Tuesday, November 25, 2008

இந்திய வணிக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு?



ஒரு வணிக நிறுவனத்தை இந்திய கம்பெனி சட்டம் (உருவாக்கப் பட்ட) ஒரு செயற்கையான மனிதனாகவே கருதுகிறது. ஒரு சாதாரண இந்திய குடிமகனுக்கு உரித்தான அனைத்து சமூக கடமைகளும் பொறுப்புகளும் இந்திய வணிக நிறுவனங்களுக்கும் உண்டு. ஆனால் இந்திய (தனியார்) வணிக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்ச்சி எப்போதுமே ஒரு மிகப் பெரிய கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. மேலும், இந்த நிறுவனங்களை பின்னின்று இயக்கும் இவற்றின் நிறுவனர்களை (எப்போதுமே) லாப நோக்கில் மட்டுமே இயங்கும் சுய நல சுரண்டல் கும்பலாகவே பலர் கருதி வருகின்றனர். இதற்கு காரணமில்லாமல் இல்லை. இந்திய வணிக நிறுவனங்களின் மீது பொதுவாக சுமத்தப் படும் குற்றச் சாட்டுகள் கீழே.

1.சரியான விலை அளவான லாபம் என்ற காந்திய கொள்கை எப்போதுமே இந்திய வணிக நிறுவனங்களுக்கு இருந்ததில்லை. பல சமயங்களில், சந்தைகளில் ஒரு கூட்டாதிக்கத்தை (Oligopoly) ஏற்படுத்திக் கொண்டு நுகர்வோரை ஏய்ப்பது வழக்கமாகிப் போன ஒன்று. விற்பனை விலையில் உற்பத்தி செலவு 10-20 சதவீதம் மட்டும் இருக்க லாபம் (margin) 80-90 சதவீதம் வரை கூட இருப்பதும் கூட உண்டு.
2. அதிக லாபம் பெற்றாலும் ஊழியர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் மட்டும் வழங்கி விட்டு (தகவல் தொடர்பு, மென் பொருள் போன்ற சில துறைகள் மட்டுமே விதி விலக்கு.) நிறுவனர்கள் தமக்கென வெளிப்படையான மிக ஆடம்பர வாழ்கையை நடத்துவதும் உண்டு. சிலர் தமக்கென்று மட்டுமில்லாமல் தனது மனைவியருக்கும் கூட தனி விமானங்கள் வாங்கி கொடுத்த கதைகளும் உண்டு.
3. அதே போல, அதிக லாபம் பெற்ற பின்னரும் சரிவர அரசுக்கு வரி செலுத்துவதில்லை என்ற குற்றச் சாட்டுகளும் உண்டு. இந்திய நிறுவனங்களின் மீது தாக்கல் செய்யப் பட்ட ஏராளமான வரி ஏய்ப்பு வழக்குகள் பல தீர்ப்பாயங்களில் (Tribunals) தேங்கி கிடக்கின்றன.

4. இவர்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் வெளிப்படையாக இருந்தது இல்லை. அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு பல ஊழல்களில் இவர்கள் ஈடுபட்டதும் உண்டு. சில சமயங்களில் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இவர்களே இருந்திருக்கிறார்கள். இந்திய சட்டத்தை எவ்வாறு தமக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்வது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தும் இவர்கள் ஒரு சாதாரண குடிமகன் போல சட்டத்தினை மதித்து அதன் படி நடக்கிறார்களா என்பது ஒரு கேள்விக் குறி.

5. பங்கு சந்தைகளிலும் கூட பல மோசடிகள் செய்து முதலீட்டாளர்களை சூதாட்டத்தில் ஈடுபடுவோர்கள் போல மாற்றிய பெருமையும் கூட இவர்களுக்கு உண்டு. இங்கும் கூட தாக்கல் செய்யப் பட்ட பல வழக்குகள் தீர்ப்பாயங்களில் இன்னும் தேங்கி கிடக்கின்றன.

6. தேசிய வளங்களை தனிப் பட்ட ஆதாயத்திற்காக சுரண்டும் பேர்வழிகளாகவே இவர்கள் கருதப் படுகிறார்கள். உதாரணமாக, இந்திய நாட்டின் கனிம வளங்கள், நீர் ஆதாரங்கள், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள், (இப்போது அதிகம் பேசப் படும் தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கான spectrum எனப்படும்) ரேடியோ அலைவரிசை ஆகியவை சிலரின் தனிப்பட்ட வளத்திற்கே பயன் படுகிறது.

7. நாட்டின் சுற்றுப்புற சூழ்நிலையை மாசு படுத்தும் தவறான போக்கிலும் இவர்கள் ஈடுபடுவதாகவும் வலுவான குற்றச் சாட்டுகள் உண்டு. சுத்திகரிக்கப்படாமல் ஆறு, ஏரி போன்ற குடி நீர் ஆதாரங்களில் கலக்கும் கழிவு நீர், வாயு மண்டலத்தில் நேரடியாக கலக்கும் புகை என்று பல வகைகளிலும் சுற்றுப்புறச் சூழல் இவர்களால் பாதிப்பு அடைகிறது.

இப்படி பலவகைகளும் இந்தியாவின் நலம் குறித்து அக்கறை காட்டாமலும், இந்திய நலனுக்கு எதிராகவும் செயல் படுபவர்களாகவுமே பொதுவாக கருதப்படும் இவர்களுக்கு தமது சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தக் கூடிய ஒரு அருமையான சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மாநாட்டில் உரையாற்றிய நிதி அமைச்சர் இவர்களுக்கு சில யோசனைகள் தெரிவித்து உள்ளார். அதாவது, இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விற்பனை விலையினை குறைப்பது. இவ்வாறு செய்வதின் மூலம், மக்களிடையே மீண்டும் பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும், தேவைகள் அதிகரிக்கும், இப்போதைக்கு தளர்ந்துள்ள இந்திய பொருளாதாரம் மீண்டும் தலை நிமிர ஒரு வாய்ப்பு கிடைக்கும். மேலும், தொழிற் சாலைகளையும் அலுவலங்களையும் மூட வேண்டிய அவசியம் இருக்காது.. ஊழியர்களுக்கும் வேலை போகும் அபாயம் நேரிடாது. உலக பொருட் சந்தைகளின் வீழ்ச்சியினால், பல மூல பொருட்களின் விலைகள் குறைந்திருக்கும் இந்த தருணத்தில் உற்பத்தி செலவுகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் அரசாங்கமும் தனது தரப்பில் வரிகளை குறைக்கவும் முன் வரும். இதனால் விலை குறைப்பு என்பது சாத்தியமான ஒன்றே. இவ்வாறு விலை குறைப்பு செய்வதின் இந்திய வணிக நிறுவனங்கள் நாட்டின் மீது தமக்கிருக்கும் பற்றினையும் நன்றியினையும் வெளிப் படுத்த முடியும். நாட்டையும் ஒரு பெரிய பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க முடியும். நிதி அமைச்சரின் இந்த யோசனை மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சியின் பெரும்பங்கு லாபம் இந்த தொழில் அதிபர்கள் சமூகத்தையே சேர்ந்திருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. ஆகவே நாட்டிற்காக ஒன்றிரண்டு வருடம் இவர்கள் சிறிய நஷ்டங்களை சந்தித்தால் தவறொன்றும் இல்லையே. மேலும் இவர்களின் நிதிப் பற்றாக்குறையை நீக்குவதற்காகவும், விற்பனையை அதிகரிப்பதற்காகவும், இந்திய அரசும் இந்திய தலைமை வங்கியும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. உதாரணம், வட்டி வீத குறைப்பு, பணப் புழக்கத்தை அதிகரிப்பது, இறக்குமதி வரியினை அதிகப் படுத்துவது, வெளிநாடுகளில் இருந்து கடன் பெறும் வழிமுறைகளை எளிமைப் படுத்துவது போன்றவை.

இவர்களுக்கு இவ்வளவு நன்மைகள் செய்துள்ள அரசின் கோரிக்கையை ஏற்பார்களா இந்த பெரும் தொழில் அதிபர்கள்? குறைப்பார்களா தமது உற்பத்தி பொருட்களின் விற்பனை விலைகளை? காப்பாற்றுவார்களா இந்தியாவை பொருளாதார சரிவிலிருந்து?

பொறுத்திருந்து பார்ப்போம்

8 comments:

மதிபாலா said...

2. அதிக லாபம் பெற்றாலும் ஊழியர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் மட்டும் வழங்கி விட்டு (தகவல் தொடர்பு, மென் பொருள் போன்ற சில துறைகள் மட்டுமே விதி விலக்கு.) நிறுவனர்கள் தமக்கென வெளிப்படையான மிக ஆடம்பர வாழ்கையை நடத்துவதும் உண்டு. சிலர் தமக்கென்று மட்டுமில்லாமல் தனது மனைவியருக்கும் கூட தனி விமானங்கள் வாங்கி கொடுத்த கதைகளும் உண்டு.///

இது தவறான கருத்து....மென் பொருள் நிறுவனங்களில் மனித வளம் மட்டுமே முதலீடு , அதுவும் மிகக்கடுமையான போட்டி இருப்பதால் மட்டுமே அள்ளிக்கொடுக்கிறார்கள் , மற்றபடி உழைப்பாளர்களை சுரண்ட வேண்டும் என்ற மற்றைய சாதாரண பிஸினஸ் மேன்களைப் போலத்தான் இவர்களும்....

வித்தியாசமொன்றுமில்லை

வால்பையன் said...

சம்பானி குழுமம் ஆரம்பதிலிருந்தே மக்கள் பணத்தில் வளர்ந்தது என்று தெரிந்த கதையாகி விட்டது.
தற்போது அரசாங்கங்கமும் அந்த நிறுவனத்துக்கு கும்ம்பிடு போடுவது,
யார் கையில் அரசாங்கம் என்னும் சந்தேகத்தை வரவழைக்கிறது

Maximum India said...

அன்புள்ள மதிபாலா

பின்னூட்டத்திற்கு நன்றி

//இது தவறான கருத்து....மென் பொருள் நிறுவனங்களில் மனித வளம் மட்டுமே முதலீடு ,அதுவும் மிகக்கடுமையான போட்டி இருப்பதால் மட்டுமே அள்ளிக்கொடுக்கிறார்கள் , மற்றபடி உழைப்பாளர்களை சுரண்ட வேண்டும் என்ற மற்றைய சாதாரண பிஸினஸ் மேன்களைப் போலத்தான் இவர்களும்....//

நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்து (view) அல்ல. நடைமுறை தகவல் (information) மட்டுமே.
நிறுவனம் பெரும் லாபத்தின் பங்கினை ஊழியர்களுக்கு (ஓரளவுக்கேனும்) பகிர்ந்துத் தரும் மென்பொருள் துறை பாராட்டுக்குரியதே. ரிலையன்ஸ், கிங் பிஷேர் போன்ற நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அவற்றின் ஊழியர்களுக்கும் உள்ள வாழ்வியல் (Life Style) வேறுபாடு மிக அதிகமாக இருக்கிறது என்பதை குறிப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//சம்பானி குழுமம் ஆரம்பதிலிருந்தே மக்கள் பணத்தில் வளர்ந்தது என்று தெரிந்த கதையாகி விட்டது.
தற்போது அரசாங்கங்கமும் அந்த நிறுவனத்துக்கு கும்ம்பிடு போடுவது,
யார் கையில் அரசாங்கம் என்னும் சந்தேகத்தை வரவழைக்கிறது//

நம்மைப் போன்ற பொது மக்கள் எல்லாவற்றிக்கும் அரசையும், அரசியல்வாதிகளையும், அரசு ஊழியர்களையும் மட்டும் குறை சொல்கிறோம். ஆனால், உண்மையில் இவர்கள் எல்லோரையும் விட இந்தியாவின் வளங்களை மிக அதிகமாக கொள்ளையடிக்கும் பெரும் தொழில் அதிபர்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறோம் என்பதை வெளிபடுத்துவதற்கே இந்த பதிவு. சரியான பின்னூட்டம் இட்ட உங்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

அமர பாரதி said...

மற்றவர்களை விலை குறைப்பு செய்யச்சொல்லும் நிதி அமைச்சர் முதலில் பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமல்லவா? கச்சா எண்ணெய் 145 டாலர் விற்ற போது இருந்த விலையையே 52 டாலர் விற்கும் போதும் வைத்திருப்பது கொள்ளைதானே? கேட்டால் மானியத்தைக் காரணம் காட்டுகிறார்கள்.

அமெரிக்காவில் எந்த மானியமும் இல்லாமல் சமையல் கேஸும் பெட்ரோலும் விற்கப்படும் விலை இந்திய விலையை விட குறைவு. எதைக் கேட்டாலும் ஒரு பைத்தியக்காரணமான வாதத்தை சொல்லி மக்களை முட்டாளாக்குகிறார்கள்.

Maximum India said...

அன்புள்ள அமர பாரதி

//மற்றவர்களை விலை குறைப்பு செய்யச்சொல்லும் நிதி அமைச்சர் முதலில் பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமல்லவா? கச்சா எண்ணெய் 145 டாலர் விற்ற போது இருந்த விலையையே 52 டாலர் விற்கும் போதும் வைத்திருப்பது கொள்ளைதானே? கேட்டால் மானியத்தைக் காரணம் காட்டுகிறார்கள்.

அமெரிக்காவில் எந்த மானியமும் இல்லாமல் சமையல் கேஸும் பெட்ரோலும் விற்கப்படும் விலை இந்திய விலையை விட குறைவு. எதைக் கேட்டாலும் ஒரு பைத்தியக்காரணமான வாதத்தை சொல்லி மக்களை முட்டாளாக்குகிறார்கள்.//

நீங்கள் சொல்வது மிகச் சரியான கருத்து. பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் சரிவர நிர்ணயிக்கப் படுவதில்லை. நம்மிடம் இருந்து கஸ்டம்ஸ் வரி, எக்ஸ்சைஸ் வரி, விற்பனை வரி மற்றும் உள்ளூர் வரி (பெட்ரோல் டீசல் விலையில் கிட்டத்தட்ட பாதி) பெற்றுக் கொண்டு அதில் கொஞ்சம் மட்டும் மான்யம் என்ற பெயரில் திருப்பி தருகிறார்கள். அதே சமயம், பெட்ரோல் டீசல் விலை தேர்தலுக்கு முன்னரே எப்போது வேண்டுமானாலும் குறைக்கப் படலாம். இன்று கூட பெட்ரோல் துறை மந்திரி விலைக் குறைப்பு பற்றி பேசி உள்ளார். எனவே பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நிச்சயம். எவ்வளவு மற்றும் எப்போது என்பதுதான் கேள்விக்குறி.

இந்திய பொது ஆயில் நிறுவனங்கள் உலக சந்தையில் கட்சா எண்ணெய் அதிக விலை விற்றபோதும், தாம் நஷ்டத்தை சந்தித்தாலும் நமக்கு ஓரளவிற்கு குறைந்த விலையில் கொடுத்தனர். அவர்கள் இப்போது லாபம் பார்ப்பதை ஒரு வகையிலாவது ஒப்புக் கொள்ள முடியும். ஆனால், அப்போது கடையை மூடிக் கொண்ட தனியார் நிறுவனங்கள் இப்போது லாபம் வரும் போது மட்டும் மீண்டும் கடை திறப்பது எந்த வகையில் நியாயம்?

Itsdifferent said...

I strongly believe India is in a best position to succeed. Why?
1. We have the largest population of consumers. If we can promote the people who cannot afford certain things, to a level where they can afford such things, the consumerism will increase multifold. Remember, consumerism is not a bad thing, whereas wasteful spending is a bad thing.
2. How do we increase the consumer population: Increase individual earnings. Most of those people are self employed, but are not able to improve their business to a successful and efficient level. This is including small farmers.
Solution to this is Microfinance. provide them with a capital at an affordable rate. Avoid too many layers of brokers, who adds a % every step of the way, and enable the producers to be in direct contact (atleast 1-2 steps away) with the retailers.
So bottom line is, we have to improve the quality of life and availability of disposable cash to the common man. I dont know what is the right amount, for example, I would say, we should create a target of say people who are making Rs.2000 per family per month, how can we increase this by 20% more. We have the workforce to make this happen, but what is missing is:
1. Willingness to take an effort to improve
2. Addiction to earning more and more, to what is not yours.
3. A Genuine interest to help the society to improve their quality of life of the unfortunates.
We are creating a structure for Microfinance, to lend money at 0 to 2% interest; any help (not monetary, but to take the responsibility of identifying deserving people who are in need of funds, dispersing and collecting funds) from people in TN will be appreciated, write to me.

Maximum India said...

அன்புள்ள ItsDifferent

பின்னூட்டத்திற்கு நன்றி. உங்களுடைய கருத்துகள் மிகவும் வரவேற்கத் தக்கவை. இதற்கு முந்தைய பதிவுகளின் பின்னூட்டங்களில் கூட, சிறு கடனின் முக்கியத்துவம் குறித்து kiva.org செயல்பாடுகள் குறித்தும் தெரிவித்து இருந்தீர்கள். நானும் கூட அந்த வலைத்தளத்தை பார்வையிட்டேன். அவர்களது செயல்பாடு சிறப்பாக உள்ளது.

நானும் இந்தியாவில் இது போன்ற ஒரு அமைப்பை உருவாக்க முடியுமா என்பது குறித்து எனது நட்பு வட்டத்தில் விசாரித்துக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு சுய உதவி குழுக்கள் மூலம் சிறு கடன் இந்தியாவில் வழங்கப் படுகிறது. ஆனால் இங்கு வட்டி வீதம் மிக அதிகம். நீங்கள் சொல்வது போல இந்தியாவில் கடன் கொடுப்பதற்கு இந்திய தலைமை வங்கியிடம் (RBI) தனியார் நிதி நிறுவனம் (NBFC) என்ற லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும் என சில நண்பர்கள் சொன்னார்கள். அது இப்போதைக்கு சற்று சிரமமான காரியமாக இருக்கும் என்றும் கேள்விப் பட்டேன். மேலும் சிறுகடன் அளிப்பதற்கான முதல் (நன்கொடை மூலமாக) பெறுவதை விட சரியான தேவை உள்ளவர்களுக்கு கடன் வசதி அளித்து அவர்களிடம் இருந்து குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் திரும்பப் பெறுவது சிரமமான காரியம். மேலும இன்றைக்கு சிறு கடன் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு பணவசதி மட்டும் காரணமல்ல. சிறந்த வழி நடத்துதல் இல்லாததும் முக்கிய காரணம். இதற்கு வங்கி நிர்வாகிகளின் அனுபவம் பெறுவது அவசியம்.

ஆனால், முயற்சியை தளரவிட வேண்டியதில்லை. நாம் முயற்சியை தொடர்ந்து செய்வோம். இந்த பதிவை பார்க்கும் நண்பர்கள் கூட சில யோசனைகளை தெரிவித்தால் நன்றிக்குறியவர்களாக இருப்பீர்கள்.

Blog Widget by LinkWithin