்மை ஏமாற்றும் வார்த்தைகளே.....!!! நம்மை நாமே ஏமாற்றி கொண்டு உள்ளோம்.....!!! //

அறுவை சிகிச்சை சில சமயங்களில் தேவைதான். ஆனால் ஒவ்வொரு வியாதிக்கும் அறுவை சிகிச்சை மூலமே மருத்துவம் செய்ய நினைப்பது உடலுக்கு அதிக தீங்கையே விளைவிக்கும். கார்ல் மார்க்ஸ் சிந்தனைகளை மதிப்பவன் நான். அதை மிதித்தவர்களின் வழியில் இந்தியா செல்ல வேண்டும் என நினைக்க முடியாது.

Maximum India said...

அன்புள்ள நம்-தமிழ்

//உங்களின் கனவு நனவாக நானும் பிராதிக்கிறேன்...!!!//

எனது மட்டுமல்ல இந்தியா சீனாவை போல பல துறைகளில் முன்னேற வேண்டும் என்ற உங்களது நியாயமான கனவும் நனவாக வேண்டிக் கொள்கிறேன்.

புலோலியான் said...

பிரச்சினை என்னவென்றால், இந்தியாவுக்கு தன்னைச் சூழ உள்ள நாடுகளில் உள்ள எதிரிகளைக் களையெடுக்கத் தெரியவில்லை. மேலும் எதிரிகளைக் கூட்டிக்கொண்டே போகிறது. சீனா, பாகிஸ்தான், இலங்கை என்று ஒரே எதிரிகள் பட்டாளம். இந்த எதிரிகளைக் கவனித்தீர்கள் என்றால் அவர்களிடையே நல்ல ஒற்றுமையைப் பேணுகிறார்கள். இந்தியாவுக்குத் தெரியாத பல திட்டங்கள் அரங்கேற்றப்படுகின்றன. தவறு இந்திய கொள்கை வகுப்பாளர்களிலேயே உள்ளது.

பாகிஸ்தான் பிரச்சினைக்கு தமிழகத்திலிருக்கும் அதிகாரிகள் முடிவெடுப்பது எவ்வலவு அபத்தமோ, அது போன்றதே இலங்கை விவகாரத்தில் மேனன்களும், நாராயணன்களும் முடிவெடுப்பது. என்றுதான் திருந்துவார்களோ தெரியவில்லை. :(

Maximum India said...

அன்புள்ள புலோலியான்

பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான்.

இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. பல கலாச்சாரங்களை உள்ளடக்கியது. இதனால் இரு வெவ்வேறு பகுதியைச் சார்ந்த இருவர் இடையே சிந்தனைகளிலும் நிலைப்பாடுகளிலும் மிகப் பெரிய வேறுபாடுகள் உள்ளன. சொல்லப் போனால் பல சமயங்களில் இரு துருவங்களின் எதிர் நிலைகள் கூட காணப் படுவதுண்டு. மேலும் கூட்டணி அரசியல் அரசிற்கு பல தடுமாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

நீங்கள் சொல்வது போல, ஒரு பிரச்சினையின் தீவிரத்தை பற்றி உள்ளுணர்வோடு உணர முடிகிறவர்கள் அந்த பிரச்சினை பற்றி முக்கிய முடிவெடுக்கும் பட்சத்தில் அது சிறப்பான முடிவாக இருக்க முடியும்.

சீனாவிற்கு அருணாச்சல பிரதேசத்தின் மீது கண். பாகிஸ்தானிற்கு காஷ்மீர் மீது கண். இலங்கைக்கு இந்தியா தனது விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்ற குறிக்கோள். எனவே மற்ற இரு நாடுகளுடன் நல்லுறவு பேணுகிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள். அந்த வழக்கின் அடிப்படையிலேயே இவர்கள் மூவர் கூட்டணி அமைத்துள்ளார்கள். அண்டை நாட்டினை நாம் தீர்மானிக்க முடியாது. எனவே, இவர்களை வெல்ல முயற்சி செய்வதை விட தன் சொந்த பாதுகாப்பை வலுப்படுத்தி கொள்வது நலம்.

கபீஷ் said...

//தேசிய தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையாக இந்த பாதுகாப்பு விஷயத்தில் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். //

Which never happened in any case. That's y these incidents are repeating

selventhiran said...

என்று இன்னமும் நம்பும் பாகிஸ்தான் மக்கள் நம்பிக்கை சரிதானோ // இந்த ஒருவரி மட்டும் மிகத்தவறாகப் பிரயோகப்படுத்தப்பட்டு துருத்துகிறது. பாகிஸ்தானில் இருப்பவர்களும் உங்களையும் என்னையும் போன்ற பொதுமக்களே. அவர்கள் அன்றாடக் கவலைகளில் ஆழ்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவை எதிர்ப்பதோ காஷ்மீரைக் கைப்பற்றுவதோ கவலை இல்லை.

இங்கு நிகழ்த்தப்படும் கொடூரம் மிகுந்த மேல்மட்டங்களினால் நிகழ்த்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

Maximum India said...

Dear Kabeesh

//Which never happened in any case. That's y these incidents are repeating//

Americans had one 9/11 and vowed that it should never repeat. One important thing we should learn from them that they never played the blame game (at least immediately) after the attacks.

Maximum India said...

அன்புள்ள செல்வேந்திரன்

பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//என்று இன்னமும் நம்பும் பாகிஸ்தான் மக்கள் நம்பிக்கை சரிதானோ // இந்த ஒருவரி மட்டும் மிகத்தவறாகப் பிரயோகப்படுத்தப்பட்டு துருத்துகிறது. பாகிஸ்தானில் இருப்பவர்களும் உங்களையும் என்னையும் போன்ற பொதுமக்களே. அவர்கள் அன்றாடக் கவலைகளில் ஆழ்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவை எதிர்ப்பதோ காஷ்மீரைக் கைப்பற்றுவதோ கவலை இல்லை.

இங்கு நிகழ்த்தப்படும் கொடூரம் மிகுந்த மேல்மட்டங்களினால் நிகழ்த்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.//

நீங்கள் சொல்வது சரிதான். நான் கொஞ்சம் தெளிவாக விளக்கி இருக்க வேண்டும். அதாவது, இந்தியாவைக் காட்டியே அரசியல் பண்ணிக் கொண்டிருந்த சில அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிபர்கள், இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டினை எப்படி வெல்ல முடியும் என்று பாக் மக்களிடையே ஏற்படக் கூடிய அவநம்பிக்கைகளை நீக்குவதற்காக பாபர் கஜினி போன்றவர்களை வரலாற்று நாயகர்களாக பாக் சரித்திரத்தில் அறிமுகப் படுத்தினர். ஆனால் காலப் போக்கில், தீவிரவாதம் இந்தியாவில் விட பாக்கை அதிகம் பாதித்த பிறகு மற்றும் அவர்களின் மேற்கு எல்லையில் உள்ள பிரச்சினைகள் அதிகமாகி விட்ட பிறகு இந்தியாவில் அவர்களது தலையீட்டை குறைத்துக் கொண்டனர். எனவேதான் இந்த பதிவில் பாகிஸ்தான் அரசு குறை கூறப் படவில்லை. ஆனால் பாக்கில் உள்ள தீவிரவாதிகள் பலர் இந்த கனவில் இன்னும் மூழ்கி உள்ளனர். எனவே. மக்கள் என்ற இடத்தில் அடிப்படை வாதிகள் அல்லது தீவிரவாதிகள் என்று இருந்திருக்க வேண்டும். பொது மக்கள் பொதுவாகவே எல்லா நாட்டிலும் அப்பாவிகள்தான்.

கபீஷ் said...

//Americans had one 9/11 and vowed that it should never repeat. One important thing we should learn from them that they never played the blame game (at least immediately) after the attacks.
//
yes, true, even in england after 9/11, it never repeated. Being in London, I know how much protection is given to lives. As far as i know, in india it was not the case

Anonymous said...

//...தேசிய தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி...//

தேசியத் தலைவர்களா? உங்கள் நாட்டில் தலைவர்கள் இருக்கிறார்களா என்ன?

இருப்பவர்கள் எல்லாரும் வாக்குப்பெட்டி அரசியல் வணிகர்கள்.

இவர்களால்தான் இந்தியா என்னும் மாபெரும் நாடு சீரழிந்துகொண்டிருக்கிறது.

- அ. நம்பி

Maximum India said...

Dear Kabeesh

//yes, true, even in england after 9/11, it never repeated.//

This is not a true fact. London was attacked even after 9/11 i.e in July 2005. Many other countries (including European Countries) across the world are being affected now and then. This year alone, China, Thailand, Russia, Pakisthan and many other European Countries have also been affected by terror attack. May be that, India is one among the worst affected by the terror because of its sheer size, democracy, alliance politics, turbulent neighbourhood etc.


//Being in London, I know how much protection is given to lives. As far as i know, in india it was not the case//

India, the major problem is its huge population and the multi-ethnic culture. If we had a homogeneous culture (atleast to some extent) like most of the countries in the world we would have been in much better position.

I don't know about others how they feel about the rescue operations now happening at Mumbai Hotels. But I honestly feel pround about the NSG and Army operations as they are taking care of the innocent citizens' security also unlike some other countries I don't want to name.

MK said...

இந்தியா தன்னுடைய வெளியறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட வெளியறவுக் கொள்கையை கைகொள்வது சாலச்சிறந்தது..!

Maximum India said...

அன்புள்ள நம்பி

// உங்கள் நாட்டில் //

நீங்கள் எந்த நாட்டின் குடிமகன்? இந்திய நாட்டின் குடிமகன் என்றால் நாம் இது குறித்து மேற்கொண்டு விவாதிக்கலாம். வெளிநாட்டினர் எனும் பட்சத்தில் நான் உங்களுடன் எனது நாட்டின் தலைவர்களை பற்றி விவாதிக்கப் போவதில்லை.

//இருப்பவர்கள் எல்லாரும் வாக்குப்பெட்டி அரசியல் வணிகர்கள்.//

உலகின் எல்லா ஜனநாயக நாட்டிலும் அரசியல் வாதிகள் வாக்குப்பெட்டி வணிகர்கள்தான் அமெரிக்கா உட்பட. உங்கள் நாட்டில் வாக்குகளை பற்றி கவலைபடாதவர்கள் இருந்தால் அவர்கள் ஜனநாயகவாதிகளே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

//இவர்களால்தான் இந்தியா என்னும் மாபெரும் நாடு சீரழிந்துகொண்டிருக்கிறது.//

இந்தியா பல ஆயிரம் ஆண்டு சரித்திரம் கொண்ட நாடு. பல கொடூர தாக்குதல்களை சந்தித்த நாடு. இதை சிலரால் சில வருடங்களில் சீரழித்து விட முடியாது.

Anyway, உங்கள் அக்கறைக்கும் கருத்துக்கும் நன்றி.

Maximum India said...

அன்புள்ள MK

பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் நன்றி. இந்தியாவின் வெளியுறவைக் கொள்கை மிக முக்கியமான விஷயம். நிச்சயம் இந்திய அரசு இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

MCX Gold Silver said...

நான் ஏற்கனவே இட்ட பின்னுடம் இப்போது பொருத்தமாக இருக்கும்


நான் ஏற்கனவே இட்ட பின்னுடம்

மக்களை குறை சொல்லி பயன் இல்லை அதிகாரத்தில் இருப்பவர்கள் முதலில் மாறவேண்டும் அதிகாரத்தில் இருப்பவர்கள் (அரசியல் வாதிகள் ) அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள எடுக்கும் முயற்சியை சிறிதாவது மக்கள் நலனில் காட்ட வேண்டும்
கொஞ்ச காலத்திற்கு முன்பு பாராளுமன்றத்தில் மாண்பு மிகு மக்கள் பிரதிநிதிகள் பண கட்டுகளோடு காட்சி அளித்ததை நினைது பார்க்க வேண்டும்

Maximum India said...

//pround //

sorry.It is "Proud"

கபீஷ் said...

Hi,
//yes, true, even in england after 9/11, it never repeated.//

You mentioned the same, ie after 9th of november, may be u got confused with 11/9 and 9/11.

ஆட்காட்டி said...

பேசுறதுக்கு மட்டும் நல்லா இருக்குல்ல?

Maximum India said...

பின்னூட்டத்திற்கு நன்றி dg

என்னுடையது அதே பழைய பதில்தான்

நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான்

:)

Blog Widget by LinkWithin