Wednesday, November 26, 2008

ஒரே இரவில் குண்டாகிப் போன ஏழு கோடி இந்தியர்கள்?


நீங்கள் குண்டா ஒல்லியா? (நாயகன் ஸ்டைலில் எனக்கே தெரியலேயப்பா என்று சொல்லி விடாதீர்கள்). குண்டு என்று நினைத்திருந்தால் ஓகே. ஆனால் நேற்று வரை ஒல்லி அல்லது சரியான எடை என்று நினைத்திருப்பவர்கள், இன்று தங்கள் எண்ணத்தை உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். ஏனென்றால், நேற்று வரை இப்படித்தான் தம்மை ஒல்லிபிச்சான்களாக நினைத்து கொண்டிருந்த சுமார் ஏழு கோடி இந்தியர்கள் ஒரே நாளில் இன்றைக்கு குண்டர்கள் (obese) ஆகி விட்டார்கள் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. விவரங்கள் கீழே.

உலக நல அமைப்பு (WHO), ஒருவரின் உயரம், உடல் எடை மற்றும் இடுப்பளவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர் குண்டா ஒல்லியா அல்லது சரியான எடை கொண்டவரா என்பதை நிர்ணயிக்க சில தரக் கட்டுப்பாடுகள் வகுத்திருந்தது. அதன் படி உடல் எடைக் குறியீடு (Body Mass Index - BMI) மற்றும் இடுப்பு சுற்றளவு முறையே 30 மற்றும் 102 செண்டி மீட்டர் அளவுக்கு மேல் இருந்தால் குண்டர்கள் எனவும் BMI 25 க்கு மேல் இருந்தால் அதிகப் படியான எடை கொண்டவர் எனவும் நிர்ணயம் செய்திருந்தது. நேற்று வரை இந்த தர நிர்ணயங்கள் நடைமுறையில் இருந்தன.

ஆனால், வெவ்வேறு நாடுகளை சார்ந்த மருத்துவ அமைப்புகள், அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தின் அடிப்படையில் புதிய விதிகளை அமைத்துக் கொள்ளலாம் என்ற உலக நல அமைப்பின் அறிவுரையின் படி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, இந்திய குண்டர்களை கண்டறிவதற்காக புதிய விதிமுறைகளை இன்று முதல் நடைமுறை படுத்தியுள்ளது. இதன் படி உடல் எடை குறியீடு 23 க்கு மேல் இருந்தால் அதிக எடை கொண்டவர், குறியீடு 25 க்கு மேல் இருந்தால் குண்டர். மேலும் இடுப்பளவு 90 செண்டி மீட்டர் மேல் இருந்தால் (பெண்களுக்கு 80 செண்டி மீட்) குண்டர் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி நேற்று வரை சாதாரண எடை கொண்டவர்களாக கருதப் பட்ட சுமார் ஏழு கோடி இந்தியர்கள் இன்று முதல் குண்டர்களாக கருதப் படுவார்கள் என ஒரு பத்திரிக்கை செய்தி கூறுகிறது.

(இப்போது உடல் எடைக் குறியீட்டை எப்படி கணக்கிடுவது என்று பார்க்கலாம். உங்கள் எடையை (கிலோ கணக்கில்) உங்கள் உயரத்தின் வர்க்கத்தால் (மீட்டர் கணக்கில்) வகுத்தால் வருவதுதான் BMI என அறியப் படும் உடல் எடை குறியீடு. உதாரணமாக 180 செ.மீ.(1.80 மீ.) உயரம் உள்ள ஒருவர் 80 கிலோ எடை இருந்தால் அவருடைய உடல் எடைக் குறியீடு 80/(1.80*1.80) =24.69 இவர் நேற்று வரை சராசரி எடை. இன்றோ அதிகப் படியான எடை கொண்டவர்)

மேற்கண்ட விதிமுறைகளின் படி அதிகப்படியான எடை கொண்டவர்கள் தினந்தோறும் 60 நிமிடங்கள் உடற்பயிற்சியில் (மூன்று தவணையாக) செய்ய வேண்டும் என இந்த நிபுணர்கள் குழு அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் இந்த விதிமுறைகளை நம்மூரில் கண்மூடித்தனமாக அனைவரும் பின்பற்ற முடியுமா என்பது ஒரு கேள்வி குறியே. ஏனென்றால், மாநகரங்களில் வாழும் பல (மேற்சொன்ன விதிப்படி) ஒல்லிபிச்சான்கள் இரண்டு மாடி படியேறவே மூச்சிரைக்கும் போது நாட்டு புறங்களில் உள்ள பல தொப்பையர்கள் தனது தொப்பையிலே நூறு கிலோவை அனாயசமாக தாங்கும் மற்றும் பலமணி நேரம் கடுமையாக உழைக்கும் கதைகளும் உண்டு.

இன்றைக்கு உலக குண்டர்கள் மன்னிக்கவும் குண்டு மறுபடியும் மன்னிக்கவும் குண்டான உடலமைப்பு (obesity) எதிர்ப்பு நாள் அனுசரிக்கப் படுகிறது. இதே போல, நம்மூர் (சமூக விரோத) குண்டர்கள் மற்றும் (தீவிரவாதிகள் வைக்கும்) குண்டு எதிர்ப்பு நாள் என்றும் ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நன்றி

இப்படிக்கு நேற்று வரை சராசரி எடை கொண்டவனாக இருந்து ஒரே நாளில் அதிக எடை கொண்டவனாக மாறிப் போன ஒரு இந்தியன். (ஒரே ஒரு ஆறுதல் இடுப்பளவில் இன்னும் ஒல்லிப்பிச்சான்தான்)

12 comments:

எட்வின் said...

பயனுள்ள பதிவு...புதிதாக கல்யாணம் ஆகிறவர்களும் கவனிக்க வேண்டிய விஷயம்.கல்யாணம் ஆன புதுசுல என்னா கட்டு கட்டுறாங்கய்யா?

நட்புடன் ஜமால் said...

அப்ப ஏற்கனவே குண்டாயிருந்தவங்க நிலமை ...???

Maximum India said...

அன்புள்ள அர்னோல்ட் எட்வின்

பின்னூட்டத்திற்கு நன்றி.

ஒரு மனிதனின் வாழ்வில் 20 களின் முடிவிலிருந்து முப்பதுகளின் இறுதி வரை கவனம் செலுத்த வேண்டிய விஷயம் எடை மற்றும் இடுப்பளவு. இவற்றை ஒரு கட்டுக்குள் (சாப்பாட்டை கட்டு கட்டுவதை தவிர்த்து விட்டு) வைத்திருப்பது நல்லது.

Maximum India said...

அன்புள்ள அதிரை ஜமால்

பின்னூட்டத்திற்கு நன்றி. மேலும் ஒரு வழி நடத்துனர் ஆகி இருப்பதற்கும் நன்றி.

//அப்ப ஏற்கனவே குண்டாயிருந்தவங்க நிலமை ...???//

பாதி பதில் பதிவிலேயே இருக்கிறது.

//மேற்கண்ட விதிமுறைகளின் படி அதிகப்படியான எடை கொண்டவர்கள் தினந்தோறும் 60 நிமிடங்கள் உடற்பயிற்சியில் (மூன்று தவணையாக) செய்ய வேண்டும் என இந்த நிபுணர்கள் குழு அறிவுறுத்தி உள்ளது.//

மீதி பதில்

மேலும் குண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

உடல் எடைக் குறியீடு 32.50 க்கு மேல் இருந்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூட நிபுணர்கள் குழு தெரிவித்து உள்ளது.

பொதுஜனம் said...

இந்தியாவில் ஒரே இரவில் பலர் உண்டாகிறார்கள்.ஏதோ ஒரு அமைப்பு தெரிவித்ததின் பேரில் நாங்கள் குண்டாகி தான் போகிறோமே .ஷேர் மார்க்கெட்டில் பல கில்லிகள் ஒரே நாளில் ஒல்லி ஆனார்கள் .சிலர் திருப்பி போட்ட பல்லி ஆனார்கள். மார்க்கெட் புள்ளிகள் பலர் சொல்லி யும் சென்செக்ஸ் இன்னமும் ஒல்லி ஆகத்தான் உள்ளது. பணம் போட்ட சிலர் மட்டும் குண்டனார்கள் இந்த புதிய வரைமுறைகள் சில டாக்டர்கள் குண்டாக வாய்ப்புகளை கொடுக்கும் என் நம்பலாம்.வாழ்க WHO.

Maximum India said...

அன்புள்ள ராஜேஷ்

அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி. வாழ்த்துக்கள் கூட.

MCX Gold Silver said...

கல்யாணம் ஆன புதுசுல என்னா கட்டு கட்டுறாங்கய்யா?

Maximum India said...

அன்புள்ள dg

பின்னூட்டத்திற்கு நன்றி

ஒரு மனிதனின் வாழ்வில் 20 களின் முடிவிலிருந்து முப்பதுகளின் இறுதி வரை கவனம் செலுத்த வேண்டிய விஷயம் எடை மற்றும் இடுப்பளவு. இவற்றை ஒரு கட்டுக்குள் (சாப்பாட்டை கட்டு கட்டுவதை தவிர்த்து விட்டு) வைத்திருப்பது நல்லது.

ஆட்காட்டி said...

நான் குண்டெண்டுறன். மனுசி இல்லேங்கிறா. என்னைத் தான். என்ன செய்யலாம்?

Maximum India said...

அன்புள்ள ஆட்காட்டி

பின்னூட்டத்திற்கு நன்றி

பதில் பதிவில் பாதியும், பின்னூட்டத்தில் மீதியும் உள்ளது.

உங்களுக்கு தேவையான பகுதியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்

Advocate P.R.Jayarajan said...

அன்பு நண்பர்களே,

வணக்கம்.

கடந்த சில மாதங்களாக செய்தித்தாள் வாசித்து வரும் யாரும் இச்செய்திகளை வாசிக்கத் தவறி இருக்க மாட்டார்கள். இச்செய்தி மக்கள் சட்ட விழிப்புணர்வு பெற்றுள்ள ஏற்றமிகு நிலையை பறை சாற்றுகிறது. அது என்ன, அப்படிப்பட்ட செய்தி? அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட செய்தி.

சென்ற மூன்று மாத காலத்தில் மட்டும் சுமார் நாற்பதுக்கும் மேற் பட்ட அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டுள்ளனர். குறிப்பாக கிராம நிருவாக அலுவலர்கள், காவல் துறையினர், சார் பதிவாளர் அலுவலகத்தினர், மின் வாரிய பணியாளர்கள் நிறைய பேர் சிக்கி உள்ளனர்.

இங்கு மற்றொன்றயும் கவனிக்க வேண்டும். இவர்களை பிடித்து கொடுத்தவர்கள் மெத்தப் படித்த நகரத்து மாந்தர்கள் அல்லர். இது அன்றாட வாழ்கையை ஓட்ட அல்லும் பகலும் பாடுபடும் சாதாரண கிராமத்து வாசிகள் எடுத்த அவதாரத்தின் விளைவு. சட்ட விழிப்புணர்வு பட்டி தொட்டி எல்லாம் பரவி வரும் உன்னதமான நிலையை இது காட்டுகிறது. சட்டப் பார்வையின் முப்பெரும் நோக்கங்களில் ஒன்று மெல்ல மெல்ல நிறைவேறியும் வருகிறது.

எனவே லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று இனி அரசு அலுவலர்கள் சொன்னால், ஒன்று அவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும் அல்லது லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்கி சிறை செல்ல வேண்டி வரும். லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் தங்களை திருத்திக் கொள்ளும் நேரமிது.

என்றும் அன்புடன்,

பி. ஆர். ஜெ.

Maximum India said...

அன்புள்ள ஐயா

அருமையான செய்தி

உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Blog Widget by LinkWithin