Skip to main content

சட்டங்களும் சில கட்டங்களுக்குள்

சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு உண்ணாவிரத போராட்டத்தின் போது, சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தமது உணர்ச்சிகளை வெளிபடுத்தாமல் இருப்பதாக சிலர் கூறினர்.

பொது மக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களுக்குக் கூட சில கட்டுப்பாடுகள் உண்டு தெரியுமா?

பேயாட்சி செய்யும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று சொன்னான் பாரதி. அதாவது பேயைப் போல தீய குணங்கள் உள்ளவர்களால் ஆட்சி நடத்தப் படும் போது அவர்களால் உருவாக்கப்படும் சட்டங்கள் பிணத்தை தின்னுவதைக் கூட (தீய செயல்கள் செய்வதைக் கூட) நியாயப்படுத்தும் என்று பொருள்.

ஒரு குறிப்பிட்ட காலம் வரை, காங்கிரஸ் தலைவர்கள் சூரியன் மறையாத நாட்டின் (பிரிட்டிஷ் அரசின்) சட்டத்திற்கு கட்டுப்பட்ட ஒரு சுயராஜ்யம் (Home Rule) மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தை மாற்றி அன்னியரின் (அடக்கு முறை) சட்டத்தையே எதிர்த்து சட்ட மறுப்பு இயக்கம் கண்டவர் மகாத்மா காந்தி. அவருடைய அந்த முடிவே இந்தியா முழுமையான சுதந்திரம் பெற காரணமாக இருந்தது.

சுதந்திரம் பெற்றபோது வாழ்ந்த தன்னலமற்ற அரசியல் தலைவர்கள் உணர்ந்திருந்த ஒரு முக்கிய விஷயம் இது. வருங்காலத்தில் வரும் அரசுகள் மேற்கண்ட உண்மைகளை மறந்து போகும் பட்சத்தில் இந்திய மக்களின் உரிமைகள் ஒடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திலேயே மக்களுக்கு சில அடிப்படை உரிமைகள் வழங்க தீர்மானித்தனர். இந்த உரிமைகளை பாதுகாக்கும் கடமையை அவர்கள் உச்ச நீதிமன்றத்திடமும், உயர் நீதிமன்றங்களிடமும் ஒப்படைக்கவும் அவர்கள் முடிவு செய்தனர்.

இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் குறிப்பிடத் தகுந்தவை

சட்டத்தின் முன்னே அனைவரும் சமமாக நடத்தப்படுவது. (Article 14-16)

தீண்டாமை ஒழிப்பு (Article 17)

ஒவ்வொருவருக்கும் தனி மனித சுதந்திரங்கள் (Article 19)-
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியான (ஆயுதங்கள் இல்லாத) கூட்டம் நடத்தும் உரிமை. சங்கங்கள் அமைக்கும் சுதந்திரம், நாட்டின் எப்பகுதியிலும் வாழும் உரிமை, எந்த தொழிலிலும் ஈடுபட உரிமை.

மேலும் மக்களுக்கு சட்டங்களிலிருந்து வழங்கப் படும் பாதுகாப்புகள் (Article 20)
முன்தேதியிட்ட (கிரிமினல்) சட்டங்களால் அளிக்கப்படும் தண்டனைகளில் இருந்து பாதுகாப்பு. ஒரே குற்றத்திற்கு இருமுறை தண்டனையிலிருந்து பாதுகாப்பு குற்றம் சாட்டப்பட்டவரே அவருக்கு எதிரான சாட்சியம் அளிக்க வலியுறுத்தப் படுவதிலிருந்து பாதுகாப்பு

மக்களுக்கு அதிகாரிகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கும் உரிமைகள் (Article 21)
எந்த ஒருவரையும் சட்டத்தின் அடிப்படையிலேயே தண்டனை வழங்க முடியும்

முன்னெச்செரிக்கை கைதுகளில் இருந்து பாதுகாப்பு வழங்கும் உரிமைகள் (Article 22)
ஒருவர் கைது செய்யப் படும் போது கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப் பட வேண்டும். கைது செய்யப் பட்ட நபர் சட்ட ஆலோசனை பெற தடை செய்யக் கூடாது. கைது செய்யப் பட்ட நபர் 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன்னர் ஆஜர் படுத்தப்பட வேண்டும்

இவை மட்டுமல்ல, சுரண்டப் படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உரிமை (Article 23) சிறுவர்கள் ஆபத்தான வேலைகள் செய்வதை தடுக்கும் உரிமை (Article 24), மத மற்றும் மொழி உரிமை மற்றும் சிறுபான்மையருக்கான சில உரிமைகள் (Article 25-30) அனைத்தும் அரசியல் சாசனத்தால் வழங்கப் பட்டுள்ளன. இவை அனைத்தையும் விட மிக முக்கியமான உரிமை, மேலே குறிப்பிட்டுள்ள உரிமைகளை நடைமுறைப் படுத்த உச்ச/உயர் நீதிமன்றத்தை அணுகும் உரிமை (Article 32)



Article 19 இல் உள்ள உரிமைகள் அனைத்தும் எமெர்ஜென்சி காலங்களில் செயல் படாமல் போகும். சாதாரண காலங்களில், பொது நலன் மற்றும் அமைதி காக்கவும், நாட்டின் நலன், ஒற்றுமை மற்றும் இறையாண்மையைக் காக்கவும், வெளிநாடுகளுடன் உள்ள உறவினை காக்கவும் மேலே சொன்ன உரிமைகள் மீது சில நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு.



அதே சமயம், கட்டுப்பாடுகள் நியாயமானவைதானா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் இடம் பெறாத சில மனித அடிப்படை உரிமைகளை கூட இனம் கண்டு (இந்தியா உலக மனித உரிமைகளின் சாசனத்தில் கையொப்பம் இட்டதின் அடிப்படையில்) அவற்றை நடைமுறை படுத்திய (மற்றும்) பேணிக் காத்த பெருமை உச்ச நீதி மன்றத்திற்கு உண்டு.



எனவே நண்பர்களே, குறிக்கோளும் அதை அடைவதற்கான பாதைகளும் நியாயமானவையாக இருக்கும் பட்சத்தில் நமது அடிப்படை உரிமைகளை பாதுகாத்து கொள்ள இந்திய அரசியல் அமைப்பு சாசனமும் நீதிமன்றங்களும் எப்போதும் துணை இருக்கும்.

நன்றி

Comments

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...