Friday, November 28, 2008

சீனா வகுப்பறையில் "சிங்கூர்" பாடம்


இதென்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சு என்கிறீர்களா? இது ஒரு கதை அல்ல நிஜம். சென்ற வாரம், சீனாவில் பீஜிங் நகரில் வணிக செய்தி துறை மாணவர்களுக்காக எடுக்கப் பட்ட பாடம் இது. பாடத்தின் பெயர் வெற்றியாளர்களும் தோற்று போனவர்களும் - டாட்டா மோடோர்ஸ் மற்றும் மேற்கு வங்காளம். இந்த பாடத்தை எடுத்துக் கொண்டதற்கு, வகுப்பை நடத்தியவர் (Martin Mulligan of the Financial Times, லண்டன்) கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?


"உலகின் கவனம் இன்றைக்கு இருப்பது நானோ காரின் மேல். நானோ கார் ஒரு சரித்திரம். ஒரு ஆடம்பர மெர்சிடிஸ் காரின் ச்டீரியோவின் (Stereo System) செலவில் ஒரு நானோ கார் வாங்க முடியும். இது ஒரு மிகப் பெரிய சாதனை. அதே சமயத்தில் இந்த பிரச்சினை குறித்து வெவ்வேறு கருத்துகள் உலா வருகின்றன. மேலும் ஒரு காரணம். 8 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு விவசாயத்தை அதிகம் நம்பியுள்ள மாநிலத்தில் இந்த பிரச்சினை நடந்து இருப்பது. இதன் மூலம் அதிக மக்கள் தொகை மற்றும் ஏழ்மை பகுதிகளில் தொழிற்சாலைமயமாக்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆராய முடியும்" மேலும் வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் வாகனத்துறை (Automobile Industry) உலக அளவில் இந்தியாவின் சாதனையான நானோ கார் குறித்த செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றது.


அவர் சொல்ல விரும்பிய ஆனால் வெளிப்படையாக சொல்ல முடியாத ஒரு காரணம் கூட உண்டு. சீனாவில் கூட இப்போது தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் தேவைகளுக்காக நில கையகப் படுத்துவதற்கு விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் கூட, சீனாவின் கிழக்கு நகரம் ஒன்றில், வன்முறை கும்பல் (விவசாயிகள்) ஒன்று அரசாங்க அலுவலகத்தை தாக்கியதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த பாடத்தின் இறுதியில் இது குறித்து 500 வார்த்தைகளுக்கு குறையாமல் ஒரு கட்டுரை வரையும் படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டனர் . அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை பார்த்தால் கம்யூனிஸ்ட் நண்பர்கள் நிச்சயம் ஆச்சர்யப் படுவார்கள் . பெரும்பாலான மாணவர்கள், மம்தா செய்தது சரி என்றும் வங்க அரசு செய்தது தவறு என்றும் கருத்து தெரிவித்தனர். மேற்கு வங்க அரசு சரியான இழப்பீட்டு தொகையை நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னமே கொடுத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்பது அவர்கள் வாதம் . மேலும், இறுதியாக வெல்லப் போவது யார் என்ற கேள்விக்கு நானோ கார்தான் என்றும் தோற்க போவது மேற்கு வங்கமே என்றும் கருத்து தெரிவித்தனர். (நன்றி: http://www.telegraphindia.com/1081124/jsp/frontpage/story_10155227.jsp)


இப்போது நம் கம்யூனிஸ்ட் நண்பர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? அவர்களுடைய வைத்திய முறையைக் கொண்டே அவர்களுடைய பித்தத்திற்கு வைத்தியம் பார்த்த மம்தாவிற்கு வாழ்த்துகள் சொல்வதா? அல்லது இப்படி கட்சி அரசியல் நடத்தி கொண்டு நாட்டின் தேவைகளை காற்றில் பறக்க விடும் நமது அரசியல்வாதிகளை கண்டு பெருமூச்சு விடுவதா? ஒரு இந்திய சாதனை வேதனையாகிப் போனது மட்டுமல்லாமல் இப்படி இந்திய மானம் கப்பலேறுவதை கண்டு வெட்கப் படுவதா?

6 comments:

கார்த்திக் said...

சீனாவின் அழைப்பை ரத்தன் டாட்டா பயன்படுத்திருப்பாறேயானால் இன்னேரம் அந்தக்கார் நம் சாலைகலில் இறக்குமதியாகி ஓடிக்கொண்டிரிந்திருக்கும்.
என்ன செய்வது அரசியல்வாதிகள் அப்படி.

கபீஷ் said...

//இப்படி கட்சி அரசியல் நடத்தி கொண்டு நாட்டின் தேவைகளை காற்றில் பறக்க விடும் நமது அரசியல்வாதிகளை கண்டு பெருமூச்சு விடுவதா//

இது தானே இப்போ நாம செஞ்சுட்டு இருக்கோம்.

dg said...

//இறுதியாக வெல்லப் போவது யார் என்ற கேள்விக்கு நானோ கார், தோற்க போவது மேற்கு வங்கமே //
100 %உண்மை

Maximum India said...

பின்னூட்டத்திற்கு நன்றி கார்த்திக்

நீங்கள் சொல்வது சரிதான்

நமது அரசியல்வாதிகளுக்கும் ஏன் மக்களுக்கும் கூட இது போன்ற விஷயங்களில் அதிக பொறுப்புணர்வு வர வேண்டும்.

எந்த வகையான நிலப் பரப்பை தொழிற்சாலைகளுக்கு உபயோகப் படுத்தலாம் மற்றும் அவ்வகையான நிலங்களுக்கு இழப்பீடு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை குறித்து ஒரு வெளிப்படையான கொள்கையை அரசு வகுக்கலாம்.

முடிந்த வரை அரசுக்கு சொந்தமான புறம்போக்கு தரிசு நிலங்களை இத்தகைய தொழிற்சாலைகளுக்கு வழங்கலாம். பொது மக்களுக்கு சொந்தமான இடங்களை தவிர்க்கலாம். பல ஆண்டுகள் வாழ்ந்த இடத்தை விட்டுக் கொடுப்பது பொது மக்களுக்கு சிரமமான காரியமாகவே இருக்கும். மேலும் விவசாயத்தை பல காலம் செய்தவர்கள் புதிய தொழில் பழகுவது கஷ்டமான ஒன்று. எனவே அவர்களுக்கு இழப்பீடு மற்றுமின்றி அருகிலேயே புதிய குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்து தொழிற்சாலைக்கான உரிமை பங்குகள் வழங்குதல், வேலை வாய்ப்பு வழங்குதல் மற்றும் புதிய தொழில் அமைத்துக் கொடுத்தல் போன்ற இதர வகை உதவிகளையும் செய்யலாம். நிலத்தை கொடுப்பது அரசின் கடமை என்று நிறுவனங்கள் ஒதுங்கி விடாமல் சரியான திட்டமிடல் செய்தால் இத்தகைய பிரச்சினைகள் வருவதை தடுக்க முடியும்.

Maximum India said...

பின்னூட்டத்திற்கு நன்றி கபீஷ்

நாம் விடும் பெருமூச்சு பெரும் அனலாக மாறி அரசியல்வாதிகள் அதன் வெப்பத்தை உணரும் போது அவர்களுக்கு பொறுப்புணர்வு நிச்சயம் வரும்.

Maximum India said...

அன்புள்ள dg

சரியாக சொன்னீர்கள். மம்தா மீதும் மாநில அரசின் மீது மட்டும் தவறில்லை. தொழிற்சாலை மயமாக்கும் கொள்கை வங்கத்திற்கு எவ்வளவு பயன் அளிக்கும் என்பதை உணர்ந்திருந்தும் வாய்மூடி மௌனமாக இருந்த வங்க அறிஞர்கள் மீதும் தவறு உள்ளது. வங்க அறிஞர்கள் பொதுவாக intellectuals என உணரப் படுபவர்கள். அந்த அறிஞர்களும் பெரிய முயற்சி ஏதும் எடுக்காதது வங்கத்தை நீண்ட கால அடிப்படையில் முன்னேறாமல் செய்து விடக் கூடிய அபாயம் உள்ளது.

Blog Widget by LinkWithin